Tuesday, October 30, 2018

வாசகர் கடிதம்


வாசகர் கடிதம்

‘ஆமேன்’ எனும் தலையங்கம் கண்டேன். தலையங்கத்தின் கடைசிப் பத்தியில், “அது மீண்டும் கழுமரத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது” எனும் வரியைப் படித்து முடிக்கும்போது, நம்மையும் அறியாமலேயே நாவு ‘ஆமேன்’ என மொழிகிறது. சந்தைப் பொருளாதாரத்தின் செல்வாக்கும் நுகர்வுக் கலாசாரத்தின் செல்வாக்கும் திருச்சபைகளில் மட்டுமன்றி, அனைத்துத் தலைமைப் பீடங்களிலும் நிலவுகிறது என்பதே எதார்த்தமாகும். ஆன்மாவுக்கு ஆனந்தமளிப்பதல்ல; சரீரத்திற்குச் சுகமளிப்பதே தேவை என்ற மனப்போக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருக்கிறது என்பதுதான் நடைமுறையாக உள்ளது.

பொதுவாகச் சமயத் தலைவர்கள், வழிகாட்டிகள், போதகர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுவோர் இன்றைக்கு மணிக்கணக்கில் ஆக்ரோஷமாகவும் ஆங்காரத்தோடும் நீண்ட சொற்பொழிவாற்றுகிறார்கள்; மக்கள் மதிமயங்கும் அளவுக்குத் தகவல்களைக் கொட்டித் தீர்க்கிறார்கள்; சமயக் கேட்பாடுகளுக்குப் புதுப்புது வியாக்கியானங்கள் சொல்லி அசத்துகிறார்கள். ஏற்ற இறக்கத்துடன் அவர்கள் ஆற்றும் உரைகளைக் கேட்டு, அப்பாவி மக்களும் ஆஹா, ஓஹோ என வானளாவப் பாராட்டுகிறார்கள்; பெரிய இடத்தில் வைத்துப் போற்றுகிறார்கள்.

ஆனால், பைபிளோ, பகவத் கீதையோ, குர்ஆனோ கூறும் அப்பழுக்கில்லாத தூய தனிமனித வாழ்க்கை நெறி, அப்போதகர்களில் பலரிடம் மருந்துக்குக்கூட இருக்கிறதா என்பது கேள்விக்குறியே! தங்கள் திறமைக்குக் கிடைக்கும் பெயரையும் புகழையும் தவறாகப் பயன்படுத்தி பொருளாதார, பாலியல் குற்றங்களில் துணிச்சலோடு ஈடுபடுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ‘வன்கலவி அல்ல; ஆன்மிகச் சங்கமம்’ என்று ஃபிராங்கோ முல்லைக்கல் சர்வசாதாரணமாகச் சொன்னது இந்த வகை துணிச்சல்தான்.

பொதுமக்களும் பக்த கோடிகளும் –இந்தப் பெரிய மனிதர்களெல்லாம் ஆண்டவனின் அணுக்கம் பெற்றவர்கள் என- வெளித்தோற்றத்தை நம்பி, பொன்னையும் பெண்ணையும் அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். சூட்சுமம் அறியாத அப்பாவி மக்கள், இந்தப் பெரியவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கி, அழிவை உணர்ந்து தெளியும்போது, எல்லாம் கைமீறிப் போயிருக்கும். பொன்னையும் இழந்து, விலைமதிப்பற்ற பெண்மையையும் பறிகொடுத்துவிட்டு அங்கலாய்ப்பதில் புண்ணியம் என்ன?

திறமையும் நேர்மையும் ஒன்றல்ல; வல்லோர் எல்லாம் நல்லோர் அல்லர். மக்கள் இதைப் புரிந்துகொள்ளும்போதுதான், இந்த விபத்துகளிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும். திறமை பாராட்டுக்குரியது; வரவேற்கத் தக்கது. ஆனால், வணங்கத் தக்கதல்ல. எகிப்தை ஆண்ட மா மன்னன் இரண்டாம் ரம்சேஸ் (ஃபாரோ) பற்றி வேதங்கள் பேசும். மாபெரும் ஆளுமை கொண்ட பேரரசன். ஆனால், வேதங்கள் அவனைச் சபிக்கின்றன. இஸ்ரவேலர்களை அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தினான்; இறைத்தூதர் மோசேயைக் கொல்லத் திட்டமிட்டான். இறுதியாக, அவனும் அவன் படைபட்டாளங்களும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிந்துபோயினர். பிந்தைய தலைமுறையினருக்குப் பாடமாக அமையட்டும் என்பதற்காக அவனது உடல் பாடமிடப்பட்டு, எகிப்து மியூசியத்தில் இன்றும் காட்சிப்படுத்தப்படுகிறது.

ஆளுமை வேறு; நேர்மை வேறு. ஆற்றல் வேறு; சான்றாண்மை வேறு. எண்ணத்தில் தூய்மை, செயலில் வாய்மை வந்துவிட்டால், அதுவே உண்மையான தகைமை ஆகும்.

3.10.2018                                                          அ. முஹம்மது கான் பாகவி

சென்னை-14.

No comments:

Post a Comment