Friday, July 13, 2018

பள்ளிவாசல் இமாம்கள் உதாசீனப் படுத்தப்படுவதற்கு இனியாவது தீர்வு காணப்பட வேண்டும்.

பள்ளிவாசல் இமாம்கள் உதாசீனப் படுத்தப்படுவதற்கு இனியாவது தீர்வு காணப்பட வேண்டும்.
***************************
இந்தியாவில் 651 ஆண்டு கால முஸ்லிம் ஆட்சியின் போது பள்ளிவாசல் இமாம், முஅத்தின், மதரஸா ஆசிரியர்கள், மாவட்ட காஜிகள் போன்று இஸ்லாமியத் துறையில் பொறுப்பு வகித்த பணியாற்றிய அனைவரும் அரசின் முதல்நிலை ஊழியர்களாக வாழ்ந்தனர். அவர்களின் அறிவு ஆற்றல் அனுபவம் உழைப்பு ஆகியவற்றுக்கேற்ப மாத ஊதியமும் இதர ஊக்கத் தொகைகளையும் அரசு தாராளமாக வழங்கி கண்ணியப்படுத்தியது.

முஸ்லிம் ஆட்சி சிதைக்கப்பட்ட பிறகு நாட்டில் இருந்த அத்துனை பள்ளிவாசல்களும் மதரஸாக்களும் தங்களை தனித்தனியாக தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. அரசு இல்லாத நிலையில் இஸ்லாமியத் துறையை உயிரோட்டமாக செயல்பட வைப்பதற்கு சமூகத்தில்  வசதிபடைத்த பணக்காரர்களின் தயவை நாட வேண்டிய நிலைக்கு அறிஞர்கள்  தள்ளப்பட்டனர்.

அடுத்து வந்த காலங்களில் தனியார் பங்களிப்பில் பள்ளிவாசல்கள் மதரஸாக்கள் மற்றும் பலவகை இஸ்லாமிய சேவை நிறுவனங்கள் உருவாகின. அவை ஒவ்வொன்றும் ஒரு பாதையில் செல்லத் துவங்கின. இன்று தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் ஒரு பொது  செயல்திட்டமோ அல்லது நிர்வாக ரீதியாக வழிகாட்டும் இஸ்லாமிய நெறிமுறைகளோ இல்லை.

இந்திய அரசின் அறக்கட்டளை (Trust ) சட்டம் மற்றும் அமைப்பு (Society) சட்டங்கள்  மட்டுமே உள்ளன. சமூக ரீதியாக எதுவும் நம்மை கட்டுப்படுத்தாது யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற இன்றைய நிலைதான் பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் மஹல்லாவாசிகள் உடனான உரிமைகளிலும் உறவுகளிலும் பல ஜமாஅத்து நிர்வாகங்கள் அத்துமீற வழிவகுத்துள்ளது. 

ஒரு சாதாரன மனிதனுக்கு இன்றைய முதலாளித்துவ சட்டங்கள் வகுத்து தந்துள்ள குறைந்தபட்ச மனித உரிமைகளை கூட உலகில் மனித உரிமைகளுக்கு சான்றாக விளங்கும் இஸ்லாத்தை பயின்று பயிற்றுவித்து உம்மத்தில் வழிபாடுகளை நிலைநிறுத்தி அவர்களின் மேன்மைக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் பள்ளிவாசல் இமாம்களுக்கு சமூகம் தருவதில்லை.

ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அவலத்தால் தங்களின் வாழ்வாதார பாதுகாப்பிற்காக பள்ளி நிர்வாகிகளின் பணக்காரர்களின் ஃபத்வாக்களுக்கு எண்ணங்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு பல இமாம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இல்லை இல்லை சமூகம் வலிந்து அவர்களை தள்ளியுள்ளது.

சமூக அநீதிகளுக்கு எதிராக உரக்கப் பேச பயிற்றுவிக்கப் பட்டவர்களின் வாயை வலுக்கட்டாயமாக பொத்தி முஸ்லிம் சமூகம் தன் தலைக்கு தானே கொல்லி  வைத்துக் கொள்கிறது.

தான் மனிதப் புனிதனாக மாறுவதற்கு தனது வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு தனக்காக சமூக அரசியல் தளங்களில் போராடுவதற்கு சில நேரங்களில் உயிரிழக்கக் கூட துணிந்து முன்வரும்  தலைவர்களை சிந்தனையாளர்களை இமாம்களை அவமானப்படுத்துவதும் அலட்சியப்படுத்துவதும் அவதூறுகள் பரப்புவதும் சர்வசாதாரணமாக நடக்கிறது. உலகில் வேறு எந்த சமூகமும் எப்போதும் செய்யாத கொடுமையை இந்த 20 ஆண்டுகளில் உருவாகி வந்துள்ள முஸ்லிம் இளைஞர்களில் சிலர் செய்கின்றனர்.சில சம்பவங்கள் வெளியே தெரிகின்றன பல சம்பவங்கள் வெளியே வருவதில்லை.

பள்ளி இமாம்களுக்கு ஏற்படும் இந்த அவல நிலை தொடர் கதையாக இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வை நோக்கி நகர வேண்டியது கட்டாயம். இல்லையென்றால் உம்மத்தில் அறிவார்ந்த மக்கள் சமூக அக்கரையில்லாமல் இருக்கின்றனர் என்பதற்கான சான்றாக அமைந்துவிடும்.

தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் ஏறக்குறைய 4500 பள்ளிவாசல்கள் உள்ளன.இந்த பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்களுக்கு மாநில அளவிலான மய்ய அமைப்பு மூலம் மாத ஊதியம் வழங்குவதற்கான வாய்ப்புகளை அரசின் வருவாய் துறை மற்றும் நிதி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள முஸ்லிம் அதிகாரிகளை கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து ஒரு வரைவு திட்டத்தை தயாரிக்க வேண்டும்.  

இமாம்களின் அமைப்பான ஜமாஅத்துல் உலமா சபை,சமூக அமைப்புகளின் தலைவர்கள், தொலைநோக்குப் பார்வையுடைய சமுதாய புரவலர்கள் ஒன்று கூடி  இந்த வரைவு திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி இமாம்களின் பணிச்சூழல்  உரிமைகள் மற்றும் ஊதியம் வழங்குதல் ஆகியவற்றை மாநில ஜமாஅத்துல் உலமாவின் இந்த நிதித்துறை கமிட்டி மூலம் செயல்படுத்தப்படும் போது இமாம்களின் கண்ணியம் உரிமைகள் பாதுகாக்கப்படும். 

தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 4500 பள்ளிவாசல்களை 1.கிராம மஹல்லா 2.நகர மஹல்லா 3.மாநகர மஹல்லா என்று மூன்று வகைகளாக பிரித்து அவர்களுக்கான ஊதியம் உணவு உறைவிடம் போன்றவற்றை நிர்ணயம்  செய்ய வேண்டும்.

குறிப்பாக கிராம மஹல்லாவில் பணியாற்ற விரும்பும் இமாமிற்கு குடும்பத்துடன் தங்குவதற்கு வீடு வசதியுடன் குறைந்தது ரூபாய் 25,000 மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட வேண்டும். அப்போது தான் இஸ்லாமிய நகரமான மஹல்லாக்களில் வாழும் மக்களுக்கு திறமையான இமாம்களின் கல்வியறிவும் வழிகாட்டுதல்களும் கிடைக்கும்.ஜூம்ஆ மேடைகள் உம்மத்தின் வாழ்வியல் சிக்கலுக்கான வழிகாட்டும் மேடைகளாக உயர்ந்து நிற்கும். அடுத்த தலைமுறையின் இஸ்லாமிய அறிவு மேம்படும்.

பல்வேறு வாழ்வியல் உலகியல் காரணங்களுக்காக மஹல்லாக்களை விட்டு முதலாளித்துவ நகரங்களுக்கு புலம் பெயரும் மக்களை ஓரளவிற்கு தடுத்து நிறுத்த முடியும். புலம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவது சாத்தியப்படும்.    

இவையெல்லாம் இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் மிக எளிதாக நடைமுறைப்படுத்த சாத்தியமுள்ளவை. சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றால் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி அனைவரின் ஆலோசனைகளையும் காது கொடுத்து கேட்கும் பக்குவம் நாம் அனைவருக்கும் வேண்டும்.

- CMN SALEEM

# கான் பாகவியின் பின்னூட்ட ம் #
*************************************
சலாம்.நன்றி. ஒரு இமாம் இவ்வளவு ஊதியம் கொடுத்தால்தான் பணிபுரிவேன் - அதாவது தொழவைப்பேன் என்று அடம்பிடிக்கவும் முடியாது; துப்புரவு தொழிலாளியின் ஊதியத்தை விடக் குறைவான ஹதியாவை வாங்கிக்கொண்டு பணியில் தொடரவும் முடியாது.மற்ற துறை பணியாளர்களைப் போல் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்த வோ வேலை நிறுத்தம் செய்யவோ தார்மிக அடிப்படையில் முடியாது .

ஜமாஅத்துல் உலமா சபையும் தன்னிச்சையாக ஒன்றும் செய்வதற்கில்லை. தங்கள் சொந்த ஆதாயத்திற்காகச் சங்கம் நடத்துகிறார்கள் என்ற பெயர்தான் கிடைக்கும். ஊதியம் குறைவாக இருந்தாலோ , ஓர் ஆலிம் இடைநீக்கம் செய்யப்பட்ட இடத்தில் யாரும் இமாமாகச் சேராதீர்கள் என்று சொல்லவோ சட்டத்தில் எங்கே இடமுண்டு என்ற கேள்வி தான் பிறக்கும்.

இதனால்தான் , ஜ. உ.சபையின் மறைந்த மூத்த நிர்வாகிகள் ஊதியப் பிரச்சினையை கையில் எடுக்காமல், தவ வாழ்வு வாழ்ந்து விட்டு மறைந்தார்கள்.

ஆனால் , அதற்காக இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பதும் பேராபத்து ஆகும்.ஏற்கெனவே ஆலிம்கள் உருவாக்கம் குறைந்து போனது மட்டுமின்றி, தகுதிமிக்க இளம் ஆலிம்கள் வேறு துறைகளுக்குச் சென்றும் விட்டார்கள் . இது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு இழப்பாகும்.

இன்றைக்கு வெளிமாநில இமாம்கள் தான் இடங்களை நிரப்பி வருகிறார்கள் .இவர்களில் பெரும்பாலோர் முறையாகக் கல்வி கற்ற ஆலிம்கள் அல்லர்.இராகத்தோடு இனிய குரலில் குர்ஆன் ஓதப் பயிற்சி எடுத்துள்ளார்கள் அவ்வளவுதான்.இமாமுக்கு இஃது மட்டும் போதுமா? சட்டங்கள் , குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கங்கள் , இங்குள்ள சூழ்நிலை அறிந்து உரையாற்றல் ...என ஏகப்பட்ட விஷயங்கள் கற்றிருக்க வேண்டாமா?

சரி ! இதற்குத் தீர்வுதான்  என்ன ? பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் கூட்டமைப்பு, வக்ஃப் வாரியம் , சமூக ஆர்வலர்கள் , ஜ.உ. சபை அல்லாத சமுதாய அமைப்புகள், முஸ்லிம் கட்சிகள் , சமுதாயப் பிரமுகர்கள் முதலானோர் கவலையோடு ஒன்றுகூடி ஒரு நல்ல முடிவெடுத்து செயல்படுத்துவது தான் .

இதை யார் முன்னெடுப்பது ? ஒன்றிணைப்பது என்பதுதான் விடை தெரிய வேண்டிய வினா . ஆர்வமும் துடிப்பும் மார்க்க மரபுகளில் அசையாத பிடிப்பும் உள்ள , பொதுநலனில் அக்கறை கொண்ட ஒரு ஐந்து , பத்து இதயங்கள் கூடவா இல்லை இச்சமுதாயத்தில்...?

No comments:

Post a Comment