Tuesday, October 04, 2011

திருப்புமுனையாகும் புனிதப் பயணம் - 1


-   . முஹம்மது கான் பாகவி

ஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்புக்குரியவை. புனித ஹஜ் கடமை எல்லா விதத்திலும் சிறப்பானது; வித்தியாசமானது. முறையாக மேற்கொள்ளப்படும் புனித ஹஜ், ஹாஜிகளின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைவது உறுதி.
இறைநம்பிக்கை, இறைவழிபாடு, தியானம், பிரார்த்தனை, தியாகம், சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்தல், அடக்கம், பணிவு, எளிமை, மார்க்கப் பற்று, முன்னோர்கள் மீதான மதிப்பு, நுகர்வு பற்றிய மதிப்பீடு, சக மனிதர்கள்மீது பச்சாதாபம், இன, மொழி, பிராந்திய வேற்றுமைகளை மறத்தல், படைத்தவனே நிஜம்; மற்றெல்லாம் மாயை என்ற ஆன்மிக உணர்வு... இப்படி ஏராளமான உயர் கோட்பாடுகளின் சங்கமமே புனித ஹஜ்.

ஊரை மறந்து, உற்றார் உறவினரை மறந்து, தொழிலை மறந்து, பொருளை மறந்து, இலட்சக்கணக்கானோர் மத்தியில் இருந்தாலும் அனைவரையும் மறந்து ஏக இறைவனின் அன்புக்காக ஏங்கவைக்கும் ஏற்றமிகு நாட்களே ஹஜ் நாட்கள்.

இறைமறை இறங்கிய இடம்; இறைத்தூதர் பிறந்த மண். அந்த இடம் புனிதம்; அந்தக் காற்று புனிதம்; அந்த வான்வெளி புனிதம்; அந்த மாதம் புனிதம்; அந்த நாள் புனிதம்; அந்த மண், நீர், மரம், செடி கொடி, காய்கனி, பேரீச்சங்கனி, குப்ஸ் (கோதுமை ரொட்டி), ஒட்டகம், தோட்டம், வயல்வெளி... எதையும் மறக்க முடியாது.

இந்த இடத்தில் அந்த மாமனிதரின் பாதம் பட்டிருக்குமோ! இந்த இடத்தில் அண்ணலார் அமர்ந்திருப்பார்களோ! இங்கு தொழுதிருப்பார்களோ! இங்கு அழுதிருப்பார்களோ! இங்கு தோழர்களிடம் உரையாடியிருப்பார்களோ! இங்கு படுத்திருப்பார்களோ! இங்கு உண்டிருப்பார்களோ! இங்கு உறங்கியிருப்பார்களோ... என்று கண்ணீர் மல்க காலச் சுவடுகளைத் தேடும் வழிகள்.

புனித கஅபா... அந்தச் சதுர வடிவ சிறு கட்டடம்... பல அடுக்குமாடி நவீனக் கட்டடங்களைக் கண்டு களித்த கண்கள்கூட புனித கஅபாவை முதன்முதலில் காணும்போது, உடம்பில் ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே, வார்த்தையால் வடிக்க முடியாதது.

கண் தானாகவே நீரைச் சுரக்கிறது; உடல் நடுங்குகிறது; நெஞ்சு விம்முகிறது; நடை தளர்கிறது; பாதம் நகர மறுக்கிறது. ஓவென அழத்தோன்றுகிறது. நா தழுதழுக்கிறது. இந்தப் பரவசத்தில், என்னை சக பயணிகள் மிதித்ததோ உதைத்ததோ தள்ளிவிட்டதோ எதுவும் எனக்குத் தெரியவில்லை.

கம்பீரமான, அதே நேரத்தில் சாந்தமான தோற்றம். காண கண் கோடி வேண்டும். எத்தனை நபிமார்கள், எத்தனை சான்றோர்கள், எத்தனை நல்லடியார்கள் சுற்றிவந்த இடம்! தொட்டுத் தழுவிய சுவர்! இதழ் பதித்து முத்திய கல்! அந்தப் பெருங்கூட்டத்தில் இதோ நானும் ஒருவன்.

பிறந்த பலனை அடைந்துவிட்டேன். இனி வேறொன்றும் வேண்டாம்! இதே உணர்வில் கதறி அழுத ஹாஜிகள் பலரை நேரில் பார்க்க முடிந்தது. அந்தக் கட்டடத்தில் உள்ள கல்லுக்கும் மண்ணுக்கும் உள்ள சிறப்பா இது? அப்படியானால், மற்ற கட்டடங்களுக்கு இந்தச் சிறப்பு இல்லையே!

அந்தக் கட்டடம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஓரிறைக் கொள்கைக்கே இந்த மாண்பும் மகத்துவமும். அதை எழுப்பிய மனிதப் புனிதர்களும் அதை தவாஃப் செய்த புண்ணியவான்களும் அதன்பின்னே ஒளிந்திருப்பதன் மகிமைதான் அது. நபிமார்கள், நபித்தோழர்கள், சான்றோர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அது பகரும் சான்றுதான் காரணம்.

ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே உள்ள நீளமான பாதை
ஸஃபா-மர்வா குன்றுகளுக்கிடையே நடக்கும்போதும் ஓடும்போதும் அன்னை ஹாஜர் முன்னே ஓடுகிறார். குழந்தை இஸ்மாயீலின் அழுகுரல் கேட்கிறது. ஸம்ஸம் நீரைப் பருகினால் வானவர் ஜிப்ரீல் தோண்டிய வற்றா ஊற்று காட்சியளிக்கிறது. அங்கே கால் வலி மறந்துபோகிறது. ஹாஜிகளுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு! ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றோடு அவர்கள் கரைந்துபோகிறார்கள்.

அரஃபா பெருவெளியில் லட்சம் தோழர்கள் நிற்க, ‘அர்ரஹ்மத்மலை உச்சியில் அண்ணெலம் பெருமானார் (ஸல்) அவர்கள் உருக்கமான ஓர் உரை நிகழ்த்த, இன்று அதே இடத்தில் நான். ஆகா! என்ன அற்புதமான காட்சியப்பா அது! பயணக் களைப்பும் களிப்பாக மாறும் அதிசயம்!

மினாவில் குளிரூட்டப்பட்ட கூடாரம். ஆனால், ஒதுக்கப்படும் படுக்கை கப்றைநினைவூட்டும். அந்த அளவுக்குக் குறுகலானது. தலையை நீட்டினால் மற்றவரின் தலையோடு மோதும்; காலை சற்று நீட்டலாம் என்றால், மற்றொரு சகாவின் காலில் இடிக்கும். கப்று வாழ்க்கைக்குப் பயிற்சிபோலும்!

மினா கூடாரங்களின் அழகிய காட்சி
மினாவில் ஷைத்தானுக்கு கல்லெறியும்போது ஏற்படும் உணர்ச்சி இருக்கிறதே அனுபவித்தால்தான் உணர முடியும். இவ்வளவு காலம் நீதானே என்னைக் கெடுத்துக்கெண்டிருந்தாய். இன்றோடு நீ ஒழிந்துபோ என்ற வேகம் ஒவ்வொரு கல்லை வீசும்போதும் எழுகிறது.

மதீனாவில்தான் எத்தனை நினைவுகள்! அந்த மாமனிதர் ஓய்வெடுக்கும் அத்தலத்தில் வர்ணிக்க இயலாத எண்ணங்கள்! ஆசைகள்! அப்படியே தடுப்பைத் தாண்டி உள்ளே புகுந்து அண்ணலாரின் திருவதனத்தை ஒருமுறை, ஒரேயொரு முறை பார்த்துவிடமாட்டோமா? அப்படியே கொஞ்சம் அவர்களின் பூக்கரத்தைத் தொட்டுவிடமாட்டோமா? மணக்கும் அந்த மேனியைக் கட்டித் தழுவிவிட மாட்டோமா? எத்தனை விபரீத ஆசைகள்! நடக்காது என்று தெரிந்தும் உள்ளத்தின் துடிப்பு அப்படி!

மிம்பரின் எழில்மிகு தோற்றம்
அண்ணலார் தொழவைத்த இடம்; உரை நிகழ்த்திய மேடை. அறிவுரை கூறிய இடம். ஆலோசனை நடத்திய இடம். விசாரணை செய்த இடம். தீர்ப்புச் சொன்ன இடம். நபித்தோழர்கள் தொழுத இடம்; அழுத இடம்; சிரித்த இடம்; பாடம் படித்த இடம். வெளிநாட்டுத் தூதர்கள் வந்துபோன இடம். திண்ணைத் தோழர்கள் பசியால் புரண்ட இடம்.

அருகிலேயே ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட ஜன்னத்துல் பகீஉ. பெருநாள் தொழுகைத் திடல்முஹாஜிர்கள்-அன்சாரிகள் இடையே கைதேர்ந்த விவாதம் நடந்த பனூசாயிதா மண்டபம். உஹுத் மலை; அங்கே ஹம்ஸா (ரலி) அவர்களின் அடக்கத்தலம்... இப்படி பல்வேறு வரலாற்றுச் சுவடுகள்; நபி (ஸல்) அவர்களின் காலத்தைச் சொல்லும் நினைவுச் சின்னங்கள்.

ஜன்னத்துல் பகீயின் தோற்றம்

எல்லாவற்றையும் கண்டு, ரசித்து, நினைத்து, அழுது, புலம்பி ஊர் திரும்புகையில் சொல்லில் செயலில் நிதானம், சாந்தம், விவேகம், சக மனிதர்கள்மீது பரிவு, பாசம், இறைநம்பிக்கையில் உறுதி, தெளிவு, இறைவழிபாட்டில் புத்துணர்வு, புதுத்தெம்பு என எல்லாம் கலந்த புது மனிதனாக திரும்புகிறார் ஹாஜி.

ஹஜ் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை; பல முனைகளில் இப்போது அவர் பயிற்சி பெற்றவர். நல்லவர். பாவங்கள் இல்லாத, பால் வடியும் முகம் கொண்ட பாலகர்.
(தொடரும்)

No comments:

Post a Comment