Thursday, September 15, 2011

இதற்குத் தீர்வு என்ன? சொல்லுங்கள்...!

- மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி
மிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 300 ஆலிம்கள் (மௌலவிகள்) பட்டம் பெற்று வெளிவருகின்றனர். தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ 125 அரபி மதரசாக்கள் (அரபிக் கல்லூரிகள்) இருக்கலாம். அவற்றில் ‘மௌலவி’ பட்டம் வழங்கும் ‘தஹ்ஸீல்’ மதரசாக்கள் சுமார் 30 இருக்கக்கூடும்!

இதுவெல்லாம் பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலை. இன்று சில மதரசாக்கள் ஓசையின்றி மூடப்பட்டுவிட்டன. பல மதரசாக்கள் இரு கலை (உலகக் கல்வி, மார்க்கக் கல்வி) கல்லூரிகளாக மாறிவிட்டன. எல்லா மதரசாக்களிலும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துபோய்விட்டது.

மாணவர்கள் எண்ணிக்கை - 15; ஆசிரியர் எண்ணிக்கை - 7; பட்டம் வழங்கப்படுகிறது -இந்நிலையில் உள்ள மதரசாக்களே அதிகம். 400க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்றுவந்த ஒரு பெரிய மதரசாவில் இன்று 200 மாணவர்களே உள்ளனர். அவர்களிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 40 பேர். முன்பெல்லாம் அங்கு சுமார் 150 தமிழ் மாணவர்கள் இருப்பார்கள்.

முன்பைவிட வசதியான மாணவர் விடுதி; வகுப்பறைகள்; சமையற்கூடம்; இலவச உணவு; சில இடங்களில் இலவச உடை; நிதி உதவி... இப்படி எல்லா வசதிகளும் உண்டு. ஆனால், மாணவர்கள்தான் தேவையான அளவுக்கு இல்லை.

இத்தனைக்கும், தேர்வுக்காகப் படிக்க வேண்டிய சிரமமோ தேர்வு எழுத வேண்டிய சுமையோகூட மாணவர்களுக்குக் கிடையாது. ஏனெனில், பல மதரசாக்களில் முறையான தேர்வுமுறையே இல்லை. அவ்வாறே, ஆண்டின் மத்தியில் வந்தால்கூடப் புதிய மாணவர் சேர்த்துக்கொள்ளப்படுவார். முன்பு அவர் படித்த மதரசாவின் தடையில்லா சான்றிதழோ (NOC) மாற்றுச் சான்றிதழோ (TC) எதுவும் தேவையில்லை.

இதனால், முந்தைய மதரசாவில் நான்காம் ஆண்டில் கற்ற மாணவர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டால், உடனே வேறொரு மதரசாவில் ஏழாம் ஆண்டில் சேர்ந்து பட்டம் பெற்றுவிடுவார். நான்காம் வகுப்பிலிருந்து ஒரு மாணவனை வெளியேற்றிய கல்லூரியின் முதல்வர் அதே ஆண்டு வேறொரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்குச் செல்கிறார். அங்கு தம்மால் நீக்கப்பட்ட அதே நான்காமாண்டு மாணவனுக்குத் தம் கரத்தாலேயே பட்டம் வழங்கிவிட்டு வருகிறார். இடையிலுள்ள மூன்றாண்டு பாடங்களைக் கற்காமலேயே ‘மௌலவி’ பட்டம் பெறுகின்ற அவலம் இங்கே அரங்கேறுகிறது.

அவ்வாறே, மாணவர்கள் சரியாக வகுப்புகளுக்குச் செல்வது, வருகைப் பதிவேட்டைக் கையாள்வது, ஒவ்வோர் ஆண்டிலும் முடிக்க வேண்டிய பாடங்களைச் சரியாக முடிப்பது, பகலில் படிக்கும் பாடத்தை இரவில் திரும்பப் பார்ப்பது, மாதாந்திரத் தேர்வுமுறை, தேர்வு நடத்தி வெற்றி - தோல்வியை நிர்ணயிப்பது, தொழுகை போன்ற வழிபாடு மற்றும் நபிவழி ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதற்கான பயிற்சி, இஸ்லாமியப் பரப்புரைக்கான பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி... போன்ற நடைமுறைகள் எல்லாம் விரல்விட்டு எண்ணும் சில மதரசாக்களில் மட்டுமே உள்ளன. பெரும்பாலான மதரசாக்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை.

அதாவது அதிகமான மதரசாக்களில் கட்டுப்பாடுகளோ விதிமுறைகளோ இல்லாமல் மாணவர்கள் சுதந்திரமாகச் சுற்ற முடிகிறது; விருப்பப்படி நாட்களைக் கழிக்க முடிகிறது; இம்மையும் கிடைக்காமல் மறுமை கிடைக்க வழியும் காணாமல் மனம்போன போக்கில் மாணவர்கள் வாழமுடிகிறது.


காரணம் என்ன...?

இத்தனை சலுகைகளும் சுதந்திரங்களும் இருந்தும்கூட மாணவர்களின் வருகை பாதியாக, சில இடங்களில் கால்வாசியாகக் குறையக் காரணம் என்ன? சில மதரசாக்களை மூட வேண்டிய அளவுக்கு மாணவர்களின் வருகை அடியோடு நின்றுபோகக் காரணம் என்ன?

சலுகைகளை வாரி இறைத்து, பாரம்பரியப் புகழை எடுத்துரைத்து ரமளான் மாத்தில் இஸ்லாமிய பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தும் மதரசாக்களால் மாணவர்களை ஈர்க்க முடியவில்லையே! காரணம் என்ன? ஒருவரை ஆசிரியராகவோ முதல்வராகவோ சில மதரசாக்களில் சேர்க்கும்போது, இத்தனை மாணவர்களை எங்கிருந்தாவது, எப்படியாவது அழைத்துக்கொண்டுவர வேண்டும் என மதரசா நிர்வாகம் நிபந்தனை விதிக்கும் அளவுக்கு மாணவர்கள் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன?


காரணங்கள்

ஆலிம்களை உருவாக்கும் அரபி மதரசாக்களில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோனதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அவற்றில் பிரதானமாகக் கூறப்படும் காரணம், ஆலிம்களின் பொருளாதார நிலைதான். ‘மௌலவி ஆலிம்’ பட்டதாரிகளில் பெரும்பாலோர் பள்ளிவாசல்களில் இமாம்களாகப் பணியாற்றுபவர்களே. மற்றவர்கள் அரபிக் கல்லூரி பேராசிரியர்களாகவோ குர்ஆன் பாடசாலை ஆசிரியர்களாகவோ பணியாற்றுகிறார்கள்.


இமாம்கள் நிலை

சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றும் இமாம்களின் பொருளாதார நிலை சற்று மேம்பட்டுள்ளது. இங்கு இமாம்களுக்கு வழங்கப்படும் ஊதியம் சராசரியாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரமாக உள்ளது. பத்தாயிரத்திற்குமேல் ஊதியம் பெறும் இமாம்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பெரும்பாலும், பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக வீடு அல்லது தங்கும் அறை இமாம்களுக்கு வழங்கப்படுகிறது. பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு போன்ற கூடுதல் உதவிகளும் சில இடங்களில் வழங்கப்படுகின்றன. இரு சக்கர வாகனங்கள் இல்லாத இமாம்களை மாநகரங்களில் காண்பது அரிது. ஆனால், புறநகர்ப் பகுதிகளில் இமாம்களின் நிலை ஊக்கமளிப்பதாக இல்லை.

மற்ற நகரங்களில் இமாம்களின் சராசரி ஊதியம் ரூ. 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம்வரை இருக்கலாம். கிராமங்களிலோ ரூ. 1500 முதல் ரூ. 4 ஆயிரம்வரை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சாதாரணமாக ஒரு கடைநிலை ஊழியனுக்கு வழங்கப்படும் ஊதியம்கூட ஏழாண்டு காலம், அல்லது ஒன்பதாண்டு காலம் கல்வி கற்ற ஓர் ஆலிமுக்கு வழங்கப்படுவதில்லை.

இந்நிலையைக் கண்கூடாகக் கண்டுவரும் முஸ்லிம் பெற்றோர்களில் யார்தான் தம் பிள்ளைகளை ஆலிம்களாக்க முன்வருவார்கள் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். அன்றாடக் குடும்பச் செலவுகளுக்கே மூச்சுத் திணறும்போது, மருத்துவச் செலவு, மகப்பேறு, பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற பெரிய செலவுகளுக்கு அவர் என்ன செய்வார் என்றும் வினவுகிறார்கள்.

பள்ளிவாசல் நிர்வாகம்தான் இமாமின் வாழ்க்கையோடு விளையாடுகிறது என்றால், அரசாங்கத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! கடும் போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு உலமா நல வாரியம் உருவாக்கியது. இந்த வாரியத்தில் முறைப்படி பதிவு செய்து உறுப்பினராகும் ஆலிம்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவியைப் பாருங்கள்!

உறுப்பினராகச் சேர்ந்து அடையாள அட்டை பெற்ற தேதியில் இருந்து விபத்து காப்பீட்டு உதவியாக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம்வரை அரசு வழங்கும். இயற்கை மரணம் அடைந்தால் ரூ. 15 ஆயிரம், ‘ஈமச்சடங்கு உதவி’ என்ற பெயரில் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். கல்வி உதவித் தொகை ரூ. 1000 முதல் ரூ. 6 ஆயிரம்வரை, திருமண உதவித் தொகை ரூ. 2000 அளிக்கப்படும்.

உறுப்பினர் மூக்குக் கண்ணாடி வாங்க ரூ. 500, முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ. 500 வழங்கப்படும். இத்தொகை இப்போது ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அநேகமாக எல்லா நிர்வாகிகளும் சொல்கின்ற சமாதானம் ஒன்று உண்டு. இமாம்களுக்குப் பள்ளிவாசல் நிர்வாகம் தருகின்ற சம்பளம் குறைவுதான்; மேல் வருமானம் (?) சம்பளத்தைவிட இரு மடங்கு இருக்கும். அது என்ன மேல் வருமானம்? மஹல்லாவில் நடக்கும் திருமணம், மய்யித், குழந்தைக்குப் பெயர்சூட்டல், வருட ஃபாத்திஹா போன்ற சடங்குகளின்போது ஜமாஅத்தார்கள் இமாமுக்குத் தரும் தட்சணையைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
இதுதான் இமாம்களின் பணியா? இதற்காகத்தான் ஏழெட்டு ஆண்டுகள் மதரசாக்களில் அவர்கள் கல்வி கற்று வந்தார்களா? அப்படியே ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், சுமாரான ஓர் ஊரில் ஒரு மாதத்திற்கு எத்தனை கல்யாணம் நடக்கும்? அதைவிட, மஹல்லாவில் யாரும் இறந்துபோகமாட்டார்களா என்று இமாம் எதிர்பார்த்திருக்க வேண்டுமா? அது மஹல்லா மக்களுக்குத்தான் நல்லதா? சமுதாயம் எப்போதுதான் சிந்திக்கப்போகிறது? இந்நிலை மாறாத வரை ஆலிம்களின் உருவாக்கத்தில் ஏற்படும் தேக்கநிலை மாறுவது எளிதன்று.

இமாம்கள், தங்களின் ஊதிய உயர்வுக்காகப் போராட்டம் நடத்த முடியுமா? வேலை நிறுத்தம்தான் செய்ய முடியுமா? ‘இமாமத்’ பணியை விட்டுவிட்டுத் தொழில் துறையில்தான் ஈடுபடலாமா? அப்படி எல்லாரும் தொழிலில் ஈடுபட்டுவிட்டால், சரியான நேரத்திற்கு வந்து முறையாக தொழவைப்பதும் சிறுவர்களுக்கு குர்ஆன் ஓதக் கற்றுக்கொடுப்பதும் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச்சொல்வதும் மஹல்லாவில் நடக்கும் பிரச்சினைகளுக்கு மார்க்க அடிப்படையில் தீர்வு சொல்வதும் இதையெல்லாம் முறையான கல்வித் தகுதியோடு மேற்கொள்வதும் யார்?

தொழுகை நேரத்திற்குப் பள்ளிவாசல் வருபவர்களில் ஒருவர் தொழவைக்க வேண்டியதுதானே என்று எதிர்வாதம் பேசியவர்கள்கூட, தாங்கள் புதிது புதிதாகக் கட்டும் பள்ளிவாசல்களுக்குச் சம்பளம் கொடுத்துத்தானே இமாம்களை நியமிக்கிறார்கள்? தொழுகைக்கு வருவோரில் தொழவைப்பதற்கான தகுதி உடையோர் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? அதற்காகவென ஒருவர் தமது இதர வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு பொறுப்போடு பணியாற்றினால்தானே குறித்த நேரத்தில் தொழுகை முறையாக நடக்கும்!


மக்தப் மதரசாக்களின் நசிவு

பொருளாதாரம் முதலாவது பிரதான காரணம் என்றால், ‘மக்தப்’ மதரசாக்களின் நசிவும் சீரழிவும் அடுத்த காரணம் எனலாம். அரபி மதரசாக்களுக்கு மாணவர்களை உருவாக்கும் இடமே மக்தப் மதரசாதான். அது செயலிழந்துபோனது ஆலிம்கள் உருவாக்கத்தில் தேக்க நிலையை உண்டாக்கிவிட்டது.

குர்ஆன் மதரசாக்கள் எனப்படும் மக்தப்கள், குர்ஆனைப் பார்த்து ஓதவும் மார்க்கத்தின் அடிப்படைச் சட்டங்களையும் கொள்கைகளையும் கற்றுக்கொள்ளவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆரம்பப் பாடசாலைகளாகும். முன்பெல்லாம், ஒவ்வொரு மஹல்லாவிலும் இப்பாடசாலைகள் பள்ளிவாசல் வளாகத்தில், அல்லது அருகில் மிக விமர்சையாக நடத்தப்பட்டுவந்தன.

மக்தப் ஆசிரியர்கள் (உலமாக்கள்), அங்கு வரும் மாணவர்களில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டு, பெற்றோரிடம் கலந்துபேசி, பட்டப் படிப்பு படிப்பதற்காக தயார் செய்து அனுப்பிவைப்பார்கள்.

இப்போது பல ஊர்களில் மக்தப்களே நடப்பதில்லை; நடந்தாலும் உயிரோட்டமில்லை. பிள்ளைகளின் பள்ளிப் படிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாமல் சிரமப்படுகிறோம் என்பது பெற்றோர்களின் புலம்பல். இதில் குர்ஆனைக் கற்கப் பிள்ளைகளை எப்படி அனுப்ப முடியும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

இதனால், மார்க்கப் பற்றுமிக்க பெற்றோர்கள்கூட, வீட்டில் ஆசிரியரை வரவழைத்து பிள்ளைகளுக்கு குர்ஆனைக் கற்பிக்கும் நிலையில் உள்ளனர். இந்த நெருக்கடியில், அரபி மதரசாக்களுக்கான மாணவர்களைத் தயார் செய்வது எங்கனம்?


பாடத்திட்டமும் கட்டுப்பாடுகளும்

அரபிக் கல்லூரிகளில் இன்று நடைமுறையில் இருந்துவரும் பாடத்திட்டமும் கற்பிக்கும் முறையும் புதிய தலைமுறை மாணவர்களை வெறுப்படையச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அந்த அளவுக்குப் பழங்காலத்து நடைமுறையே பின்பற்றப்படுகிறது. அதைப் பற்றி எவ்வளவோ பேசியும் எழுதியும் மாற்றத்திற்கான அறிகுறி துளிகூடத் தென்படவில்லை.

அரபி மொழி, அரபி இலக்கணம், அரபி இலக்கியம், அரபி அகராதி முதலிய மொழிப் பாடங்கள் நடத்தியாக வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அரபிமொழி தெரிந்தால்தான் இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆனையும் ஹதீஸையும் நேரடியாக அறிந்துகொள்ள முடியும். மொழிபெயர்ப்புகளை மட்டும் வைத்து மூலாதாரங்களின் உள்ளார்ந்த பொருளை அதன் ஆழம்வரை சென்று அறிதல் இயலாது.

அதே நேரத்தில், மொழிப் பாடங்களைப் போதிக்கும் முறை சிக்கல் நிறைந்தது; இன்றைய மாணவர்களுக்கு முற்றிலும் அந்நியமானது. எனவே, இலக்கண இலக்கியத்தைக் கற்பிக்கும் முறையை எளிமைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். அரபி இலக்கணத்தில் இன்ன கூற்றைத்தான் இந்த இடத்தில் நாம் படிக்கிறோம் என்பதைப் புரிவதற்கே மாணவனுக்கு இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்றால், எரிச்சல் வராமல் என்ன செய்யும்?

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், ஆண்பால், பெண்பால், உயர்தினை, அஃறினை, ஒருமை, (அரபியில்) இருமை, பன்மை, படர்க்கை, முன்னிலை, தன்னிலை, எழுவாய், பயனிலை, வேற்றுமைகள்... போன்ற இலக்கணக் கூறுகளைத் தாய்மொழியில் தெளிவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டு, அரபிமொழி வழக்கையும் கற்பித்தால் மாணவனுக்குப் புரியும்.

அதை விட்டுவிட்டு, இஸ்மு, ஃபிஅல், ஹர்ஃப், முதக்கர், முஅன்னஸ்... என்று அரபிப் பெயர்களுக்கு அரபிச் சொற்களையே பொருளாகச் சொல்லிக்கொண்டிருந்தால் மாணவன் எப்படி புரிவான். கிளிப்பிள்ளை பாடமாக இருக்குமே தவிர, புரிதல் என்பது இராது. பிற்காலத்தில், இதைத்தான் இப்படிச் சொன்னார்களோ என்று மாணவனாக அறிவதற்குள் காலம் ஓடிவிடும்.

இறைவேதமாம் குர்ஆனை விளக்கத்தோடு முழுமையாகக் கற்பிக்க வேண்டும். நபிமொழி தொகுப்புகளை -எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும்- ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிஉத் திர்மிதீ ஆகிய நூல்களையாவது முழுமையாகக் கற்பிக்க வேண்டும். குர்ஆனிலும் ஹதீஸிலும் புதைந்துள்ள அறிவியல், அரசியல், பொருளியல், சமூகவியல், உயிரியல், இயற்பியல், மருத்துவம், வானவியல் போன்ற கருத்துகளை ஆசிரியர் ஆங்காங்கே கோடிட்டுக் காட்ட வேண்டும். அப்போதுதான், மாணவன் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யவும் தேடவும் வழி பிறக்கும்.

வெறுமனே, குர்ஆன் வசனங்களிலுள்ள இலக்கணக் கூறுகளையும், நபிமொழிகளிலுள்ள சட்டப் பிரச்சினைகளில் அறிஞர்களின் கருத்து வேறுபாடுகளையும் மட்டும் விலாவாரியாக விவாதிப்பதில் முழு நேரத்தையும் செலவிடுவதுதான் திறமையா? அல்லது அதுதான் நாம் வாழும் காலத்திற்குப் பிரதான தேவையா?

கொள்கை விளக்கப் பாடத்தில், மறைந்துவிட்ட முஅதஸிலாக்கள் பற்றி விவாதித்து, அவர்களுக்கப் பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், இன்று நம்முடன் வாழும் ஷியா, போரா, அஹ்மதிய்யா, பாத்தினிய்யா, ஹதீஸ் மறுப்பாளர்கள் போன்ற வேறுபட்ட கூட்டத்தார் பற்றி வாய் திறப்பதில்லையே! பயன் என்ன?

இதற்கெல்லாம் மேலாக, வழக்கொழிந்துபோன கிரேக்கத் தத்துவத்தை இன்னும் கட்டி அழுவதால் யாருக்கு என்ன இலாபம்? அணுவைப் பிளக்க முடியுமா என்று வெறும் வாதப் பிரதிவாதம் செய்யும் கிரேக்கத் தத்துவத்திற்கு, அணுவை மனிதன் பிளந்துவிட்டான் என்ற செயல்பூர்வமான உண்மை எங்கே உறைக்கப்போகிறது? அடுத்து தர்க்கவியல் (லாஜிக்) பாடத்திற்கு இவ்வளவு ஆண்டுகள் ஒதுக்க வேண்டுமா?

இப்படி எழுதிக்கொண்டே போகலாம். ‘கட்டுப்பாடுகள்’ என்ற பெயரில், மாணவர்கள் மாதம் ஒருமுறை மொட்டை போட வேண்டும்; தினசரி பத்திரிகைகள் படிக்கக் கூடாது; மாத, வார இதழ்கள் (இஸ்லாமிய இதழ்கள் உள்பட) வாசிக்கக் கூடாது என்பன போன்ற விதிமுறைகள் சில மதரசாக்களில் இன்னமும் நடைமுறையில் உள்ளன.

இதையெல்லாம்விடப் பெரிய கொடுமை ஒன்று உண்டு. அரபி மதரசா மாணவர்களை ஊரில் நடக்கும் மவ்லிது, ஃபாத்திஹா, ஸலாத்துந் நாரியா, (மிகக் குறைவாக) திருமணம் போன்ற சடங்குகளுக்கு அனுப்பிவைப்பதும், அங்கு பரிமாறப்படும் உணவு, தரப்படும் தட்சணை ஆகியவற்றைப் பெறுகின்ற பழக்கத்தை ஊட்டி வளர்ப்பதும் இருக்கிறதே, இது சீரணிக்க முடியாத அவமானமாகும்.
தன்மானத்தோடு வளர வேண்டிய இளங்குருத்தை முளையிலேயே ஒடித்துப்போடும் மட்டமான செயலல்லவா இது? இதைக் காணும் மானமுள்ள பெற்றோர் எவரும் தம் பிள்ளைகளை மதரசாவுக்கு அனுப்ப யோசிப்பார்களா? இல்லையா?
இதனால்தான், தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்கின்ற ஆலிம்களைக்கூட காலுக்கும் அரைக்கும் அலைகின்ற அற்பர்கள் என்று சாமானியர்கூட எண்ணுகின்ற நிலை காணப்படுகிறது. இது தரமான ஆலிம்களை வெகுவாகப் புண்படுத்துகிறது.


தீர்வு என்ன?

காரணம் என்னவாக இருந்தாலும், அரபி மதரசாக்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதும் ஆலிம்கள் உருவாக்கத்தில் தேக்கம் ஏற்பட்டிருப்பதும் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. இந்தச் சரிவைத் தூக்கி நிறுத்தி, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் தரமான ஆலிம்களை உருவாக்க முயல்வதும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பாகும்.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு என்ன என்று யோசித்து யோசித்து உறக்கம் கெட்டதே ஒழிய, விளக்கம் கிடைக்கவில்லை.

இமாம்களின் ஊதியத்தைக் காலத்திற்கேற்ப உயர்த்துங்கள்! நீங்கள் ஒன்றும் உங்களது சொந்த பணத்தைத் தாரை வார்க்கவில்லை! வக்ஃப் சொத்திலிருந்தே சம்பளம் அளிக்கிறீர்கள்! அல்லது பொதுமக்கள் வழங்கும் நன்கொடையைத்தான் ஊதியமாக வழங்குகிறீர்கள் என்றெல்லாம் ஒன்றுக்குப் பலமுறை சொல்லியாகிவிட்டது. நிர்வாகிகள் காதில் விழுந்தபாடில்லை. அவர்கள் நிலையில் சிறு மாற்றம்கூட ஏற்படவில்லை.

பாரம்பரிய மதரசாக்களும் தங்கள் வழிமுறையை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. இதையடுத்து மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும் சேர்த்து வழங்கும் ஐந்தாண்டு பாடத்திட்ட கல்லூரிகள் சில தோன்றியுள்ளன. அங்கெல்லாம் மாணவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. பெற்றோரிடம் இத்தகைய கல்லூரிகளுக்கு நல்ல வரவேற்பும் உண்டு.

ஆனால், இக்கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களில் பெரும்பாலோர் வேறு வேலைகளில் அமர்கின்றார்களே தவிர, மார்க்க சேவைக்கு வருவதில்லை. பி.பி.ஏ. பட்டமும் ஆலிம் பட்டமும் பெற்று வெளிவரும் ஒருவர், மேற்கொண்டு எம்.பி.ஏ. தேர்வு எழுதிவிட்டு ஏதேனும் நிறுவனத்தில் பணியில் சேர்கிறார்; இமாமத் பணிக்கோ மதரசா பணிக்கோ வருவதில்லை. இவர்களால் எதிர்பார்த்த பலன் தீனுக்குக் கிடைக்கவில்லை என்பதே அனுபவம் கூறும் பாடமாகும்.

இப்போது சொல்லுங்கள்! இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? நீங்களும் சமுதாயத்தின் ஓர் உறுப்பு. உங்களுக்கும் இதில் உண்டு பொறுப்பு.

(இந்த ஆக்கம் குறித்த உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்)

13 comments:

  1. அபூஷெய்க் முஹம்மத்September 15, 2011 at 3:46:00 PM GMT+5:30

    முஸ்லிம் இமாம்கள் ஒரு அவலம் என்று ஒரு கருத்தியல் நேர்காணலே வைக்கலாம் .

    இஸ்லாமை விளங்காத மக்கள் இருக்கும் வரை இந்த அவலம் தொடரும் .ஆலிம்களின் கல்வி மற்றும் தகுதியை விளங்காத முத்த வல்லிகள் இருக்கும் வரை இந்த அவலம் தொடரும்.இதற்க்கு ஒரே தீர்வு தகுதி வாய்ந்த இமாம்களை நாம்அரியாசனத்தில் அமர்த்த வேண்டும் .

    முஸ்லிம் சமூக மக்கள் தங்கள் உடல் நிலை குறித்து கவலை கொண்டு நல்ல மருத்துவரை பல லட்சம் கொடுத்து சந்திக்க தயாராக இருக்கின்றார்கள் .ஆனால் முஸ்லிம் மக்கள் தங்கள் மனோ நிலையை சரிசெய்ய முன் வருவதில்லை

    ஒரு முஹல்லாவில் இருக்கும் அணைத்து மக்களும் சேர்ந்து தான் ஒரு ஜமாஅத் அவர்கள் தன் மக்கள் மறுமை முன்னேற்றத்திற்காக சரியான திறமையான ஆலிம்களை இமாம்களாக வைக்க முன் வரவேண்டும் .அவர்கள் அந்த ஆலிம்களின் சரியான தேவையை நிறைவேற்ற வேண்டும்.

    இந்த ஆரோக்கிய நிலை சரியானால் அணைத்து மக்களும் தங்கள் குழந்தையை மார்க்க கல்வியை படிக்க வைப்பார்கள் . இஸ்லாமிய பாடசாலை மற்றும் கல்வி முறையில் மாறுதல் அவசியம் அதற்க்கு முன் முஸ்லிம் மக்கள் மத்தியில் மன மாற்றம் அவசியம்.

    - அபூஷெய்க் முஹம்மத்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்

    அப்பாவி ஆலிம்களை பற்றி மிக அழகாக அலசி எழுதப் பெற்றது கான் பாகவி அவர்கள் வடித்த கட்டுரை
    பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் உள்ள மனிதர்கள் அவர்கள்.
    தம் தேவைகளுக்காக பிறரிடம் கையேந்த வைத்து வேடிக்கை பார்க்கின்றது நம் சமுதாயம்
    காலம் காலமாக மதரசாக்கள் சாமானியர்களுக்கு தீண்ட தகாத பயிற்று சாலையாகத்தான் உணரப்படுகின்றது

    என் பல நாள் கனவு அனைத்து மதரசாக்களும் ஓர் குடையின் கீழ், பல்கலை கழக அந்தஸ்திற்கு இணையாக ஒருங்கிணைத்து மதகப் அடிப்படையில் ஒரு பட்டப் பிரிவும்,
    மதகப் அல்லாத அல்லது குரான் மற்றும் ஸஹிஹ் ஹதிஸ் அடிப் படையில் பயில்பவர்களுக்கு ஓர் பட்டப் பிரிவும் (உதாரணம் bcom ., bsc., BA ) போன்றும்
    இருகலை (உலக மற்றும் மார்க்க ) பிரிவை பயில்பவர்கள் BE நிலைக்கும் மேலும் அதற்க்கும் மேல் பதிபவர்களுக்கு PHD ., MPHIL பட்டமும் வழங்க முன் வர வேண்டும். இந்த படிப்புகளை பயின்று மதரசாக்களிருந்து வெளியில் வருபவர்களை மத்திய மாநில அரசுகள் பிரதநித்துவ அடிப்படையில் முன்னிறுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் அளவிற்கு பாடங்களை வரைமுறை படுத்தவேண்டும்.
    இவை அனைத்தும் சாத்தியப் படுத்துவ வேண்டுமாயின் நம் வெற்றுக் கொள்கைகளை புறம் தள்ளிவிட்டு சமுதாய முன்னேற்றத்திற்காக ஓர் குடையின் கீழ் அணி திரள வேண்டும் இதற்க்கு கான் பாகவி போன்றோர்கள் முன் ஏற்பாடுகளை செய்தால் இன்ஷா அல்லாஹ் நாங்களும் எங்கள் பங்கிற்கு வழித் தொடர்வோம் அல்லாஹ்வின் உதவி எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் அல்லது எல்லா வகையிலும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது

    இதில் பயில்பவர்கள் ஏழைகள் அல்லது நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்கள் அல்லது உலக கல்வி பயிலமுடியதவர்கள் அல்லது சுட்டிபையன்கள் போன்றவர்களா என்று வினா எழுப்பும் அளவிற்கு மதரசாக்கள் தலைக்கு மொட்டை உடலுக்கு நீண்ட சட்டை மாட்டி கோலத்தை மாற்றி சாதாரண மக்களிடமிருந்து பிரித்து காட்டப்படுகின்றது

    இன்ஷா அல்லாஹ் ஆரோக்கியமாக விவாதிப்போம் வாருங்கள்

    இவன்
    மு அ ஹாலித்
    சிட்னி ஆஸ்திரேலியா

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி வ பரகாதுஹு

    பேராசிரியர் முஹம்மது கான் பாகவி அவர்கள் பல வருடங்களாக மதரசாக்களை பற்றி பல இடங்களில் பேசியும் எழுதியும் வருகின்றார்கள்... அவர்கள் மதரசா மேம்பாட்டிற்காக பல முயற்சிகள் மேற்கொண்டும் எந்த வித பலனும் ஏற்படவில்லை. என்பதை அறிந்தோ வைத்துள்ளோம்.இங்கே அவர்கள் கூறியிருந்த பிரச்சினைகளில் பல உண்மைகளை வெளிப்படுத்தமுடியவில்லை என்பதும், மதரசாக்களை மேம்படுத்த பெருமுயற்சிகள் செய்து அதன் காரணமாக ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் ,விமர்சனங்களையும் இங்கு ஹழரத் அவர்கள் வெளிப்படுத்தவில்லை என்பதும் எதார்த்த உண்மையாகும். அதன்காரணமாக மதரசாக்களை மேம்படுத்த நினைக்கும் முயற்சிக்கு மேலும் முட்டுக்கட்டை ஏற்படும் என்ற நல்லெண்ண அடிப்படையிலேயே அவற்றை இங்கு பதியவில்லை என்று நினைக்கிறேன். -------------------
    அரபிமொழி------------------------------------------------------------------------------------

    மதரசாவில் பயின்றுவிட்டு வெளிவரும்போது அரபி மொழியில் பேசவும் ,கட்டுரைகள் எழுதவும்,மொழிபெயர்ப்புதிறன் பெற்றவர்களாக விளங்கவும் ,modern arabic தெரிந்திருக்கவும் எல்லா ஆலிம்களும் ஆசைப்படுகின்றனர். இவற்றில் எல்லோராலும் அனைத்திலும் தேர்ச்சி பெற்று வெளிவருவது இயலாத காரியம் . குறைந்தபட்சம் ஹதீஸ் , பிக்ஹுகிதாபுகளை முழுமையாக படித்து விளங்கிக்கொள்கிற அளவிற்காவது எல்லா ஆலிம்களும் உருவாகவேண்டும்.(இப்போது பட்டம் வாங்கி வெளிவருகின்ற மௌலவிகளில் பலர் இத்திறமையை பெற முடியவில்லை என்பது கசப்பான உண்மையாகும்). மதரசாவில் பயிலும் சில மாணவர்களிடத்தில் இயல்பாகவே காணப்படும் திறமை , கடினமுயற்சி ஆகியவற்றை அடையாளம் கண்டு அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்களாக உருவாக்கமுடியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அரபி மொழி படிக்கும் மாணவருக்கு மதரசாவின் ஆரம்ப வருடத்திலேயே நம்மால் அரபி மொழியில் முழு தேர்ச்சி பெற இயலாது என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு உளவியல் ரீதியான காரணம் முக்கிய இடத்தை வகிக்கிறது. .அந்த மாணவனுக்கு பாடம் நடத்தும் பல ஆசிரியர்கள் அரபி மொழியில் முழு தேர்ச்சி பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். இத்தகைய ஆசிரியர்கள் .மொழிப்பாடம் நடத்தும்போது தன்னுடைய ஆசிரியருக்கே முழுமையாக அரபி தெரியவில்லை.. நாமும் முழுமையாக அரபி மொழியில் தேர்ச்சி பெற இயலாது என்று மாணவர் கணக்கு போட்டு விடுகிறார். இதனால் உளவியல் ரீதியாகவே அந்த மாணவர் தன்னை அறியாமல் பாதிக்கப்படுகிறார். தம்மால் அரபிமொழியில் முழுதேர்ச்சிபெற இயலாது என்று முடிவு செய்து விடுகிறார்.. இதற்கு ஏற்றார்போல் பயிற்றுவிப்பு முறையும் அமைந்துவிடுவது மேலும் சிரமத்தை ஏற்படுத்திவிடுகிறது. -----------------------------பொதுவாகவே ஒருமொழியை கற்றுக்கொள்ள இலக்கணத்தை முதலில் போதிப்பது சிறந்த முறையல்ல.. இலக்கணம் என்பது ஒருமொழிக்கு நன்கு அறிமுகமாகிவிட்டபின்னர் கற்றுக்கொள்வதாகும்...............டாக்டர் அப்துறஹீம் அவர்களின் துரூசுல்லுகதில் அரபிய்யா ... மூன்று பாகங்களை போதித்துவிட்டு , பின்னர் இலக்கணம் கற்றுக்கொடுக்கலாம். தமிழ் நாட்டை சார்ந்த அப்துர்ரஹீம் அவர்களை நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்பது கசப்பான உண்மையாகும். அவர்களின் ஆலோசனையை நாம் பெற முயற்சிப்போம். அவர்களால் பல நாட்டவர்கள் பயன்பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாம் வரவழைத்து மதரசா ஆசிரியர்களோடு சந்திப்பை எற்படுத்தியாவது ஆலோசனை பெறலாம்.. ------------- அரபிமொழியில் ஞானம் மிக்க உலமாக்களை மட்டுமே கண்டறிந்து அரபி மொழி ஆசிரியாராக மதரசாவில் நியமிக்கவேண்டும்............தோடர்ச்சி -

    ReplyDelete
  4. மதரசாவின் sylabus மாற்றப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. ஆனால் மிகமுக்கியமாக பயிற்றுவிப்பு முறையும் மாற்றப்பட்டாகவேண்டும்.. வெறும் பாடங்களை நடத்தி புரியவைக்கும் முறையைவிட சிந்தனையை கூர்படுத்தும் முறையிலான பயிற்றுவிப்பு முறைதான் சிறந்தது. அடிப்படை சிந்தனைகளை கட்டமைத்துவிட்டு பாடங்களை நடத்தும் முறையுடன் இணைந்த பாடத்திட்டம் தான் பலனளிக்கும்.அதற்கான திறம்பெற்றவர்கள் தமிழகம் தாண்டி உள்ளார்கள். அவர்களை வரவழைத்து பாடத்திட்டம் தயாரிக்கவேண்டும்..அந்த முறையில் ஏற்பட்ட அனுபவத்தையே பகிர்ந்துகொள்கிறேன். -------------------------------- அகீதா தொடர்பான அடிப்படை சிந்தனையை கட்டமைக்கும் பாடத்திலிருந்து தான் துவங்கவேண்டும்.உதாரணமாக முதசிலா ,ஜபரிய்யாஹ், காரிஜிய்யாஹ், ஷியா, இஸ்மாயிலியா (பாத்தினிகள்) ,காதியானி,சுன்னாவை மறுக்ககூடியவர்கள் ,அலவி , துரூஸ்.......... ................என்று அவர்களைப்பற்றி விரிவாக பாடம் எடுப்பதைவிட .. அகீதாவுடைய அசல் விசயங்களையும் , கிளை (furooh) விசயங்களையும் எவ்வாறு விளங்கிக்கொள்வது.... அகீதாவின் எந்த விசயங்களை ஒருவர் மறுத்தால் காபிர் ஆவார் , எந்தவிசயங்களை நிராகரித்தால் காபிர் ஆகமாட்டார் (பாவி ஆகிவிடுவார்) அகீதாவில் சேர்க்ககூடாத விசயங்களை சேர்த்ததால் தான் பிரிவுகள் தோன்றின.. தவறான விளக்கங்கள் அகீதாவில் கொடுத்த காரணம் ... இது தொடர்பான அடிப்படை சிந்தனைகைளை கட்டமைக்கின்ற ஒரே பாடத்தை நடத்திவிட்டால் .. போதும்.. அவரே இஸ்லாத்தில் தோன்றிய பிரிவுகள் பற்றிய சுயமாக படித்துவிட்டு தேர்ச்சிபெற்று விடுவார்,... குறைந்த காலத்திலேயே நிறைந்த கல்வியை பெறமுடியும்.. இது அனுபவ முறையாகும்..

    உசூல் அல் பிக்ஹு , இஜ்திஹாது, பற்றிய அடிப்படை சிந்தனையை ஆழமாக பயிற்றுவிக்கவேண்டும்.( இஜ்திஹாது இப்போதைக்கு யாரும் செய்ய சாத்தியமில்லை எனவே மேலோட்டமாக இதுபற்றி பயின்றால் போதும் என்ற கருத்து தவறானது) .... இந்த அடிப்படையை ஆழமாக பயிற்றுவித்தால் பிக்ஹு சட்டங்களை எளிதாக புரிந்துவிடலாம்.. கைர முகல்லிதுகளை எளிதில் எதிர்கொள்ளலாம் (உலமாக்கள் கைர முகல்லிதுகளுக்கு உசூல் அடிப்படையில் பதில் சொல்வதில்லை .அவர்களின் பாணியிலேயே பதில் சொல்லி விடுவதால் பலவீனமாகிவிடுவதை காணமுடிகிறது.) ... இமாம் கஸ்ஸாலி அவர்களின் al musthasfa போன்ற கிதாபுகளை உசூல் அல் பிக்ஹு பாடத்திற்கு நடத்தினால் மற்ற உசூல் கிதாபுகளை படித்து விளங்கிக்கொள்ளமுடியும்--------------------.. ஹனபி மதுஹபின் பிரபலமான கிதாபான இமாம் சர்கசி அவர்களின் அல் மப்சூத், ஷாபி மதுஹபின் இமாம் நவவி அவர்களின் minhaj , இமாம் ஜுசைரி அவர்களின் fikhul mathaahibul arba'போன்ற கிதாபுகள் நடத்துவது மிகவும் ஏற்றமாக இருக்கும்.. ஹுதூது தொடர்பாக இமாம் மாவரதி அவர்களின் அஹ்காமுஸ் சுல்தானியா , .... பொருளாதாரம் சம்பந்தமாக இன்றறைய காலகட்டத்தில் இஜ்திஹாது செய்து எழுதப்பட்ட நிளாமுல் இக்திசாதி பில் இஸ்லாம், ஆட்சிமுறை சம்பந்தமான நிளாமுல் ஹுகும் பில் இஸ்லாம் போன்ற எளிய கிதாபுகள் உள்ளன.. ஏனெனில் இன்றைக்கு இன்சூரன்ஸ்,சேர் மார்க்கெட்,வங்கி, நாணய பரிவர்த்தனை ,கூட்டு வர்த்தகம், .... போன்ற புதிய சவால்களுக்கு எளிய முறையில் விளக்கங்கள் உள்ளன.. அதேபோன்று தஸ்வீர்,cloning,abortion,test tube baby, .... freezing embryo..போன்ற இஜ்திஹாது செய்து எழுதப்பட்ட விளக்கங்கள் உள்ளன.. இவைகள் நடத்தப்படுவதற்கு சொற்ப கால அவகாசம் போதுமானது..--------------
    CONINUE.........

    ReplyDelete
  5. உலூமுல் குரான் , உசூலு தப்சீர் பாடங்களை ஆழமாக நடத்திவிட்டால் .. தப்சீர் கிதாபுகள் எளிதில் விளங்கும்.. ஹதீஸ் கலை, தொடர்பான பாடம் இதன் பின்னர் நடத்தப்படுவது ஏற்றம்.. இதில் முக்கியமான விசயங்கள் நடத்தப்பட்டு, விரிவான பாடத்திட்டத்தை மேல்படிப்பாக நடத்தலாம் ..

    ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு லேப்டாப் அவசியமானது. அதில் makthaba shamila ... போன்ற நூலகங்களை அமைத்துவிட்டால் விஷயம் எளிதாக அமைந்துவிடும். அந்த நூலக புத்தகங்கள்,முசன்னிப் குறித்து மாணவர்களுக்கு அறிமுக பாடம் நடத்திவிட்டால் அறிவை மேம்படுத்த எளிதாகும்....

    புதிய மதரசாக்கள் ஏற்படுத்துவதை ஊக்கப்படுத்தக்கூடாது...... மூடப்படும் சூழ்நிலையில் தத்தளிக்கும் ஏதாவது மதரசாவை தத்தெடுத்து புதிய பாடமுறையில் கல்வி முறையை அமைத்து தரமானகல்வியை அளித்தால் குறிப்பிட்ட சில வருடங்களிலேயே இங்கிருந்து வெளியாகும் ஆலிம்களின் தரத்தை பிற மதரசாக்கள் உணர்ந்து மாற்றத்தை நோக்கி பயணிக்க முயலும். இப்போதைய சூழ்நிலையில் மதரசாக்களை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியகூறுகளோ, ஒருங்கிணைந்த ஒரே புதிய பாடத்திட்டத்தின்கீழ் மாற்றியமைப்பதோ சாத்தியம் இல்லை.. சிதைந்துவிட்ட மதரசா சூழலை மாற்றியமைக்க இப்போதைக்கு முதல் குறிக்கோளாக தரமான கல்வியை மேம்படுத்துவது மட்டுமே இப்போது ஒரே குறிக்கோளாக இருக்கவேண்டும்..அந்த நிலையை எட்டிவிட்டால் ,அடுத்த கட்டமாக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து சிந்திக்கலாம் ..
    மதரஸாக்களில்ஐந்தாண்டு கால ஆலிம் கல்வியோடு பட்டபடிப்புடன் கூடிய முறையை ஏற்படுத்தியும் பெரிய மாற்றம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
    தொடர்ந்து முயல்வோம் அல்லாஹ் எளிதாக்குவான்.. இன்ஷா அல்லாஹ்----------------------------------அபூசாலிஹா...... சென்னை

    ReplyDelete
  6. salam. Merge all madhrasas to Tamil Nadu Thowheed Jamaath management, and the issue will be resolved insha Allah

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    அன்புள்ள சகோ.கான் பாகவி,

    ஆணித்தரமான வாதங்களுடன் ஆழ்ந்த சிந்தனை தூண்டல்.அருமையான பதிவு. ஜசாக்கல்லாஹ் க்ஹைர்.

    //இப்போது சொல்லுங்கள்! இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? நீங்களும் சமுதாயத்தின் ஓர் உறுப்பு. உங்களுக்கும் இதில் உண்டு பொறுப்பு.//--நன்றி.

    மதரசாவில் இப்போது மாணவர்கள் சேர்க்கை குறைந்தமைக்கு காரணம்... சம்பளம் குறைவு மட்டுமல்ல... (அது பல காலமாக அப்படித்தான் இருந்து வந்தது) மேல் வரும்படிகள் ஒழிந்து விட்டன. மையத்து பாத்திஹா, மூனாம், ஏழாம், நாப்பதாம் பாத்திஹா... வருஷத்து பாத்திஹா... அம்மா பொறை, ஹல்வா பொறை, ரொட்டி கறி, சூட்டு கறி, நபிலாம் ஹந்திரி, மைதீன் ஹந்திரி, ஒடுக்கத்தி புதன், தட்டு, தாயத்து, தகடு, தண்ணி ஓதி கொடுத்தல், பந்தக்கால் பாத்திஹா, அடிக்கல் நாட்டு பாத்திஹா, நிக்காஹ் பாத்திஹா, மவ்ளூது... இதெல்லாம் இப்போ யாறு ஓதுரா..? ரொம்ப ரொம்ப ரொம்ப குறைஞ்சு போச்சே ஆலிம்சா..!?

    இந்த பித்அத்கள் மூலம் வரும்படி பார்த்துக்க சொல்லி சம்பளத்தை மட்டுப்படுத்தி வைத்திருந்த பள்ளி நிர்வாகங்கள்தான் இப்போது சம்பளத்தை உயர்த்த கடமைப்பட்டவர்கள். அவர்களின் கஜானாவுக்கு பணம் நிரப்ப வேண்டியதற்கு ஊரில் உள்ளவர்கள், மேற்படி பித்அத்களை ஒழிக்க பட்டுபட்டவர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். ஆலிம்கள் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    இன்ஷாஅல்லாஹ்..! இதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்..!

    அதற்கு நாம் செய்ய வேண்டியவை :

    1--முதலில்... பள்ளிவாசல் நிர்வாகம் முறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது ஊரில் யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்தான் முத்தவல்லி. பள்ளிவாசல் நிர்வாகி. முதலில் இந்நிலை மாற வேண்டும். பணம் ஒரு தகுதியாக இருக்கவே கூடாது. ஒருவர் பள்ளிவாசல் நிர்வாகி ஆக குறைந்த பட்ச அடிப்படைத்தகுதி... "அவர் அந்த பள்ளிவாசலில் தினமும் ஐந்து வேளை ஜமாத்துடன் தொழ வருபவராக இருக்க வேண்டும்". இதில் யார் பெஸ்டோ அவர் தலைவர்.. அப்புறம் அப்படியே... படிப்படியாக இறங்கி... ஒவ்வொரு பொருப்பாளியும் இருக்க வேண்டும். இதில் இருபது வயதுக்கு மேற்பட்ட யாரும் நிர்வாகத்தில் இருக்கலாம். முக்கியமாக உள்ளூரில் பணிபுரியும், தொழில்செய்யும், கல்லூரியில் படிக்கும் நபர்களாக உள்ள எவரும் இருக்கலாம்.

    ReplyDelete
  8. தொடர்ச்சி--2

    2--பள்ளிவாசலை நிர்வாகம் செய்வோரின் தகுதிகளை அல்லாஹ் தெளிவாகக் கூறுகின்றான்.
    "அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருப்பவர்கள் தான் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்ய வேண்டும்." (அல்குர்ஆன் 9:18) ...என்று அல்லாஹ் சொல்லும்போது ... பள்ளி நிர்வாகிகளுக்கு என்று இறைவன் வகுத்த கட்டளைகளை பேண வேண்டும்.

    3--நிர்வாகத்தில் கண்டிப்பாக இமாம் ஒரு உறுப்பினராகவாவது இருந்தாக வேண்டும். கண்டிப்பாக..! இஸ்லாமிய ஆலோசனை வழங்க அவர் அவசியம்..!

    4--இமாம்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும். இப்போது உள்ள சம்பளம் கண்டிப்பாக பத்தாது. அப்படி உயரத்த வழி இல்லை என்றால்... அவருக்கு தொழுகை வைக்கும் வேலையைத்தவிர... ஒவ்வோர் நாள் அசர் அல்லது பஜ்ருக்கு பின்னால் குர்ஆன் தர்ஜுமா ஹதீஸ் (புஹாரி/முஸ்லிம்) தர்ஜுமா வாசிக்க பணிக்கப்பட வேண்டும். மதரசாவில் குழந்தைகளுக்கு ஓதிக்கொடுப்பதும் அவசியம் தினமும் நடக்க வேண்டும். இதற்கெல்லாம் சம்பளம் நிர்வாகம் அளிக்க வேண்டும். அப்போதுதான் ஊரில் நிறைய மாணவர்கள் ஓத வருவார்கள் ஃப்ரீ என்று..! அதேநேரம் இமாம்/ஆலிமுக்கும் இதற்கான சம்பளம் என்று கூடட்டுமே.

    5--மோதினார் - இவரும் ஒரு உறுப்பினராக நிர்வாகத்தில் இருக்க வேண்டும். பள்ளிவாசல் பராமரிப்பு எனும் வேலையும், இறப்பின் போது... சந்தூக், மையத் குளிப்பாட்டுதல், கபநிடுதல், மையத் அடக்கம் போன்றவற்றில் உதவுகிறார் என்பதால்... இவருக்கும் சம்பளம் கூடத்தான் தர வேண்டும்.

    6--தியேட்டர் வச்சு (காலைக்காட்சி அடல்ட்ஸ் ஒன்லி படம்) தொழில் பண்றவங்கள்... டாஸ்மாக், வட்டிக்கடை... இப்படி ஹராமான தொழில் பண்ணுபவர்கள் எல்லாம் பள்ளி நிர்வாகம் பக்கமே வரவிடக்கூடாது. அவர்கள் காசிலிருந்து நோன்பு கஞ்சி, பேரிச்சம்பழம், சமோசா,வடை, இருபத்து ஏழாங்கிழமை சஹருக்கு பிரியாணி பொட்டலம், அப்புறம்.. பள்ளிக்கு மராமத்து காசு... வெள்ளை அடிக்க, பெயின்ட் அடிக்க, பாய் வாங்க, ஃபேன், டியுப் லைட் போட இதுக்கெல்லாம் அவங்கிட்டேயிருந்து ஒரு பைசா கூட வாங்கவே கூடாது.

    ReplyDelete
  9. தொடர்ச்சி--3

    7--பத்தோ... இருபதோ... நூறோ... ஆயிரமோ...ஊரில் உள்ள ஓவ்வோர் முஸ்லிம் வீடும் அவங்க அவங்க பொருளாதார தகுதிக்கு ஏற்ற மாதிரி பள்ளிக்கு நன்கொடை அளிக்க வேண்டும். 'இந்த வீட்டார் இன்னும் கொஞ்சம் தரலாமே' என்பதெல்லாம் பள்ளியின் பொருளாதார பிரிவு நிர்வாகிகள் நினைத்தால்...அதை அழகிய முறையில் தாவா செய்து அவர்களிடம் கேட்க வேண்டும். முரண்டு பிடித்தால் மிரட்ட கூடாது. 'இதனால் இவர்கள் வீட்டு பிள்ளைகள் மதராசாவில் ஓதுதல்.... நாளை இவர்களே இறக்கும்போது பள்ளிவாசல் மையவாடிதானே இவர்களுக்கு அடக்கஸ்தலம்' என்பதையெல்லாம் சற்று அழகாக... "நம்முடைய நிரந்தர இடத்துக்கு உதவலாமே.." என்று நிச்சியமாக பேசி வசூலிக்க வேண்டும். இந்த வேலைகளையெல்லாம் நன்மை என்று கருதி ஆர்வமுடன் பண்கேற்பவர்களே நிர்வாகிகளாக இருக்க வேண்டும்.

    8--இமாம் அல்லது முஅத்தின் .. இவர்கள் பள்ளிவாசல் தவிர வேறு எங்கும் வேலை பார்க்ககூடாது... வேறு ஹலாலான தொழில் எதுவும் செய்யக்கூடாது என்றெல்லாம் தடை போடுகின்றனர். இது இஸ்லாத்திற்கு எதிரானது. காலை.. பஜ்ர் தொழுகை வைத்த பிறகு.. அடுத்து லுஹர் தொழுகை... இடையில் அவர் எந்த தொழிலும் நடத்தில் சம்பாரிக்கலாமே..? அடுத்து அசர்...அங்கேயும் நல்ல டைம் இருக்கு. அவரால் தொழுகைக்கு இடையூறு இல்லாதவாறு அவர் தன் வருவாய் வரும் வழியை வைத்துக்கொண்டால் யாருக்கு என்ன பிரச்சினை..?

    9--இதுக்கெல்லாம் அனுமதி கொடுத்தால்... அவர் ஏன் மவ்ளூது... ஃபாத்திஹா... ஹத்தம்... தட்டு... தாயத்து... தகடு... ரொட்டி... தர்ஹா கொடியேத்தம், சந்தனக்கூடு, கந்தூரி என்றல்லாம் பித்அத் வழிகளில் போய் பணம் சம்பாரிக்கிறார்...?


    10--இன்னொரு முக்கிய விஷயம்: எந்த மனிதரும் தான் கற்ற கல்வியை மக்களுக்கு சொல்ல பேச்சுரிமை வேண்டும் என எதிர்பார்ப்பார். அது அறவே இல்லை என்ற ஒரு அடிமைப்பணிக்கு யார் வருவார்..? அதிக சம்பளம் குடுத்தால் மட்டும் போதுமா..? ஜும்மா குத்பா பயானில்... பேச்சுரிமை கொடுக்க வேண்டாமா..?

    நல்ல சம்பளமும், பேச்சுரிமையும் நன்றாக கற்ற ஒரு நேர்மையான ஆலிம்சாவுக்கு கிடைத்தால்... இஸ்லாமிய தாவா நிச்சியமாக தலை நிமிரும்..!

    இதை நான்கு வருடங்கள்... கூடவே இருந்து கண்டவன் நான்..! 'பித்அத்கள் மறைந்து... மாற்றங்கள் நடந்து.... மறுமலர்ச்சி உண்டாகி'... என... என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் அவை. ஒரு சுன்னத்துல் ஜமாஅத் இமாம்-ஆலிம் தூய இஸ்லாத்தை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மதஹப் அல்லாமல் சொன்னபோது... இஸ்லாம் மக்களிடம் தலை நிமிர்ந்த போது... நான்காவது வருடம் வேறொரு புதிய நிர்வாகம் வந்து அவர் பள்ளியை விட்டு தூக்கி வீசப்பட்டார்..!

    ஆதலால்... இஸ்லாத்திற்கு எதிரான இஸ்லாம் தெரியாத... இறையச்சம் இல்லாத பணமுதலை நிர்வாகம் முதலில் மாற வேண்டும்..!

    அப்படி மாறி சரியான இஸ்லாமிய நிர்வாகம் வந்து... நல்ல சம்பளம் கொடுத்து... நன்மையை ஏவவும் தீமையை தடுக்கவும் முழு பேச்சுரிமை சொடுத்து... பின்னர் இவர்களுடைய முழு சப்போர்ட் ஆலிம்/இமாம் க்கு இருந்தால்... அந்த ஆலிம்/இமாம் என்னவெல்லாம் இஸ்லாமிய தாவா செய்வார் என்பதை சொல்லித்தான் அறிய வேண்டுமா..?

    அதற்கு பிறகு பாருங்கள்... சமுதாயத்தில் இப்படியொரு கண்ணியமிக்க, மதிப்புமிக்க, நல்ல சம்பளம் உள்ள, 'எவருடைய தீமையும் சுட்டிக்காட்டும் பவர்ஃபுல் போஸ்ட்' கிடைக்க வேண்டி... மாணவர் சேர ஆரம்பிக்க... ஆரம்பிக்க... மதரசாவில் இன்ஷாஅல்லாஹ் சீட் கிடைப்பது கஷ்டம் ஆகி அது ஒரு professional course ஆகிரும்..!

    http://pinnoottavaathi.blogspot.com/

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மௌலானா அவர்களே

    தாங்கள் இமாம்களின் ஊதியத்தை காலத்திற்கேட்ப உயர்த்த கூறியுள்ளீர்கள் .

    இன்றைய நிலையில் மதரசா பட்டம் பெற்றவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்தின்
    அடிப்படையில் உலமாக்கள் சபைகள் ஒன்று கூடி recommended சம்பளங்களை நிர்ணயம்செய்ய கோருகிறேன்.

    அவ்வாறான சம்பளங்களை நிச்சயம் ஒரு சில நிர்வாகங்கள் நடைமுறைபடுத்தும், இன்ஷா அல்லாஹ்.

    இதில் ஊர் மக்கள் மாற்றத்தை கண்டவுடன் மற்ற நிர்வாகங்களும் இந்த recommended சம்பளங்களை நடைமுறைபடுத்த தூண்டபடலாம்.

    அதனால் recommended சம்பளங்களை நிர்ணயம்செய்ய முயற்சிகள் எடுக்க கோருகிறேன்

    வஸ்ஸலாம்

    ஹஜ் முஹம்மத்
    சிங்கப்பூர்

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    கான் பாகவி அவர்களின் இந்தக் கட்டுரை காலத்தின் தேவை கருதி வெளியாகியுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு எல்லாவிதமான ஆற்றலையும் அளிப்பானாக! இன்றைய நவீன உலகில் மார்க்க அறிஞர்களின் நிலையையும் அவர்கள் உருவாக்கப்படும் மதரஸாக்களின் நிலையையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

    நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலையை மேம்படுத்துவதற்கு சிறந்ததொரு தீர்வாக நமது அண்டை நாடாகிய இலங்கையைப் பார்க்கலாம். அங்கு ஜாமிஆ நளீமிய்யா எனும் கலாசாலை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இங்கிருந்து வெளிவருகின்ற மாணவர்கள் ஆய்வு கண்ணோட்டத்தோடும், பல்துறை சார்ந்த கண்ணோட்டங்களோடும் கான் பாகவி கூறியது போல் குர்ஆன் அறிவியல், அரசியல், சமூகவியல், பொருளியல்.... போன்ற கண்ணோட்டங்களோடும் உருவாக்கப்படுகின்றனர். தலைசிறந்த மார்க்க அறிஞர்களால் உருவாக்கப்படுகின்றனர். அதன் நிறுவனர் அல்ஹாஜ், நளீம் அவர்களின் பங்கு பிரதானமானது. பணம் படைத்த செல்வந்தர்களும், அறிவு படைத்த அறிஞர்களும் இணைந்தால் தமிழகத்தில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இருவரும் கைகோர்த்தாலே இது சாத்தியமாகும். ஆனால், நம் நோக்கமும் எண்ணமும் அல்லாஹ்வுக்காக என்று மட்டும் இருந்தாலே ஒழிய...

    இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவைக் கொஞ்சம் க்ளிக் பண்ணி பாருங்கள்.
    http://www.facebook.com/mohamed.buhary/posts/242747595764452

    ReplyDelete
  12. இதையெல்லாம்விடப் பெரிய கொடுமை ஒன்று உண்டு. அரபி மதரசா மாணவர்களை ஊரில் நடக்கும் மவ்லிது, ஃபாத்திஹா, ஸலாத்துந் நாரியா, (மிகக் குறைவாக) திருமணம் போன்ற சடங்குகளுக்கு அனுப்பிவைப்பதும், அங்கு பரிமாறப்படும் உணவு, தரப்படும் தட்சணை ஆகியவற்றைப் பெறுகின்ற பழக்கத்தை ஊட்டி வளர்ப்பதும் இருக்கிறதே, இது சீரணிக்க முடியாத அவமானமாகும்.

    தன்மானத்தோடு வளர வேண்டிய இளங்குருத்தை முளையிலேயே ஒடித்துப்போடும் மட்டமான செயலல்லவா இது? இதைக் காணும் மானமுள்ள பெற்றோர் எவரும் தம் பிள்ளைகளை மதரசாவுக்கு அனுப்ப யோசிப்பார்களா? இல்லையா?

    இதனால்தான், தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்கின்ற ஆலிம்களைக்கூட காலுக்கும் அரைக்கும் அலைகின்ற அற்பர்கள் என்று சாமானியர்கூட எண்ணுகின்ற நிலை காணப்படுகிறது. இது தரமான ஆலிம்களை வெகுவாகப் புண்படுத்துகிறது.

    பாகவி அவர்கள் உண்மையான கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்கின்றேன். அல்லாஹ்வின் அருள் உங்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கின்றேன். ஆமீன்.

    ReplyDelete