Saturday, August 13, 2011

பட்டினிச்சாவும் புளியேப்பமும்



உலகம் எல்லாத் துறைகளிலும் முன்னேறிவிட்டது என உலகத் தலைவர்கள் பறைசாற்றிக்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, தொழில்துறை, பொருளாதாரம், வேளாண்மை, ஆராய்ச்சி ஆகிய துறைகளில் உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்று சில புள்ளிவிவரங்களும் தெரிவிக்கின்றன.

ஆனால், எதார்த்தம் வேறாக இருக்கிறது. முன்னேற்றமும் வளர்ச்சியும் இருப்பது உண்மையானால், பசிக் கொடுமையும் பட்டினிச்சாவும் அரிதாக இருக்க வேண்டும். ஏனெனில், உண்மையான வளர்ச்சி என்பது உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படை தேவைகளில் தன்னிறைவு பெறுவதுதான்.

இன்றைக்கு உலகின் ஒரு கண்டம் முழுவதிலும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் பசி பட்டினியால் நித்தம் நித்தம் செத்து மடிந்துகொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், வேறு இடங்களில் தேவைக்கதிகமாக உணவு உட்கொள்வதால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துகொண்டிக்கின்றனர். இது வளர்ச்சியா; அல்லது வீக்கமா என்று தெரியவில்லை.

ஆப்பிரிக்கா கண்டத்தில் கினியா, எத்தியோபிய்யா, சோமாலியா, ஜெய்பூத்தி ஆகிய நாடுகளில் 10 மில்லியனுக்கும் (ஒரு கோடி) அதிகமான மக்கள் பசி, பட்டினி, வறட்சி, குழு மோதல் ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகளும் அடங்குவர். இவர்கள்தான் வேகமாக மரணத்தைச் சந்தித்துவருகின்றனர்.

அதேநேரத்தில், அஜீரணம், உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உலகில் லட்சக்கணக்கானோர் இறக்கின்றனர். அளவுக்கதிகமான உணவு நுகர்வால் சர்க்கரை, இரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவற்றால் இவர்கள் இறப்பைத் தேடிக்கொள்கிறார்கள்.

பிரிட்டன் கல்வித் துறை மூத்த ஆலோசகர் பேராசிரியர் ஜான் பாடியண்கிடூன் கூறுகிறார்: ஒரு மில்லியன் மக்கள், தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்கின்றனர்; உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து, இன்றைய உணவு உற்பத்தி முறை உலக மக்களின் சீரான ஆரோக்கியத்தைக் காக்கத் தவறிவிட்டது தெளிவாகிறது.

ஏனெனில், கடுமையான பட்டினியாலும் ஊட்டச் சத்து குறைவாலும் 2 மில்லியன் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டினியால் இறப்பதற்குக் காரணமாயிருந்தது கடுமையான வறட்சியாகும். இந்த வறட்சியின் பாதிப்பு 60 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். கடந்த இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து பருவமழை பொய்த்துவிட்டது.

அவசர நிலைகளுக்கான யுனிசெஃப் ஆலோசகர் ரோபர்ட் மகாரிஸ் கூறுகிறார்: இந்தப் பகுதி பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை மிகவும் மோசமானது. இது அண்மைக் காலத்தில் தீர்ந்துவிடுவதற்கான வாய்ப்பு இல்லை. சோமாலியாவில் ஏற்பட்டுள்ள பட்டினிச் சாவு நிற்பதற்கான எந்தத் தடயமும் தெரியவில்லை. போதாக்குறைக்கு உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு நெருக்கடியை மேலும் அதிகமாக்கிவருகிறது.

சோமாலியாவில் தொடரும் பட்டினிச் சாவுகளால் அந்நாட்டு மக்கள் கினியா, எத்தியோப்பியா போன்ற அண்டை நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் குடிபெயர்ந்துவருகின்றனர். வடகிழக்கு கினியாவில் ‘தாதாப்நகரில் லட்சக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இவ்வாறு வாரம்தோறும் ஆயிரக்கணக்கான சோமாலியர் முகாம்களுக்கு வந்த வண்ணமுள்ளனர். இவர்கள் மேற்கொள்ளும் அபாயகரமான பயணத்தின்போது வழியிலேயே பசியாலும் தாகத்தாலும் பலர் இறந்துவிடுகின்றனர்; வனவிலங்குகளுக்கு இரையாவோரும் உள்ளனர். எத்தியோப்பியாவுக்கு வந்துசேர்ந்துள்ள சோமாலியா குழந்தைகள் 50 சதவீதம் பேர் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளனர்.

இது ஒரு பக்கம் என்றால், சோமாலியாவின் தெற்கேயும் மத்தியிலும் வன்முறை தலைவிரித்தாடுகிறது. ஆயுதமேந்திய குழுவினர் மக்கள் குடிபெயர்வதைத் தடுத்துவருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுவதாவது: இன்று ஆப்பிரிக்கா கண்டம் உலகிலேயே மிகவும் மோசமான நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு கினியாவில் 3.5 மில்லியன் மக்களும் சோமாலியாவில் 2.85 மில்லியன் பேரும் எத்தியோப்பியாவில் 3.2 மில்லியன் பேரும் உடனடியான மனிதநேய உதவிக்காகக் காத்திருக்கின்றனர். இதே நிலையில் 1.17 லட்சம் பேர் ஜெய்பூத்தியிலும் 7 லட்சம் பேர் உகாண்டாவிலும் உள்ளனர்.

இந்த அவலம் அகற்றப்பட வேண்டுமானால், ஆகஸ்டு மாதத்திற்கு மட்டும் சோமாலியாவுக்கு 10 மில்லியன் டாலர்கள் தேவையாகும் என யுனிசெஃப் கணித்துள்ளது. கினியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றுக்கும் 3 முதல் 4 மில்லியன் டாலர்கள் தேவையாகும்.
நம்மோடு வாழும் சக மனிதர்கள் இலட்சக்கணக்கில் கண்முன்னே பசியாலும் பட்டினியாலும் செத்து மடிந்துகொண்டிருக்கையில், நாம் மட்டும் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? உலகம் முன்னேறிவிட்டது; பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டது என எப்படி மார்தட்டிக்கொள்ள முடியும்?
அல்முஜ்தமா இதழிலிருந்து...

No comments:

Post a Comment