Tuesday, January 12, 2016

அறிஞர்களின் மறைவும் பிந்தைய நிலையும்


- கான் பாகவி

ல்லாயிரக்கணக்கான மார்க்க அறிஞர்களை உருவாக்கிய பெருமை வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரிக்கு உண்டு. அங்கு கல்வி கற்றவர் யாராக இருந்தாலும் அந்த நாட்களின் இனிய நினைவுகளில் தம்மையே மறந்துவிடுவதுண்டு. அந்த இடத்திற்கு என்னவோ அப்படியோர் ஈர்ப்பு.

பாக்கியாத்தை உருவாக்கிய பெருந்தகையும்அஃலா ஹள்ரத்என அன்போடு அழைக்கப்படுபவருமான ஷம்சுல் உலமா மௌலானா ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் மறைந்து நூறாண்டுகள் ஆகின்றன. ஹிஜ்ரீ 1337 ரபீஉல் ஆகிர் பிறை 22 திங்கட்கிழமை (கி.பி. 1919 ஜனவரி 25) அன்னார் மறைந்தார்கள். இப்போது ஹிஜ்ரீ 1437ஆம் ஆண்டு நடந்துவருவது குறிப்பிடத் தக்கது.

இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர்... எனப் பன்னாட்டு அறிஞர்கள் பாக்கியாத்தில் பயின்றுள்ளனர். இமாமத், ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர்... எனப் பல்துறை அறிஞர்களைப் பெற்றெடுத்த தாய்க்கல்லூரியாகும் பாக்கியாத். அங்கு பயின்ற தகுதிமிக்க அறிஞர்கள் பலர் மறைந்தும்விட்டனர்.

அறிஞர்களின் மறைவு

தமிழகத்தில் தகுதியும் திறமையும் வாய்ந்த மார்க்க வல்லுநர்கள் பலர் மறைந்துவருவது நெஞ்சை வருத்துகிறது; எதிர்காலம் பற்றிய அச்சத்தை ஊட்டுகிறது. அண்மையில் என் ஆசிரியர்களில் பூவார் மௌலானா, முஹம்மது ஹனீஃபா ஹள்ரத், சித்தையன்கோட்டை மௌலானா N. அப்துல்லாஹ் ஹள்ரத் ஆகியோர் இறந்துபோனது நினைவுக்குவருகிறது. அவர்களின் மாணவன் என்ற அடிப்படையில், அவர்களுக்கு நிகரானவர்களைத் தேடும்போது நிராசையே ஏற்படுகிறது.

பொதுவாக
, முற்காலம் பொற்காலம்தான். ஸுபைர் பின் அதீ (ரஹ்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்:

நாங்கள்
நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று, (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், “நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும்வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்என்று கூறிவிட்டு, “இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்என்று சொன்னார்கள். (புகாரீ - 7068)

ஆலிம்களின்
(அறிஞர்களின்) மறைவால்இல்ம்’ (அறிவு) மறைகிறது. ‘இல்ம்மறைந்தால் அங்கேஜஹ்ல்’ (அறியாமை)தான் கோலோச்சும். நபிமொழி ஒன்றைப் பாருங்கள்:

அல்லாஹ்
, கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துக்கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைப் பறிப்பான். இறுதியில், எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காதபோது, மக்கள் அறிவீனர்களைத் தலைவர்களாக்கிக்கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். எந்த அறிவுமில்லாமல் தீர்ப்பு வழங்குவார்கள்; தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச்செய்வார்கள். (புகாரீ - 100)

அச்சமாக
இல்லையா? அக்காலம் வந்துவிட்டதா, இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்! எத்தனையோ பெரிய ஆலிம்கள் மறைந்துவிட்டார்களே! அவர்களின் மறைவுமூலம் இல்ம்மறைகிறதே! அது எவ்வளவு பெரிய இழப்பு!

பிந்தைய
நிலை

நபித்தோழர்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அறிஞரின்
மரணம், இஸ்லாத்தில் ஏற்படும் துளையாகும். இரவு - பகல் மாறிவரும் காலம்வரை அத்துளையை எதனாலும் அடைக்க முடியாது. (தாரிமீ)

இன்று
என்ன நிலவுகிறது? இஸ்லாமியத் தத்துவங்களை, ஆணைகளை, போதனைகளை மூலநூலான அரபி நூல்களிலிருந்தே படித்தறிந்து எடுத்துச்சொல்வோர் எத்தனைபேர்? அரபியை ஆங்கிலமாக்கி, ஆங்கிலத்தை உருதுவாக்கி, உருதுவைத் தமிழாக்கும்போது, மூலம் தன் மூலத்தையே இழக்க நேரிடுகிறது.

அரபிமூலத்தைப்
படிப்போரில் எத்தனைபேர், அதன் விளக்கவுரைப் படித்து, ஆய்ந்து, உள்ளதை உள்ளபடி புரிந்து எடுத்துரைக்கின்றனர்? வெறும் அரபிமொழி அறிவை மட்டும் வைத்துக்கொண்டு, பொருள் செய்வது பல சமயங்களில் ஆபத்தாகிவிடுவதுண்டு. இறைவனோ இறைத்தூதரோ நபித்தோழரோ சொல்லவந்த கருத்து ஒன்றாக இருக்க, வேறொரு கருத்தை அந்தப் பேச்சாளரோ எழுத்தாளரோ புரிந்துவிடும் ஆபத்து இலேசானதா?

இதற்கு
அரபி இலக்கணம், இலக்கியம், அருளப்பெற்ற பின்னணி, காலச்சூழ்நிலை, வரலாறு... எனப் பல்துறை அறிவு தேவை. எதையும் முறையாகக் கற்காமல், அரைகுறை ஞானத்தோடு அணுகும்போது பிழைக்குமேல் பிழை ஏற்படுவதைத் தவிர்க்கவியலாது.

கல்வியாற்றலே
இருந்தாலும் எத்தனை பேரின் பேச்சும் எழுத்தும் மக்களின் மனதைத் தொடுகின்றன? சாமானியர்களைத் திருத்தி, நல்வழிப்படுத்துகின்றன? முன்பெல்லாம் எளிய ஆடை அணிந்து, சாதாரண தோற்றத்தில் மக்கள்முன் நின்று, வட்டார மொழியில் ஆர்ப்பாட்டமோ படோடாபமோ ஏதுமின்றி -ஆனால் இக்லாஸோடு- அநத் ஆலிம் பெருமக்கள் சொன்ன சொல்லுக்கு இருந்த வீரியம் இன்று எங்கே?

பள்ளிக்கூடத்தின்
படியை மிதிக்காத அந்த மேதைகள் தூய்மையான எண்ணத்தோடும் உண்மையான அக்கறையோடும் எழுதிய நூல்கள் ஏற்படுத்திய மாற்றத்தை நம் எழுத்துகளால் ஏன் ஏற்படுத்த முடியவில்லை? இத்தனைக்கும் அவர்களின் எழுத்தில் எதுகைமோனையோ அலங்காரமோ இருந்ததில்லை; ஆனால், வாசகனின் உள்ளத்தைத் தைத்தது.

அவர்கள்
காலத்திலும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருந்ததில்லை. ஆனாலும் யாரும் யாரையும் வசைபாடியதில்லை; ஒருவரைக் கண்டு மற்றவர் முகம் திருப்பிக்கொண்டதில்லை. சிறுவர்மீது வாஞ்சையும் பெரியவரிடம் மரியாதையும் வைத்திருந்தார்கள். மக்களின் பாராட்டை எதிர்பார்த்து அவர்கள் மார்க்கப் பணியாற்றவில்லை. மக்கள் பாராட்டினாலும் அவர்கள் தன்னிலை மறந்ததில்லை.

இன்று
என்ன ஆனது? திறமைகள் வளர்ந்ததாகச் சொல்லப்படும் காலம். தொழில்நுட்பம் கைவந்த கலையாகிவிட்டது என்று நினைக்கப்படும் காலம். கைவிரலில் தகவல்கள்! நொடிப்பொழுதில் தகவல் தொடர்புகள்! அறையில் அமர்ந்து பேசினால் உலகமே கேட்கும் விஞ்ஞான வளர்ச்சி. எழுத்து பதிவேற்றம் ஆன சில வினாடிகளில் ஆயிரக்கணக்கானோரை அடையும் வலைத்தளங்களின் பிரமிப்பு வேகம்.

ஆனால்
, எல்லாவற்றிலும் குழப்பம்! ஒருவரை ஒருவர் திட்டித்தீர்த்தல்! தனிப்பட்ட குரோதங்களைப் பொதுத் தலங்களில் கொட்டித்தீர்க்கும் வெறி! கிடைத்த தகவல் -சரியா; தவறா என்று பரிசீலிக்கவோ ஆராயவோ செய்யாமல்- எல்லாறவற்றையும் பரப்புகின்ற பரபரப்பு! எழுத்தில், பேச்சில் நாகரிகமற்ற குழாயடிச் சண்டைகள்! விமர்சனம் என்ற பெயரில் யாரும் எதையும் எப்படியும் பேசலாம்; எழுதலாம் என்ற எடுத்தெறிந்த போக்கு!

இதனாலெல்லாம்
கல்வி கூடுகிறதா? குறைகிறதா? சொல்லுங்கள்! கூடுகிறது என்றால், இந்தக் கூட்டல் தேவையில்லை; அதில் யாருக்கும் பயனுமில்லை. குறைகிறது என்றால், நபிமொழி மெய்பிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

நாம்
ஒன்றைப் புரிந்துகொண்டாக வேண்டும். கல்வி என்பது, வெறுமனே ஆராய்ச்சியோ தொழில்நுட்பக் கண்டுபிடிப்போ அல்ல. அல்லது தகவல்களின் திரட்டும் அல்ல. மாறாக, கல்வி என்பது, மனிதனைப் பக்குவப்படுத்தி, மனிதப் புனிதனாக்கி, அறிவுஜீவியாக வாழ வழிவகுப்பதுதான். இதில் இன்று வளர்ச்சியா? சரிவா? முடிவு செய்துகொள்ளுங்கள்.

____________________________________­­

No comments:

Post a Comment