Monday, November 17, 2014

படைத்தவனின் முடிவை ஏற்கப் பழகுங்கள்!

உங்களுடன் நான் - மனம் விட்டு 02


பெ
ற்றவர்களுக்குப் பிள்ளைகளின் நலனும் முன்னேற்றமும்தான் கனவு. பிள்ளைகள் வளர, வளர பெற்றோர்கள் பசியை மறப்பார்கள்; உறக்கத்தைத் துறப்பார்கள்; உடன் பிறந்தவர்களைக்கூட, பிள்ளைகளுக்காககூடாது என்றாலும்- பகைப்பார்கள். பேச்சு, மூச்சு, உழைப்பு எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காக அர்ப்பணிப்பார்கள்.

சுருங்கக் கூறின், பிள்ளைகள்தான் பெற்றோரின் உலகம். தன்னைவிட, தன் முன்னேற்றத்தைவிடப் பிள்ளைகளின் முன்னேற்றமே அவர்களுக்கு இலக்கு. தான் தோற்றாலும் பிள்ளை ஜெயிக்க வேண்டும்; தன் இழப்பு பெரிதல்ல; பிள்ளையின் சிறு சறுக்கல்கூட பேரிழப்பு என எண்ணுவார்கள்.

இதனால்தானோ, என்னவோ! தந்தையைப் பற்றிப் புகார் தெரிவிக்க வந்த மகனிடம், “நீயும் உன் செல்வங்களும் உன் தந்தைக்கே உரியவைஎன நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (இப்னுமாஜா)

தங்களின் தியாகத்திற்குப் பிள்ளைகளிடமிருந்து பெற்றோர்கள் நன்றிக்கடனை எதிர்பார்ப்பதில்லை. பிள்ளைகள் நோகவைத்தாலும் பல பெற்றோர்கள் சாபம் கொடுப்பதில்லை. அவன் ஒதுக்கிவைத்தாலும் விலகி நின்று வாழ்த்தும் உள்ளம் அவர்களுடையது. அவன் வாழ்வதன்மூலம் தான் வாழ்வதாகப் பூரித்துப்போகிறார்கள்.

பிள்ளைகளின் படிப்பு, வேலைவாய்ப்பு, திருமண வாழ்க்கை என ஒவ்வொன்றிலும் பெற்றோரின் ஈடுபாடும் கவலையும் வியக்கத் தக்கவை. எல்லாவற்றையும்விட, தனக்காக இறைவனிடம் இறைஞ்சும்போது கண் கலங்காத பெற்றோர், பிள்ளைக்காக துஆ செய்யும்போது மட்டும் தேம்பித் தேம்பி அழுகிறார்கள்.

இதோ என் சொந்தக் கதை. என் இளைய மகன்மூத்த மகனைப் போன்றே- படிப்பில் சுட்டி. வேலூர்பாகியாத்தில் நான் பணியாற்றியபோது அங்கு பிறந்தவர். துவக்கப் பள்ளி படிப்பு அங்குதான்.

1998இல் சென்னை வந்தபின் இராயப்பேட்டையில் உள்ள ஒரு சாதாரண மேல்நிலைப் பள்ளியில் பத்துவரை படிப்பு; 11,12 அதே பகுதியில் வேறொரு பள்ளியில், என்னை வற்புறுத்தி சேர்ந்து படித்தார்.

பிளஸ்-2 தேர்வில், மருத்துவக் கல்லூரி படிப்பிற்கு வேண்டிய முக்கியமான மூன்று பாடங்கள் ஒவ்வொன்றிலும் 200க்கு 199 மதிப்பெண்கள். தினமணி உள்பட சில பத்திரிகைகளில் புகைப்படத்துடன் செய்தி வெளிவந்தது. இப்போது இருப்பதைப்போல பிளஸ்-2 மதிப்பெண்களைக் கொண்டே மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர முடிந்திருந்தால், பையனுக்கு நிச்சயமாக எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடம் --அதுவும் சென்னையிலேயே- கிடைத்திருக்கும்!

ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலம். நுழைவுத் தேர்வு உண்டா, இல்லையா என்பதில் குழப்பமோ குழப்பம்! உண்டு என்பர் ஒருநாள்; இல்லை என்பர் மறுநாள். இந்தக் குழப்பத்தில் நுழைவுத் தேர்வுக்கும் பையன் தயாராகிக்கொண்டிருந்தார். இறுதியாக, நுழைவுத் தேர்வு நடத்தியாக வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அப்போதும்கூட, உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யப்போகிறது என்ற செய்தி வேறு.

முடிவில் நுழைவுத் தேர்வு நடந்துமுடிந்தது. அதில் கலந்துகொண்டாலும் திருப்தியாகத் தேர்வு எழுதவில்லை என்று தெரிந்தது. கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடந்தபோது, மருத்துவப் படிப்பில் எம்.பி.பி.எஸ். இடமும் கிடைக்கவில்லை; பி.டி.எஸ். இடமும் கிடைக்கவில்லை. சரி மருத்துவத் துறையை மறந்துவிட்டு, பொறியியல் பாடத்தில் சேர்ந்துகொள்ளுமாறு நாங்கள் அனைவரும் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் பையன் இசையவில்லை.

துணை மருத்துவத் துறையில் பிஸியோதெரபி (PT) படிப்பிலாவது நான் சேர்ந்தே ஆவேன் என்று பிடிவாதம் பிடித்து, அதையே தேர்ந்தெடுத்தார். முதல் ஆளாக இடமும் கிடைத்தது.

இங்கேதான், நான் குறிப்பிட்டு உணர்த்த விரும்பும் ஒரு தகவல் உண்டு. மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைக்காது என்று முடிவானபோது, பையன் மட்டுமன்றி, தந்தையாகிய நான் உள்பட குடும்பத்தார் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துவிட்டோம். கைகூடாது என்று தெரிந்தும் பல்வேறு முயற்சிகள்; சந்திப்புகள்; ஆலோசனைகள். இவ்வளவு ஓதிப்படித்த நானே மனத்தளவில் பெரும் பாதிப்புக்குள்ளானேன்; கலங்கிப்போனேன். என்ன இப்படி ஆகிவிட்டதே! என்ற கவலை என்னைத் தின்றது; சோகம் என்னைக் கொன்றது.

நான்பாக்கியாத்தில்ஃபாஸில்வரை ஓதிமுடித்த அடுத்த ஆண்டு, அங்கேயே ஆசிரியர் பணிக்குப் பல முயற்சிகள் மேற்கொண்டேன். ஒன்றும் பலிக்கவில்லை. அப்போதுகூட ஏற்படாத மனவலி இப்போது ஏற்பட்டதுதான் ஆச்சரியம்!

ஒரு வழியாக இயல்பு நிலைக்குத் திரும்பினோம். நான் என்னைத் தேற்றிக்கொண்டதுடன் பையனையும் தேற்றினேன். அப்போது நான் சொன்ன வார்த்தை: எம்.பி.பி.எஸ்-ஸில் கிடைக்காத ஒரு முன்னேற்றம் இந்தப் படிப்பில் உனக்குக் கிடைக்கலாம்! அல்லாஹ் நாடிவிட்டான். அதை முழுமனதோடு ஏற்று, இத்துறையில் நீ சாதித்துக்காட்ட வேண்டும். சாதிப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

சென்னையில் பிஸியோதெரபிக்கு இடம் கிடைத்தது. சென்னை மருத்துவக் கல்லூரி (MMC), அரசினர் புணர்வாழ்வு மருத்துவ மையம் (GIRM) ஆகிய இரண்டிலும் இளங்கலை பிஸியோதெரபி முடித்தார். இதே துறையில் முதுகலைப் பட்டப் படிப்பிற்குத் தமிழ்நாட்டில் அரசு கல்லூரி கிடையாது. தனியார் கல்லூரியில் லட்சங்கள் செலுத்தி சேர வேண்டும். அல்லது வெளிமாநிலங்களில் உள்ள மத்திய அரசு நடத்தும் கல்லூரிகளில் அனைத்திந்திய கோட்டாவில் உள்ள இரண்டொரு இடத்திற்குத் தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும்.

லட்சங்கள் கொடுத்துப் படிக்கவைக்க நம்மிடம் ஏது பணம்? தேர்வுக்காகச் சொந்த முயற்சியில் வீட்டிலேயே 3 மாதங்கள் படிக்க ஆரம்பித்தார். இதற்கிடையே பி.டி. முடித்தவர்களுக்கு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் ஓராண்டுப் பயிற்சி அளிக்கப்படுவதாக அறிந்து, அதற்கான தேர்வுக்கும் படித்தார். இறுதியில், மும்பையில் உள்ள மத்திய அரசு கல்லூரி, ஒரிஸ்ஸாவில் உள்ள மத்திய அரசு கல்லூரி, வேலூர் சி.எம்.சி. ஆகிய மூன்று ஊர்களிலும் இருந்த இரண்டு, அல்லது மூன்று பொது இடங்களுக்காகத் தேர்வு எழுதினார்.

மூன்றிலும் வெற்றி பெற்றார். முதலில் சி.எம்.சி. முடிவுதான் வந்தது. அங்கு சேர்ந்து பயிற்சியைத் தொடங்கியிருந்த வேளையில் மும்பையின் முடிவு வரவே, இதைவிட மும்பையே மேல் என்று யோசனைகள் முன்வைக்கப்பட மும்பையைத் தேர்ந்தெடுத்தார்.

மும்பையில் உள்ள மருத்துவ மையத்தில் சேர்ந்தார். அது மூன்றாண்டு படிப்பு. இந்தியாவிலேயே முதுகலை பிஸியோதெரபி (MPT) படிப்புக்கு மும்பையில் மட்டுமே 3 ஆண்டு படிப்பு உண்டு. இதில் இறுதி ஆண்டு ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கிடையில் ஒரிஸ்ஸாவிலும் தேர்வானார். ஆனால், அதை ஏற்கவில்லை.

மூன்றாண்டு முதுகலை பட்டப்படிப்பு (M.P.Th) முடிந்தவுடன் வேலை தேடும் படலம். சென்னையில் அப்போலோ மருத்துவமனை உள்பட, அணுகிய எல்லா இடங்களிலும் வேலைக்குத் தேர்வானார். இதற்கிடையில், தான் படித்த கல்லூரியைச் சேர்ந்த மருத்துவ மையத்திலேயே ஓரிடம் காலி என்றும் அதற்குத் தேர்வு எழுதி வென்றால், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். அதிலும் வென்றால் இங்கேயே நீ பணியாற்றலாம் என்றும் அவருடைய வழிகாட்டிகள் கூற, எதற்கும் எழுதிவைப்போம் என்று தேர்வு எழுதினார்.

இறையருளால் அதில் வென்றார். பின்னர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு அதிலும் தேர்வானார். இப்போது அங்கேதான் பணியாற்றிவருகிறார். இடையிடையே சுயமுயற்சியாகப் படித்துத் தேர்வுகள் எழுதி முன்னேறவும் தொடர்ந்து முயன்றுவருகிறார். அண்மையில் C.M.P. (Certificate Mulligan Practitioner) என்ற சான்றிதழைத் தேர்வெழுதி பெற்றார்.

ஒருகால் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்துப் படித்திருந்தால்கூட, இந்த அளவுக்குத் தன் துறையில் முன்னேறியிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் (M.D; M.S.) பெற வேண்டுமானால், பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டும். அல்லது கோடிகளைக் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும். இரண்டுமே நமக்கு ஒத்துவராது.

எட்டு ஆண்டுகளுக்குமுன் இந்த ரகசியத்தை யார் அறிவார்? அரசு வேலை; அதுவும் மத்திய அரசு வேலை. யாரும் கவனிக்காத ஒரு புதிய துறையில் சாதிப்பதற்கான வாய்ப்பு. எல்லாவற்றையும்விட அரசு கல்லூரிகள் என்பதால் படிப்பிற்குச் செலவில்லை.

ஆக, நாம் ஒன்று நினைப்போம்; இறைவன் வேறொன்று நினைத்திருப்பான். அறிவுக்கு எட்டியவரையில் நாம் முயல்கிறோம். நாம் எதிர்பார்த்தது வாய்க்கலாம்; அல்லது கை நழுவிப்போகலாம். ஆனால், அல்லாஹ் எதை முடிவு செய்து தருகிறானோ அதை தொடக்கத்திலேயே மனமுவந்து ஏற்கப் பழகிக்கொள்ள வேண்டும். நமது தேர்வைவிட இறைவனின் தேர்வில்தான் நமக்கு நன்மை இருக்கும் என மனமார நம்ப வேண்டும். அப்போது வாழ்க்கையில் மணம் வீசும்; புயல் வீசாது.

விரும்பியது கிடைக்கவில்லை என்றவுடன் நொந்துபோய் உட்கார்ந்து, வாழ்க்கையைச் சாக்கடையாக்கிக்கொள்ளக் கூடாது; விதியை எண்ணி நோகக் கூடாது. காசு கொடுத்து சீட்டு வாங்கிக் கொடுக்க முடியாத பெற்றோரை அவமதிக்கக் கூடாது. அப்படி சீட்டு வாங்க வேண்டும் என்பதே முதலில் சரியா என்பது விவாதத்திற்குரிய ஒன்று.

இது படிப்புக்கு மட்டுமல்ல; வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தும் என்பதை இளைஞர்கள் புரிந்துகொண்டால் வாழ்க்கை வசப்படும். வசந்தமும் வந்துசேரும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் இன்னொரு தலைப்பில்...

_________________________________

No comments:

Post a Comment