மூத்த மார்க்க அறிஞர்கள்
தலைமுறை விடைபெற்றது
~~~~~~~~~~~~~~~~~~~~
2022 ஜனவரி 6ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை வேளையில் , பிரபல மூத்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் மெளலானா பி.எஸ்.பி. ஸைனுல் ஆபிதீன் பாகவி அவர்கள் இறந்துவிட்டார்கள்.
சென்னையில் அன்னாரின் புதல்வர் மெளலவி பரகத் அலி பாகவி இல்லத்தில் அன்னாரது உடலைப் பார்த்தபோது ஏனோ தெரியவில்லை; தேம்பித்தேம்பி அழுதேன். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரான பிஎஸ்பி ஹழள்ரத் அவர்களிடம் பயின்ற பல்லாயிரம் மாணவர்களில் இந்த எளியோனும் ஒருவன்.
கல்லூரியில் நான் கற்றபோதும் சரி; அதே கல்லூரியில் 18 ஆண்டுகள் ஆசிரியராக நான் பணியாற்றிய போதும் சரி! என்மீது தனி அக்கறை காட்டிய பெருமகனார் அவர். குறிப்பாக பேச்சுத் துறையில் எனது தயக்கத்தைப் போக்கி ஊக்கமளித்து முன்னுக்கு வர ஊக்குவித்த ஆசிரியர் தந்தை அவர்.
அவ்வாறே, எழுத்துத் துறையில் என்னை ஊக்குவித்துச் சிறந்த சில வழிகாட்டுதல்களை வழங்கிய பயிற்சியாளர் அவர். சுருஙகக்கூறின் அக்கறையுள்ள ஒரு தந்தையின் இடத்தை வகித்தவர் என்பதாலோ என்னவோ அறியாமல் வந்தது கண்ணீர்.
ஆக, பேச்சு, எழுத்து, மொழிபெயர்ப்பு...எனப் பல்துறை வழிகாட்டுதல்களை வழங்கிய வள்ளல் மறைந்துவிட்டார் என்பேன்.
இப்போது என்னவென்றால், தமிழகத்தில் வாழ்ந்த மூத்த தலைமுறை மார்க்க அறிஞர்கள் வரிசை முற்றுப்பெற்றுவிட்டதோ என்ற அச்சம் என் போன்றோரை வாட்டுகிறது.
ஆம்! எது குறித்துக் கேட்டாலும் விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைப் பார்ப்பதே அரிதாகிவருகிறது. அதுமட்டுமன்றி, நாலு எழுத்து கற்றவுடனே எல்லாம் அறிந்துவிட்டோம் எனும் மனப்பான்மை இன்று அதிகமாகவே காணப்படுகிறது.ஆனால், அந்த நிறைகுடங்கள் எப்போதும் ததும்பியதில்லை.
மறைந்த மேதைகளின் மறுமை வாழ்வு செழிக்க வல்லமையும் மாண்புமிக்க இறைவன் அருள் புரிவானாக எனப் பிரார்த்திப்போம். அவர்களின் அறிவாற்றல், அடக்கம், எளிமை, புகழ் விரும்பாமை, சமூக அக்கறை, இறையச்சம் முதலான உயர் தன்மைகளை நமக்கும் அருள அல்லாஹ்வைப் பணிந்து வேண்டுவோம்.
அன்புடன் உங்கள்
கான் பாகவி
06.01.2022
No comments:
Post a Comment