1960
|
மற்றும் 70களிலெல்லாம்
பொதுமக்களிடம் ஆலிம்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பில்லை என்றுதான் சொல்ல
வேண்டும். மார்க்கத்தின் மீது
பற்றும் வழிபாடுகளில் ஈடுபாடும் உள்ள, சற்று வயது முதிர்ந்த பெரியவர்களே ஆலிம் பெருமக்களின் அருமை புரிந்து நடந்துகொண்டனர் எனலாம். இளம் வயதினரிடமோ
நடுத்தர வயதினரிடமோ சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் புரிந்துணர்வு இருந்ததில்லை என்றே
கருதுகிறேன்.
அதாவது என்னுடைய மாணவப் பருவத்தில் நான் கண்டதைக் கொண்டே இதைச்
சொல்கிறேன். அதிலும் குறிப்பாக படித்த பட்டதாரிகள் ஆலிம்களைக் கண்டாலே
பெரும்பாலும் ஓதுங்கிப்போய்விடுவார்கள். அரபி ஆலிம்கள் – ஆங்கிலப் பட்டதாரிகள்
இடையே இனம்
புரியாத ஓர் இடைவெளி
எப்படியோ ஏற்பட்டுவிட்டிருந்தது. இடைவெளியைக் குறைக்க இரு பக்கத்திலும் முயற்சி
மேற்கொள்ளப்பட்டதா என்று தெரியவில்லை.
ஆனாலும், ஆலிம்களின் எண்ணிக்கையும் அரபிக் கல்லூரிகளுக்குச் செல்லும்
மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. இதற்குக்
காரணம், ஒருகால் முஸ்லிம் பெற்றோர்களிடமிருந்த இறையுணர்வாக இருக்கலாம்; அல்லது வாழ்வாதாரம் பற்றாக்குறையாக இருக்கலாம்; அல்லது பிழைப்பிற்கான வழிவகைகள் வரையறுக்கப்பட்ட சிற்சில துறைகளாக
மட்டும் இருந்ததாக இருக்கலாம்!
இதனாலெல்லாம் விளைந்தது நன்மையே என்பது வேறு விஷயம்.
அதனால்தானே மத்ரஸாக்கள் செழிப்பாக இருந்தன; ஆலிம்களின் வரவு மலர்ச்சி தரக்கூடியதாக இருந்தது. ஓதுகிற பிள்ளைகள்
சிரத்தையோடு ஓதினார்கள்; வெளிவந்த ஆலிம்கள்
திறமைசாலிகளாக விளங்கினார்கள். சமுதாயத்தில் அமைதி நிலவியது. மக்களிடையே
பெருந்தன்மை காணப்பட்டது. பெரியவர்களைச் சிறியவர்கள் மதித்தார்கள்.
சிறியவர்கள்மீது பெரியவர்கள் அக்கறை செலுத்தினார்கள்.
இன்றைய நிலை
ஆனால், இன்று – ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப் பிறகு - ஆலிம்களுக்கு
மரியாதை உண்டு. ஆலிம்களுக்கும் பட்டதாரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு உண்டு. ஏன்,
ஆலிம்களே பட்டதாரிகளாக வெளிவருகின்றனர். வேலைவாய்ப்புகள் உள்நாட்டில் மட்டுமன்றி
வெளிநாடுகளிலும் ஆலிம்களுக்குக் கிடைக்கின்றன.
ஆலிம்கள் மற்றத் துறைகளிலும் பணியாற்றுகின்ற காலச்சூழ்நிலை
உருவாகியுள்ளது. வணிக வளாகங்களில், அலுவலகங்களில், மருத்துவமனைகளில், பள்ளி
மற்றும் கல்லூரிகளில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட கமர்ஷியல் நடவடிக்கைகளில்
ஆலிம்களைக் காணமுடிகிறது.
இளம் ஆலிம்கள் பலர் மத்ரஸா நிறுவனர்களாக, முதல்வர்களாக, பள்ளிவாசல்
நிர்வாகிகளாக, எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, முஸ்லிம் அரசியல் கட்சிகளின்
தலைவர்களாக, அமைப்புகளின் வழிகாட்டிகளாக மிளிர்கிறார்கள் என்பது பெருமைக்குரிய
விஷயமல்லவா?
இருந்தும், தமிழகத்தில் மத்ரஸாக்கள் மூடப்படுகின்றன. மத்ரஸாக்களில்
மாணவர்களைக் காணோம். ஆலிம்களின் வரவு அருகிக்கொண்டே போகிறது. சமுதாயம்
பிளவுப்பட்டுக் கிடக்கிறது. யாரைப் பார்த்தாலும் - சலாம் சொல்வதற்குக்கூட - அவரது
இயக்கப் பின்னணி என்ன என்று பார்க்கிறார்கள். ஒரு நல்ல கருத்து சொல்லப்பட்டாலும்,
சொன்னது யார் என்பதைப் பொறுத்தே ரசிக்கிறார்கள்; ஏற்கிறார்கள்.
முஸ்லிம் குடும்பங்களில் பாசமும் இல்லை; கண்டிப்பும் இல்லை. உறவுகள் நலிந்து மெலிந்துபோய்விட்டன. நட்பு,
நாசத்திற்கு வழிவகுக்கிறது. இளைஞர்களிடம் தொழுகை போன்ற வழிபாடுகளும் வெளிப்படையான
சுன்னத் நடைமுறைகளும் தென்பட்டாலும், குணநலன்கள், நடுநிலைப் பார்வை, பொதுமை நோக்கு
ஆகிய தார்மிகப் பண்புகளுக்கு நிறையவே பஞ்சம் உண்டு.
அரபிமொழி, அரபி நூல்களுடனான தொடர்பு இன்றைய புது ஆலிம்களிடம் ரொம்பவே
குறைந்து போய்விட்டது. மத்ரஸா பாடப் புத்தகங்களில் தலைப்பு வரிகளாக இடம்பெறும்
மூலநூலை (ம(த்)தன்) படித்து பொருள் புரிந்து விளக்கம் சொல்வதே பெரிய உச்சநிலை
திறமையாகக் கருதப்படுகின்ற நிலையே காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. பின் எப்படி
விளக்கவுரை (ஷர்ஹ்), அடிக்குறிப்பு விளக்கம் (ஹாஷியா) ஆகியவை எல்லாம்
புரியப்போகிறது தெரியவில்லை.
நேர்முகத் தேர்வு
அண்மையில் நேர்முகத் தேர்வாளராக ஓரிடத்திற்குச் சென்றிருந்தேன்.
பல்வேறு கல்லூரிகளில் பயின்ற ஆலிம்களிடம் நேர்முகத் தேர்வு நடத்த வேண்டியிருந்தது.
அவர்களில் ஃபாஸில் (முதுகலை)
முடித்தவர்கள் இருந்தனர். சிலர் அரபிக் M.A; M.Phill பட்டம் பெற்றவர்கள். பெரும்பாலோர் அப்ஸலுல் உலமா தேர்வில்
வென்றவர்கள்.
அரபி இலக்கணம், இலக்கியம், திருக்குர்ஆன்
விரிவுரை, நபிமொழி ஆகிய நான்கு பாடங்களில் மிகச் சாதாரணமான வினாக்களே தொடுக்கப்பட்டன.
ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் எங்களுக்குப் பேரதிர்ச்சியே அளித்தனர். ஒரேயொரு மாணவர்
மிக நன்றாக விடையளித்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துவிட்டார். ஆயினும்,
கிட்டத்தட்ட எல்லா மாணவர்களுக்கும் ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஆங்கிலம்
புரிகிறார்கள்; ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.
இலக்கணப் பிழையின்றி வாசித்தல், சரியான
பொருள் கூறல், அடுத்து வாக்கியத்தின் கருத்தைப் புரிந்து பிரதிபலித்தல்... என
அடிப்படையான தகுதிகள் என்னென்னவோ அவற்றை அவர்களிடம் காண்பதில் சிரமமாகவே இருந்தது.
அ
|
வ்வாறே, வெள்ளிமேடைகள் சொல்லிக்கொள்ளும்
அளவிற்கு இல்லை என்றே மக்கள் கருதுகிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் ஒருசிலரைத் தவிர
மற்றவர்கள் அந்த இருபது, அல்லது முப்பது நிமிடங்களைக் கழித்தாலே போதும் என்றுதான்
நினைக்கிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் அப்போதைய நிலைக்கேற்ப ஒரு
தலைப்பைத் தேர்ந்தெடுத்து, அதற்கு உகந்த திருமறை வசனம், நபிமொழி, சான்றோர்
கருத்து, வரலாற்றுக் குறிப்பு, உலக நடப்பு, செய்திகள் ஆகியவற்றைச் சரியாக வரிசைப்படுத்தி,
மக்களுக்குப் புரியும் மொழியில் எளிமையாக - அதே நேரத்தில் எழிலாக - உரையைத்
தயாரித்து அங்கு வந்து நிற்பவர்களை ஒவ்வொரு வட்டாரத்திலும் கைவிட்டு எண்ணிவிடலாம்.
தமிழ் அல்லது உருது நூல்களைப்
படித்துவிட்டோ, பிரபலமான பேச்சாளர்களின் பதிவு செய்யப்பட்ட உரைகளைக் காதில்
கருவியைப் பொருத்தி கேட்டுவிட்டோ அப்படியே வந்து ஒப்புவிப்பவர்கள் உள்ளார்கள்.
உரையின் கரு மட்டுமன்றி, சொல், நடை, ஏற்றம் இறக்கம்கூடச் சொந்தமாக இல்லாமல்
இரவலாகப் போய்விடுவதும் உண்டு. இதையெல்லாம் தவறு என்று சொல்ல முடியாது என்றாலும்,
தரம் என்றும் சொல்ல முடியாதல்லவா?
இளம் ஆலிம்களே! ஆலிமாகப் போகின்ற மாணவர்களே! சுமார் 50 ஆண்டுகள் மார்க்கக் கல்வி
பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் எழுத்தாலும் பேச்சாலும் மார்க்கத்தை
இயம்புவதிலும் வாழ்நாளைச் செலவிட்டுக்கொண்டிருப்பவன் என்ற முறையில் எனக்கு
இத்துறையில் சில அனுபவங்கள் உண்டு.
என் அனுபவங்களை என் உடன்பிறவா சகோதரர்களான உங்களுடன்
பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். படிப்பறிவு கைகொடுக்காத இடங்களில் பட்டறிவு
பயன்படக்கூடும். என் அனுபவங்களை என்னோடு புதைத்துவிட விரும்பவில்லை. அது
முறையுமாகாது. உங்களில் சிலருக்காவது என் எழுத்து உதவலாம்!
இன்ஷா அல்லாஹ், இத்தொடரில் உங்களைச் சமூக
வலைதளம் மூலம் சந்தித்து, கற்கவும் கற்பிக்கவுமான வழிகாட்டல்களைப் பரிமாற
எண்ணியுள்ளேன். முதலில் மாணவக் கண்மணிகளுக்கு! அடுத்ததாகப் பட்டம் பெற்று வெளிவந்த புதிய
ஆலிம்களுக்கு!
(சந்திப்போம்! இன்ஷா அல்லாஹ்)
காலத்திற்கு தேவையான அருமையான பதிவு ஹழ்ரத் ........syed Ali baqavi
ReplyDeleteஒரு சிலர் மட்டுமல்ல 100 க்கு 90 சதவீதம் பேர் அவர்கள் விரும்புகின்ற ஆளுமைகளின் பேச்சை கேட்டு அதை அப்படியே கொட்டுகின்றனர்.என்னைப் பொருத்தவரை வெள்ளிமேடைக்கான குறிப்புகளை அவரவர் சொந்த முயச்சியில் எடுத்துப் பேசி பாராட்டை பெறுகின்றபோதுதான் அது அவருக்கான பாராட்டு.
ReplyDelete