Tuesday, November 06, 2018

ஒரு மொழிபெயர்ப்பாளரின் சவால்கள

*ஒரு மொழிபெயர்ப்பாளரின் சவால்கள்*

- அக்களூர் இரவி (Akkalur Ravi)

மொழியாக்கத்தில் உள்ள முதலும் பெரியதுமான சவால், ஒரு மொழியிலுள்ள ஒரு படைப்பைத் திருப்திகரமான முறையில் இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்வது.

சுனில் கில்நானியின் Idea of India புத்தகத்தை மொழிபெயர்த்தபிறகு முழுவதுமாக ஒருமுறை படித்துப் பார்த்தேன். முந்தைய நூல்களோடு ஒப்பிடும்போது இதை நன்றாகச் செய்திருப்பதாகவே தோன்றியது என்றாலும், இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்னும் தவிப்பும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.  முழு நேரத்தையும் மொழிபெயர்ப்புக்காக அர்ப்பணிப்பவர்களே திணறும்போது, ஆர்வத்தால் நேரம் ஒதுக்கி செய்பவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

அந்த வகையில், ஒரு மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ளவேண்டிய மிக முக்கியமான சவால், மொழிநடை. ஒரு மொழிபெயர்ப்பாளன், மூல ஆசிரியனைச் சார்ந்து, அவன் பார்வையிலேயே அந்த மொழியாக்கத்தைச் செய்ய வேண்டுமா; அல்லது அந்த நூலை விலை கொடுத்து வாங்கி படிக்கப்போகும் வாசகன் சலிப்படையாமல் படிக்கும் (புரிந்து கொள்ளும்) வகையில்,  எளிமையாக அம்மொழியாக்கம் இருக்க வேண்டுமா?

மூல ஆசிரியனின் மொழிநடையில், அவன் பார்வையில் ஒரு படைப்பு அமைவதுதான் சிறப்பு என்றாலும், வாசகனைக் கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும் மொழிபெயர்ப்பு தேக்கமடைந்துவிடும் என்பதே யதார்த்தம். ஒரு நூல் அதிகம் விற்பனையானால்தான் அந்நூலின் பதிப்பாளர் ஊக்கம் அடைவார்.  நன்றாக விற்பனையாகவேண்டுமானால், எளிமையான நடையில் ஒரு மொழிபெயர்ப்பு அமைவது முக்கியம்.

படிப்போர்க்குச் சலிப்பேற்படுத்தாத, எளிமையான மொழிபெயர்ப்புக்கு, அதிகமான கால அவகாசம் தேவைப்படும். இந்தக் காலஅவகாசம் எப்போதும் கிடைப்பதில்லை. மிக விரைவாக முடித்துக்கொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் உள்ளாவதுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், முழுமையாகவும் திருப்திகரமாகவும் அந்த மொழிபெயர்ப்பு அமைவது அரிது.

பெரும்பாலும் ஆங்கில மூல நூல்களில், கலவை வாக்கியங்கள் மிக அதிகம் இருக்கும். ஒரு பத்தி முழுவதுமே ஒரே வாக்கியம் நிறைந்திருக்கும். ஒரு பாணியாகவே எழுத்தாளர்கள் பலர் இம்முறையைப் பின்பற்றுகின்றனர். மிகச்சிறந்த எழுத்துகளாக இவையே கருதப்படுகின்றன. அவ்வளவு ஏன், தமிழிலேயே, ‘இலக்கிய நயத்தோடும்’ ‘சித்தாந்த அடிப்படையிலும்’ எழுதப்படும் கட்டுரைகளை ஒருமுறைக்கு இருமுறை படித்தால்தான் விளங்குகிறது. இப்படிப்பட்ட நூல்களை மொழிபெயர்க்கும்போது மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பில் ஆழ்ந்த அனுபவமும், விரிவான வாசிப்பனுபவமும் கைகூடியிருந்தால்தான், இப்படிப்பட்ட கடினமான சொற்றொடர்களை மொழிபெயர்க்கமுடியும்.  நீண்ட வாக்கியங்களை நீண்டதாகவே மொழிபெயர்க்கவேண்டும் என்றில்லை. ஆனால், சொற்றொடர்களை உடைத்து எழுதும்போது, மூல ஆசிரியன் வெளிப்படுத்த விரும்பும் கருத்து மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கற்பனை படைப்பாக இருந்தாலும் சரி, கற்பனை சாராத படைப்பாக இருந்தாலும் சரி.  மூல ஆசிரியரின் பார்வையில், அவரது முதன்மை  நோக்கம் சிதைவுறாத வகையிலும் மொழியாக்கம் செய்ய வேண்டும்.  படைப்பாளிக்கும் மொழிபெயர்ப்பாளனுக்கும் இருக்கும் இந்த  இடைவெளி சரியாக நிரப்பப்பட வேண்டும். எழுத்தாளன் அந்த நூலை எந்தத் தருணத்தில் எழுதினான்? அவனது நோக்கம் என்ன? படைப்பு, அரசியல் சார்ந்ததா அல்லது சமூகம் சார்ந்ததா? அவனது நோக்கத்தைத் திசை திருப்பாமல் மொழிபெயர்க்கமுடியுமா? உதாரணத்துக்கு, மூல நூலாசிரியர் ஒரு வலதுசாரியாகவும், மொழிபெயர்ப்பாளர் இடதுசாரியாகவும் இருக்கும் பட்ச்ததில், மொழிபெயர்ப்பாளர், சிந்தனை சிதைவின்றி மொழிப்பெயர்க்கமுடியுமா?

மூல ஆசிரியர் உருவகமாகப் பயன்படுத்தும் சொற்களை, பிரதேச அடிப்படையிலான சிறப்புச் சொற்களை, பிரத்தியேகமான உருவகங்களை, மூல ஆசியரின் வாழ்க்கைச் சூழலை, சமூகச் சூழலை, அரசியல் சூழலை, படைப்பின் பின்னனியை நம்மால் உணரமுடிகிறதா? இந்தப் புரிதல் மிகவும் அத்தியாவசியமானது. அப்படி ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்போது, பல சொற்கள், சொற்றொடர்கள் மொழிபெயர்ப்பாளருக்குப் புதியவையாக இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், ஒரு மொழிபெயர்ப்பாளர் விரிவான தேடலில் ஈடுபடவேண்டியது அவசியம். இணையத்தின் மூலமாகவோ புத்தகங்களின் மூலமாகவோ அப்படிப்பட்ட தேடலை அவர் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

சில இடங்களில், ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தனிச்சொலைத் தமிழில் கொண்டுவருவது கடினமாக இருக்கலாம். ஆகவே விரித்து எழுதவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  ஆங்கிலத்தில் 100 பக்க அளவு கொண்ட ஒரு படைப்பைத் தமிழ்படுத்தும்போது, 150 பக்கங்களுக்கு நீண்டுவிடுவது இதனால்தான்.  முடிந்தவரை குறைவான பக்கங்களில், எளிமையாக செய்யப்படும் மொழிபெயர்ப்புகளே வெற்றி பெறுகின்றன.

எவ்வளவுதான் கவனமாக செய்தாலும், இத்துறையில் அனுபவம் உள்ளவர்களைக் கலந்தாலோசித்து கொண்டாலும்,  சில இடங்களில் கவனச் சிதைவினால் தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. இந்த இடத்தில், காபி எடிட்டிங் செய்வோரின் பணி முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு எழுத்தாளர் தனக்குப் பிடித்தமான தளத்தில் மட்டுமே இயங்குகிறார். பிடித்தமான விஷயத்தை மட்டுமே எழுதுகிறார். அரசியல், பொருளாதாரம்,  கதை, கவிதை, கட்டுரை, நாவல் என்று தனக்கான ஒரு தளத்தைத் தேர்ந்தடுத்து அதில் மட்டும் கவனம் செலுத்துவது ஒரு படைப்பாளிக்குச் சாத்தியமாகிறது. ஆனால், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அப்படிப்பட்ட நிலை அமைவதில்லை.  சுய முன்னேற்றம், சுயசரிதை, பொருளாதாரம், அரசியல், இலக்கியம் என்று பல துறைகள் சார்ந்த நூல்களை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, ஒரு மொழிபெயர்ப்பாளர் தொடர்ந்து தன் திறமையையும் தகுதியையும் வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.  ஒவ்வொரு மொழிபெயர்ப்பும், அறிவையும் அனுபவத்தையும் விரிவடையச் செய்யும் பாடமாகவே அமைகிறது.  ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு பிரதியையும் புதிதாக எடுத்துக்கொள்கிறார். ஒவ்வொன்றில் இருந்தும் பாடங்கள் படித்துக்கொள்கிறார். ஒவ்வொன்றிலும் இருந்து அனுபவம் பெற்றுக்கொள்கிறார்.

எனவே, ஒரு படைப்பாளரைவிடவும் ஒரு மொழிபெயர்ப்பாளர் அதிக சவால்களைச் சந்திக்க நேர்கிறது. மூல ஆசிரியரின் இடத்தில் தன்னைப் பொறுத்திக்கொண்டு, மூல நூலின் சிறப்பை மீண்டும் உருவாக்குவது சாமானியமான செயல் அல்ல. கூடுவிட்டு கூடு பாய்வதைப் போன்ற அற்புதம் அது.

Courtesy: http://www.tamilpaper.net

அருமையான மெய்யான கட்டுரை.ஆங்கிலம் எனும் இடத்தில் அரபி என்று பாவித்துக்கொண்டால் எங்கள் கஷ்டம் புரியும்.அதிலும் குர்ஆன்,ஹதீஸ் எனும்போது இன்னும் கடினமான சிரத்தை தேவை.இந்நிலையில் அவசரப்படுத்துவதும் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகிறது என அவதூறு கற்பிப்பதும் எந்த வகையில் நியாயம்?

No comments:

Post a Comment