# 'மீ டூ' ஹேஷ்டேக் #
***********************. அ.மு.கான் பாகவி
₹ பாலியல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு,தண்டனை வழங்கி, குற்றங்களைக் களைவதற்கு வழிவகை செய்யும் ஆக்கபூர்வமான குற்றவியல் சட்டங்கள் அநேகமான நாடுகளில் இல்லை.இருவரின் சம்மதுத்துடன் நடக்கும் பாலியல் அத்துமீறல் குற்றமாகவே கருதப்படுவதில்லை.பலவந்தமாக நடக்கும் பாலியல் உறவுகள் மட்டுமே குற்றம் என்கிறது பல நாடுகளின் சட்டம்.
பாலியல் பலுத்காரத்திற்கு வழங்கப்படும் தண்டனையாவது அர்த்தமுள்ளதாக இருக்கிறதா என்றால்,அதுவும் இல்லை.இக்குற்றத்தைப் புரியும் ஆண்கள் வெகுசுலபமாகத் தப்பித்துக்கொள்வதும் பெண்கள் மெளனமாகி ,மானத்திற்குப் பயந்து ஊமையாகிவிடுவதும் பழக்கமாகி விட்டன.
பாலியல் பலாத்காரத்தைவிடப் பாலியல் சீண்டல்கள் தான் தினசரி அசிங்கமாகிவிட்டது.இந்த அசிங்கத்தைத் தடுக்க யாரும் முன்வருவதில்லை என்பதைவிட , இதுவெல்லாம் சகஜம் எனும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனரோ என எண்ணத் தோன்றுகிறது.பாதிப்புக்குள்ளான பெண்களோ வெளியே சொல்ல முடியாமலும் குற்றவாளியைத் தண்டிக்க இயலாமலும் உள்ளுக்குள்ளேயே புகைந்து புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள் .
இந்நிலையில்தான்,2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஆப்பிரிக்கா பெண்போராளி 'தரனா பர்க்' என்பார் ஹேஷ்டேக் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதற்கு ' மீ டூ ' ( Mee too) என்று பெயர்.'நானும்தான் ' அல்லது 'நானும்கூட ' என்று பொருள்.பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்கள் , தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளியே கொண்டுவருவதற்கு ஒரு தளமாக இது உருவெடுத்தது.இது சரியான முறைதானா என்பதில் விவாதம் இருக்கலாம்.
இந்தியாவில் சட்டம் படிக்கும் மாணவி 'ரயா சர்க்கார் ' என்பவர் டூ மீ பட்டியலை சென்ற ஆண்டு வெளியிட்டார்.ட்விட்டரிலீ பதிவான மீ டூ வைரலாகப் பரவிவருகிறது.வெளியே சொல்ல முடியாமல் குமுறிக் கொண்டிருந்த பெண்கள் பலர், தாங்கள் அனுபவித்த கசப்பான அனுபவங்களை இதில் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.
பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் பெண்களே இத்தகைய துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.அலுவல் கூட்டங்களில் பெண்களை முறைதவறித் தொடுவது, லிஃப்ட்டில் செல்லும்போது அத்துமீறுவது, பணியிடங்களில் பின்னால் வந்து உள்ளாடையை இழுப்பது , பாட்டு கற்றுக்கொள்ளப் போகும் சிறுமிகளின் நெஞ்சுப் பகுதியைத் தொடுதது போன்ற சில்மிஷங்களில் ஆண்கள் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.
ஆண்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு.பெண்களோ மனரீதியாகப் பாதிக்கப்பட்டுத் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.உண்மையில் ஆண்களைப் பீடித்திருக்கும் ஒருவகை மனநோய் இது.ஒரே ஒரு நிமிடம் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் தன் மனைவி,மகள், சகோதரியை வைத்துச் சிந்தித்தால் அந்த வக்கிரப் புத்திக்காரர்களுக்கு உறைக்குமோ என்னவோ !
ஆனாலும் யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால், இத்தகைய தொல்லைகளுக்கு இடாமிராதுதானே !ஆணோ பெண்ணோ யாரானாலும் முதலில் பார்வையைக் கட்டுப்படுத்த வேண்டும்.அடுத்து நாவுக்குக் கடிவாளமிட வேண்டும்.பேச வேண்டிய கட்டாயம் நேரும்போது வேண்டியதை மட்டும் சுரேக்கமாகப் பேசி விலகிவிட வேண்டும்.
தொடுதல் அல்லது உரசல் மோசமான ஆரம்பம்.கீழே விழுந்தவரைக் காப்பாற்றப் போகும்போது கூட தேவைக்கு அதிகமான ஸ்பரிசம் நாசத்தையே விளைவிக்கும்.எல்லாவற்றையும்விட ,அயல் ஆண் -பெண் தனிமையில் சந்திப்பதை இயன்ற வரைத் தவிர்க்க வேண்டும்.தவிர்க்க முடியாத கட்டத்தில்கூட ,ஆரோக்கியமான இடைவெளியில் நின்றே சந்திக்க வேண்டும்.அப்போதும்கூட இருவரும் அடக்கத்தோடும் நாகரிகத்தோடும்தான் நடந்துகொள்ள வேண்டும்.
வேலைக்காகத் திருமணத்தைத் தள்ளிப்போடுவது ,பிள்ளைப் பேற்றினை ஒதுக்கிவைப்பது ,பெற்ற குழந்தையை ஆயாவிடம் ,அல்லது ஹோமிடம் தள்ளிவிட்டுப் பணிக்குச் செல்வது , குழந்தைப் படிப்பிலும் வளர்ப்பிலும் அலட்சியமாக நடந்துகொள்வது... என அடுக்கடுக்கான ஈடு செய்ய முடியாத வாழ்வியல் இழப்புகளை ஏற்றுக்கொண்டு குடும்பத் தலைவி பணிக்குச் செல்ல வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வோண்டிய அவசியத்தை இந்த மீ டூ ஏற்படுத்திவிட்டது எனலாம்.
அரசும் நீதிமன்றங்களும் இந்தப் பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இனியும் முன்வராவிட்டால் , அடுத்த தலைமேறையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.ஊடகங்கள் இத்தகைய பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை புகைப்படத்துடன் வெளியிட்டு அம்பலப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
ஆக,ஆண்களும் பெண்களும் ஒட்டுமொத்த சமூகமும் வாழையடி வாழையாக வரும் தனிமனித ஒழுக்கங்களையும் சுயக்கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பது ஒன்றே இந்தப் பிரச்சினைக்கான ஒரே தீர்வாக இருக்க முடியும்.
அ.மு.கான் பாகவி/சென்னை
No comments:
Post a Comment