Monday, August 18, 2014

பிரபஞ்சத்தின் எல்லை தெரியுமா?

அ. முஹம்மது கான் பாகவி


நா
ம் வாழும் இந்தப் பூமி சூரியக் குடும்பத்தில் ஒரு கிரகம் அல்லது கோள் என்பது நமக்குத் தெரியும். நிலா பூமியின் துணைக் கோள். இதுவரை மனிதன் கண்டுபிடித்துள்ள சூரியக் குடும்பத்துக் கோள்களையே இன்னும் மனிதனால் முழுமையாக அறிய முடியவில்லை. செயற்கைக் கோள்கள் அனுப்பும் புகைப்படங்களிலிருந்து சில தகவல்களை மனிதனால் ஊகிக்க முடிந்திருக்கிறதே தவிர, அறுதியிட்டுச் சொல்ல ஒன்றும் இல்லை.

கோள்களின் எண்ணிக்கை, அவற்றில் உயிரினம் வாழ்வதற்கு வேண்டிய வசதிகள் குறித்த தகவல்கள் போன்ற சிறுசிறு விஷயங்களே. தெளிவற்ற அனுமானங்களாகவும் விஞ்ஞானிகளின் கருத்துவேறுபாட்டிற்கு இலக்கானவையாகவும்தான் இன்றுவரை நீடிக்கின்றன. பில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவழித்த பிறகுதான் இந்தச் சின்னச் சின்ன விஷயங்கள்கூட மனிதனுக்குத் தெரியவந்துள்ளன.

சூரியக் குடும்பத்தைத் தாண்டி நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அவை சூரியக் குடும்பக் கோள்களைக் காட்டிலும் பன்மடங்குப் பெரியவை என்றும் சொல்கிறார்கள். இந்த நட்சத்திரங்களில் உயிரினம் ஏதேனும் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியிலும் மனிதன் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றானாம்!

மனிதன் வசிக்கும் பூமிக்கும் பக்கத்திலுள்ள விண்மீன்களுக்கும் இடையிலேயே பல ஒளியாண்டுகள் தொலைவு இருக்கிறது. ஓர் ஒளியாண்டு என்பது, சுமார் 94.6 இலட்சம் கோடி கி.மீ. ஆகும். (அதாவது ஓராண்டில் ஒளி கடக்கும் தூரம்.) அந்த நட்சத்திரங்களில் ஒன்றில் இருந்து ஒரு சமிக்ஞை நம்மை வந்தடைய 4 ஆண்டுகளாகுமாம்! பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் கிரகங்களில் ஏறத்தாழ 1800 மட்டுமே கருவிகளின் உதவியால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வேற்றுக் கிரகங்களிலிருந்து உயிரினங்களின் குரலோ ஒளி அடையாளமோ வேறு எந்தச் சமிக்ஞையோ வருகிறதா என நவீனக் கருவிகள்மூலம் மனிதன் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றான். ஆனால், சிறு முனகல்கூட எங்கிருந்தும் இதுவரை கேட்கவில்லை.

பிரபஞ்சம் என்பது அவ்வளவுதானா?

ஆக, சூரியன், சூரியனை மையமாகக் கொண்டு சுழலும் பூமி உள்ளிட்ட கோள்கள், அக்கோள்களுக்கான நிலா போன்ற துணைக்கோள்கள், சிறு நட்சத்திரக் கூட்டம், சூரியக் குடும்பத்தைத் தாண்டி இருக்கும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் ஆகியன வரைதான் மனித அறிவு எட்டியுள்ளது; அதுவும் அரைகுறையாக!

அப்படியானால், இவைதான் பிரபஞ்சமா? பிரபஞ்சத்தின் எல்லை இத்துடன் முடிந்துவிட்டதா? இவற்றுக்கு அப்பால் ஒன்றுமே கிடையாதா? கிடையாது என மனித ஆராய்ச்சியில் தீர்மானமாகத் தெரிந்துவிட்டதா? விடை தெரியாத வினாக்கள் இவை.

உண்மையில், பிரபஞ்சம் அல்லது பேரண்டம் (Universe) என்பது, நட்சத்திரங்கள் (Stars). கோள்கள் அல்லது கிரகங்கள் (Planets), துணைக்கோள்கள் (கிரகத்தைச் சுற்றும் சிறிய கோள்கள்) (Natural Satelites) முதலிய அனைத்தையும் உள்ளடக்கிய எல்லை காண முடியாத பரந்து விரிந்திருக்கும் பெருவெளி ஆகும்.

அணுக்களும் அணுத்துகள்களும் அவற்றால் அமைந்திருக்கும் எல்லாப் பொருட்களும் பிரபஞ்சத்தின் பகுதிகளாகும். நிறை விசை (Strong Force), அலை குன்றிய விசை (Weak Force), மின்காந்த விசை (Electromagnetic Force), ஈர்ப்பு விசை (Gravitation) ஆகிய நான்கு அடிப்படை விசைகளுக்குள் அடங்கியதே பிரபஞ்சம்.

ஒரு பொருளின் நிலையைத் தொடர்ந்திருக்கச் செய்யவோ, மாற்றவோ, உருவேறுபடுத்தவோ செய்யும் செயலுக்கே ‘விசை’ (Force) எனப்படுகிறது. ஒரு நியூட்டன் அளவுள்ள விசையானது, ஒரு கி.கி. எடையுள்ள பொருளில் ஒரு மீட்டர்/1 வினாடி/வினாடி முடுக்கத்தை உண்டாக்கும்.

இந்நிலையில், நம் அறிவுக்கு எட்டியுள்ள பிரபஞ்சத்தின் பகுதிகளுக்கு அப்பால் அணுக்களோ அணுக்களால் அமைந்திருக்கும் பொருட்களோ நான்கு அடிப்படை விசைகளுக்குக் கட்டுப்பட்டவையோ இல்லை என்ற முடிவுக்கு மனிதனால் வர முடியுமா? இல்லை என்பதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா?

இறைமறையில் பிரபஞ்சம்


உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது குறித்து ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்:

(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு தண்ணீரைப் படைத்தான். அடுத்து தன் அரியணையை –அர்ஷை படைத்தான்.) அவனது அரியணை தண்ணீரின் மேல் இருந்தது. பிறகு (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ எனும் பாதுகாப்புப் பலகையைப் படைத்து,) அதில் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்களையும் பூமியையும் படைத்தான். (புகாரீ)

திருக்குர்ஆன் கூறுகிறது: உங்கள் இறைவன் அல்லாஹ் ஆவான். அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அரியணைமீது அவன் நிலை கொண்டான். அவன் இரவால் பகலை மூடுகிறான். பகல் இரவை வேகமாகப் பின்தொடர்கிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் அவனே படைத்தான். அவை அவனது கட்டளைக்குப் பணிந்துள்ளன. (7:54)

அத்துடன் ஏழு வானங்களைப் படைத்ததாகப் பல இடங்களில் அல்லாஹ் அறிவிக்கின்றான். (2:29; 17:44; 23:17; 23:86; 41:12)

ஓரிடத்தில், ‘‘ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்தான் என்பதை நீங்கள் காணவில்லையா? அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான்; சூரியனை விளக்காக அமைத்தான்” (71:15,16) என்று கூறுகிறது குர்ஆன்.

இது மட்டுமன்றி, நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்வெளிப் பயணம் ஆதாரபூர்வமான நபிமொழித் தொகுப்புகளில் பதிவாகியுள்ளது. அப்பயணத்தின் சுருக்கம் இதோ: மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸ் (ஜெருசலேம்); அங்கிருந்து ‘புராக்’ வாகனத்தில் விண்வெளி. அங்கு ஏழு வானங்களில் இறைத்தூதர்களுடன் சந்திப்பு. அடுத்து ‘அல்பைத்துல் மஅமூர்’ எனும் இறையில்லம் (விண்ணுலக கஅபா). ஒவ்வொரு நாளும் அங்கு 70 ஆயிரம் வானவர்கள் உள்ளே நுழைகிறார்கள்; இறையை வழிபடுகிறார்கள்.

அதையடுத்து வான் எல்லையான ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் இடம். அங்குதான் அல்லாஹ் தன் இறுதித் தூதருக்கு ஐங்காலத் தொழுகையின் கடமையை அறிவித்தான். அதையடுத்து சொர்க்கம் மற்றும் நரகம்.

ஏழு வானங்கள் எவை?

திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் குறிப்பிடப்படும் இந்த ‘ஏழு வானங்கள்’ என்பது எதைக் குறிக்கிறது என்பதற்குத் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. நம் கண்களுக்குத் தென்படும் வானம் ஒரு வெட்ட வெளியாகும். மேகம், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் தெரியும் கருநீல வெளியே ‘வானம்’ (Sky) எனப்படுகிறது. இது ஒரு சடப் பொருள் அல்ல. ‘ஏழு’ என்ற எண்ணிக்கையும் இதற்குப் பொருந்தாது.

அரபி மொழியில் ‘வானம்’ என்பதை ‘சமாஉ’ என்பர். இதற்கு ‘மேலே உள்ளது’ என்ற பொருளும் உண்டு. எனவே, நமக்கு மேலே –அல்லது நம்மைச் சுற்றியுள்ள- பொருளுக்கும் ‘சமாஉ’ எனலாம் இந்த அடிப்படையில், ஏழு வானங்கள் என்பது ஏழு கோள்களான புதன், வெள்ளி, பூமி, சந்திரன், செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றைக் குறிக்கும் என்றும் சூரியன் தனியானது என்றும் சிலர் விளக்கம் அளிப்பதுண்டு. அப்படியானால், சூரியக் குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய மூன்று கோள்களைச் சேர்க்கும்போது வானங்களின் எண்ணிக்கை பத்து ஆகுமே என்ற கேள்வி எழும்.

அது மட்டுமன்றி, சந்திரன் பூமியின் துணைக்கோளே தவிர தனிக்கோள் அல்ல. இக்கோள்களில் உயிரினம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதும் உறுதி செய்ப்படவில்லை. நபிமொழியில் குறிப்பிடப்படுகின்ற ‘அல்பைத்துல் மஅமூர்’ எனும் இறையில்லம், வான் எல்லையான ‘சித்ரத்துல் முன்தஹா’ ஆகிய பகுதிகள் இக்கோள்களில்தான் உள்ளனவா என்பதற்கும் விடை கிடையாது. அப்புறம் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய கேள்வியும் எழும்.

இதனால், ஏன் இப்படி இருக்கக் கூடாது என்பது அறிஞர்கள் சிலரது கருத்தாகும்! அதாவது மார்க்கம் சொல்கின்ற ஏழு வானங்கள், அவற்றுக்கப்பால் உள்ள இடங்கள் ஆகியனவெல்லாம் இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்படாத, இந்தக் கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள பிரமாண்டமான ஏழு அடுக்குகளைக் குறிக்கும் என்று சொல்லலாம்தானே! (அல்லாஹ்வே அறிந்தவன்)

அப்படியானால், பிரபஞ்சத்தின் எல்லையை அறிய மனிதன் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதுதானே நிஜம்!

_______________________

Saturday, August 09, 2014

கருணைக் கொலையும் கொலைதானே!

- அ. முஹம்மது கான் பாகவி

‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. “இனிமேல் மருந்துகளால் குணப்படுத்திக் காப்பாற்ற முடியாது என்ற நிலைக்குச் சென்றுவிட்ட நோயாளிகளை அவர்களது விருப்பத்தின்பேரில் சட்டப்பூர்வமாகக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்பதே அந்த வழக்காகும்.


தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐவர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது. “கருணைக் கொலையும் தற்கொலைதான்; தற்கொலைக்கு முயற்சிப்பதோ தூண்டுவதோ குற்றமாகும்” என்று அட்டர்னி ஜெனரல் வாதிட்டர்.

எனினும், கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாமா என்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருணைக் கொலை?

அருணா செண்பகம் கோமா நிலையில்...
1973 நவம்பர் 27ஆம் தேதி மும்பை மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றிவந்த அருணா செண்பகம், மருத்துவமனை ஊழியரால் பலாத்காரம் செய்யப்பட்டு, சங்கிலியால் கழுத்து நெரிக்கப்பட்டு கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். 37 ஆண்டுகளாக ‘கோமா’ நிலையில் படுத்த படுக்கையாகக் கிடந்த அவரைக் கருணைக் கொலை செய்ய சட்ட அனுமதி கோரிய மனுவை, 2011ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அப்போதிருந்தே கருணைக் கொலை தொடர்பான விவாதம் இந்தியாவில் சூடு பிடித்துவிட்டது. இனிமேல் குணப்படுத்த முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்டுவிட்ட நோயாளி வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் தானும் வேதனையில் உழன்று, மற்றவர்களுக்கும் பாரமாக இருக்க வேண்டுமா? அவர்மீது கருணை காட்டி, சாத்வீகமான முறையில் கொன்றுவிட்டால் என்ன?

அதாவது உணவையும் மருந்தையும் நிறுத்திவிடலாம்; அல்லது நோயாளி மூச்சுவிட உதவும் கருவிகளை அகற்றிவிடலாம்; அல்லது டயாலிசிஸ் செய்தாக வேண்டிய நோயாளிக்கு அதைச் செய்யாமல் இருந்துவிடலாம். இதையெல்லாம் அவரது விருப்பத்தின்பேரில், அல்லது விருப்பம் தெரிவிக்க அவரால் இயலாதபோது காப்பாளர்களின் வேண்டுகோளின்பேரில் செய்துவிட்டால், நோயாளி தானாகவே மெல்ல உயிரிழந்துவிடுவார். இதுதான் ‘கருணைக் கொலை’ (Euthanasia) எனப்படுகிறது.

1980களில்தான் கருணைக் கொலை உலகின் கவனத்தை ஈர்த்தது. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுவதுண்டு. ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம், நெதர்லாந்தில் பரவிவரும் கருணைக் கொலை, எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு மருந்து இல்லாமை, செல்வாக்குமிக்க மன்றங்களும் அமைப்புகளும் அரசுகளுக்குக் கொடுத்துவரும் நெருக்கடி ஆகியவை அவற்றில் அடங்கும்.

மேற்கின் அடிச்சுவட்டில்

வழக்கம்போல், மேற்கு உலகமே கருணைக் கொலைக்கும் வழிகாட்டி. பழங்காலத்து கிரேக்க தத்துவ ஞானிகள் விதைத்துவிட்டுப்போன சிந்தனைதான் இக்கொலைக்குக் காரணம் என்று சொன்னால், அது தவறாகாது.

பிளாட்டோ தமது ‘ஜனநாயகம்’ எனும் நூலில் எழுதுகிறார்: உடலும் அறிவும் நலமாக இருக்கும் குடிமக்களுக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை தர வேண்டும்; உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை, அப்படியே சாக விட்டுவிட வேண்டும்.

சாக்ரடீஸ் கௌரவ மரணத்தையே தேர்ந்தெடுத்தார். சிறையிலிருந்து தப்பிக்க அவருடைய மாணவர்கள் செய்த ஏற்பாட்டை ஏற்க மறுத்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். எஸ்கிமோ போன்ற பழங்குடி இனத்தாரிடையே –தண்டனையை அனுபவிக்காமல் கௌரவமாக இறந்துபோகும்- இப்பழக்கம் இன்றும் தொடர்கிறதாம்!

13ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய தத்துவ ஞானியும் பாதிரியுமான ஃபிரான்க் பக்கோன் கருணைக் கொலை முறையை ஆதரித்த முதல் அறிஞர் (?) ஆவார். ஆங்கிலேய சிந்தனையாளர் தாமஸ் மூர், ஜெர்மனி தத்துவ அறிஞர் நீட்ஷா போன்றோரும் இக்கொலையை ஆதரித்து எழுதினர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கங்களில் ஜெர்மனியில் கருணைக் கொலையை வலியுறுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டது. 1939இல் ஹிட்லர் வெளியிட்ட அரசாணை இதை உறுதிசெய்தது. மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல் ஊனமுற்றோர், தள்ளாமையில் சிரமப்படும் முதியோர் ஆகியோரைக் கொன்றுவிட அந்தச் சட்டம் அனுமதித்தது. இத்தாலியிலும் அந்தச் சிந்தனை பரவியது.

முதல்முதலாக ரஷியாதான், கருணைக் கொலைக்குத் தண்டனை இல்லை என்று அறிவித்தது. இது 1922இல் நடந்தது. விளைவு பாதகமாக இருந்ததால் சில மாதங்களிலேயே சட்டத்தைத் திரும்பப்பெற்றது. அமெரிக்காவில் ஒஹாயு மாநிலத்தில் 1906ஆம் ஆண்டு கருணைக் கொலைக்கு ஆதரவான சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையின் எதிர்ப்பால் அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும், 1930இல் கருணைக் கொலைக்கு ஆதரவாக அமெரிக்க மன்றம் ஒன்று தொடங்கப்பட்டது. அதற்குமுன் 1823ஆம் ஆண்டிலேயே இது தொடர்பான முதலாவது வழக்கு அமெரிக்க நீதிமன்றத்திற்கு வந்தது. அதில் குற்றவாளி தன் மூன்று குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார். அவர்கள் நேரடியாகச் சொர்க்கம் செல்வார்கள் என்று காரணம் கூறினார். 1920இல் அமெரிக்கர் ஒருவர், நோயாளி மனைவி கேட்டுக்கொண்டதன்பேரில் விஷம் கொடுத்து மனைவியைக் கொன்றார்.

ஆக, அமெரிக்காவிலும் ஜரோப்பாவிலும் கிறித்தவப் பேராயர்கள், சிந்தனையாளர்கள், மருத்துவர்கள், முற்போக்கு (?) எழுத்தாளர்கள் எனப் பலரும் கருணைக் கொலைக்கு ஆதரவாகத் தீவிரமாகக் குரல் கொடுத்துவருகின்றனர். அமெரிக்காவில் 80 விழுக்காடு மருத்துவர்கள், குணப்படுத்த இயலாத நோயாளிகளை அவர்களுக்கோ குடும்பத்தாருக்கோ தெரியாமலேயே கருணைக் கொலை செய்துவிடுவதாக ஒரு கருத்துக் கணிப்பில் (1960) தெரிவித்திருந்தனர்.

சில புள்ளிவிவரங்கள்

  • பிரிட்டனில் ஓராண்டில் 18 ஆயிரத்திற்கும் குறைவில்லாத கருணைக் கொலைகள் நடக்கின்றனவாம்!
  • நெதர்லாந்தில் ஆண்டிற்கு 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம்வரை கருணைக் கொலைகள் நடக்கின்றன!
  • பெல்ஜியத்தில் ஆண்டொன்றுக்கு 203 கருணைக் கொலைகளும் சுவிட்சர்லாந்தில் (1800 அழைப்புகள் வந்தாலும்) 300 கருணைக் கொலைகளும் நடக்கின்றன.
  • மேற்கைப் பார்த்து முஸ்லிம் நாடுகளிலும் இக்கொடுமை நடப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. எகிப்தில் இஸ்கந்தரிய்யா பல்கலைக் கழக மருத்துவமனையில் ஒரேயொரு செவிலி மட்டுமே 13 கருணைக் கொலைகளை ஒரு கட்டத்தில் செய்துள்ளார்.
  • துனூசியாவில் 18 வயது இளம்பெண், நான்கு வயதே ஆன தம்பியைக் கருணைக் கொலை செய்தார். அப்பெண்ணுக்குத் தண்டனை தீர்ப்பானபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கருணைக் கொலை ஏன்?

நோயாளியைக் குணப்படுத்தி வாழவைக்க முடியும் என்ற நம்பிக்கை அடியோடு இல்லை. இயற்கையான மரணமும் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இல்லை. வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் ஒருவர் ஆண்டுக் கணக்கில் உயிருள்ள சடமாகக் கிடந்து தானும் அவதியுற்று, சுற்றியிருப்போரையும் விரக்தியும் வெறுப்பும் அடையச்செய்துகொண்டு எத்தனை நாட்கள்தான் இருப்பது?

அவரது சம்மதத்தைப் பெற்று, சாத்வீகமான முறையில் அவரைச் சாக விட்டுவிட்டால், எல்லாருக்கும் நிம்மதியல்லவா? பணம் மிச்சம்; நேரம் மிச்சம்; மனித ஆற்றல் மிச்சம்! இனி அவர் உயிருடன் மட்டும் இருந்துதான் யாருக்கு என்ன லாபம்?

இந்தக் கருணைக் கொலைக்குச் சட்ட அனுமதி கொடுத்தால் என்ன? என்பதே மேற்கைப் பின்பற்றும் கிழக்கின் ஆதங்கம்! இதில் ஆன்மிகம், தார்மிகம், சமயம், பண்பாடு, கலாசாரம் என்றெல்லாம் கவனிக்கவோ பாவம்-புண்ணியம் பார்க்கவோ இடமில்லை என்பது இந்த இடதுசாரிகளின் வாதமாகும். இதுதான் முற்போக்கு; இதை மறுப்பது பழமைவாதம் என்றும் இவர்கள் விமர்சிக்கத் தயங்குவதில்லை.

உண்மை என்ன?

  1. கொலை என்பதே கொடுமையானது; இதில் கருணைக்கு எங்கே இடம் உண்டு?
  2. நோயாளியே விரும்புகிறாரே என்று வாதிடலாம். தற்கொலை செய்பவனும் விரும்பித்தானே மரணத்தை வலிந்து தேடிக்கொள்கிறான்! தற்கொலைக்கும் சட்ட அனுமதி வழங்கலாமா?
  3. உறவினர் விரும்பிக் கேட்டுக்கொண்டாலும் மருத்துவர்கள் பரிந்துரை செய்தாலும் கொலை கொலைதானே!
  4. மரண தண்டனையே கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தும் முற்போக்குவாதிகள் கருணைக் கொலையில் மட்டும் கருணையில்லாமல் நடந்துகொள்ளலாமா?
  5. கருணைக் கொலைக்குச் சட்ட அனுமதி கிடைத்துவிட்டால், சொத்துக்காகவும் சுயநலத்திற்காகவும் உறவினர்களே கொலை செய்துவிட்டு, கருணைக் கொலைதான் என்று சட்டத்தை நம்பவைக்க எவ்வளவு நேரமாகும்? இதற்கு மருத்துவர்கள் துணைபோகமாட்டார்கள் என்று உங்களால் அடித்துச்சொல்ல முடியுமா?
  6. பெற்றோரையே விஷ ஊசிபோட்டு கருணைக் கொலை செய்யும் பிள்ளைகளைத்தான் இந்தச் சட்ட அனுமதி உருவாக்கும்! இல்லையா?
  7. எல்லாவற்றையும்விட, அன்பு, பாசம், உறவு, நட்பு, மனிதநேயம் ஆகிய உயர் பண்புகள் ஏற்கெனவே நலிந்து மெலிந்து காணப்படுகின்றன. ஒரேயடியாக அவற்றையும் கருணைக் கொலை செய்யவே சட்ட அனுமதி உதவும்!

இஸ்லாம் சொல்வதென்ன?

1. அடிப்படையில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதனின் உயிர் அவனுக்குச் சொந்தமல்ல; அவனைப் படைத்த இறைவனுக்குச் சொந்தமானது. படைத்தவனே ஆணையிடுகிறான்:

உங்கள் உயிரை நீங்களே மாய்த்துக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள்மீது கருணையுள்ளவனாக இருக்கின்றான். (4:29)

2. உயிர்வாழ்வது சிரமம் என்பதற்காக யாரும் சாகத் துணியக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரும் தமக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்பி வரவேற்க வேண்டாம்! (புகாரீ)

3. அறியாமைக் கால மக்கள் சிலர் வறுமை, அவமானம், அடிமைத்தளை ஆகியவற்றை அஞ்சி சிசுக்களை கொலை செய்துவந்தார்கள். இந்தக் கொடுஞ்செயலுக்கு குர்ஆன் தடை விதித்தது.

இல்லாமையை அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவாதாரம் அளிக்கிறோம். (17:31)

ஆக, காரணம் எதுவாக இருந்தாலும் உயிரை அழித்துக்கொள்ள மனிதனுக்கு உரிமையோ அதிகாரமோ கிடையாது என்பதே இஸ்லாத்தின் நிலையாகும்.

மார்க்கத் தீர்ப்பு

1. அனுமதிக்கப்பட்ட உயிரிழப்பு (கொலை) என்பது சத்தியத்திற்காக உயிர்நீப்பது மட்டுமே. உயிர், பொருள், மானம், மார்க்கம் ஆகியவற்றைக் காப்பதற்காக உயிரை இழப்பது, இறைவழியில் அறப்போரில் உயிரை இழப்பது ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று காரணங்களில் ஒன்று இருந்தால் மட்டுமே ஒரு முஸ்லிமின் உயிரைப் பறிப்பதற்கு அனுமதியுண்டு. 1. திருமணமானவர் விபசாரம் செய்தல். 2. அநியாயமாக ஒருவரைக் கொலை செய்தல். 3. மதம் மாறி, சமூகக் கட்டமைப்பைப் பிரிந்து செல்லல். (புகாரீ, முஸ்லிம்)

ஒரு நோயாளி –எந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்த நோயின் நிலை எப்படியிருந்தாலும்- குணமடைவார் என்ற நம்பிக்கை இல்லை என்பதற்காகவோ அடுத்தவருக்கு அவரது நோய் பரவுவதைத் தடுக்க முடியாது என்பதற்காகவோ அவரைக் கொலை செய்வது கூடாது. இறப்பு அல்லாஹ்வின் கையில் உள்ளது. நோயாளியைக் குணப்படுத்தும் ஆற்றல் அவனுக்கு உண்டு.

இந்நிலையில், குணப்படுத்தும் நம்பிக்கை இல்லாத கட்டத்தில்கூட நோயாளி தற்கொலை செய்துகொள்வதோ அவர் அனுமதியின் பேரில் மற்றவர் அவரைக் கொல்வதோ இரண்டுமே ‘ஹராம்’ ஆகும். முந்தியது தற்கொலை என்றால், பிந்தியது படுகொலை ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்: முற்காலத்தில் ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு ஒரு காயம். வலி தாங்காமல் துடித்தார். எனவே, ஒரு கத்தியை எடுத்துக் கையை கீறிக்கொண்டார். குருதி கொட்டத் தொடங்கியது. இறுதியாக, அவர் இறந்துபோனார். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் தன் உயிர் விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டான். அவனுக்குச் சொர்க்கத்தை நான் தடை செய்துவிட்டேன். (புகாரீ, முஸ்லிம்)

ஆக, குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அற்றுப்போன நோயாளியைக் கொலை செய்வது மார்க்கச் சட்டப்படி ‘ஹராம்’ ஆகும். நோயாளியே அனுமதித்தால் அது தற்கொலையில் சேரும்; அவரது அனுமதியின்றி நடந்தால் அது படுகொலையாகும். உயிர் என்பது இறைவனின் உடைமை; அதை அவன் அனுமதித்த வகையில் மட்டுமே இழக்கலாம். (‘அல்அஸ்ஹர்’ மார்க்கத் தீர்ப்பு)

2. சாத்வீக முறையில் கருணைக் கொலை செய்வது மார்க்கச் சட்டப்படி ‘ஹராம்’ ஆகும். எந்த வழியிலும் நோயாளியைச் சாகவிடுவது உறுதியாகத் தடை செய்யப்பட்டதாகும். அதைச் செய்யத் துணிந்தவர் திட்டமிட்டுக் கொலை செய்த குற்றவாளி ஆவார். மனித உயிரைக் கொல்வது ஹராம் என்று குர்ஆனும் ஹதீஸும் உறுதிப்பட தெரிவிக்கின்றன. (‘குவைத்’’ மார்க்கத் தீர்ப்பு)

Friday, July 18, 2014

எறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி

அ. முஹம்மது கான் பாகவி

இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் (கி.மு. 1032 - கி.மு. 975) ஓர் பேரரசர். ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆண்ட நால்வரில் ஒருவர். பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர்.

சுலைமான் (அலை) அவர்களின் படையில் மனிதர்கள் மட்டுமன்றி ஜின்கள், பறவைகள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. அதனால் பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றின் மொழிகளும் அன்னாருக்குத் தெரியும். காற்று அவர்களுக்குப் பணிவிடை செய்தது. தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்; நேர்மையாளர்.

ஒருமுறை அவர்களின் பிரமாண்டமான படைகளின் அணிவகுப்பு நடந்தது. ஜின்கள், மனிதர்கள், பறவைகள் புடைசூழ பவணி வந்தார்கள். வழியில் ஒரு பள்ளத்தாக்கைக் கடக்க வேண்டியிருந்தது. அதில் எறும்புகள் கூட்டமாக வாழ்ந்த ஓடை ஒன்றும் இருந்தது.

அப்போது ஓர் எறும்பு பேசியதை நபி சுலைமான் (அலை) அவர்கள் கேட்டு முறுவலித்தார்கள். இதைத் திருக்குர்ஆன் இப்படிச் சொல்லும்.

அவர்கள் எறும்புகளின் ஓடைக்கருகே (வாதிந் நம்ல்) வந்தபோது ஓர் எறும்பு, “எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் (மஸாகின்) நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவருடைய படையினரும் உங்களை மிதித்துவிட வேண்டாம்” என்று கூறியது. அது கூறியதைக் கேட்டு சுலைமான் புன்னகைத்துச் சிரித்தார். (27:18,19)

இங்கு ‘எறும்பு ஓடை’ என்பதைக் குறிக்க ‘வாதிந் நம்ல்’ எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது. நம்லத்-எறும்பு; நம்ல்-எறும்புகள். ‘வாதீ’ என்பதற்கு பள்ளத்தாக்கு (Conyon), கணவாய் (Ravine), மலை இடுக்கு (Gully), இடுக்கு வழி (Gorge), ஓடை (Rivulet) ஆகிய பொருள்கள் உள்ளன.

இந்தச் சொல்லாக்கத்தைப் பார்த்து கீழை அறிஞர்கள் சிலர் நகைத்ததுண்டு. ஏனெனில், புற்றுகளில் எறும்பு இருக்கும்; மண் தரையில் வழியமைத்து சிறிய அளவில் வீடுகளை அமைத்து வாழும். எறும்புகளுக்குப் பெரிய அளவில் ஓடையோ சுரங்கமோ எங்கே உள்ளது என்று அவர்கள் குர்ஆன்மீது வினா தொடுத்தார்கள்; அதன் நேர்மையில் கல் எறிந்தார்கள்.

இதைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ நம்மில் சிலரும் ‘வாதிந் நம்ல்’ என்பதற்கு ‘எறும்புப் புற்று’ என்றே பொருள் செய்துவருகிறோம். உண்மையில் புற்றைக் குறிக்க இவ்வசனத்தில் வேறொரு சொல் (மஸாகின் - குடியிருப்புகள்) ஆளப்பெற்றிருப்பது கவனத்திற்குரியது.

ஆக, எறும்புக்கு ஓடையோ சுரங்கமோ இல்லை என்றே உலகம் கருதிவந்த நிலையில் அண்மையில் அப்படி ஒன்று உண்டு என்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதுதான் வியப்பு.

பிரேசிலில் அகழ்வாராய்ச்சி

பிரேசில் நாட்டில் அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பூமிக்கடியில் எறும்புகளின் ஒரு நகரமே கண்டுபிடிக்கப்பட்டது. அதில் எறும்புகளுக்கான சாலைகள், தோட்டங்கள் என எல்லாம் உள்ளன. சீனாவின் பெருஞ்சுவரைப் போல மிகப்பெரும் அற்புதமாக இது காட்சியளிக்கிறது. பல மில்லியன் எறும்புகள் சேர்ந்து இச்சாதனையைப் புரிந்துள்ளன.

அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள்

இந்த எறும்பு நகரத்தில், பொதுச்சாலைகள், கிளை நடைபாதைகள், பூங்காக்கள் உள்பட ஒரு நகரத்திற்கு வேண்டிய எல்லா கட்டமைப்புகளும் உள்ளன. இதுதான் உலகிலேயே எறும்புகளின் பெரும்கூட்டம் வசிக்கும் இடமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.


கண்டுபிடிக்கப்பட்ட எறும்புப் புற்று

கொட்டப்படும் வெள்ளை சிமிண்ட்  


காற்று வாங்குவதற்காகக் கால்வாய் போன்று எறும்புகள் தயாரித்துள்ள இடைவெளிகளில் 10 டன் வெள்ளை சிமிண்டை முதலில் நிபுணர்கள் கொட்டினார்கள். இதனால் அக்கால்வாய்கள் வலுவாகவும் உறுதியாகவும் மாறக்கூடும். பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே 8 மீட்டர் ஆழத்தில் 46.5 ச.மீட்டர் பரப்பை நிரப்புவதற்காக சிமிண்ட் கொட்டும் பணிக்கே 10 நாட்கள் பிடித்தது.

ஒரு மாதத்திற்குப்பின், பேராசிரியர் லூயிஸ் ஃபோர்ஜி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு பூமியை அகழும் பணியைத் தொடங்கியது. அப்போதுதான் எறும்புகளின் இந்தப் பிரமாண்டமான நகரத்தைக் கண்டுபிடித்து, சீனப் பெருஞ்சுவர் போன்ற உலக அற்புதம் இது என்று வர்ணித்தனர்.

எறும்பின் ஆற்றல்

கட்டமைப்புகளை உருவாக்குவதில் வியத்தகு ஆற்றல் பெற்றது எறும்புக் கூட்டம். ஒவ்வோர் எறும்புக்கும், தன் எடையைப்போல் 50 மடங்கு எடையைச் சுமக்கும் ஆற்றல் உண்டு. அதைத் தூக்கிக்கொண்டு பல பத்து கி.மீ. தூரம் நடக்கவும் அதற்கு முடியும். இதைத் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்பச் செய்யும் திறன் படைத்தது.

இந்த அடிப்படையில்தான், இந்தச் சுரங்கத்தைக் கட்ட சுமார் 40 டன் மண்ணை ஒரு பெரிய எறும்புக் கூட்டம் தோண்டி எடுத்துள்ளது. இதன்மூலம் எறும்புகள் புதிய காற்றைச் சுவாசிக்கவும் சுருக்க வழியில் பயணிக்கவும் வழி பிறந்தது.

இந்த எறும்பு நகரத்தில், அறைகளை இணைக்கும் முதன்மைச் சாலைகள் உண்டு. புற்றுகளுக்குச் செல்லும் குறுக்குச் சாலைகளும் உண்டு. அங்கு சிறு தானியங்களையும் சேமித்த உணவுகளையும் எறும்புகள் பாதுகாக்கின்றன. அவ்வாறே, எறும்புகள் கொண்டுவந்து சேர்த்த பச்சைப் புற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களும் உண்டு. இவை எறும்புகளின் முட்டைப் புழுக்களை (Larva) காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

எறும்பு நகரம் அல்லது சுரங்கம்

குடியிருப்பு அறைகள்


இப்போது சொல்லுங்கள்! அந்த வசனத்தில் எறும்பு ஓடை, அல்லது பள்ளத்தாக்கு (வாதிந் நம்ல்) என்று அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு பொருத்தம்! எவ்வளவு பெரிய ஆராய்ச்சி! எத்துணை பெரும் உண்மை! சுப்ஹானல்லாஹு!
----------------------------------

Tuesday, June 17, 2014

சர்வதேசப் பார்வை (செய்திச் சுருள் - ஜூன், 2014)


அன்று துருக்கியில் நடந்தது இன்று..?
மு

ஸ்தபா கமால் அதாதூர்க் (கி.பி. 1881-1938) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் ‘டோன்மி’ (Donme) யூதர்களில் ஒருவர். ‘டோன்மி’ என்பது, 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தற்போதைய கிரீஸ் பகுதியில் நிறுவப்பட்ட யூத-இஸ்லாமிய சமயப் பிரிவு. (துருக்கி மொழிச் சொல்லான ‘டோன்மி’ என்பதற்கு ‘மதமாறியவர்’ என்று பொருள்.)

முஸ்தபா கமால்
அதாதுர்க்
ஷா பெட்டாய் ட்ஸெவி என்பவரால் உருவாக்கப்பட்ட இம்மதத்தைச் சேர்ந்தவர்கள், ட்ஸெவியை ஒரு மீட்பாளர் என்றே நம்பினர். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவர்கள் துருக்கி நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர். யூதர்களாக இருந்து, ஆட்சியதிகாரத்திற்காக முஸ்லிம்களாக மாறிய இவர்கள், அந்தரங்கத்தில் யூத மதக் கோட்பாடுகளையே பின்பற்றிவந்த ‘முனாஃபிக்’கள் என வர்ணிக்கப்படுகின்றனர்.

உஸ்மானிய கிலாஃபத்தை வீழ்த்துவதில் இவர்களின் பங்கே முதன்மையானது. ‘ஐக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்கான ஜமாஅத்’ எனும் அமைப்பை உருவாக்கி, கிலாஃபத்திற்கு எதிராகப் புரட்சி செய்தனர். இந்த யூதர்களில் ஒருவரே முஸ்தபா கமால் அதாதூர்க். (அதாதூர்க்: துருக்கியரின் தந்தை. அ(த்)தா – தந்தை)

துருக்கியின் இராணுவ ஜெனரலாக இருந்து, தேசியக் கட்சியின் தலைவராக ஆன அதாதூர்க், 1923ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபரானார். இவர் தன் ஆட்சியில் இஸ்லாத்திற்கெதிராகச் செய்த கொடுமைகளின் பட்டியலைக் கீழே தருகிறோம். நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்! இவர் குடிகாரர். எல்லா அநாசாரங்களையும் செய்துவந்ததுடன், துருக்கியரிடையே அந்த அசிங்கங்களைப் பரப்பவும் செய்தார்; ஊக்குவித்தார். இறுதியாக, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு 1938இல் இவர் மடிந்தார்.

  1. இஸ்லாமிய கிலாஃபத் ஆட்சிமுறையை அகற்றிவிட்டு, மார்க்கம் வேறு; ஆட்சி வேறு என்று பிரித்தது.

  2. அரபி லிபியில் எழுதப்பட்டுவந்த துருக்கி மொழியை, 1928இல் லத்தீன் லிபிக்கு மாற்றியது.

  3. அரபி மொழிப் பள்ளிக்கூடங்களை மூடியது. அதனால், திருக்குர்ஆனைக் கற்பதே கேள்விக் குறியானது; துருக்கியரின் பாரம்பரிய இஸ்லாமியத் தொடர்பு அறுந்துபோனது.

  4. இஸ்லாமிய ஷரீஆ, சட்டத்துறையிலிருந்து அகற்றப்பட்டது. ஷரீஆ நீதிமன்றங்களும் வக்ஃப் அமைச்சகமும் நிறுத்தப்பட்டன.

  5. ஐரோப்பிய சட்டங்கள் துருக்கியில் இறக்குமதி செய்யப்பட்டன. சுவிட்சர்லாந்தின் குடியுரிமை (சிவில்) சட்டமும் இத்தாலியின் குற்றவியல் (கிரிமினல்) சட்டமும் ஜெர்மனியின் வணிகச் சட்டமும் துருக்கியில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

  6. கணிசமான பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டன. ‘அயா சூஃபியா’ என்ற பிரபல பள்ளிவாசல் மியூசியமாக மாற்றப்பட்டது.

  7. பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 500 மீட்டர் சுற்றளவில் ஒரேயொரு பள்ளிவாசல் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

  8. ஹிஜ்ரீ காலண்டர் முறை அகற்றப்பட்டு, 1925 முதல் ஆங்கிலேய நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது.

  9. துருக்கி அரசியல் சாசனத்திலிருந்து ‘துருக்கி ஒரு இஸ்லாமிய நாடு’ என்ற சட்டப்பிரிவு நீக்கப்பட்டது.

  10. மார்க்கக் கல்வி போதனை செயலிழந்து போனது. இஸ்தான்பூல் பல்கலைக் கழகத்தில் இயங்கிவந்த ஷரீஅத் கல்லூரி 1933 முதல் இழுத்துமூடப்பட்டது.

  11. பர்தா முறை கைவிடப்பட்டது. பெண்கள் தாராளமாக வெளியில் சுற்ற ஊக்குவிக்கப்பட்டது. குடும்பத் தலைமை ஆண்களிடமிருந்து பறிக்கப்பட்டது.

  12. பாலஸ்தீனில் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட ‘இஸ்ரேல்’ எனும் தேள் கொடுக்குக்கு –முஸ்லிம்கள் ஆட்சிபம் தெரிவித்தும்- அங்கீகாரம் வழங்கப்பட்டது.


சிரிய அதிபர் பஷ்ஷார்
எகிப்து அதிபர் சீ.சீ.

நண்பர்களே! சிரியாவிலும் இதுதான் நடக்கிறது. பஷ்ஷார் மீண்டும் வெற்றிபெற்றதால் –அந்தத் தேர்தல் ஒரு நாடகம் என்பது வேறு விஷயம்- இன்னும் தீவிரமாக இந்த அவலங்கள் அங்கே அரங்கேறப்போகின்றன. சீசியின் ஆட்சியில் எகிப்திலும் இதுதான் நிலை!


ஜெர்மனி, ஹாலந்தில் அதிகரிக்கும் முஸ்லிம்கள்
ஜெ

ர்மனியின் தலைநகர் பெர்லினில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் பன்மடங்காகப் பெருகியுள்ளது. அதே நேரத்தில் கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. யூதர்களின் எண்ணிக்கையோ மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

ஜெர்மனியின் பெர்லின் மற்றும் பிராண்டன்போர்ஜ் மாநிலங்களின் புள்ளிவிவர மையத்தின் அறிக்கையில் இத்தகவல் காணப்படுகிறது. தேஜஸ் நாளிதழில் வெளியான இந்த அறிக்கையில் காணப்படுவதாவது:

பெல்லினில் 1992இல் கத்தோலிக்க கிறித்தவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்தது. 9.2 சதவீதம் முதல் 9.3 சதவீதம்வரை கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்த வேளையில், புராட்டெஸ்டண்டு கிறித்தவர்களின் எண்ணிக்கை 17.5 சதவீதம் முதல் 26 சதவீதம் சரிந்துவிட்டது. இது பெர்லினில் புராட்டெஸ்டண்டு பிரிவிக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடைசி சில ஆண்டுகளில் பெர்லின் நகரில், யூதர்களின் எண்ணிக்கை மறுபடியும் குறைந்து, 2011இல் சுமார் பத்தாயிரமாகச் சுருங்கிப்போயிற்று. ஆனால், பெர்லின் நகரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து வளர்ச்சியிலேயே இருந்துவருகிறது; பன்மடங்காகப் பெருகியுள்ளது. நகரில் 1,32,000 ஆக இருந்த முஸ்லிம்கள் 2,49,000 ஆக அதிகமாகியுள்ளனர்.

இன்னொரு புறம் ஹாலந்து (நெதர்லாந்து) நாட்டில் அடிக்கடி இஸ்லாம் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்ற அதே வேளையில், இஸ்லாத்தில் இணையும் ஹாந்து நாட்டினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறதாம்!

ஹாலந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இஸ்லாத்திற்கு மாறியோர் குறித்து ஆய்வு செய்த பெண் ஆய்வாளர் வெனிஷா ஃபிரோன் நாஜிம் கூறுகிறார்:

புதிதாக இஸ்லாத்தில் இணைந்த 48 பெண்களைச் சந்தித்தேன். முஸ்லிம் ஆண்களை மணமுடிப்பதற்காகவே ஹாலந்து பெண்கள் இஸ்லாத்தில் சேருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், அடிப்படையற்ற வாதமாகும் இது. நான் சந்தித்த 48 பேரில் 21 இளம்பெண்கள் திருமணமே செய்துகொள்ளாதவர்களாவர்.

ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் இஸ்லாத்தில் இணைகின்றனர். தற்போது அவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஹாலந்து மொழியில் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் வழிகாட்டிப் பெண்கள் தேவை என்று கூறும் அவர்கள், தாய்மொழியில் உரைகளைக் கேட்பதற்கும் பயிலரங்கில் கலந்துகொள்வதற்கும் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.

தங்களின் மகள்கள் இஸ்லாத்தை ஏற்று பர்தா அணிந்து செல்வதைப் பார்த்து பெற்றோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஹாலந்தில் ஹிஜாபைப் பற்றிய தவறான கண்ணோட்டமே இதற்குக் காரணம்.


பிரிட்டனில் பாங்குமேடையுடன் முதல் பள்ளி

பி
ரிட்டனின் மையப் பகுதியாக விளங்கும் நாட்டிங்ஹாம் நகரில் பாங்கு மேடையுடன் கூடிய முதலாவது பள்ளிவாசலை முஸ்லிம்கள் திறந்துள்ளனர். தொன்மையான இந்நகரில் நான்காண்டு கால முயற்சிக்குப்பின் முஸ்லிம்களின் கனவு நனவாகியிருப்பது குறித்து, பள்ளிவாசல் இமாம் அவ்ரங்ஸீப் கான் மகிழ்ச்சி தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு நகர மன்றத்தின் அனுமதியைப் பெற்ற முஸ்லிம்கள், 1.2 மில்லியன் பவுண்ட் செலவில் அடையாளத்துடன் கூடிய இப்பள்ளிவாசலை எழுப்பியுள்ளனர். 11 மீட்டர் உயரத்தில் இந்த பாங்கு மேடை கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. நாட்டிங்ஹாம் நகரில் இதுவே முதலாவது பாங்கு மேடையாகும்.

கடந்த 30 ஆண்டுகளாக வீடுகளிலேயே தொழுதுவந்த நகர முஸ்லிம்களுக்கு இது மகிழ்ச்சியான தருணம் என்பதில் சந்தேகமில்லை. பள்ளிவாசல்களின் பயன்பாட்டிற்காக 50 ஒலிபரப்புக் கருவிகள் வாங்க பிரிட்டன் காவல்துறை 5 ஆயிரம் பவுண்ட் நிதியுதவி அளித்துள்ளது. குறிப்பாக பர்மிங்ஹாம் நகரில் பாங்கு, தொழுகை, குத்பா ஆகியவை ஒலிபரப்புவதற்கு இது துணைபுரியும்.

சிறுபான்மையினரான முஸ்லிம்கள் இறையில்லங்கள் எழுப்புவதற்கு நிதியுதவி செய்வது, அடிப்படைவாதிகளான வலதுசாரிகளின் எதிர்ப்பை சம்பாதிக்கும் என்ற அச்சம் தங்களுக்கு இருப்பதை முஸ்லிம்கள் மறைக்கவில்லை.

இதற்கிடையில் ஃபிரான்ஸ் நாட்டில் மோன்ட்ரேக் நகரில் பள்ளிவாசல் ஒன்று எழுப்புவதற்காக இடம் வாங்குவதற்கு அதற்கான அமைப்பு நிதி திரட்டிவருகிறது. கடந்த 9 மாதங்களில் 1.4 மில்லியன் யூரோ திரட்டியுள்ளது.

2013ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைதளத்தில் நிதி திரட்டுவதற்கான கோரிக்கை வெளியிடப்பட்டது. தற்போது நிலம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இப்போதுள்ள பள்ளிவாசலுக்கு அருகிலேயே இந்த இடம் வாங்கப்பட்டுள்ளது. இந்தப் பழைய பள்ளிவாசல் பூட்டப்படும் என்று நகர மன்றம் எச்சரித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

பள்ளிவாசல் கட்டி முடிக்க 2 லட்சம் யூரோ செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு அருகில் செராகோஸ் பகுதியில் கிறித்தவ தேவாலயம் ஒன்றை முஸ்லிம்கள் விலைக்கு வாங்கியுள்ளனர். 1,50,000 டாலருக்கு வாங்கப்பட்ட அந்த இடம் பள்ளிவாசலாக மாற்றப்பட உள்ளது. தேவாலயத்தில் வழிபாடு செய்ய வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்!

‘வடக்கு கல்வி மையம்’ என்ற அமைப்பே இதற்கான ஏற்பாட்டினைச் செய்துவருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகி யூசுஃப் சோல் கூறுகிறார்: நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசலுக்கு, ‘மசீஹ் இப்னு மர்யம்’ பள்ளிவாசல் எனப் பெயர் சூட்டப்படும். இப்பள்ளிவாசலில் மார்க்க மற்றும் கல்வி சேவைகள் அளிக்கப்படும். ஆங்கில மொழி கற்பிக்கப்படும்.

இப்பகுதியில் வசிப்போரில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தம் இல்லங்களில் ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளிலேயே பேசுகிறார்கள். 16 விழுக்காட்டினர் அமெரிக்காவிற்கு வெளியே பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கப் பின்னணிப் பாடகர் லோன் கூறுவதைக் கேளுங்கள்:

நான் இஸ்லாத்தில் இணைந்தபின் பெண்களையும் பிரபலத்தையும் விட்டுவிட்டேன். சுகபோக வாழ்க்கையில் திளைத்திருந்த எனக்கு ஏதோ ஒன்று குறைவாகவே இருந்துவந்ததை உணர்ந்தேன். அந்த ஒன்று (மன அமைதி) எனக்கு இப்போது இஸ்லாத்தில் கிடைக்கிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். என் கரத்தால் ஏராளமான அமெரிக்கர்கள் நல்வழி பெற்று, இஸ்லாத்தில் சேர்ந்துள்ளனர்.

நான் முஸ்லிமானபின் மன அமைதியை அனுபவிக்கிறேன். என் மனைவி, இரு குழந்தைகள், 80 வயதான தந்தை, ஏராளமான என் உறவினர் ஆகிய அனைவரும் இப்போது முஸ்லிம்கள். ஒவ்வொரு நாளும் இஸ்லாத்தில் இணைவோரின் எண்ணிக்கை கூடியவண்ணம் உள்ளது.

ரஷியாவில் இஸ்லாமிய ஹாட்லைன்
இ

ஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் எவரும், அல்லது சட்ட உதவிபெற விரும்பும் எவரும் இஸ்லாமிய ஹாட்லைனை தொடர்புகொண்டால் உடனுக்குடன் வழிகாட்டப்படும். 2014 ஏப்ரல் முதல் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தத் திட்டத்தில் 3 நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். இஸ்லாமிய ஷரீஆ, சட்டம், உளவியல் துறை நிபுணர்களே இவர்கள். ரஷியா மற்றும் தாதாரியா ஆகிய மொழிகளில் வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். வேறு மொழிகளிலும் விளக்கம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இஸ்லாமியச் சட்டப்படி மது அருந்துவதைத் தடுத்து, குடியில் சிக்கியோரை மீட்டெடுக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷியாவின் இண்டர்ஃபேக்ஸ் பத்திரிக்கை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.