Thursday, March 22, 2018

காலச்சுவடு இதழ் கட்டுரைக்கு நம் கடிதம

# காலச்சுவடு இதழ் கட்டுரைக்கு நம் கடிதம் #

வாசகர் கடிதம்

அன்புள்ள ஐயா!
வல்லபாய் எழுதிய ‘சில தோற்றப் பிழைகள்’ வாசித்தேன். முகத்துக்கெதிராகத் தவறுகளைச் சுட்டிக்காட்டும் துணிவுமிக்க எழுத்தாளர்கள் இருப்பது, தமிழ் சமூகத்திற்கு மிகப் பெரும் பலம். சினிமாவில் கொடி நாட்டியவர்கள் எல்லாம் அரசியலிலும் நாட்டிவிடுவார்கள் என்ற பாமரத்தனமான பார்வை பரிதாபத்திற்குரியது. எம்.ஜி.ஆருக்கு அரசியல் பின்புலம் இருந்தது. சினிமாவை அதற்கான ஓர் ஊடகமாக அவர் பயன்படுத்திக்கொண்டார். காட்சிகள், வசனங்கள், பாடல் வரிகள் என ஒவ்வொன்றும் அவர் சார்ந்த அரசியல் மற்றும் சமூகக் கொள்கைகளுக்கு உரமூட்டுபவையாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.
தனிக்கட்சி ஆரம்பித்து உயிர் வாழும்வரை முதல்வராகவே அவர் நீடிக்க அவருடைய படங்கள் மட்டும் காரணமல்ல; பாடங்களும் காரணம். அவரது அடிச்சுவட்டில் வந்த ஜெயலலிதாவும் சினிமாவில் மட்டுமன்றி, அரசியல் பள்ளியிலும் ஓரளவு பயின்றவர்தான். அதற்காக, இவர்களின் ஆட்சிகள் அப்பழுக்கற்றவை என்றோ, முன்மாதிரியானவை என்றோ நம்புவது, எதார்த்தத்தை மறுப்பதாகிவிடும்.
திரையில் ஜொலித்தவர்கள் எல்லாம் தரையிலும் ஜொலிப்பார்கள் என்றால், சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன் போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் முதல்வர்கள் ஆகியிருக்க வேண்டும்.
கமலும் ரஜினியும், ஒப்பனைகள் இனி கைகொடுக்கா என்ற உண்மை சுட ஆரம்பித்தவுடன் அரசியலில் கால் பதிக்க மேடை ஏறுகிறார்கள். நாற்பதைத் தாண்டிய ரசிகர் கூட்டமும் இப்போதாவது நேரில் பார்க்க முடிந்ததே என்ற வரட்டுத் திருப்தியிலுள்ள பொதுஜனமும் அவர்களின் மேடையை மொய்க்கலாம்! பார்த்து சலித்தபின், உட்பொருளில்லாத இந்தக் கூட்டமும் காணாமல் போகும்.
அரசியலில் ஒரு கொள்கை வேண்டும்; கோட்பாடு வேண்டும்! அதை நோக்கிய ஓர் இலக்கு வேண்டும்! அந்த இலக்கை அடையும் வைராக்கியம் வேண்டும்! அதற்காக உயிர், பொருள், ஆவி அத்தனையையும் தத்தம் செய்யும் துணிவு வேண்டும்!
இதில் எதுவும் இல்லாமல், ‘தெரிந்த முகம்’ என்ற ஒற்றை ஊன்றுகோலை வைத்துக்கொண்டு எவ்வளவு காலம் பயணிக்க முடியும் அரசியலில்? முகத்திற்காக ஒன்றுசேரும் கூட்டம், சிறிது காலத்தில் புதுமுகத்தைத் தேட ஆரம்பித்துவிடும் என்ற கசப்பான உண்மை தெரியவில்லையா இவர்களுக்கு? ‘கொள்கை’ என்றால், அதற்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் உயிர் கொடுக்க தொண்டன் இருப்பான்.
இதற்கப்பால், இவ்விருவர்மீது பலருக்கு வேறொரு பார்வை உண்டு. பா.ஜ.க. வின் கைப்பாவைகளே இவர்கள் என்பதுதான் அப்பார்வை. இது மட்டும் உண்மையாக இருப்பின், கமல் என்ன? ரஜினி என்ன? தமிழ் மண்ணில் இவர்கள் ஒருபோதும் தலைதூக்க முடியாது.

                                               அன்புடன்
                   அ. முஹம்மது கான் பாகவி

No comments:

Post a Comment