Monday, December 01, 2014

இதற்கெல்லாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும்!

உங்களுடன் நான் மனம் விட்டு - 04


ன்னதான் ஆலிம்கள் (மார்க்க அறிஞர்கள்)மீது சமூகத்திற்கு மனக்குறையும் வருத்தமும இருந்தாலும்ஆலிம்கள்என்ற ஒரு குழுவின் இருப்பும் சேவையும் எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் அறிவர்.

திருக்குர்ஆனைப் பார்த்து ஓத, அதை மனனம் செய்ய, மொழிபெயர்க்க, அதற்கு விளக்கவுரை சொல்ல, எழுத, நபிமொழிகளுக்கு மொழிபெயர்ப்பும் விளக்கமும் எடுத்துரைக்க, இஸ்லாமியச் சட்ட விதிகள், நடைமுறைகள், கலாசாரம், பண்பாடு, வழிபாடு, தனிமனித ஒழுக்கம், குடும்ப உறவு, சமூக அமைப்புஎன எல்லாவற்றுக்கும் மார்க்கத்தின் பாதையைக் காட்ட முறைப்படி மார்க்கம் கற்ற அறிஞர்கள் இருந்தாக வேண்டும்.

ஆலிம்களின் வாழ்க்கைத் தரம் பொதுமக்கள் பார்வையில் இரங்கத் தகுந்ததாக இருந்தாலும், இறைவனிடம் அவர்களுக்கு மரியாதை உண்டு. இறைத்தூதரின் பாராட்டுக்கும் இறைஞ்சுதலுக்கும் உரியவர்கள் அவர்கள்.

யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்க (விளக்கமுடைய) அறிஞராக்குகிறான்என்பது நபிமொழி. (புகாரீ) 

உங்களில் சிறந்தவர் குர்ஆனைத் தாமும் கற்றுப் பிறருக்கும் கற்பிப்பவர் ஆவார்என்பதும் நபிமொழிதான். (புகாரீ)

என் மொழியைச் செவியுற்று, அதைக் காத்து மனனமிட்டுப் பிறருக்கும் எட்டச் செய்கின்றவரை அல்லாஹ் செழிப்பாக்குவானாக!” என்பது நபிகளாரின் துஆ. (திர்மிதீ)

எந்தச் செல்வமும் வசதியும் பெயரும் புகழும் இதற்குமுன் நிற்கவே முடியாது என்பது திண்ணம். வேறு யாருடைய பாராட்டோ பரிசோ இதற்குமேல் ஆலிம்களுக்குத் தேவையில்லை. உண்மையிலேயே, இறைவாக்கையும் இறைத்தூதர் மொழியையும் படித்து, உணர்ந்து, தெளிவடையும்போது அனுபவிக்கின்ற பேரின்பத்திற்கு உலகில் நிகரே கிடையாது.

நான் இதைத் தினமும் அனுபவிக்கின்றேன். அல்லாஹ்வே நம்முடன் நேரில் உரையாடுவதைப் போன்றும் அல்லாஹ்வின் தூதரே நமக்குப் பாடம் நடத்துவதைப் போன்றும் உணர்கின்ற தருணத்தைவிட வாழ்க்கையில் வேறென்ன சுகம் இருக்க முடியும்? இறைமறையும் நபிஉரையும் தெரிந்தபின், வேறு எந்தத் தத்துவமும் எனக்குப் புதியதாகவும் இல்லை; பெரியதாகவும் இல்லை.

சிலவேளைகளில், மொழிபெயர்ப்புகளை மேலாய்வு செய்யும்போது குர்ஆனுடனும் ஹதீஸுடனும் ஒன்றிப்போய், சுற்றுப்புறத்தை மறந்து நானாகச் சிரித்ததுண்டு; நானாக அழுததுமுண்டு; நானாக வாய்விட்டு லயித்ததுமுண்டு. அப்போது தம்ளரில் ஊற்றிவைத்த பாலோ தேநீரோ மறந்துபோகும்; ஆறிஅலந்துபோகும். சிந்தனைக்கு விருந்து கிடைக்கும்போது வயிற்றுக்கு ஈய வேண்டியதில்லை; மனம் நிறையும்போது வயிறு பசிப்பதில்லை.

என் தந்தை எனக்குக் கொடுத்துச்சென்ற செல்வங்களிலேயே மார்க்கக் கல்வியைத்தான் நான் ஒப்பில்லா செல்வமாகக் கதுதுகிறேன். ஆனாலும், என்ன? மகனின் உரையைக் கேட்டு மகிழவோ மகனின் எழுத்துகளைப் படித்துப் பரவசமடையவோ என் தந்தை உயிருடன் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு.

எங்கள் ஊரில் (திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை) எங்களது குடும்பம் விவசாயக் குடும்பம். என்னோடு சேர்த்து சகோதர சகோதரிகள் 10பேர். மூவர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். என் தந்தை மார்க்கப் பற்றும் சுன்னத்மீது பிடிப்பும் உள்ளவர்கள். பெயர்: அப்துல் அஸீஸ் கான். ‘சின்னவர் ஹாஜியார்என அழைப்பார்கள். எங்கள் தெருவுக்குத் தந்தையின் பெயர்தான் (அஸீஸ்கான் தெரு).

என் சகோதரர்கள் ஒவ்வொருவரும் அரபி மதரசாவின் படியை மிதித்தவர்கள்தான். ஆனால், நானும் என் தம்பி காதர் சையித் மன்பஈயும்தான் ஆலிம்கள் ஆனோம். மற்றவர்கள் இடையிலேயே ஊர் திரும்பியவர்கள். தம்பியும் தொழிலில் ஈடுபட்டவர். இப்போது அவரும் இல்லை. இறந்துவிட்டார்.

என் தந்தையின் கனவு என்மூலமே நனவானது. என் தந்தையின் துஆ மட்டுமன்றி, பெரிய ஆலிம்களின் துஆவும்தான் என்னை ஆலிமாக்கியது என்பேன். ஒரு தடவை ஊரில் ஜமாஅத்துல் உலமா கூட்டம். வந்த ஆலிம்களுக்கு எங்கள் வீட்டில் விருந்து. ஆலிம்கள் உணவருந்தி முடித்தபின் என் தந்தை அவர்கள் முன்வைத்த கோரிக்கை ஒன்றுதான்: உங்களைப் போன்று ஓர் ஆலிம் எங்கள் வீட்டில் உருவாக துஆச் செய்ய வேண்டும்! அவ்வாறே துஆ செய்தார்களாம்! அப்போது நான் பள்ளி மாணவன்.

வேலூர் பாக்கியாத்தில் மெலவி ஆலிம் பட்டம் (1972), மௌலவி ஃபாஸில் பட்டம் (1974) பெற்றபின், அடுத்த ஆண்டு (1975) பல்கலைக் கழகத் தேர்வானஅஃப்ஸலுல் உலமாஇறுதியாண்டுத் தேர்வுக்காக பாக்கியாத்தில் தங்கியிருந்தேன். அப்போதுதான் பாக்கியாத்தின் நூற்றாண்டு விழா நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த விழாவில் என் தந்தையும் கலந்துகொண்டார்கள். அடுத்த சில மாதங்களில் இறந்துவிட்டார்கள்.

நான் மதரசாக்களில் ஓதுகின்ற மாணவப் பருவத்திலேயே, சிறிய வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்ததுண்டு. சொல்லப்போனால், சிறு வயதில் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகளில், பள்ளிக்கூடம் வைத்து விளையாடும் விளையாட்டும் ஒன்று. பள்ளியில் படித்தபோது எங்கள் வீட்டுத் திண்ணையில் சிறுவர்களுக்கு ஆங்கிலம், தமிழ், கணக்கு என்று எதையேனும் சொல்லிக்கொடுப்பது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. கதை சொல்லி சிறுவர்களைக் கட்டிப்போடும் கற்பனை வளமும் சிறுவயதில் என்னிடம் இருந்ததை நினைத்தால், இப்போது என்னாலேயே நம்ப முடியவில்லை.

உள்ளூரில் ஆரம்ப குர்ஆன் பாடசாலையில் (மக்தப்) ஓதும்போது, கீழ் வகுப்புப் பாடங்களை நடத்துகின்ற பொறுப்பும் பிள்ளைகளைக் கண்காணிக்கும் பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. சிறுவர்களுக்கு அரபிப் பாடம் நடத்துதல், திக்ர் பயிற்சி, தொழவைத்துப் பழக்குவது போன்ற பயிற்சிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டேன். ஆக, ஆசிரியர் பணிமீது இயல்பாகவே எனக்கோர் ஈர்ப்பு உண்டு.

எனவே, ஆலிமான பிறகும் ஏதேனும் ஓர் அரபிக் கல்லூரியில் ஆசிரியர் பணியில்தான் சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதே நேரத்தில், இமாம் சேவைமீது வெறுப்பு என்று பொருளாகாது. அதன்பால் கவனம் திரும்பவில்லை; அவ்வளவுதான்! இருப்பினும், நம் நாட்டில் இமாமத் சேவையில் உள்ள நெருடல்கள் குறித்து, அதில் பல்லாண்டு அனுபவம் பெற்ற இமாம்கள் சொன்னதை மறக்க முடியவில்லை.

மஹல்லாவில் எல்லாருடைய அழைப்புக்கும் கேள்விக்கும் பதில் சொல்வது, கூப்பிட்டவர் வீடுகளுக்கெல்லாம் சென்று கத்தம் ஃபாத்திஹா ஓதுவது, பிடித்ததோ பிடிக்கவில்லையோ எல்லா விருந்துகளிலும் விசேஷங்களிலும் கலந்துகொள்வது, தீமைகளை எதிர்த்துப் பொதுவாக உரையாற்றினாலும் என்னைத்தான் இமாம் சாடினார் என்று குதர்க்கம் செய்பவரைச் சமாளிப்பது, விதிவிலக்காகத் தவிர சமூகத்தில் இருக்கும் கண்ணியக் குறைவான பார்வை, இமாம் சொந்தமாகத் தொழில் செய்ய முனைந்தால் அதற்கு வரும் நேரிடையான, அல்லது மறைமுகமான எதிர்ப்பு, நிர்வாகம் நினைத்த நேரத்தில் பணி நீக்கம், காலத்திற்கு ஒவ்வாத ஊதியம்எனப் பட்டியலிடுகிறார்கள் அனுபவசாலிகள்.

ஆனால், இமாம்களின் தகுதி உயர்வானது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை நடத்துபவர் (இமாம்தொழுகையாளர்களுக்கு) பொறுப்பாளர் ஆவார். தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) நம்பப்படுபவர் ஆவார். இறைவா! இமாம்களுக்கு நீ நல்வழிகாட்டு! ‘முஅத்தின்களின் பாவங்களை மன்னித்துவிடு! (திர்மிதீ)

1980இல் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்வதற்குமுன் 5 ஆண்டுகள் வெவ்வேறு சிறிய கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றினேன். பாக்கியாத்தில் 18 ஆண்டுகள் (1980-1998) ஆசிரியராகப் பணிபரிந்தேன். ஆக, மார்க்கக் கல்வியோடு எனக்குள்ள தொடர்பு 50 ஆண்டுகளாகும் (கற்றல்-9, கற்பித்தல்-23, மொழிபெயர்ப்பு-18).

என் மூத்த மகன் ஒரு சாஃப்ட்வேர் பொறியாளர். சென்னையில் ஒரு நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெஸ்டிங் பிரிவில் குழுத் தலைவராகப் பணியாற்றுகிறார். அமைதியானவர்; இரைந்துகூடப் பேசத் தெரியாது. வேலூரில் துவக்கப் பள்ளியில் படித்து முடித்தவுடன், ‘தீனிய்யாத்பாடங்கள் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது என் ஆசை. பிளஸ்-2 முடித்தபின் ஆலிமாக்கிவிடலாம் என்றும் மனத்தளவில் திட்டம். ஆம்பூர் ஆணைக்கார் ஓரியண்டல் பள்ளியில் சேர்த்துவிட்டேன்.

சும்மா சொல்லக் கூடாது; அப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் பையன் சேர்ந்தாலும் அரபி மொழிப்பாடம், குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹு என இஸ்லாமியப் பாடங்களும் கற்றார். கண்டிப்பான தலைமை ஆசிரியர்அப்துர் ரஷீத் அவர்கள்- இருந்ததால் ஒழுக்கப் பயிற்சிகளுக்கும் குறைவில்லை. விடுதியில் தங்கிப் படித்ததால் வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளும் தெரிந்திருக்கும். அத்துடன் விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது என்னிடம் அரபு இலக்கணப் பாடமும் சிறிது கற்றார்.

பையன் பிளஸ்-2 முடித்தபின் நான் சென்னை வந்துவிட்டேன். பையனின் விருப்பம், குடும்பத்தாரின் யோசனை, காலத்தின் கட்டாயம் என எல்லாம் சேர்ந்து அவரை பி.எஸ்ஸி (கம்ப்யூட்டர் சைன்ஸ்) படிப்பில் சேர்த்துவிட்டன. முதுகலைப் பட்டப்படிப்பிற்காக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எம்.எஸ் (ஐடி) படிப்பில் சேர்ந்து படித்துமுடித்தார்.

ஆக, என் தந்தை ஆலிமாக இல்லாமலிருந்தும் குடும்பத்தில் ஒரு ஆலிமை உருவாக்கிவிட்டுச் சென்றார்கள். நான் ஆலிமாக இருந்தும் என் குடும்பத்தில் ஒருவரை ஆலிமாக்கும் பேறு கிடைக்கவில்லை. இது எனக்கு உறுத்தல்தான் என்பதில் சந்தேகமில்லை. பேரக் குழந்தைகளிலாவது யாரேனும் ஒருவர் ஆலிமானால் நான் சந்தோஷப்படுவேன். தமிழகத்தில் மார்க்கக்கல்வி கற்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுவருகிறது. இந்நிலை மாற வேண்டும்! இதற்கெல்லாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை!

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்
இன்னொரு தலைப்பில் மனம்விட்டுப் பேசுவோம்.
_______________________

No comments:

Post a Comment