Wednesday, April 18, 2018

தாத்தா, பாட்டிகளின் பாசமான வேண்டுகோள்!

தாத்தா, பாட்டிகளின் பாசமான வேண்டுகோள்!
*******************************************
                                                    -கான் பாகவி

பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. சிறையிலிருந்து விடுபட்ட உணர்வில் இருக்கும் மாணவ, மாணவிகள், பெற்றோர்களான உங்கள் பொறுப்பில் முழு நேரமும் இருக்கப்போகிறார்கள். அவர்களை எப்படி வழிநடத்தப் போகிறீர்கள்? ஒரே செல்லமும் வேண்டாம்! பிள்ளைகள் வழிதவற வாய்ப்பாகிவிடும். ஒரே கண்டிப்பும் வேண்டாம்! விரக்திக்கு ஆளாகிவிடுவார்கள்! இரண்டும் இருக்கட்டும்! அதற்கு முதியவர்களான எங்கள் யோசனைகள் சில:

1. குழந்தைகளின் உடல்நலம்
---------------------------------------------------
A. 100 டிகிரிக்கு மேலே கடும் வெயில் கொளுத்துகிறது. வெயில் நேரத்தில் குழந்தைகளை வெளியே விட வேண்டாம்! பொடுகு, சிறுநீர் கடுப்பு, வயிற்றுப்போக்கு, ஏன் காய்ச்சல்கூட ஏற்பட வாய்ப்பு உண்டு!
B. நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் கொடுங்கள்! பழங்கள், வெள்ளரிக்காய், இளநீர், மோர், பழைய சோறு, கஞ்சி, அதிகக் காரமோ உப்போ சேர்க்காத உணவு வகைகள் ஆகியவற்றைக் கொடுங்கள்! குளிர்பானங்கள், ஹோட்டல் உணவு வகைகள் போன்றவற்றை இயன்றவரைத் தவிர்த்திடுங்கள்!

2. சுற்றுலா
--------------------
A. அதிகச் செலவு பிடிக்காத வகையில், அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குப் பாதுகாப்பான முறையில் அழைத்துச் சென்றுவாருங்கள்! ஆர்வக்கோளாறில் மலை உச்சியில் நின்றுகொண்டு செல்ஃபி எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆறு-குளம்-அருவி-ஏரி-கடல் போன்ற நீர்நிலைகளில் நீச்சல் தெரியாத பிள்ளைகளை அனுமதிக்காதீர்கள். நீச்சல் தெரிந்தாலும் உங்கள் கண்காணிப்பிலேயே இறங்க அனுமதியுங்கள்!
B. படகு சவாரியை இயன்ற அளவு தவிர்த்திடுங்கள்! நல்ல அனுபவமுள்ள ஓட்டுநர்களையே வாகனங்களுக்குத் தேர்ந்தெடுங்கள்! தூக்க மயக்கத்தில் வண்டியை இயக்க அனுமதிக்காதீர்கள்!

3. பயிற்சி வகுப்புகள்
-------------------------------------
A. நீட் போன்ற பயிற்சி வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்புகின்றவர்கள், நன்கு பரிசீலித்து உருப்படியான மையங்களுக்கு அனுப்புங்கள்! கட்டணம் அதிகமாக இருந்தால், வகுப்பும் தரமாக இருக்கும் என்று நம்பாதீர்கள்! இலவச வகுப்புகள் பல நடத்தப்படுகின்றன. விவரம் அறிந்து அங்கு அனுப்பலாம்.
B. மார்க்க வகுப்புகளும் பல இடங்களில் நடத்தப்படுகின்றன. பரிசீலனை செய்து குழப்பமில்லாத வகுப்புகளாகப் பார்த்து அனுப்பிவையுங்கள். குர்ஆன் ஓதத் தெரியாத, தொழுகை முறை தெரியாத, இஸ்லாத்தின் அடிப்படைகள் –ஒழுக்க மாண்புகள்- மறுமை போன்ற அத்தியாவசியமான விஷயங்கள்கூடத் தெரியாத பிள்ளைகள் ஏராளம்! விடுமுறையைப் பயன்படுத்தி, அவர்களை மார்க்க விவரமுள்ள பிள்ளைகளாக மாற்றப் பாடுபடுங்கள்! ‘நீட்’டைவிட நீட்டான இக்கல்வியே எதிர்காலத்தில் பிள்ளைகளை வழிநடத்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்

4. சந்திப்புகள்
-------------------------
A. இன்றைக்கெல்லாம், நம் பிள்ளைகளுக்கு உறவினர் யார்? என்ன உறவு? அவர்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள் என்பதுகூடத் தெரிவதில்லை. அண்ணன்-தம்பி; மாமன்-மச்சான் உறவுக்காரர் ஒருவரை ஒருவர் கடந்துபோகிறார்கள். ஒரு முருவல் கிடையாது; சலாம் கிடையாது; விசாரிப்பு கிடையாது. காரணம், யார் என்றே தெரியாது. இந்த அவலத்தைப் போக்க, விடுமுறை நாட்களில் உறவுகளைத் தேடிப் பயணியுங்கள்! சில நாட்கள் பழகுங்கள்! அன்பளிப்பு வழங்கி, உறவைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்! உறவுதான் உங்கள் பலம். என்றாவது ஒருநாள், அதுதான் உங்களுக்குக் கை கொடுக்கும். அவர் ஆடாவிட்டாலும் தசை ஆடும். உறவுகளைப் பேணி வாழ்வது நபிவழி-சுன்னத் ஆகும்.
B. ஆசிரியர்கள், பள்ளி-கல்லூரி தோழர்கள், நல்ல நண்பர்கள், வழிகாட்டிகள் ஆகியோரைப் பிரிந்து பல ஆண்டுகள் கழிந்திருக்கும்! அவர்களைச் சந்தித்து, மலரும் நினைவுகளுக்குக் கொஞ்சம் நீரூற்றிவிட்டு வாருங்கள்! கண்கள் குளமாகும்; கண்ணீர் கசியும். அதையடுத்து மனதின் பாரம் குறையும்; ரிலாக்ஸ் கிடைக்கும்; விடுமுறைக்குப் பிறகும் நட்பு தொடரும்!

5. வாசிப்பு
--------------------
A. பொதுவாக எல்லாச் சமூகங்களிலும் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது. பாடப் புத்தகத்தை, அல்லது தகுதி வளர்ப்பு நூலை –அதுவும் ‘தேர்வில் வெற்றி’ என்ற ஒரே இலக்கோடு- படிக்கும் தலைமுறையை மட்டுமே இன்றைய கல்வித் திட்டம் உருவாக்கியிருக்கிறது. ஆனால், படிப்புக்கு அப்பால் வாழ்க்கைப் பாடங்கள் நிறைய உள்ளன. படிப்பறிவுக்கு மேலான பட்டறிவு ஒன்று உண்டு. அனுபவசாலிகள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்துள்ள எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. அவ்வாறே, கலை, கவிதை, மொழி, இலக்கியம் போன்ற சுவையான தகவல்கள் சொல்லும் நூல்கள் பல உள்ளன. இவற்றையெல்லாம் மாணவர்கள் எப்போது வாசிக்கப்போகிறார்கள்? விடுமுறை இதற்கு உதவட்டும்!
B. மார்க்க நூல்கள் ஒவ்வொரு துறையிலும் புதிதுபுதிதாக நாள்தோறும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அரபி, ஆங்கிலம், தமிழ், உருது… என உலகின் பல்வேறு மொழிகளில், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, விரிவுரை, நபிமொழி, வரலாறு, கொள்கை விளக்கம், சட்டத்துறை… முதலான துறை நூல்கள் வெளிவருகின்றன. மாணவர்களில் எத்தனை விழுக்காட்டினரிடம், இந்த நூல்களை வாசிக்கும் பழக்கம் உண்டு? பிறகு எப்படி மார்க்கம்பற்றி இளவல்களுக்குத் தெரியும்? விடுமுறையைப் பயனுள்ள வழியில் கழிக்க இத்தகைய நூல் வாசிப்பை மஹல்லாதோறும் ஊக்குவிக்க வேண்டும். உங்களிடம் நூல்கள் இல்லாவிட்டால், யாரிடம் உண்டோ அவர்களிடம் இரவல் வாங்கிப் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுக்கலாமே!
__________________________________________

No comments:

Post a Comment