Thursday, June 11, 2015

நான் ஒரு மொழிபெயர்ப்பாளராக…


நா
ன் மத்ரசாக்களில் ஆசிரியராக இருந்த வரைபெரும்பாலும் எனக்கு ஒதுக்கப்பட்ட பாடங்கள் என்று பார்த்தால்அரபி இலக்கணம்இலக்கியம்தர்க்கவியல்கிரேக்கத் தத்துவம் போன்ற துறைகளாகவே இருக்கும்அதிலும் தத்துவம் மற்றும் தர்க்கவியல் பாடங்கள் புரிவதும் புரியவைப்பதும் எளிதல்லஉயிரைக் கொடுத்துகுரல் உயர்த்திவியர்க்கவிறுவிறுக்கச் சிரமப்பட்டு பாடத்தை விளக்கி முடிப்பேன்.

பத்தில் நான்கு மாணவர்களாவது விளங்கியிருப்பார்கள்ஆறு மாணவர்கள் விரக்தியின் உச்சியில் நிற்பார்கள்விரக்தி வெறுப்பாக மாறி, வகுப்பையும் வகுப்பாசிரியரையும் கடித்துக் குதறிவிடும் நிலையை அடைந்திருப்பார்கள். பாடம் புரிந்திருக்காது. அல்லது புரிந்தும் புரியாதிருக்கும். அல்லது புரிந்தாலும் இதனால் என்ன புண்ணியம் என்று யோசிக்கவைக்கும்.

நானும் படித்துக்கொடுத்து முடித்தபின், இப்பாடங்களால் இம்மைக்கோ மறுமைக்கோ என்ன பலன் என யோசிப்பேன். கிரேக்கத் தத்துவங்களைச் சொல்லிக்கொடுத்தபின், அதனால் நேர விரயமும் மூச்சு வீணானதும்தான் மிச்சம் என்று மாணவர்களுக்குச் சுட்டிக்காட்டியதுண்டு. அணுவைப் பிளக்க முடியுமா?” என்றொரு விவாதம் கிரேக்கத் தத்துவத்தில் உண்டு. முடியும் என்ற கருத்தாளர் தங்கள் வாதங்களையும் முடியாது என்போர் தம் வாதங்களையும் முன்வைத்து அடித்துக்கொள்வார்கள் பாருங்கள்பிராணன் போய்விடும்!

இயற்பியலில் அணு என்பது, வேதியியல் மாற்றத்துக்கு உட்படக்கூடிய தனிமத்தின் மிகச் சிறிய கூறு (Atom) ஆகும்அணுவைப் பிளப்பதன் மூலம் வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் குண்டுதான்பேரழிவை உண்டாக்கும் அணுகுண்டு (Atom Bomb). சொல்லப்போனால்அணுக்கரு பிளவுதான் அணுகுண்டின் அடிப்படைத் தத்துவமேஅணு பிளக்கப்பட்டுஅதனால் பேரழிவுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில்அணுவைப் பிளக்க முடியுமா என்று வாக்குவாதம் செய்துகொண்டிருப்பது எவ்வளவு நகைப்புக்குரியது!

றத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் –கிரேக்கத் தத்துவங்கள் கோலோச்சிக்கொண்டிருந்த ஒரு காலத்தில்சிலர் இஸ்லாமியக் கொள்கைகளை விமர்சித்தபோது,கிரேக்கத் தத்துவ அடிப்படையில் குறைசொல்லிக் கொண்டிருந்தார்கள்அதனால் அன்றைய சூழலில் இஸ்லாமிய நூல்கள் எழுதியவர்கள் –குறிப்பாக இறையியல் நம்பிக்கை சார்ந்த நூல்கள் எழுதிய அறிஞர்கள்கிரேக்கத் தத்துவ அடிப்படையிலேயே எதிரிகளுக்குப் பதிலடி கொடுத்துவந்தார்கள்இந்த அடிப்படையில்தான் அன்று இந்தத் தத்துவம் இஸ்லாமிய நூல்களுக்குள்ளும் புகுந்ததுஆனால்வெறும் வாதப் பிரதிவாதத்தை மட்டுமே நம்பியிருந்த கிரேக்கத் தத்துவம்என்றோ செல்வாக்கிழந்து மடிந்தும் போய்விட்டதுஇன்றைக்கு இது தேவைதானா?

இப்போதுகூடச் சிலருக்குஇதுபோன்ற இயல்களில் திறமையை வளர்த்துக்கொண்டுவிட்டாலேமற்ற இயல்கள் –குர்ஆன்ஹதீஸ் உள்படஎளிதாக விளங்கிவிடும் என்ற புனைவு உண்டுஆனால்திருக்குர்ஆனின் தத்துவங்களும் நபிமொழி கருத்துகளும் கடல் ஆழத்தைத் தொடக்கூடியவைஓயாத அலைகள்போல் தொடரக்கூடியவை.

திருக்குர்ஆனில் லுக்மான்அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதைப் பாருங்கள்இந்தப் பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாகவும் இக்கடலும் அதற்குமேல் இன்னும் ஏழு கடல்களும் மையாகவும் இருந்தால்கூட அல்லாஹ்வின் சொற்கோவை (எழுதிமுடிந்துபோகாது. (31:27)

ஆகதிருக்குர்ஆன் விளக்கவுரையோ நபிமொழிப் பாடங்களோ சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு மிகமிக அரிதாகவே எனக்குக் கிடைத்ததுஇப்பாடங்கள் கிடைத்திருப்பின் அல்லாஹ்வின் பெயரையும் அல்லாஹ்வின் தூதர் பெயரையும் அடிக்கடி உச்சரிக்கின்ற வாய்ப்பாவது கிடைத்திருக்கும்நானும் ஒரு கட்டத்தில் தத்துவப் பாடத்தைப் பெரிதென நினைத்ததுண்டுநாளடைவில் விரக்தியே எஞ்சியது.

தாயார் ரஹ்மத் அம்மாள்

ந்நிலையில்தான்நபிமொழித் தொகுப்புகளான ஸஹீஹுல் புகாரீஸஹீஹ் முஸ்லிம்ஜாமிஉத் திர்மிதீதிருக்குர்ஆனின் பிரபல விரிவுரையான தஃப்சீர் இப்னு கஸீர் போன்ற பெருநூல்களை -இல்லைகிடைப்பதற்கரிய கருவூலங்களைஆய்வு செய்யவும் மொழிபெயர்ப்பைச் சீராக்கவும் விளக்கவுரைகளைப் படித்து அவற்றின் சாரத்தை அடிக்குறிப்புகளாக வரையவும் ஓர் அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததுஇதன்மூலம்பிறந்த பலனை அடைந்த ஆனந்தமே மேலிட்டதுஇதற்காகச் சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் நிறுவனர்களான M.A. முஸ்தபா பாய், M.A. தமீம் பாய் ஆகியோருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

தந்தை அப்துல் காசிம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் காஸிம் ரஹ்மத் அம்மாள் தம்பதியருக்கு 9 குழந்தைகள். அவர்களில் ஏழாவதாகப் பிறந்தவரே M.A.முஸ்தஃபாஒன்பதாவதாகப் பிறந்தவர் M.A. தமீம்இச்சகோதரர்கள் சிங்கப்பூரில் நீண்ட காலமாகத் தொழில் செய்பவர்கள்தொழில் நுணுக்கமும் கடின உழைப்பும் அவர்களுக்குக் கை கொடுத்தனமளமளவென்று வளர்ந்தார்கள்தொழிலதிபர்கள்தானே தவிரமார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதிலும் பொதுச் சேவைகளுக்கு வாரி வழங்குவதிலும் முனைப்புக் காட்டக்கூடியவர்கள்தங்கள் தாயார் பெயரில் ஓர் அறக்கட்டளை தொடங்கிஏதேனும் நல்லறம் புரிய வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

என்ன பணி செய்யலாம் என்று பலரிடமும் யோசனை கலந்தபோதுமார்க்கம் படித்த சமூக ஆர்வலர்கள் சிலர் புண்ணியமான ஒரு திட்டத்தை முன்வைத்தார்கள்அதுதான் இன்று செயல்படுத்தப்பட்டுவருகிறதுஇஸ்லாத்தின் மூலாதாரங்களில் இரண்டாம் இடம் வகிக்கும் நபிமொழித் தொகுப்புகளில் முதலிடத்தில் உள்ள ‘ஸஹீஹுல் புகாரீஎனும் பிரசித்தி பெற்ற நூலை அரபி மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதே முதல் திட்டம்அதற்காகத் தமிழகத்தின் தலைநகர் சென்னையின் இதயப் பகுதியில் ஓர் அலுவலகத்தை உருவாக்கினார்கள். அதில் அமைதியாக அமர்ந்து மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வதற்கு வேண்டிய எல்லா நவீன வசதிகளையும் செய்தார்கள். 18.11.1991இல் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் முதல் பாகம் 17.07.1994இல் வெளியானது.

அன்றிலிருந்து இன்றுவரை ஆண்டுக்கு ஒரு பாகம் என்ற விகிதத்தில் 20 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் 7 பாகம் (வடிவ மாற்றத்திற்குப்பின் 5), ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் 4 பாகம், ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம் 3 பாகம், தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் 6 பாகம் என 20 பாகங்கள் வெளிவந்து தமிழ்கூறும் நல்லுலகின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. மற்றப் பாகங்களின் மொழிபெயர்ப்புப் பணி தொடர்கிறது. ரஹ்மத்தின் வெளியீடுகளுக்கு ஒரு வாசகர் வட்டமே உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது. அதனால்தான், அடுத்த பாகம் எப்போது என்று முஸ்தஃபா பாய் கேட்கிறாரோ இல்லையோமக்கள் தொலைபேசியிலும் கடிதத்திலும் கேட்டு நச்சரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அவ்வளவு ஆர்வம்அல்ஹம்து லில்லாஹ்!

மூகத்தில் ஓர் ஆரோக்கியமான மாற்றத்தை, ரஹ்மத் வெளியீடுகள் ஏற்படுத்தியிருப்பது கண்கூடு. மார்க்க அறிஞர்களுக்கு இந்த மொழிபெயர்ப்புகள் நல்ல துணை எனலாம்பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் மேற்கோள்காட்டி ஆதாரத்தோடு பேசவும் எழுதவும் இவை வகை செய்திருக்கின்றன. மத்ரசா மாணவ மாணவிகளுக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றன. எல்லாவற்றையும்விடப் பொதுமக்களின் கரங்களுக்கு மார்க்கத்தின் மூலாதாரங்கள் அவர்களின் தாய்மொழியிலேயே- கிடைத்திருப்பது மாபெரும் கொடையாகும் எனலாம்! சாமானியர்களையும் சென்றடைந்தால்தானே வேதம் வந்ததன் முழுப்பயன் கிடைக்கும்! அவர்களும் இறைவாக்கையும் இறைத்தூதர் வாழ்க்கையையும் வாசித்துசுவைத்துசொந்தமாக அறிகின்ற பெரும்பேறு வாய்த்துள்ளதுஅறிவு மறுமலர்ச்சியும் சிந்தனைப் புரட்சியும்தான் மனிதனை உயரத்திற்குக் கொண்டுசெல்லும்.

முஸ்தபா - தமீம் சகோதரர்கள்
இந்த மகத்தான பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் ஐயமில்லைஇதற்கு வித்திட்டுஇலாபம் கருதாமல் தொடர்ந்து உரமிட்டு வளர்த்துவரும் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தங்களுக்கு மட்டுமன்றி தங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்சிலருக்கு ஊரால் சிறப்பு என்றால்சிலரால் ஊருக்குச் சிறப்புவணிகர்களான M.A. முஸ்தபா, M.A. தமீம் தங்கள் வட்டத்தில் முன்பு பேசப்பட்டிருக்கலாம்ஆனால்இன்று சகலருக்கும் அறிமுகமான ஆளுமைகளாக அவர்கள் இருப்பதற்கு இந்த அரும்பெரும் சேவையே காரணம் என்பதுதான் உண்மை!

இப்பணியைப் பற்றி ஒருமுறை சிலாகித்துக் கூறிய முஸ்தஃபா பாய் அவர்கள், “இதுதான்மறுமையில் எங்களின் அடையாள அட்டை (ID)” என்று சொன்னது பொருத்தமான ஒப்பீடுஎண்ணம் தூய்மையாக இருக்கும்போது இச்சேவையால் இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் நற்பலன் கிட்டும் என்பதை அவர் உணர்ந்திருப்பதற்கு இது அடையாளம்!

செ
ன்னை ரஹ்மத் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்புப் பிரிவான ரஹ்மத் பதிப்பகத்தில் மூன்று வகைப் பணிகள் நடக்கின்றன. 1. திருக்குர்ஆன் விரிவுரைஅல்லது நபிமொழிகளை மொழிபெயர்ப்பது. 2. அதனைக் கணினியில் தட்டச்சு செய்துபிரதி எடுத்துக் கொடுப்பதுதிருத்தங்களை ஏற்றுவதுஇறுதிப்படி திருத்தம் ஏற்றியபின் குருந்தகட்டில் பதிவேற்றி அச்சகத்தில் ஒப்படைப்பது (நூல் வடிவமைப்பு). 3. மொழிபெயர்ப்புப் படியை ஆவணப்படுத்தி, திருத்தங்கள் செய்து, அடிக்குறிப்பு விளக்கம் எழுதி முழு உருவம் கொடுப்பது. இவ்வாறு நான்கு முறை சரிபார்த்த பின்பே அச்சுக்கு அனுப்பப்படும்.

மொழிபெயர்ப்பாளர் குழுவினர்
அரபி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பது அவ்வளவு இலகுவன்று, இரு மொழிகளிலும் சரளமாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். இரண்டின் அகராதி, இலக்கணம், இலக்கியம், மரபுச் சொல், மூலத்தின் பின்னணி, எளிய சொல்லாட்சி, புதிய சொற்களை உருவாக்கும் சொல்லாக்கம், சம்பந்தப்பட்ட இயல்கள்... எனப் பல்துறை ஞானம் அமையப்பெற்ற ஒருவராலேயே ஒழுங்காக மொழிபெயர்க்க முடியும். அதிலும் குர்ஆன், ஹதீஸ் எனும்போது எழுதுகோலை அடக்கித்தான் ஆள வேண்டும்.

முஸ்தபா அவர்களுடன் குழுவினர்
இத்துணை தகுதிகளும் ஒருசேரப் பெற்றவர்களைக் கண்டு வேலைவாங்குவது, கயிறே இல்லாமல் மலைச் சிகரத்தைத் தொடுவதற்குச் சமம். அரபியில் வல்லவர்தான்;ஆனால்தமிழ் தெரியாதுதமிழில் ஞானிதான்எனினும்அரபி தெரியாதுஇரண்டும் இருந்தால்பிற கலைகள் தெரியாதுகுர்ஆன்ஹதீஸைத் தீர்க்கமாக அறியவும் அறிந்ததை எழுத்தில் வடிக்கவும் அறிவியல்மருத்துவம்வானவியல்பூகோளம்இயற்பியல்விலங்கியல்வரலாறு எனப் பல்கலைகளில் பரிச்சியம் இருக்க வேண்டும்.இல்லையேல்கொம்புத் தேனுக்கு முடவன் ஆசைப்பட்ட கதையாகிவிடும்.

பெ
ரும்பாலும் அரபிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள்தான் இங்கு மொழிபெயர்ப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்பணியாற்றிவருகின்றனர்.அவர்களால்தான் அரபிமொழி விளக்கவுரைகளைப் படிந்தறிந்து சரியான மொழிபெயர்ப்பை எழுத முடியும்அல்லது மொழிபெயர்ப்புப் பணியில் முன்அனுபவம் இருக்க வேண்டும்.

இந்த வகையில் காஞ்சி மௌலவி, R. அப்துர் ரவூப் பாகவி, மேட்டுப்பாளையம், சா. அப்துந் நாஸிர் பாகவி, தக்கலை . ஜாகிர் ஹுசைன் பாகவி, அய்யாபுரம், கா. ஹுசைன் கனி பாகவி, வடகரை ஷாஹுல் ஹமீத் பாகவி, ஆயங்குடி அன்வருத்தீன் பாகவி ஆகியோர் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். தற்போது மேலப்பாளையம், சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி, மேலூர் பூதமங்கலம் எஸ். அப்துல்லாஹ் பாகவி ஆகியோர் பல்லாண்டுகளாகப் பணியாற்றிவருகின்றனர். இவ்விருவரும் பல வருடங்கள் அரபிக் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள், அரபி-தமிழ் இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள்பல்கலைக் கழகப் படிப்புகளில் தேறியவர்கள். யூசுப் சித்தீக் மிஸ்பாஹி நல்ல பேச்சாளர், எழுத்தாளர்.

குழுவாக இருந்து செயல்படுவதால் நிறைய பலன்கள் உண்டு. மொழிபெயர்ப்பில் ஏற்படும் ஐயங்களை உடன் இருப்பவர்களிடம் கேட்டுத் தெளிவுபெற முடியும். அரபிச் சொல் ஒன்றுக்கு, வழக்கொழிந்த பொருளுக்குப் பதிலாகப் புதிய பொருளைக் கண்டறிதல், பொருளே குறிப்பிடாமல் அரபிச் சொல்லையே மொழிபெயர்ப்பிலும் கையாள்வதைத் தவிர்த்து, ஒரு பொருளை ஆய்வு செய்தல், அறிவியல், பொது அறிவு, வரலாற்றுத் தலங்கள், உலக நாடுகள், தாவரவியல்... போன்ற இயல்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கு இணையதளத்தில் தேடி முடிவு காணல் முதலான ஆய்வுகளுக்குக் கூட்டு முயற்சியே துணைபுரியும். தனியாக உட்கார்ந்துகொண்டு இதையெல்லாம் சாதிப்பது சாத்தியமாகாமல் போகலாம்!

கவிக்கோ அப்துர் ரஹ்மான்
இங்கே இன்னொருவரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்அவர்தான் கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள்அவருக்கும் ரஹ்மத்திற்கும் நீண்ட நெருங்கிய உறவு உண்டு.எங்கள் அலுவலகத்தின் முதல் மாடியில் தொடங்கியுள்ள அரங்கிற்கு ‘கவிக்கோ மன்றம்’ என்ற பெயரையே முஸ்தபா பாய் சூட்டியிருப்பதுகவிக்கோவின் தமிழ் தொண்டிற்கு –அவர் வாழ்நாளிலேயேசெய்யும் மரியாதையாகும் என்பதில் சந்தேகமில்லைகவிக்கோவை நாங்கள் அன்போடு ‘அண்ணன்’ என்றே அழைப்போம்!

மொழிபெயர்ப்புதிருத்தங்கள்மேலாய்வு என எல்லாம் முடிந்துஇறுதிப் பார்வைக்காகப் படிகள் கவிக்கோ அவர்களிடம் அனுப்பிவைக்கப்படும்தமிழ் சொற்கள்வாக்கிய அமைப்புநடை ஆகியவற்றில் அண்ணன் சில திருத்தங்களையும் யோசனைகளையும் வழங்குவார்தொடக்கத்தில் இது சற்று கூடுதலாக இருந்தது எனலாம்அவர் தரும் திருத்தங்களில் பொருத்தமானவற்றை நாங்கள் ஏற்று நடைமுறைப்படுத்தத் தொடங்கியபின்சிற்சில இடங்களில் மட்டும் இப்போது திருத்தங்கள் தருகிறார்ஆக,தமிழாக்கத்தைச் செம்மைப்படுத்திக்கொள்ள கவிக்கோ அவர்களின் வழிகாட்டல் துணைபுரிந்தது என்பதை நன்றியோடு குறிப்பிட வேண்டும்.

தெரியாததைத் தெரிந்துகொள்வதற்கு வயது ஒரு தடையாக இருக்கலாகாதுநாம் ஒரு துறையில் வல்லுநராகவே இருக்கலாம்அதற்காக எல்லாத் துறைகளிலும் எனக்கு அறிவு உண்டு என எவரும பெருமை பேசிக்கொள்ள முடியாது. “நீங்கள் அறியாதவர்களாக இருந்தால்அறிவுடையோரிடம் கேட்டு (அறிந்து)கொள்ளுங்கள்” எனத் திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் அல்லாஹ் ஆணையிடுகின்றான் (16:43; 21:7). அப்படி கேட்டோபடித்தோபட்டோ அறிந்துகொண்ட அறிவுகள் ஏராளம்கூச்சத்தாலும் சிலர் தயங்குவதுண்டுஅதுவும் இழப்புதான்தீமை செய்வதற்கே வெட்கப்பட வேண்டும்அறியாமையை அகற்றல் ஒரு சிறந்த செயல் மட்டுமல்லவழிபாடும்கூட. ஒரு சிறு ஹதீஸை அறிந்துகொள்வதற்காகப் பல மைல்கள் பயணம் செய்திருக்கிறார்கள் நபித்தோழர்கள். இல்லையா? பிறகு ஏன் கூச்சம்? தயக்கம்?

ங்கே என் பணி மேலாய்வுஎன முன்பே ஒரு தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். இப்பணியை ஏற்றபிறகுதான், திருமறையையும் திருநபி வாக்குகளையும் கற்பதாக உணர்கிறேன். விளக்கங்கள் கொட்டிக்கிடக்கின்றன. விரிவுரைகள் நிறைந்திருக்கின்றன. அள்ளுவதற்குத்தான் ஆளில்லைஅறிந்துகொள்வதற்குத்தான் ஆயுளில்லை.ஆனால்நம் நேரங்கள் எதிலெதிலோ வீணாகக் கரைகின்றனஇறைவன் கொடுத்த எல்லா உறுப்புகளையும் தேவைக்கதிகமாகவே பயன்படுத்தும் மனிதன்மூளையை மட்டும் அதிகம் செலவழிப்பதில்லைபிறரை ஆராய்வதை நிறுத்திவிட்டாலேநிறைய நேரங்கள் மிஞ்சும்பயனுள்ள வழியில் அவற்றைச் செலவிடலாம்!

மொழிபெயர்ப்பாளர் தவறாகப் புரிந்துகொண்டு மொழிபெயர்த்திருப்பார்அத்தவற்றைக் கண்டுபிடித்துத் திருத்துவதே மேலாய்வாளருக்குரிய தலையாய பணியாக இருக்கும்.அரபிமொழியைப் பொறுத்தவரை வினைச் சொற்களோடு சேர்ந்துவரும் மின்இலாஅலா போன்ற முன்னிடைச் சொற்களுக்குத் தக்கவாறு வினைச்சொல்லின் பொருள் மாறும்அதைக் கவனிக்கத் தவறக் கூடாதுஅரபிச் சொல் ஒன்றுக்குப் பல பொருள்கள் இருக்கும்அவற்றில் எது அவ்விடத்திற்குப் பொருத்தம் என ஆய்ந்து அறிய வேண்டும்ஒரே பொருள் கொண்ட பல சொற்கள் அடுக்குமொழியாக ஓரிடத்தில் குவிந்திடலாம்தமிழிலும் அந்த ஒரே பொருள் கொண்ட பல சொற்களைத் தேடிக் கண்டுபிடித்து இடம்பெறச் செய்ய வேண்டும்.

அடுத்து சொல்லாடல், அல்லது வாக்கிய அமைப்புமூலத்தில் இருக்கும் வாசகத்திற்கு மொத்தத்தில் பொருள் வந்திருக்கலாம்ஆயினும்ஒரு வாக்கியத்தில் முதலில் எச்சொல் இடம்பெற வேண்டும்அடுத்து அதையடுத்து எது இடம்பெற வேண்டும் என்பதை ஒன்றுக்கு இருமுறை வாசித்துப் பார்த்து அறிய வேண்டும்சில நேரங்களில் வார்த்தை இடம்மாறி இடம்பெறும்போது தவறான பொருள் மயக்கம் ஏற்பட்டாலும் வியப்பதற்கில்லைஎடுத்துக்காட்டாகமுன்பு இழைத்த பாவங்களை இஸ்லாம் அழித்துவிடுகிறது (முஸ்லிம்). (அதாவது ஒருவர் முஸ்லிமாவதற்கு முன்பு செய்த பாவங்கள் இஸ்லாத்தில் இணைவதன் மூலம் மன்னிக்கப்பட்டுவிடும்.) இதையே, “இஸ்லாம் முன்பு இழைத்த பாவங்களை அழித்துவிடுகிறது” என்று குறிப்பிடுவீர்களானால்ஏதோஇஸ்லாமே முன்பு பாவம் இழைத்ததைப் போலவும் அதை ஏதோ ஒன்று அழிப்பதுபோலவும் பொருள் மயக்கம் ஏற்படலாம்!

அவ்வாறேஒரேயோர் அரபி வாக்கியத்தைத் தமிழில் ஒரே வாக்கியமாகவோ இரண்டு வாக்கியங்களாகப் பிரித்தோ மொழிபெயர்க்கலாம்தவறில்லைஎகா: “ஏழைகளை விட்டுவிட்டுசெல்வர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும்” (புகாரீ). இதையே, “உணவுகளில் மிகவும் தீயது ஒரு மணவிருந்தாகும்அதற்குச் செல்வர்கள் மட்டுமே அழைக்கப்படுகின்றனர்ஏழைகள் விடப்படுகின்றனர்” என வாக்கியங்களைப் பிரித்து மொழிபெயர்த்தாலும் சரிதான்!

குர்ஆன் அருளப்பெற்ற நிலையில் நபி (ஸல்அவர்கள் மக்காவில் 10 (13-3=10) ஆண்டுகள் வாழ்ந்தார்கள்மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்” (புகாரீ). இதைப் பிரித்தால் தவறான பொருள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. “நபி (ஸல்அவர்கள் மக்காவில் 10 ஆண்டுகள் வசித்தார்கள்அவர்களுக்கு குர்ஆன் அருளப்பெற்றுவந்தது.மதீனாவில் 10 ஆண்டுகள் வசித்தார்கள்”. இப்படி வாக்கியங்களைப் பிரித்தால், “நபியவர்கள் மக்காவில் வாழ்ந்ததே மொத்தம் 10 வருடங்கள்தான் என்ற தவறான பொருளுக்கு இடமேற்பட்டுவிடும்.

அவ்வாறேஇரு பொருள்கள் தரும் இடங்களில் எச்சரிக்கை தேவைதிருக்குர்ஆனில் 23:68ஆவது வசனம் ஓர் உதாரணம். 1. முன்சென்ற அவர்களின் மூதாதையரிடம் வராத ஒன்றல்லவா அவர்களிடம் வந்துள்ளது? 2. முன்சென்ற அவர்களின் மூதாதையரிடம் வராத ஒன்றா அவர்களிடம் வந்துவிட்டது? 3. முன்சென்ற அவர்களின் மூதாதையரிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துள்ளதாஅதாவது குறைஷியர் இந்த மறையை எப்படி மறுக்க முனைந்தார்கள்அவர்களின் முன்னோருக்குக் கிடைக்காத ஒரு பாக்கியமல்லவா இவர்களுக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது? –என இவ்வசனத்தில் இறைவன் வினா தொடுக்கின்றான்.

இப்பொருளைப் பிரதிபலிக்க முதலாவது மொழிபெயர்ப்பே உகந்தது. பிந்திய இரண்டும் வேறு பொருளைத் தருகின்றன. முன்னோருக்கு வந்த வேதம்தானே இவர்களுக்கும் வந்துள்ளதுபிறகு ஏன் மறுக்கிறார்கள்என்ற பொருளைத் தந்துவிடும்இது, இங்கு இறைவனின் நோக்கமன்றுஅரபி வாசகம் இவ்விடத்தில் மூன்று மொழிபெயர்ப்புகளுக்கும் பொருந்துவதைப்போல் அமைந்துள்ளதுவிரிவுரையாளர் இப்னு கஸீர் (ரஹ்அவர்கள் முதலாவது பொருளையே குறிப்பிடுகிறார்கள்.

இப்படிமொழிபெயர்ப்புத் துறையில் சந்திக்கும் சவால்கள் நிறைய உள்ளனஎனவேதான்குர்ஆன் மற்றும் ஹதீஸை மொழிபெயர்ப்பவர்களுக்கு மொழியாற்றல் மட்டும் போதாதுதுணைத் துறைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்கிறோம்.


(இன்ஷா அல்லாஹ் ரமளானுக்குப்பின் அடுத்த தொடர்)

Wednesday, May 20, 2015

நான் ஓர் ஆசிரியராக (பகுதி - 2)

உங்களுடன் நான் மனம்விட்டு... - 17


1980

ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். தாய்க் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்பதே என் வாழ்நாள் இலட்சியமாக இருந்தது. அதற்காகத் தொடர்ந்து ஐந்தாண்டுகள் முயற்சி செய்தபின் அந்த வாய்ப்பினை இறைவன் அருளினான். எதிர்பார்ப்புக்குப்பின் கிடைக்கும் ஒன்றின் மீது அதிக ஈடுபாடு காட்டுவது மனிதனின் இயல்பு. 35 ஆண்டுகளுக்குமுன் பாகியாத்தில் ஆசிரியராகச் சேர்ந்தபோது என் ஊதியம் ரூ. 365/- அதேயாண்டு ரூ. 100/- அதிகமாக்கப்பட்டது.

தாருல் ஹதீஸ் பிரிவின் பழைய கட்டடம்
19 ஆண்டுகள் பணியாற்றிய அந்தப் பருவத்தில் பட்ட அனுபவங்கள் அனந்தம். சந்தித்த மேடுபள்ளங்கள் பல. கிடைத்த அறிமுகங்கள் பல்துறை. பேச்சு, எழுத்து, கற்பித்தல் ஆகிய துறைகளில் கண்ட முன்னேற்றங்கள் உற்சாகமும் உத்வேகமும் தர வல்லவை. ஆசிரியர்கள் பல மாநிலத்தவர். மாணவர்கள் பல நாட்டவர்; பல மொழியினர். தமிழ், உருது, அரபி எனப் பலமொழிகளில் வகுப்பு எடுக்க வேண்டிய புதிய பரிணாமம். பெரிய மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்பு. சொந்தப் பிள்ளைகளின் படிப்பு; வளர்ச்சி. இப்படி முப்பரிமாணங்களும் ஒன்றுகூடி வந்த வசந்த காலம்.

பழைய கட்டடத்தின் எழில்மிகு தோற்றம்
மாணவர்களுக்குப் பாடம் போதிப்பதோடு நின்றுவிடுவதில்லை என் பழக்கம். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளையும் சொல்வதுண்டு. ஆலிம்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, சுயமரியாதை, தன்மானம் காக்க வேண்டும் என்று வற்புறுத்துவதுமுண்டு. மனிதவளத்தைப் பெருக்கிக்கொள்வதில் நேரத்தைச் செலவிட வேண்டுமே தவிர, சடங்கு சம்பிரதாயங்களை நடத்திவைப்பதில் நம் பொன்னான நேரங்களைக் கழித்துவிடக் கூடாது என உணர்த்துவதுண்டு. இன்னும் எத்தனை காலத்திற்கு இதிலேயே நம் நேரங்களைச் செலவழிப்பது என்ற ஆதங்கம்தான் காரணம்! மாணவனாக இருந்த நாட்களில் ஓர் ஊரில் விருந்து ஒன்றுக்காகச் சென்றபோது, ‘‘வந்துண்டானுகடா! பஞ்சைப் பராரிகள் (பரம ஏழைகள்)’’ என்று காதுபட சொன்னதன் வலிதான் காரணம்!

இரவில் அன்றைய பாடங்களைத் திரும்பப் படிக்கும் பழக்கம் அங்கு உண்டு. அதைக் கண்காணிக்க ஆசிரியர்களும் வருவார்கள். அப்படி நான் போகும் நாட்களில் மாணவர்களிடம் இலக்கிய ஆர்வத்தை ஊட்டுவதுண்டு; அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கேட்டறிந்து யோசனைகள் சொல்வதுண்டு. எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக மாணவர்களுடன் விவாதிப்பதுண்டு. கவலையோடு காட்சியளிக்கும் மாணவனை அழைத்து ஆறுதல் கூறுவதுண்டு. இதனாலெல்லாம், நம்முடன் உரையாடுவதற்கும் கருத்துப் பரிமாறுவதுக்கும் ஓர் ஆள் உண்டு என மாணவர்கள் ஊக்கத்தோடு செயல்பட உதவலாம் அல்லவா? ஆறுதலும் தெம்பும் அவர்களுக்குக் கிடைக்குமல்லவா?


பாகியாத்தின் பழைய ஹாஸ்டல்
வியாழன்தோறும் நடக்கும் மாணவர்கள் சொற்பயிற்சி மன்றத்தில் அவ்வப்போது ஆர்வத்தோடு கலந்துகொள்வேன். பட்டிமன்றம், கருத்தரங்கம் போன்ற சிறப்புக் கூட்டங்களில் நடுவராக இருந்து தீர்ப்புச் சொல்வேன். நன்றாகப் பேசக்கூடிய, வாதிடக்கூடிய மாணவர்களை அகம் குளிரப் பாராட்டி ஊக்குவிப்பேன். மாணவர்களின் கையெழுத்து இதழான அல்இர்ஷாதில் வாழ்த்துரை வழங்கி எழுத்தை ஊக்கப்படுத்துவேன். அவ்விதழை நானே கேட்டுவாங்கிப் படிப்பேன். நல்ல கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதும் மாணவர்களை அழைத்துப் பாராட்டுவேன். ஒரு மாணவர் எழுதியிருந்த கவிதையைப் படித்துக் கண்கலங்கிவிட்டேன். என் அறைக்கு வரச்சொல்லி, தழுதழுத்த குரலில் புகழ்ந்தேன். அந்த அளவுக்கு அவரது கவிதை உருக்கமாகவும் ஒய்யாரமாகவும் அமைந்திருந்தது. அப்படி உருவான பலர் இன்று சமுதாய அரங்கில் பெயர் சொல்லும் அளவுக்கு மிளிர்கிறார்கள் என்பது உண்மை.

பாகியாத்தின் புதிய கட்டத்தின் எழில்மிகு காட்சி

பாகியாத்தின் புதிய மஸ்ஜிதின் கம்பீரமான காட்சி
பா
கியாத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களில் என் கவனத்தை ஈர்த்த மாணவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் 1980களில் பயின்ற தொட்டப்பநாயக்கனூர் மௌலவி, நூர் முஹம்மது ஃபாஸில் பாகவி ஒருவர். கெட்டிக்கார மாணவர். ஆசிரியர்கள் சொல்லும் கருத்துகளைச் சட்டெனப் புரிந்துகொண்டு, எதிர்க்கேள்வி தொடுக்கும் திறன் படைத்தவர். பிற்காலத்தில் பாகியாத்தின் ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது மதுரையில் பள்ளிவாசல், மத்ரசா உருவாக்கி நிர்வகித்துவருகிறார். இன்னொருவர் சித்தார்கோட்டை நூர் முஹம்மது ஹைதர் அலீ பாகவி, காஸிமி. நல்ல திறமைசாலி; பேச்சாளர்; வகுப்பில் கேள்வி கேட்டு மடக்குபவர். இவரும் பிற்காலத்தில் பாகியாத்தின் ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது அதிராம்பட்டினத்தில் பள்ளி ஆசிரியராகவும் பரப்புரையாளராகவும் பணிபுரிகிறார்.

இலங்கை மௌலவி, ஏ.சி. முஹம்மது பாகவி. மத்ரசா கல்வியோடு கல்லூரி கல்வியும் பெற்றவர். எதையும் சூட்சுமத்தோடு புரிந்துகொள்கின்ற ஆற்றல் படைத்தவர். நல்ல தமிழ். சரியான பேச்சாளர். இப்போது எங்கே, என்ன செய்கிறார் என்ற தகவல் இல்லை. இவரைப் போன்ற மனிதவளம் மிக்கோரை இனம் கண்டு சமுதாயம் பயன்படுத்த வேண்டும். மலேசியா மௌலவி, முஹம்மது கபீர் பாகவி. நல்ல குரல் வளம். தொழுகை அறிவிப்பாளராக பாகியாத் பள்ளிவாசலில் பணியாற்றிக்கொண்டே கல்வி கற்றவர். நான் அரபியில் பேசுவதற்கு, எனக்குக் கிடைத்த காது. தற்போது கோலாலம்பூரில் மார்க்கப் பணியாற்றுகிறார்.

கோவை மௌலவி, அப்துல் அஸீஸ் ஃபாஸில் பாகவியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மதிப்பெண்கள் எப்படி என்பது சரியாக நினைவில்லை. ஆனால், நல்ல விளக்கமும் வித்தியாசமான பார்வையும் உள்ளவர். பேச்சிலும் எழுத்திலும் சிறந்து விளங்கியவர்; விளங்கிக்கொண்டு இருப்பவர். அவரது அறைக்குச் சென்று அவருடன் நீண்ட நேரம் உரையாடும் பழக்கம் எனக்கு இருந்தது. பல்துறை விஷயங்களை விவாதிப்பதுண்டு; கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதுண்டு. பட்டம் பெற்றபின் கோவை, தூத்துக்குடி ஆகிய அரபிக் கல்லூரிகளில் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். சிங்கப்பூரில் இமாமாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது கோவையிலேயே ‘இமாமத்’ பணியில் இருந்துவருகிறார். அவரது பேச்சும் எழுத்தும் வீச்சும் வீரியமும் உள்ளதாக இருக்கும்.

இவருடைய வகுப்புத் தோழர் மேலப்பாளையம் மௌலவி, காஜா முஹ்யித்தீன் பாகவி. மன்றங்களில் அன்றே திரும்பிப் பார்க்கவைக்கும் பேச்சாற்றல். இன்று மேலப்பாளையம் அரபிக் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் இமாம். கொஞ்சும் குரலில் கெஞ்சிப் பேசும் நாவன்மை அவருக்கு உண்டு. ஏரல் பீர் முஹம்மது பாகவி மற்றொருவர். இவர் சிறந்த கவிஞர்; இனிய குரல்வளம் படைத்த பாடகர். ‘சிந்தனைச்சரம்’ என்ற மாத இதழைப் பல்லாண்டுகளாக நடத்திவந்தார். காலம் கை கொடுக்கவில்லைபோலும்! வணிகராக வலம் வருகிறார். புரட்சிகரமான கருத்துகளைத் துணிவோடு முன்வைத்த பெருமை சிந்தனைக்கு உண்டு. இஸ்லாமிய எழுத்தாளர்கள் சிந்தனையில் எழுத வேண்டுமென ஆசைப்பட்டதுண்டு.

1990
களில் பயின்ற மாணவர்களில் தக்கலை மௌலவி, அ. ஜாகிர் ஹுசைன் பாகவியை முதலில் குறிப்பிடலாம். பல்வேறு திறமைகள் அவரிடம் உண்டு. பாடத்தில் திறமையானவர். அதைவிட மத்ரசாவில் கற்றுக்கொண்டே சுயமுயற்சியில் கல்லூரி படிப்புகளையும் தொடர்ந்து கற்றுவந்ததுதான் அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது. பட்டம் பெற்றபின் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்று முனைவர் ஆனார். சென்னை ரஹ்மத் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியபின், தற்போது சென்னைப் பல்கலைக்கழக அரபித் துறை பேராசிரியராகவும் துறை சேர்மனாகவும் பணியாற்றிவருகிறார். நல்ல பேச்சாளர்; எழுத்தாளர். திருக்குறளை அரபியில் மொழிபெயர்த்தவர்.

அடுத்து மேட்டுப்பாளையம் மௌலவி, சதீதுத்தீன் பாகவி. வகுப்பில் திறமையான மாணவர். சொல்வதை உள்வாங்கிக் கொண்டு, அதைப் பிரதிபலிக்கும் திறன் பெற்றவர். போட்டி போட்டுக்கொண்டு முன்னேறும் குணம் அப்போதே தென்பட்டது. மன்றங்களில் அழகுபட உரையாற்றுவார். அவரது கம்மிய குரல் எனக்கெல்லாம் சற்று கம்மியாகத் தெரிந்தது. அதுவே இன்று ரம்மிய குரலாகப் பார்க்கப்படுகிது. பின்னாளில் சுயமாகப் படித்துப் பல்கலைக்கழகப் பட்டங்களையும் பெற்றுள்ளார். தற்போது சென்னையில் இமாமாகவும் அரபிக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றுகிறார்.

அவ்வாறே, சென்னை ரஹ்மத் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிவரும் மதுரை பூதமங்கலம் எஸ். அப்துல்லாஹ் பாகவி, முன்பு பணியாற்றிய மேட்டுப்பாளையம் அப்துந் நாசிர் பாகவி, வடகரை ஷாகுல் ஹமீது பாகவி (தேரிழந்தூர்), மௌலவி, Z. பரக்கத் அலீ பாகவி (பி.எஸ்.பி. அவர்களின் மகன்), வெளிநாடுகளில் பணியாற்றுவோரில் மேலப்பாளையம் மௌலவி, எஸ்.எஸ். அஹ்மத் பாகவி (கோலாலம்பூர்), முன்பு கோலாலம்பூரில் பணியாற்றிய திண்டுக்கல் மௌலவி, அப்துல்லாஹ் பாகவி, அதிரை நிஜாமுத்தீன் பாகவி (குவைத்), எஸ்.பி. பட்டினம் மௌலவி, அப்துல் கய்யூம் பாகவி (சிங்கப்பூர்) ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்! இவர்களுக்கெல்லாம் ஆற்றலுடன் இறையச்சமும் அமைய வேண்டும் எனப் பிரார்த்திப்போம். அப்போதுதான் சேவைகளும் தொண்டுகளும் மக்களுக்கு உண்மையான பயனைத் தரும்; இறைவனால் ஏற்கவும்படும்.

பா
கியாத்தில் பணியாற்றும் காலத்திலேயே அரபிக் கல்லூரிகளில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து என் கருத்துகளைத் தெரிவித்துவந்தேன். பாடத்திட்டத்தில் சேர்ப்பன, நீக்குவன தொடர்பாக முதன் முதலில் ஈரோடு தாவூதிய்யா அரபிக் கல்லூரியின் வெள்ளி விழா மலரில்தான் (1990) எழுதினேன். அதைக்கூட ‘இது கட்டுரையாளரின் கருத்து’ என்று அடையாளப்படுத்தியே வெளியிட்டார்கள். 25 ஆண்டுகளுக்குப்பின் அதைத் திரும்பிப் பார்க்கிறேன். அதன் தேவை அப்படியே இருக்கிறது.

அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன்! இஸ்லாத்தின் முதல் மூலாதாரமான திருக்குர்ஆனை முழுமையாகப் பொருளோடும் விளக்கத்தோடும் கற்பியுங்கள்! அவ்வாறே இரண்டாவது மூலாதாரமான நபிமொழித் தொகுப்புகளில் ஒன்றையாவது முழுமையாக விளக்கத்தோடு கற்பியுங்கள்! அடுத்து இறையியல் (அகீதா) பாடத்தில் சமகாலச் சமயங்களைப் பற்றியும் சமகால உட்பிரிவுகள் பற்றியும் ஒரு தெளிவை மாணவர்களுக்கு ‘ஒப்பியல்’ நோக்கில் கற்றுத் தர வேண்டும்.

மடிந்துபோன கிரேக்கத் தத்துவப் பாடங்களை அகற்றிவிட்டு, இன்று ஜீவித்திருக்கும் எதிர் தத்துவங்கள் தொடர்பான பாடங்களைச் சேருங்கள். நாத்திகம் (இறைமறுப்பு), பல தெய்வம் (ஷிர்க்), போன்ற கோட்பாட்டாளர்கள் வாதங்கள் என்ன? அரசியல் மற்றும் பொருளியலில் முதலாளித்துவம், கம்யூனிஸம், சோசலிஸம், மக்களாட்சி, மன்னராட்சி, இஸ்லாமிய ஆட்சி முறை போன்ற இயல்கள் ஓர் ஆலிமுக்குத் தெரிந்திருக்க வேண்டுமா, இல்லை? அறிவியல்தான் இன்று உலகை ஆட்டுவிக்கிறது. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் புதைந்துள்ள அறிவியல் கருத்துகள் என்ன? அதற்கும் இன்றைய அறிவியலுக்கும் உள்ள ஒன்றுமை அல்லது வேற்றுமை என்ன? அறிந்திருக்க வேண்டுமா? இல்லையா? வணிகவியலில் புதிது புதிதாகத் தோன்றியுள்ள நடைமுறைகள், நிதிப் பயன்பாடு, முதலீடு ஆகியவை சொல்லிக் கொடுக்கப்பட்டால்தானே! இது ஹலால்; இது ஹராம் எனப் பளிச்சென்று பதில் சொல்ல முடியும்!

மருத்துவச் சாதனைகள் என்ற பெயரில் உலகெங்கும் பரவிவரும் இரத்தானம், உறுப்புதானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பால் மாற்று அறுவை சிகிச்சை, செயற்கைக் கருத்தரிப்பு, வாடகைத் தாய், சோதனைக் குழாய் குழந்தை, மூன்றாம் பாலினம், கருணைக் கொலை, கௌரவக் கொலை, கருக்கலைப்பு... என ஏகப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வென்ன என்பதை மாணவர்கள் எப்போது அறிவார்கள்? பட்டம் பெற்றபின் சுயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று, உலகமே பின்பற்றத் தலைப்பட்டுவிட்ட வழிமுறைகள் குறித்து அலட்சியமாகப் பதில் சொன்னால், எத்தனை பேருக்குச் சுயமாக ஆய்ந்து அறிகின்ற வாய்ப்பும் வேகமும் உண்டு?

இஸ்லாமிய வரலாறு, இந்திய வரலாறு, இந்திய அரசியல் சாசனம், சிறுபான்மையினர் உரிமை, நவீன அரபி மொழி, உலக & மற்றும் அலுவலக மொழியான ஆங்கிலம், பிழையின்றி தாய்மொழியில் பேசவும் எழுதவுமான பயிற்சி, கணினிப் பயிற்சி & இவையெல்லாம் ஓதிமுடித்தபின்தான் கற்றுக்கொள்ள வேண்டுமா? எத்தனை பேருக்கு முடியும்? எப்படி முடியும்?

கலாசார சீரழிவுக்கு முழு முதல் காரணமாக இருக்கின்ற பெண்ணியக் கோட்பாடு பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? பெண் சுதந்திரம் என்ற பெயரில் ‘மை&சாய்ஸ்’ என்று சொல்லிக்கொண்டு, இஸ்ரேலிய & மேற்கத்திய கலாசாரங்களைத் தூக்கிப் பிடிக்கும் சமுதாயப் பெண்டியருக்கும் வக்காலத்து வாங்கும் சமுதாய ஆண்களுக்கும் என்ன பதில்? அந்தப் பதில் விளக்கத்தை யாரோ படித்தவர்கள் சொல்ல, வாய் பிளந்து ஆலிம் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா? கேட்பதற்குக்கூட எத்தனை ஆலிம்களுக்குச் சூழ்நிலை சாதகமாக அமையும்?

‘இஸ்லாமோ ஃபோபியா’ என்ற பெயரில், உலக ஊடகங்கள் திட்டமிட்டே இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தவும் இஸ்லாத்தின் மீது வெறுப்பை உமிழவும் செய்கின்றனவே! ஊடகத்தைப் பற்றி உலமாக்களுக்கு என்ன தெரியும்? எப்படி தெரியும்? அச்சு ஊடகங்கள் முதல் காட்சி ஊடகங்கள்வரை அனைத்துமே பேசிவைத்தாற் போன்று செயல்படுகின்றனவே! இதற்கு நாம் என்ன வழிகாட்ட முடியும்? எப்படி வழிகாட்ட முடியும்?

மொத்தத்தில் அகிலத்தைப் படிக்காமல் அகிலத்தாருக்கு வழிகாட்ட முடியாது. உலகம் தெரியாமல், உலகத்தில் எப்படி வாழ வேண்டும் எனக் கற்பிக்க இயலாது. கொஞ்சம் கண் விழித்து அவனியையும் அவதானிக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு? பாடத்திட்டத்தில் சேர்க்காவிட்டாலும் சிறப்பு வகுப்புகள் நடத்தி, கற்பிக்கலாம் அல்லவா?

வ்வாறே, கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘உங்கள் தூதுவன்’ மாத இதழில், ‘ஓர் ஆலிம் எழுத்தாளராகிறார்’ எனும் தொடரை ஓராண்டு காலம் எழுதிவந்தேன். மத்ரசாக்களில் என்ன நடக்கின்றன? என்னென்ன மாற்றங்கள் தேவை? மாணவர்களின் கல்வி மட்டுமன்றி, அவர்களின் பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் ஆகியவற்றில் எத்தகைய மாற்றம் செய்ய வேண்டும் என்பன போன்ற விஷயங்களை அத்தொடரில் எடுத்துரைத்தேன். குறிப்பாக விருந்துகள், இறந்தவர்களுக்குச் செய்கின்ற சடங்குகள், திருமணங்களில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் போன்றவற்றுக்கு மாணவர்களையும் ஆலிம்களையும் அழைத்து, அவர்களின் நேரங்களையும் சுயமரியாதைகளையும் பாழ்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும் என்று வாதிட்டேன். நான் சந்தித்த சொந்த கசப்பான அனுபவங்களையும் விளக்கி எழுதினேன்.

வெளியே பலர் ஆதரித்து ஊக்கம் கொடுத்தாலும் உள்ளே தடைதான் வந்தது. சில பாடநூல்களைக் குறிப்பிட்டு, இவற்றை நீங்களே மாணவர்களுக்குக் கற்பித்துக்கொண்டு, குறையும் சொல்லலாமா என்று கேட்கப்பட்டது. கற்பிப்பதால்தான் அதிலுள்ள விஷயங்கள் புரிகின்றன; புரிவதால்தான் விமர்சனத்தை வெளியிடுகிறேன் என்று பதிலளிக்க வேண்டியிருந்தது. இருப்பினும் தொடரைத் தொடர்வது உசிதமல்ல என்ற நிலையில், முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதாயிற்று.

‘ஃபதாவா பாகியாத்’ (பாகியாத்தின் மார்க்கத் தீர்ப்புகள்) எனும் உருது நூலின் முன்னுரையைத் தமிழாக்கம் செய்ததால் நான் அனுபவித்த தொல்லைகள், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில் மத்ரசாவில் ஏற்பட்ட கொந்தளிப்பு, மாணவர்களை அமைதிப்படுத்தப்போக, தூண்டிவிடுவதாக எழுந்த தவறான குற்றச்சாட்டு, நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்கப் புதிய ஆசிரியர்கள் சேர்ப்பில் உதவியதையடுத்துப் பரவிய அவதூறு போன்ற வலிகள் வாழ்க்கையில் மறக்க இயலாதவை. வலியில்லாத வாழ்க்கை ஏது?

ழுத்தின் மீது கொண்ட ஆர்வம் ஒரு பக்கம்; மாணவர்களை எழுதவைக்க வேண்டும் என்ற வேட்கை மறுபக்கம்! 1986ஆம் ஆண்டு ஒரு புதுமையான மாத இதழ் தொடங்கினேன். பெயர்: ஹிலால் (பிறை). அது ஒரு தட்டச்சு இதழ். டைப்ரைட்டரில் தட்டச்சு செய்து, ஜெராக்ஸ் எடுத்து, அட்டையை இணைத்து ‘பின்’பண்ணி தனிச்சுற்றுக்கு மட்டும் வெளியிட்டு வந்தோம். ‘இஸ்லாமியப் பல்கலை இதழ்’ எனும் அடையாளத்தோடு வெளிவந்த ஹிலாலில், சூடான தலையங்கம், திருக்குர்ஆன், நபிமொழி, சட்டம், கொள்கை, வரலாறு, அரசியல், அறிவியல், பொருளாதாரம், கேள்வி&பதில், மருத்துவம், ஊர்வலம்... எனப் பல்வேறு இயல்களாகப் பிரித்து, ஒவ்வோர் இயலுக்கும் தகுதிவாய்ந்த அறிஞர்களைக் கண்டறிந்து கட்டுரைகள் வாங்கி பிரசுரித்தோம்.

மாணவர்கள் சிலரும் ஹிலாலில் எழுதினார்கள். சில மாதங்களிலேயே அச்சுக்கு மாறியது; பின்னர் வடிவம் சற்றுப் பெரியதாக மாற்றப்பட்டது. மாணவர்களின் உதவி, ஆசிரியர்கள் சிலரின் ஒத்துழைப்போடு ஹிலால் வளர்ந்தது. பத்திரிகை அச்சாகி வந்தபின் கவர் சுற்றி, முகவரி எழுதி, அஞ்சலில் சேர்ப்பது போன்ற பணிகளில் என் குடும்ப உறுப்பினர்களும் ஈடுபட்டதுண்டு. இருப்பினும், நிதி நெருக்கடி, விநியோகம், சந்தா புதுப்பித்தல் ஆகிய பணிகளைச் சீராகத் தொடர முடியவில்லை. இனியும் வெளியிட்டால் கையைக் கடிக்கும் என்ற கட்டத்தில் -வேறு வழியின்றி- இதழை நிறுத்த வேண்டியதாயிற்று.

சில ஆண்டுகளுக்குப்பின் ‘லஜ்னத்துல் ஹுதா’ என்ற மன்றத்தின் சார்பாக ‘அல்ஹுதா’ எனும் மாத இதழ் தொடங்கப்பட்டது. அதற்கு ஆசிரியராக என்னை நியமித்தனர். பின்னர் ‘அல்ஹுதா’வே ‘மனாருல் ஹுதா’ எனப் பெயர் மாறியது. ஹிலாலில் பின்பற்றிய அதே அடிப்படையில் பல்கலை இதழாக மானருல் ஹுதா மலர்ந்தது. ஆலிம் எழுத்தாளர்கள் மட்டுமன்றி, கவிக்கோ அப்துர் ரஹ்மான், தி.மு. அப்துல் காதிர், வழக்குரைஞர் நீடூர் சயீத் போன்ற பிரபலங்களும் மனாரில் எழுத முன்வந்தார்கள்.

நான் ஆசிரியராகப் பணியாற்றிய 5 ஆண்டுகளும் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களையும் சமூகப் பிரச்சினைகளையும் இவ்விதழ் இதமாக விவாதித்தது. வாசகர்களின் ஐயங்களுக்கு ஒளிவுமறைவின்றி விளக்கமாக விடை பகர்ந்தது. குறிப்பாக, கடைசிப் பக்கம் கலாசாரச் சீரழிவுகளைப் படம்பிடித்துக் காட்டியது. இதனாலேயே அப்பக்கம் பலரால் துண்டுப் பிரசுரங்களாய் வெளியிடப்பட்டுப் பரவலாக்கப்பட்டது.

வ்வாறே, பாகியாத் சார்பாக ‘தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன்’ எனும் திருக்குர்ஆன் விரிவுரை தமிழில் வெளியிடுவதென நிர்வாகம் முடிவு செய்து, அதற்காக நான்கு ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. மரியாதைக்குரிய கமாலுத்தீன் ஹள்ரத், பி.எஸ்.பி. ஹள்ரத், சதகத்துல்லாஹ் ஹள்ரத் ஆகியோருடன் நானும் இக்குழுவில் நியமிக்கப்பட்டேன். 1992இல் முதல் தொகுதி வெளியிடப்பட்டது.

இவ்வாறு, நான் இருந்தபோதே மூன்று பாகங்கள்வரை தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன் பணி நிறைவடைந்தது. மக்களிடம் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது.

1994
ஆம் ஆண்டு, சென்னை ரஹ்மத் அறக்கட்டளை சார்பாக ஸஹீஹுல் புகாரீ நபிமொழித் தொகுப்பின் தமிழாக்கம் முதல் பாகம் வெளிவருகறிது. அப்போது பாகியாத் முதல்வராக இருந்த மௌலானா, பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்களிடம் அணிந்துரை வாங்குவதற்காக அறக்கட்டளை நிர்வாகிகள் வேலூர் வந்தனர். தமிழாக்கத்தின் அச்சுப் படியையும் உடன் எடுத்துவந்திருந்தனர்.

முதல்வர் அவர்கள் உடனே என்னை அழைத்து, அப்பிரதியைக் கொடுத்து, இதைப் பார்வையிட்டு திருத்தங்கள் இருப்பின் எழுதிக்கொடுக்குமாறு பணித்தார்கள். நானும் படித்துப் பார்த்துச் சில திருத்தங்களைப் பரிந்துரைத்தேன். அத்தோடு முதல்வருடன் சேர்ந்து அணிந்துரையையும் தயார் செய்து கொடுத்தேன். அந்த முதல் பாகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலை ஹள்ரத் அவர்களே வெளியிட்டார்கள். இப்படித்தான் ரஹ்மத் அறக்கட்டளையோடு என் உறவு தொடங்கியது.

புகாரியின் இரண்டாவது பாகத்திற்கு இதே விதமாகப் பங்காற்றினேன். மூன்றாம் பாகத்தின் மேலாய்வுப் பணியை, பாகியாத்தில் இருக்கும்போதே என்னிடம் ஒப்படைத்தார்கள். அறிமுகம் ஏற்பட்டதிலிருந்தே சென்னைக்கு வந்துவிடுமாறு அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து கடிதம் எழுதினார் அறங்காவலரும் நிறுவருமான முஸ்தஃபா பாய் அவர்கள்.

நெருங்கிய ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் நான் ஆலோசனை கேட்க, சிலர் வேண்டாம் என்றனர்; சிலர் யோசித்துக்கொள்ளுங்கள் என்றனர்; பலர் பச்சைக்கொடி காட்டினர். அல்லாஹ்வும் நாடிவிட்டான். 1998 பிப்ரவரி 4ஆம் நாள் சென்னை ரஹ்மத் பதிப்பகத்தின் தலைமை மொழிபெயர்ப்பாளராகப் பொறுப்பேற்றேன். பாகியாத்திலிருந்து விடைபெற்றபோது ரூ. 3650 என் ஊதியம். பணிக்கொடையாக (கிராஜுடி) ரூ. 34,355 வழங்கப்பட்டது.



நன்றி: 
படங்கள் பாகியாத் இணையதளம்
http://www.baqiyath.com/english/index.php

Wednesday, May 06, 2015

நான் ஓர் ஆசிரியராக... [பகுதி 1]

உங்களுடன் நான் மனம்விட்டு... - 15


ற்றல் மூலம் மனிதன் தன் அறியாமையை அகற்றிக்கொள்கிறான் என்றால், கற்பித்தல் மூலம் பிற மனிதனின் அறியாமையை அகற்றுகிறான். அது சுயநலம் என்றால், இது பொதுநலன். பசி, பட்டினி, பிணி, பீடை, ஏழ்மை, கீழ்மை, அநியாயம், அநாசாரம், மூடநம்பிக்கை, மூடத்தனம்... என ஒவ்வொரு சவால்களையும் தனித்தனியே எதிர்கொள்வதைவிட, அறியாமை எனும் சவாலை எதிர்கொண்டு வாகை சூடிவிட்டாலே, மற்றவை தாமாகப் பின்வாங்கிவிடும். அறியாமைதான் எல்லா வீழ்ச்சிக்கும் முதற்புள்ளி.

இந்த மகத்தான பணியைச் செய்பவரே ஆசிரியர், அல்லது ஆசான். இறைத்தூதர்கள், சான்றோர்கள், பெரியார்கள், சீர்திருத்தவாதிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாம் இப்பணியில் தங்களை ஏதோ ஒரு வகையில் ஈடுபடுத்திக்கொண்டவர்கள்தான். ஏனெனில், ஆசிரியர் பணி, வழிகாட்டும் ஒரு தொண்டாகும். சுருங்கக்கூறின், இது தலைமுறை உருவாக்கப் பணியாகும். ஆசிரியர் பணியில் ஈடுபடுவோரின் எண்ணத்தைப் பொறுத்து, இப்பணிக்கு இறைவனிடமும் வரவேற்பு உண்டு; அவன் அளிக்கும் வெகுமதியும் உண்டு.

இதனாலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இறைவன் என்னைக் கற்றுக்கொடுப்பவனாகவே அனுப்பியுள்ளான் என்று தெரிவித்தார்கள் (முஸ்லிம்).

மற்றொரு நேரம், ‘‘நன்மைக்கு வழிகாட்டுபவர், அதைச் செய்தவர் போன்றவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (திர்மிதீ)

ள்ளிப் பருவத்திலேயே ஆசிரியர் பணிமீது தீராத காதல் கொண்டிருந்தேன் என முன்பே ஒரு தொடரில் தெரிவித்திருந்தது நினைவிருக்கும். 1974ஆம் ஆண்டு மத்ரசா கல்வி முடிந்து விடுமுறையும் வந்தது. ஏதேனும் ஒரு அரபிக் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைக்காதா என ஏங்கினேன். அதற்காக நான் கடிதம் எழுதாத மத்ரசாவே இல்லை. பின்னர் சில மத்ரசாக்களுக்கு நேரில் சென்றும் வேலை கேட்டுப் பார்த்தேன். எங்கும் வேலை கிடைக்கவில்லை.

வேறு வழியின்றி, வேலூர் சென்று பாக்கியாத் ஆசிரியர்களிடம் ஆலோசனை கலந்ததில், மரியாக்குரிய கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள். உத்தரப் பிரதேச மாநிலம் தேவ்பந்திலுள்ள தாருல் உலூம்மத்ரசா சென்று தவ்ரத்துல் ஹதீஸ்’ (நபிமொழிப் பிரிவு) வகுப்பில் சேர்ந்து ஓராண்டு கற்று வருமாறு சொன்னார்கள். அதற்காக முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டு தில்லி புறப்பட்டேன். அங்கிருந்து தேவ்பந்த். நான் கற்றிருந்த உருதுமொழிதான் இப்பயணத்தில் எனக்கு உதவியது.

நுழைவுத் தேர்வு முடிந்து வகுப்பிலும் சேர்ந்து சுமார் ஒரு மாதம் ஓடியிருக்கும். நான் எழுதிய கடிதத்திற்குத் தாயாரிடமிருந்து வந்த பதிலில், ஓதியது போதும்; ஊருக்குத் திரும்பி வந்துவிடு என்று கட்டளையிட்டிருந்தார்கள். நீண்ட தொலைவு ஒரு காரணம்; அறிமுகமற்ற ஊர்; உணவுப் பழக்கம் வேறு; மொழி வேறு. இப்படி பல அச்சங்கள் அம்மாவுக்கு! ஒருவேளை தந்தை இருந்திருந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பார்கள். முன்பே இறந்துபோனதால், நான் ஓராண்டு கல்வியை இழந்துபோனேன். வேறு வழியின்றி ஊர் திரும்பினேன்.

ரில் ஓய்வில் இருந்த எனக்கு வேலூரிலிருந்து தகவல்! பள்ளபட்டி மக்தூமிய்யா மத்ரசாவிற்கு ஆசிரியர் தேவை; அங்கு செல்லவும் என்றது தகவல். 1976ஆம் ஆண்டு! மூன்று வகுப்பு (ஜும்ரா)வரை. இரண்டு ஆசிரியர்கள்! சுமார் 15 மாணவர்கள்; பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள். இவர்களுக்கு அரபி இலக்கணம் மற்றும் இலக்கியப் பாடங்கள் நடத்திப் புரியவும் வைக்க வேண்டும். சவாலான பணி!

சிரத்தையோடு வகுப்பெடுத்தேன். புரியவைக்கப் பல யுக்திகளைக் கையாண்டேன். பெரும்பாலும் அரபி மத்ரசாக்களில் பாடம் நடத்தும் முறை என்னவென்றால், அரபி மொழியிலுள்ள பாடநூலை வாசித்து, வார்த்தைக்கு வார்த்தைத் தமிழில் பொருள் செய்து, பிறகு மொத்தமாக வாக்கியத்திற்குப் பொருள் கூறி, அடுத்து அதன் கருத்தை எடுத்துச்சொல்லி புரியவைக்க முயல்வார்கள். மாணவன் அரபிச் சொல்லை உள்வாங்குவானா? சொற்பொருளைப் புரிவானா? மொத்த வரியின் பொருளையும் அதையடுத்து கருத்தையும் மூளையில் ஏற்றுவானா?

இதனால் அப்போதே ஒரு வழியை &அதுவும் ஒருசில ஆசிரியர்கள் எங்களுக்குக் காட்டிய முறையை-& கையாளத் தொடங்கினேன். அது இதுதான்: பாடப்புத்தகத்தைத் திறந்தவுடன் அன்றைய பாடத்தின் கருவை, ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் செலவழித்து, எளிய & பேச்சுவழக்கில் & தாய்மொழியில் உதாரணங்களோடு விளக்கிச் சொல்லிவிடுவேன். தேவையானால் கரும்பலகையில் எழுதிப்போட்டு விளக்கவும் செய்யலாம்! மேட்டர் புரிந்தபிறகு, வாசகத்தைப் படித்துப் பொருள் கூறும்போது மாணவர்களுக்கு எளிதாகப் புரிந்துவிடும். புதிய அரபிச் சொற்கள் இருப்பின், குறிப்பேட்டில் எழுதிவைத்துக்கொள்ளப் பணிக்கலாம்! ஆக, வார்த்தை முந்தியதா? விளக்கம் முந்தியதா? என்பதே கேள்வி! விளக்கத்தை முதலில் சொல்லிவிட்டால், வார்த்தையை அடுத்துப் பார்த்துக்கொள்ளலாம் என்பதே நான் வகுத்துக்கொண்ட வழிமுறை!

தலைமை ஆசிரியராக இருந்த வேலூர் மீரான் அன்சாரி ஹள்ரத் அவர்கள், ‘‘எதற்காக இவ்வளவு அலட்டிக்கொள்கிறீர்கள்? இந்த மாணவர்கள் என்ன பெரிய ஆசிரியர்கள் ஆகப்போகிறார்களா? அல்லது பேச்சாளர்கள் ஆகப்போகிறார்களா? ஏதோ சுமாராக நடத்திவட்டுப் போங்கள்என்றார்கள். எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. இருந்தாலும், எதையும் திருத்தமாகவும் ஈடுபாட்டோடும் செய்வதே என் இயல்பு. அதன்படியே பணியைத் தொடர்ந்தேன்.

என் உழைப்பு வீணாகவில்லை. கடின உழைப்பிற்கு & இம்மையிலோ மறுமையிலோ & பலன் இல்லை என்றால், உழைக்க ஆள் இருக்கமாட்டான். உழைப்பில் சலிப்பு ஏற்பட்டால் பிழைப்பு என்னாவது? பத்து பதினைந்து மாணவர்களில் பள்ளபட்டி கே.எம். அஷ்ரப் அலீ என்ற மாணவர் என் உழைப்பின் பலனாக உருவானார். பின்னாளில் வேலூர் பாக்கியாத்திலும் என்னிடம் பயின்றார். அடுத்து அதே மக்தூமிய்யா மத்ரசாவில் 12 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், 14 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பையும் வகித்துச் சிறப்பித்தார் மௌலவி, கே.எம். அஷ்ரப் அலீ ஃபாஸில் பாகவி. தமது 52 வயதிலேயே இறந்துவிட்டார்.

இவ்வாறுதான், மௌலவி, எஸ். ரஃபீஉத்தீன் பாகவியும் இதே வயதில் மறைந்துவிட்டார். நல்ல எழுத்தாற்றலும் பேச்சுத் திறமையும் வாய்த்தவர். இப்படி இளம் வயதில் நம் மாணவர்கள் இறக்கும்போது சொந்தப் பிள்ளைகளே பிரிந்துவிட்ட உணர்வுதான் ஏற்படுகிறது.

பொ
துவாக எந்த மாணவரையும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. பாடப் புத்தகத்தில், தேர்வில் மதிப்பெண்கள் பெறுவதில், பேச்சு மற்றும் எழுத்தில் மாணவர்கள் சிலர் பின்தங்கியிருக்கலாம். ஆனால், வேறு விதமான திறமைகள் அவருக்குள் ஒளிந்திருக்கக்கூடும். அதைக் கொண்டு அவரிடம் அல்லாஹ் பிற்காலத்தில் வேலை வாங்கக்கூடும். அப்படி பல மாணவர்களை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். எடுத்துக்காட்டுக்குச் சிலரைக் குறிப்பிடுவது அனைவருக்கும் ஒரு பாடமாக அமையலாம். இவர்கள் பாடத்தில் சுமார்தான்; ஆனால், சாதனையில் முன்னுதாரணங்கள்.

கொடுவாயூர் மௌலவி, எஸ்.என். ஜஅஃபர் சாதிக் பாகவி, அவர்களில் ஒருவர். இவர் பட்டம் பெற்றபின் கணினி தொழில்நுட்பத்தைச் சுயமாகக் கற்றுக்கொண்டார். படிப்படியாக முன்னேறி, இன்று சமநிலைச் சமுதாயம்எனும் பிரபல மாத இதழின் ஆசிரியராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சிறந்த பேச்சாளர்; கவிஞர்; பாடகர்; பத்திரிகையாளர். முதல் மதிப்பெண் பெறாததால் முதல் இடம் இவருக்கு நழுவிப்போய்விடவில்லை. மதிப்பெண்ணைக் கொண்டு மதியை மதிப்பிட வேண்டாம்.

இன்னொருவர், தேவதானப்பட்டி மௌலவி, முஹம்மது ஹுசைன் மன்பஈ. இவர் இமாமாகப் பணியாற்றிய இடங்களில் நற்பெயர் எடுத்தவர்; சமுதாய அறநெறி வாழ்க்கைக்காக உழைத்தவர்; நல்ல பேச்சாளர். இன்று பெரியகுளம் அருகில் ஒரு பெரிய கலைக்கூடத்தை நிறுவி, இருவழிக் கல்வி முறையை [ஞிuணீறீ ஷிஹ்றீறீணீதீus ஷிஹ்stமீனீ] அளித்துவருகிறார். அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரிஎன்பது அவர் தொடங்கிய மத்ரசாவின் பெயர். இப்போது 40 மாணவர்கள் பயில்கிறார்கள்; 5 ஆசிரியர்கள் பயிற்றுவிக்கிறார்கள். கல்லூரிக்காகத் தனியிடம் வாங்கி, பள்ளிவாசலுடன் வகுப்பறைகள், மாணவர் விடுதி... என உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இதே பாடத்திட்டத்தில் இன்ஷா அல்லாஹ் பெண்களுக்கான ஒரு கல்லூரி உருவாக்கும் திட்டமும் அவருக்கு உண்டு.

வத்திராயிருப்பு மௌலவி, கா. அஹ்மத் அலீ பாகவி, பள்ளபட்டி மௌலவி, ஜி.எம். தர்வேஷ் ரஷாதி, சேலம் மௌலவி, அபூதாஹிர் பாகவி, சென்னை முஜீபுர் ரஹ்மான் பாகவி, பரங்கிப்பேட்டை கலீல் பாகவி, இன்னும் என் நினைவுக்கு வராத பல சாதனையாளர்கள். இவர்களெல்லாம் படிக்கிற காலத்தில் புள்ளிகளாக இல்லாவிட்டாலும் இன்று சமுதாயத்தில் முக்கியப் புள்ளிகளாக மிளிர்கிறார்கள்; தம் சேவைகளால்.

1977
 மற்றும் 1978 ஆகிய இரண்டாண்டுகள் அதிராம்பட்டினம் ரஹ்மானிய்யா மத்ரசாவில் ஆசிரியர் பணியாற்றினேன். அதிரை அப்துல் லத்தீஃப் ஆலிம் சாஹிப் அவர்களே அப்போது அதன் முதல்வர். தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவராகவும் இருந்தார்கள். நான் அப்போது சபையின் மாவட்டத் துணைச் செயலாளர். சபை சார்பாகப் பருவப் பிரசுரங்கள் வெளியிடுவது வழக்கம். பல்வேறு தலைப்புகளில் அப்பிரசுரங்களை எழுதும் பொறுப்பை தலைவர் என்னிடம் கொடுத்திருந்ததால், அப்போதே என் எழுத்து அச்சில் வெளிவரும் வாய்ப்புக் கிடைத்தது.

அங்கு என்னிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலரது பெயர், ஊர் மறந்துபோயிற்று. இப்படி நிறைய மாணவர்கள் நினைவில் இல்லை. சிலர் நேரில் சந்திக்கும்போது தங்களை அறிமுகப்படுத்திக்கொள்கையில் நினைவுக்கு வரும்; அப்போதும் நினைவில் வர மறுக்கும் மாணவர்களும் உளர். தொடர்பு இல்லாததே காரணம்! உறவு மலர தொடர்பு என்ற நீர் பாய்ச்ச வேண்டும். இல்லையேல் உறவு பட்டுப்போகும் என்பது உண்மை. அதிலும் வேலூர் பாக்கியாத்தில் தமிழக மாணவர்கள் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாணவர்களும் மலேசியா, இலங்கை, மாலத்தீவு போன்ற வெளிநாட்டு மாணவர்களும் கல்வி பயின்றனர். அவர்களில் ஒருசிலரைத் தவிர மற்ற யாரும் ஞாபகத்தில் இல்லை.

1979 மற்றும் 1980 ஆகிய இரண்டாண்டுகள் திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் மஃக்னமுஸ் ஸஆதாஅரபி மத்ரசாவில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினேன். அது ஒரு கிராமம். சாதாரண எளிய மக்கள். அன்புக்குப் பஞ்சமில்லை. பள்ளிவாசலை ஒட்டியே மத்ரசா. வசதிகள் இல்லாத தங்கும் விடுதி. வகுப்பறைகளும் அவ்வாறுதான். பள்ளிவாசல் வளாகத்திலும் பாடங்கள், தேர்வுகள் நடப்பதுண்டு. நான்கைந்து ஆசிரியர்கள்; இருபது & இருபத்தைந்து மாணவர்கள். உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஐந்து வகுப்புகள் (ஜும்ரா).

இருந்தாலும், ஒரு பெரிய மத்ரசாவிற்கான விதிமுறைகள், வகுப்பு நடத்தும் முறைகள், தேர்வுகள், மாணவர்களுக்கென ஒழுக்கநெறிகள், பேச்சுப் பயிற்சி... என அம்மத்ரசா களை கட்டியது. நாம் எடுத்த முயற்சிகளுக்கு நிர்வாகம் முழு ஒத்துழைப்புத் தராவிட்டாலும் தடையாக இல்லாததே பெரிய உதவிதான். உழைப்புக்கேற்ற பலன். மாணவர்கள் பல வகைகளிலும் தேறி வந்தனர். இவர்களில் பலர் பின்னாளில் வேலூர் பாக்கியாத்தில் சேர்ந்து பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கு அடுத்த கட்டம்தான், என் வாழ்நாளின் கனவாகவும் இலட்சியமாகவும் இருந்த ஆசிரியர் பணிகாலம். அதுவே என் முன்னேற்றத்திற்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போமே!