Friday, October 07, 2016

அரபி இலக்கியம் (இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! - 4)




அரபி இலக்கியம்

லக்கியம் (LITERATURE) என்றால் என்ன என்பதை முதலில் காண்போம். கலை நயத்தோடு ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படுத்தும் படைப்பு. அது கவிதையாக, வசனமாக, சிறுகதையாக, நாவலாக எந்த வடிவத்திலும் அமையலாம். அரபி இலக்கியம் என்பதை அல்அதபுல் அரபிய்யு என்பர்.

ஒரு செய்தியைச் சாதாரண நடையில் சொல்வதற்கும் ஈர்ப்புடன் கலைநயத்தோடு வெளியிடுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. “துணி தைத்துக்கொண்டிருக்கிறாள்என்பதையே, “துள்ளும் ஊசிக்கு வேலை தரும் துணி அவள் கையில் – என்று சொன்னால் ஒரு மயக்கம் தொற்றிக்கொள்கிறதல்லவா?

2010இல் புனித ஹஜ் சென்றிருந்தபோது, புனித நகரங்களின் வீதிகளில் கண்ணில் பட்ட வாசகங்கள் என்னை ஈர்த்தன. ஒரு கண்ணாடிக் கடை விளம்பரத்தில், “உனக்காக என் கண்கள் (عيوني لك) என எழுதப்பட்டிருந்தது. வாடகைக் கார் ஒன்றின் கண்ணாடியில், “கண்ணாடியில் தெரிவதைவிட உடலே உன்னுடன்தானே இருக்கிறது (الاجسام اقرب مما تبدو في المرآة) எனப் பொறிக்கப்பட்டிருந்தது.

நம்மூர் போக்குவரத்து அதிகாரிகள், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம் – என்பதை நயமாக இப்படி எழுதி வைத்திருந்தார்கள்: செல்போன் பேசியவாறு வண்டி ஓட்டாதீர்! எதிர்முனையில் அழைப்பது எமனாக இருக்கலாம்!

கலைநயத்தில் ஓர் இனிப்பு உண்டு. சொல்லாடலில் இந்த இனிப்பிற்கு ஒரு சுவை உண்டு. சொல்லில் சுவையேற்றி, செவியை விலைக்கு வாங்குவதுதான் இலக்கியத்தில் இலாபம்.

இலக்கியத்தின் சிகரம்

திருக்குர்ஆனின் நடை இதில் கைதேர்ந்தது; அற்புதமானது; மனித ஆற்றலுக்கு சவால் விடுக்கக்கூடியது. இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு ஒன்றை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

எகிப்து இஸ்லாமிய அறிஞரும் திருக்குர்ஆன் விரிவுரையாளருமான ஷைகு தன்தாவீ அவர்கள், தமது அல்ஜவாஹிர் எனும் விரிவுரையில் குறிப்பிடுகிறார்: எகிப்து எழுத்தாளரும் இலக்கியவாதியுமான பேராசிரியர் ஷைகு கைலானி அவர்களை 13.06.1932இல் சந்தித்தேன். அவர் தமக்கேற்பட்ட அனுபவம் ஒன்றை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

அமெரிக்கரும் கிழக்கத்திய சிந்தனையாளருமான வெங்கால் என் நண்பர். எங்களிடையே இலக்கிய உறவு பலப்பட்டிருந்த நேரம். ஒருநாள் அவர் விளையாட்டாக என்னிடம் அந்தக் கேள்வியைத் தொடுத்தார். “குர்ஆன் ஓர் (இலக்கிய) அற்புதம் என்று நீங்களுமா நம்புகிறீர்கள்? உடனே நான், “திருக்குர்ஆனின் இலக்கியத் தரத்தை முடிவு செய்ய நாமே முயலலாமே! என்றேன். வெங்காலுக்கு அரபி, ஆங்கிலம், ஜெர்மனி, ஹீப்ரு ஆகிய மொழிகள் நன்கு தெரியும் என்பது மட்டுமல்ல; மொழி ஆராய்ச்சியிலேயே வாழ்நாளைக் கழித்தவர்.

எனவே, ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்போம். அதற்கு நாமே வாக்கியம் அமைப்போம். பின்னர் அதே பொருளைத் திருக்குர்ஆனில் தேடுவோம். அதன் சொல்லாக்கத்தோடு ஒப்பிடுவோம். தெரிந்துவிடும் உண்மை- என்றேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

நாங்கள் தேர்ந்தெடுத்தது “நரகம் மிகவும் பெரியது என்ற மிக எளிதான பொருள்தான். இப்பொருளுக்கு இருவரும் சேர்ந்து சொல்லாக்கம் தர இயன்றவரை முயன்று, எங்களது மொழியாற்றல், இலக்கிய ஆற்றல் என எல்லா ஆற்றல்களையும் பயன்படுத்திப் பார்த்தோம்.

 நிச்சயமாக நரகம் மிகப் பெரியது; நாம் நினைப்பதைவிட மிகவும் விசாலமானது; நரகத்தின் அளவு மனித அறிவுக்கே எட்டாதது; நரகத்தில் முழு உலகையே அடைக்கலாம்... இப்படி 20 வாக்கியங்களை அரபி மொழியில் இருவரும் இணைந்து வார்த்தோம். இதற்குமேல் என்ன இருக்கப்போகிறது என்ற பார்வை வெங்காலிடம். இனி நீங்கள் குர்ஆனின் இலக்கிய நயத்தைக் காட்டலாம் என்றார்.

திருக்குர்ஆனுக்குமுன் நாம் மழலைகள் என்பது உறுதியாகிவிட்டது என்றேன். எப்படி என்று வியப்போடு கேட்டார் மொழி ஆராய்ச்சியாளர்.

அன்று நரகத்திடம் கேட்போம் - يَوْمَ نَقُوْلُ لِجَهنَّمَ

உன் வயிறு நிரம்பிவிட்டதா...? - هَلِ امْتَلَئْتِ

அது சொல்லும் - وَتَقُوْلُ

இன்னும் இருக்கிறதா? (50:30) - هَلْ مِنْ مَزِيْد

அதிர்ந்து போனார் வெங்கால். முகம் மலர்ந்தது. குர்ஆனின் இலக்கியத் தேன்மழையில் நனைந்தார்; நாணிப்போனார். நீங்கள் சொன்னது உண்மை! திறந்த மனத்துடன் ஏற்கிறேன்- என்றார் அமெரிக்கரான வெங்கால். இது புதுக்கவிதை அல்ல; புனித மறையின் உயர்நடை. திருக்குர்ஆனின் இலக்கிய அற்புதத்திற்கு, போதும் இந்த ஒரு சான்று.

பாடப் புத்தகங்கள்

அரபி இலக்கியம் கற்பிப்பதற்காக மத்ரஸா பாடத்திட்டத்தில் மூன்று வகையான பாடப் புத்தகங்கள் உண்டு. 1. சொல்லணிக் கலை (இல்முல் மஆனி) 2. சொல்லாட்சிக்கலை (இல்முல் பயான், அல்லது இல்முல் பலாஃகா) 3. அணியிலக்கணம் (இல்முல் பதீஉ)

இல்முன் மஆனீ: கேட்போரின் தகுதிக்கும் நிலைக்கும் ஏற்ப அமைகின்ற வகையில் அரபி மொழிச் சொல்லை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கும் கலை. வாக்கியத்தில் ஒரு சொல்லை விட்டுவிடுவது, முந்தி அல்லது பிந்திச் சொல்வது, உறுதிப்படுத்திக் கூறுவது அல்லது சாதாரணமாகக் குறிப்பிடுவது.. போன்ற நிலைகள் உதாரணம்.

இல்முல் பயான்: ஒரு செய்தியை விவரிக்கும்போது பல்வேறு வழிகளைக் கையாளும் முறைகளை விவரிக்கும் கலை. நேர்பொருள் அல்லது சொற்பொருள் (ஹகீகத் - PROPERSENSE), மாற்றுப் பொருள் (மஜாஸ் - TROPE), ஆகுபெயர் (கிநாயா-METONYMY), சிலேடை (தவ்ரியா - EQUIVOKE), செம்மொழிச் சிலேடை (ஜினாஸ் - PARONOMASIA), முரணிசைவு நயம் (திபாக் - ANTITHESIS)... போன்ற இலக்கியக் கூறுகளை இதன் மூலம் அறியலாம்.

இல்முல் பதீஉ: முதலிரண்டு கலைகளின் விதிகளோடு, சொல் அலங்காரத்திற்கான வழிகளைக் கற்பிக்கும் கலை. எடுத்தது விடுத்து அடுத்தது விரித்தல் (இஸ்தித்ராது - EXCURSION), சுருட்டி பின்பு விரித்தல் (லஃப்பு நஷ்ர் - INVOLUTION AND EVOLUTION)... போன்ற இலக்கிய நடைகளை இது எடுத்துரைக்கும்.

இக்கலைகளைக் கற்றுத் தேறியிருந்தால்தான் குர்ஆனிலும் ஹதீஸிலும் புதைந்திருக்கும் இலக்கியச் சுவையை ரசிக்கவும் அசைபோடவும் உட்பொருளைக் கண்டறியவும் முடியும். மார்க்கக் கல்விக்கு இலக்கியம் எதற்கு என்று எண்ணிவிடாதீர்கள்! மார்க்கத்தையும் நயமாகத்தானே சொல்ல வேண்டியதிருக்கிறது! எனவே, ஆசையோடு பயிலுங்கள். இலக்கிய நதியில் நீந்துங்கள். இதுதான் சரியான தருணம்! வாய்ப்பை நழுவவிடாதீர்கள். இப்பாடம்  நான்கு மற்றும் ஐந்தாவது ஆண்டுகளில் நடத்துவது வழக்கம்.

நவீன அரபி

அரபிக் கல்லூரி மாணவர்கள், மத்ரஸாவில் இருக்கும் காலத்திலேயே நவீன அரபி மொழியையும் (MODERN ARABIC) எப்பாடுபட்டாவது கற்றுக்கொண்டுதான் வெளியேற வேண்டும். நடப்பில் உள்ள அரபி மத்ரஸா பாடப் புத்தகங்கள் வாயிலாகவோ கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதைப் போல் பேசிப்பேசிப் பழகுவதற்கு வாய்ப்போ இல்லாததால் அதன் மூலமோ நவீன அரபியைக் கற்க இயலாத சூழ்நிலையே பெரும்பாலோருக்கு உண்டு.
நவீன அரபியைக் கற்கச் சொல்வதற்குக் காரணம், அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு தேடுவதற்காக அல்ல. இன்றைக்கு அரபு நாடுகளிலிருந்து அரபி அறிஞர்கள் எழுதுகின்ற அற்புதமான மார்க்க நூல்கள் நாள்தோறும் வெளிவந்தவண்ணமுள்ளன. அவர்கள் பெரும்பாலும் இன்றைய நவீன அரபிமொழியிலேயே நூல்களை எழுதி வருகிறார்கள்.

திருக்குர்ஆனின் ஒரு வசனத்தையோ நபிமொழி ஒன்றையோ சான்றோரின் அமுதமொழி ஒன்றையோ எடுத்துக்கொண்டால், நமது பார்வை கடிவாளமிடப்பட்ட குதிரையின் பார்வைபோல், மத்ரஸாவில் கேட்ட ஒரே திசையை நோக்கியே செல்கிறது. வசனத்திலுள்ள இலக்கண இலக்கியக் கூறுகள், ஏதேனும் சட்டங்கள், வரலாற்றுக் குறிப்புகள் மீறிமீறிப் போனால் வசனம் அருளப்பெற்ற பின்னணி-இத்தோடு நின்றுவிடுகிறது நம் தேடல்.

ஆனால், அரபி அறிஞர்களின் பார்வை விசாலமானது. இறைமொழியிலும் நபிமொழியிலும் பொதிந்துள்ள அரசியல், அறிவியல், இலக்கியம், குடும்பவியல், சமூகவியல், பொருளியல், வணிகவியல், வேளாண்மை, தொழில்... என இன்றைய உலகுக்கு வழிகாட்டும் எல்லா இயல்களையும் அவர்களின் எழுத்துத் தொட்டுச் செல்வதைக் காண முடியும்.

அவ்வாறே, அரபுலகிலிருந்து வெளிவரும் தினசரிகள், வார-மாத இதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள், புதிய பிரச்சினைகளுக்கான மார்க்கத் தீர்ப்புகள் முதலானவற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள இந்த நவீன அரபிதான் கைகொடுக்கும். இவற்றை வாசிக்க எங்கோ போக வேண்டியதில்லை. எல்லாம் இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

பழையதும் புதியதும்

நவீன அரபியில் பழைய சொல்லைப் புதிய பொருளில் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, முபாஷரத் (مباشرة) – மேற்கொள்ளல்; தஸ்வீத் (تصويت) – வாக்கு (வோட்டு) அளித்தல்; முஃகாதரா(مغادرة) - புறப்படுதல்; தத்பீக் (تطبيق) - செயல்படுத்துதல்; முஅவ்வகூன் (المعوقون) – மாற்றுத்திறனாளிகள்; ஷிர்கத் (الشركة) – நிறுவனம் (கம்பெனி)... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அவ்வாறே, புதிய சொல்லைப் பழைய பொருளுக்குப் பயன்படுத்துவர். நடிகன்- முமஸ்ஸில் (ممثل); கொண்டுவந்தான்-ஜாப (جاب); குறைத்தல் – தக்ஃபீப் (تخفيف); பங்கெடுத்தல் - முசாஹமத் (مساهمة); அர்ப்பணித்தல்-தக்ரீஸ் (تكريس); எட்டுதல் – தராவுஹ் (تراوح) ... இப்படி நிறைய!

பேச்சு வழக்கைப் பார்த்தோமென்றால், நமக்கு ஒன்றுமே புரியாது. நத்திர் (ندر) – வெளியே எடு; இத்லஉ (اطلع) - புறப்படு; ஷுஃப் (شف) - பார்; ஃபக்கில் பாப் (فك الباب) – கதவைத் திற; சுக்கல் பாப் (سك الباب) – கதவை மூடு; மூயா (مو يا) - தண்ணீர்; கல்லி அஸ்ஃபல் (خل اسفل) – கீழேயே இருக்கட்டும்; ஃபில்லி இப்ரீக் (فل ابريق) – பானையை நிரப்பு; கீஸ் தய்யிப் (قيس طيب) – சரியாக அள!

நல்ல வாக்கிய அமைப்பில்கூட வித்தியாசம் உண்டு. “அவர் நீண்ட சுற்றுப் பயணம் செய்திருந்தாலும் - (رغم جولته الطويلة); மேலும் சொன்னார்: (كما قال); நாம் முஸ்லிம்கள் என்ற முறையில் - (نحن كمسلمين); இந்தப் பிரச்சினை குறித்து - (حول هذه القضية); இதையொட்டி - (بهذه المناسبة); இதற்குப் பொருளல்ல - (هذا لا يعني); அல்லாஹ்வின் உதவியால் - (بحول الله); அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் - (لا سمح الله); மீண்டும் சொன்னார் - (اضاف من جديد)... இவ்வாறு ஏராளமான வழக்குகள் உண்டு.
(சந்திப்போம்)

No comments:

Post a Comment