ச
|
மூக வலைத்தளங்களான முகநூல், ட்விட்டர், வலைப்பதிவு ஆகிய சர்வதேச ஊடகங்களிலும் உள்ளூர் பத்திரிகைகளிலும்
முக்கியமான கட்டுரைகள், முஸ்லிம் உலகச் செய்திகள், பேட்டிகள், வாசகர் கருத்துகள்
என நம்மால் இயன்ற அளவுக்குப் பரப்புரைகளைச் செய்துவருகிறோம். மாநாடுகள், கருத்தரங்குகள்,
கூட்டங்கள் எனக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சூழ்நிலைகளுக்கேற்பப்
பயன்படுத்திக்கொள்வதும் உண்டு.
அவ்வப்போது தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மார்க்க உரைகள் நிகழ்த்துவது உண்டு. தொலைபேசி
வாயிலாகத் தொடர்புகொள்ளும் நண்பர்களின் ஐயங்களுக்கு
விளக்கம் அளிப்பதும் நடக்கிறது. இவையன்றி, சொந்த நூல்களும் அவ்வப்போது
வெளிவருகின்றன. அறிவியல், அரசியல், பொருளியல், மகளிர், இளைஞர்கள் எனப் பல்வேறு
தலைப்புகளில் என் நூல்களை முஸ்லிம் பதிப்பகங்கள் வெளியிட்டுவருகின்றன.
சென்னையில், வெள்ளிமேடை
உரைகள் தயாரித்து இமாம்களுக்கு அதன் நகல்களை வழங்கி வகுப்பாகவே
நடத்து பணியும் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதற்கிடையே சமுதாயப் பாதுகாப்பை
முன்னிட்டு கூட்டப்படும் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு யோசனைகள்
தெரிவிப்பது, ஊக்குவிப்பது போன்ற பங்களிப்பும் இடம்பெறுகிறது.
இவையெல்லாம் சகஜமாக,
அமைதியாக, இயல்பாக நடப்பவைதான். என் பணிகளில் சிகரமாகவும் அதிமுக்கியத்துவம்
வாய்ந்ததாகவும் நான் கருதுவது என் அலுவலகப் பணிதான். அதாவது சென்னை ரஹ்மத்
பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாளர் குழுவுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து,
மொழிபெயர்ப்புகளை மேலாய்வு செய்து, நூலுக்கு இறுதி வடிவம் கொடுப்பதுதான்.
இந்தப் பணி ஆத்ம
திருப்தியை வழங்குவதுடன், என் பிறவிப் பலனாகவும் மறுமையில் சான்று பகரும்
அடையாளமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்; இருக்க வேண்டுமென
ஆசைப்படுகிறேன். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் வேலூர்
பக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் பாக்கியம் பெற்றேன். ஆலிம்களை உருவாக்கும் அந்த மகத்தான பணியில் எனக்கும் ஒரு சிறு பங்கு கிடைத்த்தை எண்ணி பேருவகை
கொள்வேன்.
அங்கிருந்து என்னை வற்புறுத்தி
அழைத்துவந்து, இறைமறை விளக்கங்களும் நபிமொழி தத்துவங்களும்
சமானியரின் கைகளுக்கு எட்டச்செய்கின்ற ஒப்பற்ற சேவையில் கடந்த 18 ஆண்டுகளாக என்னை இறக்கிவிட்ட சென்னை ரஹ்மத் அறக்கட்டளை
நிறுவனர்கள் பாராட்டுக்குரியவர்கள்; என் நன்றிக்குரியவர்கள் என்பதில் ஐயமில்லை.
இதுவரை 20 பாகங்கள்
வெளிவந்துள்ளன. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் – 7 பாகங்கள் (பின்னர் புதிய வடிவில் 5), ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் – 4 பாகங்கள், ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம் – 3 பாகங்கள், தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் – 6 பாகங்கள் ஆகியவை
வெளிவந்து வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது இறைவன் கொடுத்த வரம். எஞ்சிய பாகங்களும் இன்ஷா அல்லாஹ் வெளிவரவுள்ளன.
படித்துச் சுவைத்தவர்கள்
நேரிலும் மடலிலும் தொலைபேசியிலும் வெளிப்படுத்தும் ஆதரவான
உணர்வுகளும் துஆக்களும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. மார்க்கத்தின்
மூலாதாரக் கருவூலங்களை மக்கள்வசம் கொண்டுபோய்ச் சேர்ப்பதைப் போன்ற வீரியமான சேவை வேறென்ன
இருக்க முடியும்? காரணம், அவை இறைவனின்
மொழியும் இறைத்தூதரின் மொழியும் ஆகும்.
இந்நிலையில்தான், சமூக வலைத்தளங்களில்
வாரம் ஒரு முறையாவது நமது ஆக்கம் பதிவேற்றம் (Upload) செய்யப்பட
வேண்டுமென நம்மீது உண்மையான அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் சில யோசனை தெரிவித்துள்ளனர்.
நானோ இன்னும் இணையதளத்தில்
தீவிரமாக ஈடுபாடு காட்டவில்லை என்பதுதான் எதார்த்தம். நேரங்களைத்
தின்றுவிடும் என்ற அச்சமே காரணம். அலுவலகப் பணிக்கு ஊறுவிளைவிக்காத
வகையில், கிடைக்கும் அவகாசத்தில் காலத்திற்கு வேண்டிய சில கருத்துகளையும்
தகவல்களையும் வெளியிட்டுவருகிறோம். இதற்குப் பின்னாலிருந்து உதவும்
கரங்களை நன்றியோடு நினைவுகூர வேண்டும்.
எனவே, இனிவரும்
நாட்களில் ‘உங்களுடன்
நான் – மனம் விட்டு...’ என்ற பகுதி மூலம் இன்ஷா அல்லாஹ் உங்களைச்
சந்திக்கிறேன். விதிவிலக்காகத் தவிர, சந்திப்பு தடைபடாது.
இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் சந்திப்போம்...
https://www.facebook.com/moulavikhanbaqavi
https://twitter.com/khanbaqavi
https://www.youtube.com/moulvikhanbaqavi
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
ReplyDelete// நானோ இன்னும் இணையதளத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டவில்லை என்பதுதான் எதார்த்தம். நேரங்களைத் தின்றுவிடும் என்ற அச்சமே காரணம்.// -மிகவும் உண்மையான வார்த்தைகள். இணையதளம் ஒரு முக்கிய சாதனம் என்பதை எவரும் மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் அது தங்களது நேரத்தை தின்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை. தங்களது அளப்பறிய மகத்தான பணிக்கு அது எவ்விதத்திலும் இடையூராக வந்துவிடக்கூடாது என்பதே நமது உள்ளக்கிடக்கை.
-எம்.ஏ.முஹம்மது அலீ, www.nidur.info