Thursday, December 17, 2015

உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்


டந்த இரண்டு வாரங்களாக (டிசம்பர் 1-13) பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாறுபாடு குறித்த மாநாடு நடந்து முடிந்தது. புவி வெப்ப நிலையை 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைக்க வேண்டும் என்று மாநாட்டின் வரைவு ஒப்பந்தத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பூமியின் சராசரி வெப்பநிலை 14 முதல் 16 டிகிரி செல்சியஸ் எனக் கணக்கிடப்படுகிறது. ஆனால், கரியமில வாயு (கார்பண்டை ஆக்ஸைடு) போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தைச் சூழ்வதால் கடந்த ஒரு நூற்றாண்டாகப் பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரித்தவருகிறது. இப்படி ஏறத்தாழ 0.8 டிகிரி செல்சியஸ் கூடியிருக்கிறது.

தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகியுள்ளது. இப்படியே போனால், 2100ஆம் ஆண்டில் 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, கடல் நீர்மட்டம் 0.5 முதல் 1 மீட்டர் அளவைவிட அதிகமாக உயரக்கூடும்.

இதனால் புயல், வெள்ளம், வறட்சி, பஞ்சம் ஆகியவை ஏற்படும். தீவுகள், கடற்கரை பகுதிகள் கடலில் மூழ்கி காணாமல்போகும்.

மிரட்டும் புள்ளிவிவரங்கள்


புவி வெப்பத்தாலும் அதையடுத்து தொடர்ந்துவரும் பருவநிலை மாறுபாட்டாலும் விளைகின்ற ஆபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள் மனித குலத்தையே நடுங்கவைத்துள்ளன:

  • ஆண்டுதோறும் 51ஆயிரம் பேர் சாவு.

  • 2050ஆம் ஆண்டிற்குள், கடல் உயிரினங்களில் 2 விழுக்காடு அழிந்துபோகும்.

  • தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முந்தைய நிலையோடு ஒப்பிடும்போது 1.2 டிகிரி செல்சியஸ் கூடியிருக்கிறது.

  • 50 ஆண்டுகளில் 8 பில்லியன் பேர் குடிதண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட நேரும்.

  • வேளாண் மகசூல் குறையும்; உணவுதானியங்கள் இருப்பு குறையும்.

  • 2003ஆம் ஆண்டு கோடையை ஒப்பிடுகையில் வெப்பத்தின் அளவு உயர்வதால் 44ஆயிரம் பேர் மேற்கு ஐரோப்பாவில் மட்டும் உயிரிழப்பர்.

  • கடந்த நூற்றாண்டில் 90களில் மட்டும் பருவநிலை பேரிடர்களால் இறந்தவர்கள் 6 லட்சம் பேர்.

  • தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முந்தைய நிலையோடு ஒப்பிட்டால், 30 விழுக்காடு அளவுக்கு வளிமண்டலத்தில் கார்பண்டை ஆக்ஸைடு படிந்திருக்கிறது.

  • அடுத்த அரை நூற்றாண்டிற்குள் கடல் மட்டம் 0.1 முதல் 0.5 மீட்டராக உயரும்.

  • மண்ணின் ஈரப்பதம் குறைந்து, வறட்சி கடுமையாகும்.

பசுமைக் குடில் வாயுக்கள்


புவி வெப்பமடைவதற்கு பசுமைக் குடில் வாயுக்களே (Green House Effect) காரணம். கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, குளோரோ ஃபுளூரோ கார்பன் (CFC) போன்ற வாயுக்களே பசுமைக் குடில் வாயுக்கள்எனப்படுகின்றன.

1. வெளியிடும் மூச்சில் கலந்துள்ளதும் காற்றைவிடக் கனமானதும் கரியை மூலக் கூறாகக் கொண்டதுமான வாயுதான் கரியமில வாயு. உயிரினங்கள் வெளியிடும் மூச்சிலுள்ள கரியமில வாயுவை மரம், செடிகொடிகள் உள்வாங்கிக்கொண்டு, சுத்தமான வாயுவை வெளியிடுகின்றன. இது, இயற்கையாக நடக்கும் ஒரு சுழற்சிமுறை பாதுகாப்பு சிஸ்டமாகும்.

2. நிறமோ மணமோ இல்லாததும் நிலக்கரிச் சுரங்கத்தில் உள்ளதுமான மீத்தேன் வாயு. உரம், வெடி மருந்து, குளோரோஃபார்ம், கார்பன் பிளாக் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது; ‘மெத்தனால்தயாரிக்கப் பயன்படும் முக்கியமான பொருள் இது.

3. நைட்ரஜன் ஆக்ஸைடுகளில் ஒன்றுதான் நைட்ரஸ் ஆக்ஸைடு. அறுவை சிகிச்சையிலும் பல் மருத்துவத்திலும் வலி தெரியாமல் இருக்கப் பயன்படுத்தப்படுகிறது இந்த வாயு. கசிவுகளைக் கண்டுபிடிக்கவும் இது பயன்படுகிறது.

4.  சி.எஃப்.சி. எனப்படும் குளோரோ ஃப்ளூரோ கார்பன் வாயு. குளிர்சாதனப் பெட்டி, தொழிற்சாலை சுத்திகரிப்பு நுரையாக்கிகள், பீச்சிப் புட்டிகள் போன்றவற்றிலிருந்து வெளியாகும் ரசாயன வாயுதான் சி.எஃப்.சி.

இதில் பல வகை உண்டு. சி.எஃப்.சி. 11 மற்றும் 12 ஆகியவை காற்று மண்டலத்தில் 65 முதல் 130 ஆண்டுகள்வரை அழியாமல் வாழும் தன்மையுடையது. கரியமில வாயுவைவிட பத்தாயிரம் மடங்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தி படைத்தது.

ஓசோன் படலம்



சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6ஆயிரம் டிகிரி செண்டிகிரேட்; உட்பகுதி வெப்பநிலை 2 கோடி செண்டிகிரேட். விநாடிக்கு சூரியனிலிருந்து 300 கோடி யூனிட் சக்தி வெளியாகிறது. இது அப்படியே பூமியில் இறங்கினால், எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது.

சூரியனிலிருந்து பொழியும் புறஊதாக் கதிர்கள் (Ultraviolet Rays), தோலைப் பாதிக்கும் சக்தி உடையவை; விழி லென்சுகளைப் பாதிக்கும்; புற்றுநோயை உண்டாக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். இந்த ஆபத்துகளைத் தடுக்கும் ஒரு வாயுதான் ஓசோன் படலம்.

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை வாங்கி, தேவையானதை மட்டும் பூமிக்கு அனுப்புகின்ற ஒரு சல்லடையாகச் செயல்படுகிறது ஓசோன். அந்தச் சல்லடையை மேற்சொன்ன வாயுக்கள் அரிக்கத் தொடங்கி பல்லாண்டுகளாகின்றன. ஓசோனில் ஏற்படும் 10 விழுக்காடு நலிவுகூட உலகில் தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையை 20 விழுக்காடு அதிகமாக்கிவிடும் என்கிறது ஐ.நா.வின் அறிக்கை. ஓசோனின் அளவு சுமார் 8 விழுக்காடு குறைந்துவிட்டதாம்! அரிக்கப்பட்டுவிட்டதாம்!

ஆக, கரியமில வாயுவைச் சுத்திகரிக்கும் மரங்களை வெட்டிச்சாய்த்து, விளைநிலங்களை அழித்து, நச்சுப் புகைகளைக் கக்கும் வாகனங்களைக் கணக்கின்றி பயன்படுத்தி, நச்சு வாயுக்களை வெளியிடும் தொழிற்சாலைகளை எல்லா இடங்களிலும் உருவாக்கி, அடுப்பங்கரையைக்கூட இயந்திரமாக்கி, பொறியைத் தட்டுவதிலேயே பிழைப்பு நடத்தி, சொகுசு வாழ்க்கையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதகுலம்தான் இந்தப் பேரழிவுகளுக்குக் காரணம்.

வெயிலடிக்கும் பருவத்தில் மழை, மழை பொழியும் பருவத்தில் வெயில், பருவத்தில்கூடக் காணப்படும் அதிபயங்கர வெப்பம், அல்லது அதிகனமழைப் பொழிவு, புயல் இல்லாமல் மழையே இல்லை என்ற நிலை, துருவப் பகுதிகளில் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்வதும் நகருக்குள் கடல் பிரவேசிப்பதும், புயல், சுனாமி, சூறைக்காற்று, கடும் வெப்பம், வறட்சிஎனக் கேள்விப்படாத பல்வேறு பேரிடர்கள் எல்லாவற்றுக்கும் யார் காரணம்?

பூமியே ஏற்ற இடம்



பூமிதான், மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம். சூரிய குடும்பத்தின் மூன்றாவது கோளான பூமியை உயிரினங்களுக்கு வசதியான கிரகமாக இறைவன் படைத்தான். இதனால்தான், ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு அனுப்பியபோது இறைவன் இப்படிச் சொன்னான்:

நீங்கள் (இங்கிருந்து) கீழறங்கிச் சென்றுவிடுங்கள்; உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். ஒரு (குறிப்பிட்ட) காலம்வரை உங்களுக்குப் பூமியில் வசிப்பிடமும் (அனுபவிக்க) வாழ்வாதாரமும் உண்டு. (2:36)

பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த பிறகே மனிதனை பூமிக்கு அனுப்பினான் இறைவன். நீர், நிலம், காற்று, வெப்பம், குளிர்ச்சி, பொன், வெள்ளி, இரும்பு முதலான இயற்கை வளங்களையும் வாழ்வாதாரங்களையும் பூமியில் இறைவன் கொட்டிவைத்துள்ளான்.

எல்லாவற்றையும் தேவைக்கேற்ப அளந்தும் வைத்துள்ளான். இறைவன் கூறுகின்றான்:

நாம் பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளை ஊன்றினோம். அதில் அளவிடப்பட்ட ஒவ்வொரு பொருளையும் நாம் முளைக்கச்செய்தோம். (15:19)

இத்தனை ஏற்பாடுகளையும் சீராகச் செய்துவிட்டு, பூமியின் கட்டமைப்பைச் சீர்குலைத்துவிடாதீர்கள்! இயற்கையோடு விளையாடாதீர்கள்! இயற்கையை, அதன் போக்கில் செல்லவிடுங்கள்! குழப்பத்தையும் அழிவையும் ஏற்படுத்தாதீர்கள்என்றெல்லாம் மனிதர்களுக்குப் புத்திமதியும் சொன்னான் இறைவன்.

பூமி சீர்திருத்தப்பட்டபின், அதில் குழப்பம் (சீர்குலைவு) விளைவிக்காதீர்கள். (7:56)

அவன் (உம்மிடமிருந்து) திரும்பியதும் பூமியில் குழப்பம் விளைவிக்கவும், பயிர்களையும் உயிர்களையும் அழிக்கவுமே முனைகிறான். (ஆனால்,) அல்லாஹ் குழப்பத்தை விரும்பமாட்டான். (2:205)

காரணம் மனிதக் கரங்களே


ஓர் அழகான பூமியைப் படைத்து, அதைத் திட்டமிட்டு கட்டமைத்து, எல்லா அரண்களையும் உருவாக்கி, அதில் அழிவை ஏற்படுத்திவிடாமல் வாழுங்கள் என்று இறைவன் அனுப்பினால், மனிதர்கள் சுகபோகம்அல்லது சொகுசுஎன்று நம்பி இயற்கைமீதே கை வைக்கும்போது, இறைவன் சும்மா இருப்பானா? சொல்லுங்கள்!

கட்டுப்பாடற்ற வாகனங்களிலிருந்து வெளிவரும் நச்சுப் புகை, கணக்கற்ற தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் மற்றும் வேதிப் பொருட்கள், சாதனங்கள் வெளியிடும் நச்சு வாயுக்கள், ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலைகளைத் தூர்த்து எழுப்பப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள், காற்றையும் நீரையும் மாசுபடுத்தும் செயல்கள், அளவுக்கதிகமான நுகர்வுகள், இயற்கைச் செல்வங்களின் அருமை புரியாமல் அவற்றை விரயம் செய்தல்என்று மனிதர்களின் கரங்கள் தேடிக்கொள்ளும் அழிவுகள் பட்டியல் நீளும்.

மனிதக் கரங்கள் தேடிக்கொண்டதன் விளைவாகத் தரையிலும் கடலிலும் சீரழிவு தோன்றிவிட்டது. அவர்கள் செய்த சில வினைக(ளின் விளைவுக)ளை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய்ய வேண்டும் என்பதே காரணம் (30:41) என்று இறைவன் தெரிவிக்கின்றான்.

இந்நிலையில் பாரீஸில் நடந்த பருவநிலை மாற்ற உச்சிமாநாடு வெற்றி என்று பிரதமர் மோடி தம்பட்டம் அடித்துக்கொள்வதுதான் வேடிக்கையாக உள்ளது என விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். புவி வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைக்க வேண்டும் என வரைவு ஒப்பந்தம் போட்டதைத் தவிர, மாநாடு உருப்படியாக எதையும் சாதிக்கவில்லை. யார் குறைக்க வேண்டும்? எவ்வளவு குறைக்க வேண்டும்? எப்படிக் குறைக்க வேண்டும் என்ற எந்தத் தெளிவும் இல்லை.

ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் சீரழிவுக்குக் காரணமாக அமையும் கார்பன்டை ஆக்ஸைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் அர்த்தமுள்ள இலக்கு ஏதும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை. காரணம், இந்த வாயுக்களை அதிக அளவில் வெளியிட்டுவரும் வளர்ந்த பணக்கார நாடுகளைக் கட்டுப்படுத்த திராணியற்ற ஒப்பந்தம்தான் இது.

உலக அளவில் பசுங்குடில் வாயுக்களை வெளியிடுவதில் வளரும் நாடான இந்தியாவின் பங்கு 2 சதவீதம் மட்டுமே. அதே நேரத்தில், வளர்ந்த நாடான அமெரிக்காவின் பங்கு 18 சதவீதம். வளிமண்டல மாசுகளில் 30 விழுக்காடு அமெரிக்காவால் ஏற்பட்டது. அமெரிக்கா போன்ற நாடுகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பதை விட்டுவிட்டு, பொத்தாம் பொதுவாக ஒப்பந்தம் போடுவதால் என்ன பயன்? ஆக, பணக்கார நாடுகள் தப்பிக்க வியூகம் அமைக்கப்பட்டதைத் தவிர, இம்மாநாட்டால் எந்தப் புண்ணியமும் கிடையாது.

என் கடமை


ஒப்பந்தம் கிடக்கட்டும்! தனிமனிதனாக என் கடமை என்ன என்று ஒவ்வொருவரும் யோசித்தால் நல்லது நடக்கலாம்! முதலாவதாக, இயற்கை நிகழ்வுகள் அனைத்துமே இறைவனால் நடப்பவை. அதன் காரண காரியமும் தத்துவமும் அவனுக்கே வெளிச்சம். இயற்கைப் பேரிடர்கள் மனிதத் தவறுகளின் விளைவால் நிகழலாம்! அல்லது மனிதர்களின் குற்றங்களுக்குத் தண்டனையாகக்கூட இருக்கலாம்! அல்லது இறைவன் அறிந்த வேறு காரணம்கூட இருக்கலாம்!

எப்படியானாலும், நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் உண்டு.

1. இயற்கை வளங்களை அளவோடு பயன்படுத்துவோம்; விரயத்தைத் தவிர்ப்போம். நீர், நிலம், மின்சாரம், கனிமங்கள் முதலான இயற்கைச் செல்வங்களை நுகரும்போது சிக்கனத்தைக் கையாள்வோம்.

2. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கைகளை முற்றாகக் கைவிடுவோம். குப்பை, புகை, அசுத்தம் போன்ற மாசுகளை அகற்றி, சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்.

3. சுற்றுசூழலைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வோம். மரம் வளர்த்தல், பாரம்பரிய விவசாயம், நீர்நிலை பாதுகாப்பு முதலான உதவிகளை நமக்கு நாமே செய்துகொள்வோம்.

4. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஆற்றல்களுக்குப் பதிலாகப் பாதுகாப்பான ஆற்றல்களின் பக்கம் திரும்புவோம். மின்னாற்றல், எரிசக்தி போன்ற பயன்பாடுகளில் சூரிய சக்தி, காற்று, நீரலை முதலான இயற்கை ஆற்றல்களைப் பயன்படுத்த முனைவோம்.

இவையெல்லாமே சமூகக் கடமைகள் மட்டுமல்ல; மார்க்கக் கடமைகளும்கூட. பௌதிக அடிப்படையிலான இந்தத் தீர்வுகளுடன் ஆன்மிகீ ரீதியிலான சில தீர்வுகளும் உண்டு.

ஆம்! நாம் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். குற்றங்கள், பாவங்களைக் கைவிட வேண்டும். இறையை வழிபட்டு, அவனிடம் வேண்ட வேண்டும். சக மனிதர்களின் உரிமையைக் காக்க வேண்டும். நம்மால் யாருக்கும் தீங்கு நேராமல் நடந்துகொள்ள வேண்டும். தர்மம் செய்ய வேண்டும். உறவுகளை மதிக்க வேண்டும். பெற்றோரைப் பேண வேண்டும். ஏழை எளியோர்மீது இரக்கம் காட்ட வேண்டும். தனிமனித ஒழுக்கம் பேண வேண்டும். தவறுகள், குற்றங்கள்மீது அறச்சீற்றம் கொள்ள வேண்டும். மொத்தத்தில் நல்ல மனிதனாக வாழ வேண்டும்.

இதன்மூலம், இறைவன் நம்மைப் பேரழிவுகளிலிருந்தும் பேரிடர்களிலிருந்தும் காக்கலாம்!
நன்றி
http://www.kayalpatnam.com/articles.asp?id=98&family=1

 http://lalpetexpress.com/lptexp/27361

No comments:

Post a Comment