இலங்கை அடித்துள்ள
எச்சரிக்கை மணி!
~~~~~~~~~~~~~~~~
இலங்கை சந்தித்துவரும் மிக மோசமான நிலை, ஒற்றைக் குடும்பம், ஒற்றை மொழி, ஒற்றை மதம் என்ற ஒவ்வாத ஆட்சி முறைக்கு விழுந்த சரியான சாட்டையடி என்பதுதான் எதார்த்தம்.
அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய ஓர் அரசாங்கம், குறிப்பிட்ட மொழி, மதம், கலாசாரத்திற்குக் கொடி பிடித்தால், இப்படித்தான் நாடு குட்டிச்சுவராகப் போகும் என்பதே வரலாறு.
மற்ற மக்களின் ஆதரவைப் பெறாமல், ஒற்றை மக்களை வைத்துக்கொண்டு, அராஜக ஆட்சி நடத்தும்போது, பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல, ஒருநாள் நாடே முடங்கிப் போய்விடும்; அப்போது சொந்த மக்களும் அரசுக்கு எதிரிகளாக மாறி, தெருவில் போராடத் தொடங்கிவிடுவார்கள் என்பதற்குச் சரியான சான்றுதான் இலங்கையின் அவலநிலை.
நாட்டின் முன்னேற்ற வழிகளை மறந்துவிட்டு, சாதி, சமயம், சங்கம், பாஷை...என்று பிளவு சக்திகளைத் தூக்கி நிறுத்த அரசு முனையும்போது யாரும் கைகொடுக்கமாட்டார்கள்.நாடு காடாக மாறும்; மக்கள் மாக்களாக மாறுவர்; ஆட்சியாளர்கள் ஆளுக்கொரு பக்கம் அடங்கிப்போவார்கள்.
இது இலங்கைக்கு மட்டுமல்ல; வல்லரசுகளுக்கும் வலதுசாரிகளுக்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment