Wednesday, March 21, 2012

பற்றாக்குறை பட்ஜெட்



லைப்பைப் பார்த்தவுடன் இது ஓர் அரசியல் கட்டுரை என்று எண்ணிவிடாதீர்கள். வாழ்வியல் தொடர்பான கட்டுரைதான்; குறிப்பாக, குடும்பங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருத்தியலாகும்.

இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டுமன்றி, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் இப்போதெல்லாம் பற்றாக்குறை பட்ஜெட்தான் சமர்ப்பிக்கின்றன. தனிமனிதனோ ஒரு குடும்பமோ வரவுக்குமேல் செலவு செய்தால், எப்படி அன்றாட வாழ்க்கையில் திணÁறுவார்களோ அப்படித்தான் ஒரு நாடும் அந்நாட்டு குடிமக்களும் திணறுவார்கள்.

வரவு ஆயிரம்; செலவு இரண்டாயிரம் என்றால், துண்டுவிழும் ஆயிரத்தைச் சமாளிக்க கடன் வாங்க வேண்டும். சும்மா கடன் கொடுக்க யாருமில்லாத இந்தக் காலத்தில், வட்டி வாங்கவும் தயங்கமாட்டார்கள். ஒருவரிடம் வாங்கிய கடனை, அல்லது வட்டியை அடைக்க இன்னொருவரிடம் கடன் வாங்க வேண்டும். இது சுழற்சி முறையில் நடந்துகொண்டிருக்க, வாழ்க்கையில் சுதந்திரம், நிம்மதி, சுகாதாரம் எல்லாம் பறிபோய்விடும்.

இதற்கு இரண்டே வழிகள்தான் தீர்வாக இருக்க முடியும். துண்டுவிழும் ஆயிரத்தைச் சொந்தமாகச் சம்பாதிக்க வழிதேடி, கூடுதலாக உழைக்க வேண்டும். அல்லது வந்துகொண்டிருக்க வருவாய் ஆயிரத்தைக் கொண்டே தேவைகளை நிவர்த்தி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது தேவைகளைக் குறைத்துக்கொண்டு, சிக்கனமாகவும் கட்டுப்பாடாகவும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த இரண்டாவது அம்சமே 90 விழுக்காடு மனிதர்களுக்கும் குடும்பங்களுக்கும் வசப்படும் என்று நினைக்கிறேன். நான் என் நிம்மதிக்காக வாழ வேண்டுமே தவிர, பிறர் பார்த்து மதிக்க வேண்டும் என்பதற்காக வாழக் கூடாது. அப்படி வாழ முனையும்போதுதான், தேவையில்லாத நெருக்கடிகளுக்கும் சிக்கல்களுக்கும் நான் ஆளாக வேண்டிவருகிறது.

அடுத்தவர் மதிப்பதால் கிடைக்கும் தாற்காலிக அற்ப சுகம் உங்களின் பசியைப் போக்கவோ அறியாமையை அகற்றவோ உதவப்போவதில்லை. அது ஒரு போலித்தனமான வெற்று மரியாதை என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். நான் நானாக இருந்தால்தான், என் அடையாளம் அழியாமல் இருக்கும்; பிறரிடம் பெயர் வாங்க, மரியாமதை பெற வாழத் தொடங்கினால், எனது சுய அடையாளம் தொலைந்துபோய்விடும்.

இது தனிமனிதனுக்கு மட்டுமன்றி, வீடு, நாடு, நிறுவனம், அமைப்பு ஆகிய அனைத்துக்கும் பொருந்தும்.

2012 – 2013 இந்திய பட்ஜெட்

2012 – 13ஆம் நிதி ஆண்டுக்கான இந்திய பட்ஜெட் பற்றாக்குறை மிக்கதாகவே இருக்கிறது. மொத்த வருமானம் 9,77,335 கோடி ரூபாய். மொத்த செலவு 14,90,925 கோடி ரூபாய். பற்றாக்குறை 5,13,590 கோடி ரூபாய்.

இவற்றில் திட்டச் செலவு 5,21,025 கோடி மட்டுமே. திட்டம் சாரா செலவு 9,69,900 கோடி. ஆக, வருமானத்தைவிட செலவு 29 விழுக்காடு கூடுதலாகும்.

இதையே எளிமையாக இப்படி விளக்கலாம்: வரவு ஒரு ரூபாய் என்றால், செலவு 1.29 ரூபாய் ஆகும். அதிலும், வரவாக வரும் ஒரு ரூபாயில் 29 காசுகள் கடனாக வாங்கப்பட்டவை; சொந்தக் காசு அல்ல. அதாவது இந்த நிதியாண்டில் அரசு வாங்கப்போகும் கடனின் அளவு 4.79 லட்சம் கோடியாக இருக்கும்.

அவ்வாறே, ஒரு ரூபாய் செலவில் 8 காசுகள், அரசு வாங்கிய கடன் தொகைக்கான வட்டிக்குச் செல்கின்றன.

இந்தியக் குடும்பங்களின் பட்ஜெட்

கிட்டத்தட்ட இந்தியக் குடும்பங்களின் பட்ஜெட்டும் இந்திய அரசின் பட்ஜெட் போன்றே பற்றாக்குறை பட்ஜெட்தான். வரவைவிட செலவு அதிகம் என்ற நிலையில், பெரும்பாலான இந்தியக் குடும்பங்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றன.

இந்தியச் சமூகச் சூழ்நிலையில், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குச் செலவிடுவதைக் காட்டிலும், ஆடம்பரங்களுக்கே அதிகமாகச் செலவிடுகின்றனர். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து இது தெரியவருகிறது.


இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில், கழிப்பறை வசதி இல்லாத வீடுகள் 49.8 விழுக்காடு. அதே நேரத்தில் செல்போன் வசதி பெற்ற வீடுகள் 63.2 விழுக்காடு; தொலைக்காட்சி பெட்டி உள்ள வீடுகள் 47.2 விழுக்காடு.
இந்தியாவில் உள்ள 25 லட்சம் கிராமங்களில் வெறும் 25 ஆயிரம் கிராமங்களில் மட்டுமே கழிப்பறை வசதிகள் உள்ளன. மற்றக் கிராமங்களுக்கு திறந்தவெளியே கழிப்பிடம்.

இது அரசின் குற்றமா? அல்லது மக்களின் அலட்சியமா? இதைவிட இன்னொரு புள்ளிவிவரம் இந்திய மக்களின் ஆடம்பர மோகத்தை நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது.

2007 – 08ஆம் ஆண்டுக்கான நுகர்பொருள் செலவின இந்திய அரசு புள்ளிவிவரம் கூறுவதைப் பாருங்கள்:

நூறு ரூபாயில் 22 ரூபாய் மட்டுமே அவசிய செலவாகும். மீதி 78 ரூபாய் பகட்டுக்காகச் செய்யப்படும் செலவுகள்தானாம்.

அன்றைய விலைவாசியின்படி அவசிய செலவுகள் விவரம்:

அரிசி மற்றும் கோதுமை
ரூ. 9.60
பருப்பு வகை
ரூ. 1.10
சர்க்கரை
ரூ. 1.70
சமையல் எண்ணெய்
ரூ. 1.80
பழம் மற்றும் காய்கறி
ரூ. 7.70
மொத்தம்
ரூ. 21.90

பகட்டுச் செலவுகள் விவரம்:

புகை, பான்பராக், மது
ரூ. 4.80
தொலைபேசி
ரூ. 3.20
வாகனம் வாங்க
ரூ. 8.10
பஸ், ஆட்டோ
ரூ. 1.00
துணிகள்
ரூ. 4.60
மனமகிழ் செலவு
ரூ. 2.40
வீட்டு அலங்காரம்
ரூ. 3.30
பெட்ரால்
ரூ. 3.10
பால், டீ, காபி, ஐஸ்கிரீம்...
ரூ. 10.50
வாடகை
ரூ. 6.30
கல்வி
ரூ. 2.60
ஹோட்டல்
ரூ. 2.60
மருத்துவம்
ரூ. 5.70
இதரவை
ரூ. 19.90
மொத்தம்
ரூ. 78.10

இவற்றில் துணி, கல்வி, மருத்துவம் போன்ற செலவுகளையும் அத்தியாவசிய செலவினங்களில் சேர்த்துக்கொண்டாலும் நூறு ரூபாயில் 35 ரூபாய் மட்டுமே உருப்படியான செலவுகளாகும். மீதி 65 ரூபாய் பகட்டுக்காக, அல்லது ஊரார் மெச்சுவதற்காக வலிந்து செய்யப்படும் ஆடம்பரச் செலவுகளே. இச்செலவுகளில் பெரும்பாலானவை மனிதனைப் படுகுழியில் தள்ளக்கூடியவை என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
ஆக, அரசாங்கம் பற்றக்கூறை இல்லாத பட்ஜெட்டே போட்டாலும், மக்களிடம் சிக்கனம், சேமிப்பு, விரயமின்மை, எதிலும் நிதானம் ஆகிய உயர்பண்புகளும் பாரம்பரிய கலாசாரமும் இல்லாத வரை நிம்மதியான வாழ்வு கனவுதான்.

சிக்கனமும் சேமிப்பும்

ஒன்றைத் தேவையான அளவுக்கு மட்டுமே கவனமாகச் செலவு செய்யும் அல்லது பயன்படுத்தும் முறையே சிக்கனம்(Economy) எனப்படுகிறது. செலவு செய்வதில் கஞ்சத்தனமும் இல்லாமல், விரயமும் இல்லாமல் நடுநிலையான போக்கைக் கையாள்வது என்றும் கூறலாம்.

பசி எடுத்தும் கையில் காசு இருந்தும் மிச்சப்படுத்துவதே கஞ்சத்தனம். கையில் காசு இருக்கிறது என்பதற்காக, இரண்டு வெஞ்சனங்கள் (Side-Dish) போதும் என்றிருக்க ஐந்தாறு வெஞ்சனங்களைத் தயாரித்து, மிஞ்சுவதைக் குப்பையில் கொட்டுவது விரயம்ஆகும்.

இவ்விரண்டுக்குமிடையே தேவையை மட்டும் பூர்த்தி செய்வது சிக்கனம் ஆகும்.


அல்லாஹ் கூறுகின்றான்: (நல்லடியார்களான) அவர்கள் செலவிடும்போது விரயம் செய்யமாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையாகவே அ(வர்களின் போக்கான)து இருக்கும். (25:67)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நன்னடத்தை, நிதானம், சிக்கனம் ஆகியவை நபித்துவத்தின் 24 பாகங்களில் ஒரு பாகமாகும். (திர்மிதீ)


உணவு, உடை, உறையுள் ஆகிய அனைத்துத் தேவைகளிலும் மனிதன் நடுநிலைப் போக்கையே மேற்கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.


இருவரின் உணவு மூவருக்குப் போதும்; மூவரின் உணவு நால்வருக்குப் போதும். (புகாரீ)


அதாவது ஒருவர் வயிறு நிரம்பச் சாப்பிடும் உணவை இருவர் பகிர்ந்து உண்ணலாம். இருவர் வயிறு நிரம்ப உண்ணும் உணவைப் பகிர்ந்தால், அது மூவருக்குப் போதுமானதாகிவிடும்.


ஒரு விரிப்பு ஆணுக்குரியது; மற்றொரு விரிப்பு அவன் துணைவிக்குரியது; மூன்றாவது விரிப்பு விருந்தாளிக்குரியது. நான்காவது விரிப்பு ஷைத்தானுக்குரியது. (முஸ்லிம்)


அதாவது தேவைக்கு அதிகமான ஆடை அலங்காரங்கள் ஷைத்தானுக்கு விருப்பமான ஆடம்பரமாகவே கருதப்படும். படுக்கை விரிப்புகளில் கணவனுக்கு ஒன்று; மனைவிக்கு ஒன்று; யாரேனும் விருந்தாளி வந்துவிட்டால் அவருக்கு ஒன்று இருந்தால் போதும். அதற்குமேல் இருப்பது ஆம்பரமாகிவிடும். அதுவே ஷைத்தானுக்கான விரிப்பாகும்.

சிக்கனத்தைக் கைவிட்டுப் பகட்டுக்காக ஆடம்பரத்தில் மூழ்குவோர் குறித்து அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்:


உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் நேசிப்பதில்லை. (7:31)


நிச்சயமாக விரயம் செய்வோர் ஷைத்தான்களின் சகோதரர்ககளாகவே இருக்கின்றனர். ஷைத்தான், தன் இறைவனுக்கு நன்றி கொன்றவனாக இருக்கின்றான். (17:27)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விரயமோ தற்பெருமையே இல்லாமல் (விரும்பியதை) நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தர்மம் செய்யுங்கள். ஏனெனில், அல்லாஹ் தன் அடியார்மீது அவன் வழங்கிய அருட்கொடை(யின் அறிகுறி)யைப் பார்க்க விரும்புகிறான். (முஸ்னது அஹ்மத்)

சேமிப்பு

பணம், உணவுப் பொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை, நாளைய தேவையைக் கருதி சேமித்துவைப்பது, இறைவன்மீது கொண்ட நம்பிக்கைக்கு முரணாகாது. மாறாக, குடும்பத்தாருக்காக உணவுப் பொருட்களைச் சேமித்துவைக்கலாம் என்பதற்கு ஆதாரம் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்தக் குடும்பத்தாரிடம் பேரீச்சம்பழங்கள் (சேமித்துவைக்கப்பட்டு) உள்ளனவோ அவர்கள் பசித்திருக்கமாட்டார்கள். (முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘ஆயிஷா! பேரீச்சம்பழம் இல்லாத வீட்டாரே பட்டினி கிடக்கும் வீட்டார் ஆவர் என்ற இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்)

ஆக, சிக்கனமும் சேமிப்பும் இல்லாத குடும்பம் அல்ல்ல்படும். அரசாங்கம் என்னதான் திறமையாக பட்ஜெட் போட்டாலும், குடும்பங்கள் குறிப்பாக, தாய்மார்கள் சரியான குடும்ப பட்ஜெட் போடாவிட்டால் பற்றாக்குறையும் பதற்றமும்தான் வீடுகளில் எதிரொலிக்கும். பெண்கள் படிக்க வேண்டும் என்று சொல்வதே, குடும்பத்தின் வருமானத்தை அறிந்து பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போட்டு, குடும்பத்தைத் திறமையாக நிர்வகிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒரு பெண், குடும்பப் பொறுப்புகளை உதறித்தள்ளிவிட்டு, வேலைக்குப் போய் பணம் சம்பாதிப்பதற்கல்ல படிப்பு. குழந்தைகளை அறிவார்ந்தவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வளர்த்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை சேர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment