Saturday, April 06, 2019

இத்தனைக்குப் பிறகும் இவர்களை ஆளவிடலாமா? சிந்திப்பீர்! செயல்படுவீர்! பேராசிரியர், அ. முஹம்மது கான் பாகவி

2019 ஏப்ரல் 18 தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு முக்கியமான –மறக்க முடியாத- ஒரு நாளாகும். அடுத்துவரும் 5 ஆண்டுகளுக்கு, தமக்குத் தாமே குழி பறித்துக்கொள்வதும், விழித்துக்கொண்டு தம்மைத் தற்காத்துக்கொள்வதும் உங்கள் கையிலுள்ள வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதில்தான் உண்டு.

இந்தியக் குடிமக்களின் வாழ்வாதாரம், தொழில், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பன்முகத்தன்மை, மத மற்றும் மொழிச் சுதந்திரம், வேற்றுமையில் ஒற்றுமை எனும் தாரக மந்திரம்… இப்படி ஒவ்வொரு துறையிலும் மத்தியை ஆளும் பா.ஜ.க. அரசு தோல்விக்குமேல் தோல்வி கண்டுள்ளது.

தோல்வியை மறைக்க, அலங்காரப் பேச்சும் ஆணவ அறிக்கையும் மத-சாதி மோதல்களும் சிறையில் தள்ளி தண்டிப்பதும் மட்டுமே இந்த அரசின் ஆயுதமாக உள்ளது.

வேலையில்லா திண்டாட்டம், கடன் சுமை, வறுமை, பணத் தட்டுப்பாடு, அராஜகம், அரசியல் சட்ட மாற்றம்… என பா.ஜ.க. அரசு மேற்கொண்ட, இனியும் மேற்கொள்ளவிருக்கும் கொடுமைகளைச் சுருக்கமாகப் பட்டியலிட்டாலே பக்கங்கள் நீளும்.

இதிலிருந்து, 2014 முதல் இன்றுவரை கடந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க. அரசாங்கம் சாதனை படைத்ததா? வேதனை கொடுத்ததா என்பது புரிந்துவிடும்.

#வேலையில்லாத்_திண்டாட்டம்
ஆட்சி செய்யும் வாய்ப்பை மக்கள் அளிக்கும்போது, வேலை செய்யும் உடல்நிலையில் உள்ள அனைவருக்கும் நல்ல வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆட்சியாளர்களின் கடமையாகும். இப்பரீட்சையில் வெல்வோர் மட்டுமே ஆட்சியில் இருக்கலாம்; தவறுவோர் நடையைக் கட்டலாம்.

ஆனால், வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசின் லட்சணத்தைப் பாருங்கள். வேலைவாய்ப்பு குறித்த அரசு அறிக்கையிலிருந்து தெரியவரும்

#புள்ளி_விவரம்:
2011-12ஆம் நிதியாண்டில் 2.2 விழுக்காடாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம், பா.ஜ.க. ஆட்சியில் 6.1 விழுக்காடாக உயர்ந்தது. குறிப்பாக, 15-29 வயதுக்காரர்களில் நகர்ப்புறங்களில் 18.1% ஆண்களும் 27.2% பெண்களும் வேலை தேடி அலைகின்றனர். கிராமப்புறங்களில் 17.4% ஆண்களும் 13.6% பெண்களும் வேலையின்றி தவிக்கின்றனர்.

தேசிய புள்ளியியல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, 2018 டிசம்பர் இறுதியில் வேலையில்லா மக்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டுவிட்டது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற தனியார் நிறுவனம் கடந்த ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது.

இந்த அவலமான நிலைக்குக் காரணமாக அமைந்தது, 2016ஆம் ஆண்டு திடீரென அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையே.

86% புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என ஒரே இரவில் பா.ஜ.க. அரசு அறிவித்தது.

முதிர்ச்சியற்ற இந்த நடவடிக்கையால் நாட்டுப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் அமைப்புசாரா சிறு-குறு தொழில்கள், விவசாயம் ஆகிய வருவாய் துறைகளும் முடங்கிப்போயின.

இது போதாதென்று, 2017இல், நாடு முழுவதற்கும் ஒரே வரி என்று கோஷித்து, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை பா.ஜ.க. அரசு கொண்டுவந்தது. இந்த முடிவால் ஏற்கெனவே நசிந்துபோன தொழில்துறை மேலும் அதல பாதாளத்திற்கு இறங்கிப்போனது.

#பணத்_தட்டுப்பாடு
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பணத் தட்டுப்பாடு இல்லை என்று சப்பைக் கட்டினாலும், சுமார் ரூ. 70 ஆயிரம் கோடி அளவுக்குத் தட்டுப்பாடு இருப்பதாகவே எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கை கூறுகிறது.

மக்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பளவு ரூ. 19.4 லட்சம் கோடி. ஆனால், புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பளவு ரூ. 17.5 லட்சம் கோடி. இந்த இடைவெளியான ரூ. 1.9 லட்சம் கோடியே பணப் பற்றாக்குறைக்குக் காரணம்!

பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை படிப்படியாகக் குறைந்து ரூ. 1.2 லட்சம் கோடியாகச் சுருங்கிவிட்டது. இதையடுத்து மொத்தமாக ரூ. 70 ஆயிரம் கோடி அளவுக்குப் பணத் தட்டுப்பாடு நிலவுகிறது.

#குடும்பக்_கடன்கள்_உயர்வு
2016-17 நிதியாண்டில் ரூ. 3.7 லட்சம் கோடியாக இருந்த இந்தியர்களின் குடும்பக் கடன், 2017-18 நிதியாண்டில் ரூ. 6.74 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் சுமார் 1.8 மடங்கு அதிகமாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இது, 13% அதிகம் என்று தி எக்கனாமிக் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

2018-19_நிதியாண்டில் வங்கிகளில் பெறப்பட்ட குடும்பக் கடன்கள் விவரம்:
நுகர்வுச் சாதனங்களுக்கு - 0.04% கடன்
வீட்டுக் கடன் - 13.33%
கிரெடிட் கார்டு கடன் - 1.05%
கல்விக் கடன் - 0.85%
வாகனக் கடன் - 2.46%
தனிப்பட்ட கடன் - 6.90%
இவ்வாறு ரிசர்வ் வங்கியின் ஓர் அறிக்கை தெரிவித்துள்ளது. குடிமக்களில் கடன் சுமை உயர்வது ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. மாறாக, தோல்விக்குச் சிறந்த அடையாளமாகும்.

#வாராக்_கடன்
இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றிய கார்பரேட் நிறுவனங்களும் தொகைகளும்:

1. முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி - 1 லட்சத்து 87 ஆயிரம் கோடி
2. அனில் அம்பானி - ரிலையன்ஸ் நிறுவனம் - 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி
3. ராஷிவ் ரூயா & சகோதரர்கள் - எஸ்ஸார் குழுமம் - 1 லட்சத்து 1461 கோடி
4. அனில் அகர்வால் - வேதாந்தா குழுமம் - 1 லட்சத்து 3,340 கோடி
5. அதானி - அதானி குழுமம் - 96,031 கோடி
6. சைரஸ் மிஷ்ட்ரி டாடா - டாடா ஸ்டீல்ஸ் - 87,701 கோடி
7. மனோஜ் கவுர் - ஷேபி குழுமம் - 75,163 கோடி
8. சாஜ்ஷன் ஷிந்தால் - ஷேஎஸ்வி குழுமம் - 58,171 கோடி
9. எல்.எம். ராவ் - லாங்கோ குழுமம் - 47,102 கோடி
10. ஜி.எம். ராவ் - ஜி.எம்.ஆர் குழுமம் - 47,976 கோடி
11. வி என் தூத் - வீடியோகான் குழுமம் - 45,400 கோடி
12. ஜி.வி.கே. ரெட்டி - ஜி.வி.கே. குழுமம் - 33,939 கோடி

மொத்தம் ஒரு டஜன் நிறுவனங்கள். மொத்தத் தொகையைக் கூட்டினால் தலை சுற்றும்.
வளர்ச்சியா? வீக்கமா?

இந்திய மக்களில் 13.60 கோடிப் பேர் –அதாவது 10% பேர், 2004ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, தொடர்ந்து 14 ஆண்டுகளாக வறுமையில் வாடுகிறார்கள். அதே நேரத்தில், இந்தியாவின் 10% பணக்காரர்களிடம் மொத்த சொத்தில் 77.4% சொத்துகள் குவிந்து கிடக்கின்றன. மிகச் சிலர் வாழ, பலர் வாடும் நிலை வளர்ச்சியாகுமா?

ஆக்ஸ் ஃபாம் அமைப்பின் ஆய்வறிக்கை சொல்வதைப் பாருங்கள்:
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டில் மட்டும் ஒரு நாளுக்கு ரூ. 2,200 கோடி என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. அதில் ஒரு விழுக்காடு பணக்காரர்களின் சொத்து மதிப்பு 39 விழுக்காடு வளர்ந்துள்ளது. மீதியுள்ள மொத்த மக்களின் சொத்து வெறும் 3% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.

மருத்துவம், பொது சுகாதாரம், கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செய்துள்ள செலவு மற்றும் வருவாய்க் கணக்கு ரூ. 2.08 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால், இது அம்பானியின் சொத்து மதிப்பை (2.8 லட்சம் கோடி) விடக் குறைவானது என்பது குறிப்பிடத் தக்கது.

#அராஜகமும்_அட்டூழியங்களும்
மேற்கண்ட பொருளாதாரச் சீரழிவுகளையும் சுரண்டல்களையும்கூடப் பொறுத்துக்கொள்ளலாம்! கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் நடக்கும் அட்டூழியங்களையும் குண்டர்களின் கொடுமைளையும் எப்படிப் பொறுக்க முடியும்.

 மத ஊர்வலங்கள் நடத்தி சிறுபான்மையினர் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் கோஷங்களை எழுப்பி, வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவது இந்த ஆட்சியில் சாதாரணமாகிவிட்டது.

 மாட்டிறைச்சி விவகாரத்தில் இந்தக் காலிகள் ஆடிய ஆட்டம் மன்னிக்கக்கூடியதன்று. முஸ்லிம்களையும் தலித்களையும் நடுரோட்டில் கட்டிவைத்துப் பட்டப்பகலில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்கள் கொஞ்சமா?

 எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் எவராக இருந்தாலும், பொய் வழக்குப் போட்டு, சிறையில் அடைத்து கொடுமை செய்வது மட்டுமன்றி, ஆளையே தீர்த்துக்கட்டும் பயங்கரவாதிகள் இவர்கள்.

 முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைத்து, மனம்போன போக்கில் ஷரீஆ சட்டத்தை மாற்றுவதும் மாற்றப்பட்டதை முஸ்லிம்கள்மீது திணிப்பதும் இவர்களின் அராஜகத்திற்கு உச்சகட்ட சாட்சி!

 பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் கைவைத்து உண்மை வரலாற்றைத் திரிப்பதும், சோதிடம், பகவத் கீதை போன்ற அவர்களின் நம்பிக்கையை எல்லா மாணவர்களும் கற்கக் கட்டாயப்படுத்துவதும், சமஸ்கிருத மொழிக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதும், சரஸ்வதி வந்தனம், வந்தே மாதரம் பாடாதவர்களைப் பள்ளியிலிருந்து நீக்குவதுமான அரசியல் சட்டப் புறம்பான காரியங்களை ஆட்சியின் துணையோடு பா.ஜ.க. செய்துவருகிறது.

#சாசனத்த_மாற்ற_திட்டம்
இந்தியாவின் பன்முகத்தை மாற்றிவிட்டு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே கலாசாரம், ஒரே பண்பாடு… என ஒற்றைப்படைச் சித்தாந்தத்தை நோக்கி பா.ஜ.க. நடைபோடுவதுதான் மிகப் பெரிய ஆபத்து. இதைச் சாத்தியமாக்கத் தடையாக இருப்பது, இந்திய அரசியல் சாசனச் சட்டம்தான்.

அந்தச் சாசனத்தையே மாற்றிவிட்டால், அவர்களின் கெட்ட கனவு நனவாகிவிடும் அல்லவா? இதற்கு மக்களவை, மாநிலங்களவை, மாநிலங்கள் ஆகிய மூன்று அதிகார மையங்களிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பலம் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைத்துவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றிவிட முடியும்.

அதுமட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க வழி வகுக்கும் கெங்கடாஜலய்யா அறிக்கை ஏற்கெனவே அவர்கள் கையில் உள்ளது. இதை அமல்படுத்தும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக உள்ளனர்.

#இத்தனைக்குப்_பிறகும்..?
இத்துணைக் கொடுமைகளுக்குப் பிறகும், இந்தக் கொடுங்கோலர்களை ஆள விடலாமா? யோசித்துப்பாருங்கள்! இது, சாதி, மத வேறுபாடின்றி அனைத்து வாக்காளர்கள் முன்னும் வைக்கப்படுகின்ற திறந்த அறிக்கையும் கோரிக்கையும் ஆகும். சிந்தித்துச் செயல்படுங்கள். வாக்குச் சாவடியில் பொத்தானை அழுத்தும்போது ஒருகனம் சீர்தூக்கிப்பாருங்கள்!

சமூக ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நிதி ஆளுமை… என எல்லாத் துறைகளிலும் தோல்வி கண்டது மட்டுமன்றி, நாட்டின் வளத்தை வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டு பணமுதலைகளுக்கும் தாரைவார்த்து, விவசாயத்தை அழித்துச் சுற்றுச்சூழலைக் கெடுத்து, இந்தியர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கே வேட்டு வைத்துக்கொண்டிருக்கும் இந்த ஆட்சி தொடரலாமா?

மதவாத, சாதிவாத சர்வாதிகார ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, சமதர்ம, சமயோசித ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுங்கள்! அப்போதுதான் அனைவரும் சாந்தி வாழ்க்கையைக் காண முடியும்.

பா.ஜ.கட்சி வேட்பாளர்களுக்கோ, அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கோ தவறிக்கூட வாக்களித்துவிடாதீர்கள்! பா.ஜ.க.வுக்கு எதிரான சிந்தனைப் போக்கும் கொள்கை உறுதியும் உள்ள கூட்டணிக்கோ, கட்சிக்கோ வாக்களித்து, தேசத்தைக் காக்க உதவுங்கள்!

சிந்திப்பீர்! செயல்படுவீர்!
சிந்திக்கத் தவறினால் சிந்துவீர் செந்நீர்!

No comments:

Post a Comment