உங்களுடன் நான் மனம்விட்டு... - 05
பி
|
றப்பால் வந்த உறவு, கலப்பால் (திருமணம்) வந்த உறவு –அல்லது கவிக்கோ சொல்வதன்படி, இரத்த உறவு, முத்த உறவு- ஆகியவற்றால் மனிதன் பலம் பெறுவதைப் போன்றே, மூன்றாவது ஒரு உறவாலும் அவனுக்குச் சில வேளைகளில் ஆதரவு கிடைக்கிறது; வசந்தத்தின் வாசல் திறக்கிறது. அந்த ஆதரவு சில சந்தர்ப்பங்களில் மற்றதைவிட வலுவான திருப்புமுனையாக அமைந்துவிடுவதும் உண்டு. அதுதான் நட்பால் கிடைக்கும் உறவு.
குடும்பத்தில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியாத சில உள்விவகாரங்களை உற்ற நண்பனிடம் பகிர்ந்துகொள்வதோடு யோசனையும் தீர்வும்கூடக் கேட்கலாம்! உறவுகளைப் பிரிந்து எங்கோ வாழ்பவனுக்கு
உறவாக இருந்து dஊக்கமளிப்பான்
உண்மையான நண்பன்.
மனிதன் எப்போதும்
அணுக்கத்தை, ஆதரவை
எதிர்பார்ப்பவன்; ஆலிங்கனத்தை ஆசிப்பவன். தனிமை அவனைக் கொல்லும். சிறிது நேரத்திற்கு வேண்டுமானால் தனிமை (பிரைவேசி) இனிமை தரலாம். அதுவே நீடிக்கும்போது என்னவெல்லாமோ நடந்துவிட அதிக வாய்ப்பு உண்டு.
மனம் விட்டுப் பேச, அன்றைய நிகழ்வுகளைப் பரிமாறிக்கொள்ள, நாளைய பொழுதைச் சிக்கலின்றி எதிர்கொள்ள நம்மீது அக்கறை கொண்ட ஓர் உயிர் வேண்டும்! இல்லையேல், தலை வெடித்துவிடும். அந்த விரக்தியை விரட்ட, கெட்ட துணையை நாடுகின்ற அவலம்கூட நேர்ந்துவிடக்கூடும்! அந்தத் துணை மதுவாக இருந்தாலும் அழிவுதான்; மாதுவாக இருந்தாலும்
அழிவுதான்!
நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் வாழ்க்கைப் பயணத்தில் பல தோழர்களைச் சந்தித்தே ஆவீர்கள்; அவர்களையெல்லாம் தவிர்க்க முடியாது. அவர்களின் தோழமையை ஒதுக்க முடியாது. தெருத் தோழன், விளையாட்டுத் தோழன், வகுப்புத் தோழன், விடுதித் தோழன், அறைத் தோழன், பயணத் தோழன், பணித் தோழன்… என ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவரது தோழமையை, அன்புத் தொல்லையைச் சகித்துத்தான் தீர வேண்டும்!
அப்படி அமையும் நண்பன் நல்லவனாக இருந்துவிட்டால், நமது சுற்றுச்சூழலும் ரம்மியமாக அமைந்துவிடும். ‘நல்லவன்’ என்பதற்குப் பொருள், படிப்பில் கெட்டிக்காரன்; பணியில் திறமைக்காரன்; பார்வைக்கு எடுப்பானவன்; கைநிறைய சம்பாதிப்பவன் – இவையெல்லாம் அல்ல! இவை திறமை, தகுதி சார்ந்தவை. திறமைமிக்கவர் எல்லாரும் நல்லவர் என்று எப்படிச் சொல்ல முடியும்? திருடுவதற்கும் இலஞ்சம் வாங்குவதற்கும் தோழியை வலையில் சிக்கவைப்பதற்கும்கூடத் திறமை தேவைதான். இவர்களெல்லாம் நல்லவர்களா?
‘நல்லவன்’ என்பது நடத்தை சார்ந்தது; குணம் சார்ந்தது. நற்குணமும்
நல்ல பண்பாடும்
நன்னடத்தையும் உள்ளவனே
நல்ல நண்பன்.
பொய் பேசமாட்டான்; திருடமாட்டான்; வஞ்சிக்கமாட்டான்; குடிக்கமாட்டான்; கெட்டவர்களோடு
பழகமாட்டான்; தவறான பாலுறவு வைத்துக்கொள்ளமாட்டான்.
இறைநம்பிக்கை, இறையச்சம், இறைவழிபாடு, மறுமை குறித்த அச்சம், தர்ம சிந்தனை, பிறர் குறை மறைத்தல், சக மனிதர்களை மதித்தல், நாகரிகமான பேச்சு, கண்ணியமான உடை, பிறர் துயர் துடைத்தல், குற்றங்கள்மீது வெறுப்பு, இரக்கம், பொறுமை, நிதானம், உண்மை, நேர்மை… போன்ற உயர் பண்புகளும் நற்செயல்களும் உள்ளவனே நல்லவன் ஆவான்.
நமக்கு உதவாவிட்டாலும் உபத்திரவம் செய்யக் கூடாது. நாம் தோற்றுப்போகும்போது ஆறுதல் கூறுவான். வெல்லும்போது மகிழ்வான். உதவ முடியவில்லையே என்று வருந்துவான். தட்டிக்கொடுப்பான்; காட்டிக்கொடுக்கமாட்டான். தூக்கிவிடுவான்; எழுப்பிவிடுவான்; கடன் கொடுப்பான்; கடன் கேட்கக் கூசுவான். நம் இரகசியங்களைக் காப்பான். நண்பனின் நல்ல குணம் உங்களையும் தொற்றலாம்! கெட்ட குணமோ வேகமாகப் பரவும்.
தீமைக்குத் தோள் கொடுப்பதே இன்றைக்குத் தோழர்கள்தான். இருவருக்கிடையே இல்லாத காதலை உருவாக்குவது, உடைந்த காதலை ஒட்டவைப்பது, காதலுக்காகப் பெற்றவர்களையும் உறவுகளையும் உதறித் தள்ளிவிட்டு வெளியேற ஊக்கமளிப்பது, பதிவுத் திருமணத்திற்கு முன்னிற்பது… இப்படி எல்லா அசிங்கங்களையும் அரங்கேற்றம் செய்துவிட்டு, டைவர்ஸ் ஆனபின் காதலர்களைக் கைவிட்டுத் தலைமறைவாகிவிடுவது. இதுதான் நட்பா? இந்தக் கேவலமான நட்பு தேவைதானா? இதனால்தான், நல்ல நண்பனுக்கும் கெட்ட நண்பனுக்கும் இவ்வாறு எடுத்துக்காட்டு கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள்:
நல்ல நண்பனுக்கு உதாரணம், கஸ்தூரி வைத்திருப்பவன். அவனிடமிருந்து உனக்கு ஏதேனும் கிடைக்காமல்போகாது. நீ அதை (அவனிடமிருந்து) விலைக்கு வாங்கலாம். அல்லது அன்பளிப்பாகப் பெறலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம். கெட்ட நண்பன் கொல்லனின் உலை போன்றவன். அவனது உலை உன் வீட்டை, அல்லது உன் ஆடையை எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து துர்வாடையையாவது நீ அடைந்தே தீருவாய். (ஸஹீஹுல் புகாரீ)
1970
|
களின் தொடக்கம்! நான் நான்காம் ஆண்டு ‘மௌலவி ஆலிம்’ வகுப்பில் சேர்வதற்காக அந்த மதரசாவில் சேர்ந்திருக்கிறேன். அன்றைக்கு அது சற்று பெரிய அரபிக் கல்லூரி. ஊர் புதிது; மனிதர்களும் புதியவர்கள். மாணவர்களில் யாரும் நெருங்கி வரவில்லை. வகுப்புத் தோழர்கள் மட்டும் சேர்ந்து பாடம் படிப்பதற்காக ஒட்டுவார்கள்.
அடுத்த ஆண்டில் ஒரு நண்பர் கிடைத்தார். நட்பு இரண்டு வகை. எல்லாரிடமும் அன்பாகச் சிரித்துப் பேசி, பொதுவாகப் பழகுவது ஒரு வகை. இன்னொரு வகை, ஆழமான உற்ற நட்பு. எனக்குக் கிடைத்த நண்பர் இரண்டாம் வகை. உண்பது, உறங்குவது, வெளியே உலாவுவது எல்லாம் ஒன்றாக! நிறம் கொஞ்சம் கம்மி! உயரமும் அப்படித்தான்! வசதிகூடக் குறைவு.
இதனால் நண்பனுக்குச் செலவு செய்யும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது. குளித்துவிட்டு கைலியைக் குளத்துப் படியில் போட்டுவிட்டுப் போய்விடுவார். நானே அதை எடுத்து அலசி காயப்போடுவேன். காலை உணவை வாங்கி வைத்துக்கொண்டு, சாப்பிடக் கூப்பிட்டால், சிலவேளை சாப்பிட வரமாட்டார். அன்றைக்கு நானும் பட்டினிதான்.
அடிக்கடி
உடல்நலக் குறைவு
ஏற்படும்போதெல்லாம்
நண்பருக்கு நானே
உதவி. ஒரு
தடவை, மதரசா
விடுமுறை நேரம்.
மதரசா ஆசிரியர்
ஒருவருக்குத் திருமணம்.
நண்பரின் ஊருக்குப்
பக்கத்து ஊரில்
திருமணம் நடக்கிறது.
நண்பருடன் நானும்
கலந்துகொள்ளப் பயணம்
புறப்பட்டோம். இடையிலேயே
நண்பருக்குக் கடுமையான
காய்ச்சல்.
ஒரு
அறையில் அவர்
ஓய்வெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
நானும் நண்பருடன்
அறையில் சிறை.
நண்பரை அருகில்
இருந்து கவனித்துக்கொண்டேன்.
அவர் உறங்க,
நான் விழித்திருந்து
விசிறிவிட இரவு
கழிந்தது. அன்றைய
திருமண நிகழ்ச்சியில்,
மதரஸா மாணவர்கள்
இருவர், மணமக்களை
வாழ்த்திப் பாட்டிசைத்தனர்.
பாட்டுச் சப்தம்
ஒலிபெருக்கி உதவியால்
என் செவிகளை
எட்டியது.
பாடல்களின்
வரிகள் நினைவில்
இல்லாவிட்டாலும்
பாட்டின் மெட்டிசை
இன்னும் பசுமையாக
நினைவிருக்கிறது.
அன்றைய பிரபல
பாடல் ஒன்றின்
இசை! அதை இன்று கேட்க நேர்ந்தால்கூட நண்பர், காய்ச்சல், விழிப்பு, திருமண நிகழ்ச்சி… அப்படியே நினைவுத் திரையில் ஓட ஆரம்பித்துவிடும்.
இவ்வளவு ஆழமான நெருக்கத்திற்குக் காரணம் இல்லாமலில்லை. நண்பரின் அசாத்தியமான அறிவாற்றலும் நினைவாற்றலும் முதல் காரணம். வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போதே விஷயத்தை நன்கு புரிந்துகொண்டு, மனத்தில் பதிய வைத்துக்கொள்வார். அத்துடன் சந்தேகம் என்ற பெயரில் குறுக்குக் கேள்வி கேட்டு ஆசிரியரையே மடக்கிவிடுவார். சில நேரங்களில் விவாதம் முற்றி, வகுப்பறை நாடாளுமன்றமாக மாறிவிடுவதும் உண்டு.
ஒவ்வொரு நாள் பாடத்தையும் இரவில் மாணவர்கள் திரும்பப் படிப்பார்கள். நண்பர் பாடப் புத்தகத்தைத் தொடவேமாட்டார். தேர்வுக்காக எல்லாரும் விழுந்துவிழுந்து படித்துக்கொண்டிருப்பார்கள். நண்பர் குமுதம், கல்கண்டு என்று ரிலாக்ஸாகப் பொழுதைக் கழிப்பார். தேர்வு முடிவில் நண்பருக்குத்தான் முதலிடம். ஆராய்ச்சி, புரட்சிகரமான சிந்தனை, புதுமை நோக்கு எல்லாம் இருந்தன.
இதையெல்லாம்விட நண்பரிடம் என்னைக் கவர்ந்த அம்சம் அவரது எளிமை. ஆடம்பர வாழ்க்கைக்குக் குடும்பப் பின்னணி ஒத்துவராது என்றாலும்கூட, எளிமை அவரது இயல்பாகவே இருந்தது. உறங்குவதற்குப் பாயோ தலையணையோ தேடமாட்டார். இரு கைகளைத் தலையணையாக்கி, உடுத்திய ஆடையையே விரிப்பாக்கிப் படுத்தவுடன் உறங்கிப்போய்விடுவார். இது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. உணவு உண்ண கையில் காசு இல்லாதபோது பட்டினிகிடப்பார். வதனத்தில் வாட்டம் வெளிப்படாது.
மாணவர்களின் பேச்சுப் பயிற்சி மன்றத்தில் கலந்துகொள்வதில்லை. கலந்துகொண்டாலும் பேசுவதில்லை. மன்றத்தில் பேசி நான் பார்த்ததே இல்லை. ஆனால், இன்று பெரிய பேச்சாளர்; எழுத்தாளர்; பத்திரிகையாளர்.
மன்றத்தில் பேசிப்
பழகியவர்களெல்லாரும் வியக்கும் அளவிற்கு,
அவர் உரைகள்
இன்று உச்சத்தில்.
தேவை வரும்போது
திறமையும் கூடவே
வரும் என்பார்களே! அது நண்பர் விஷயத்தில் நூறு விழுக்காடு உண்மை.
ஆக, அவர்தான் எனக்கு முதல் நண்பரும்; கடைசி நண்பரும். நான் அவர்மீது கொண்டிருந்த நட்பு அளவிற்கு என்மீது அவருக்கு நட்பு இருந்ததா என்பதை இன்றுவரை என்னால் தீர்மானிக்க இயலவில்லை. வாழ்க்கையின் நீரோட்டத்திற்கேற்ப மனிதர்களைத் தேடிக்கொள்ளும் குணமாக இருக்குமோ! தெரியவில்லை. அவர் ஒரு கடிதம் எழுதிவிட்டால், நான் நான்கு கடிதங்கள் எழுதிவிடுவேன். பல நேரங்களில் பதில்மடல் வராது.
என் திருமணத்திற்கு வருமாறு அழைத்தேன். உடல் நலிவுற்று சிறகொடிந்த பிறவையாகப் படுத்துக் கிடக்கிறேன் என்ற கடிதம்தான் வந்தது. அவருடைய அண்ணன் திருமணத்தில் நான் கலந்துகொண்டேன். ஆனால், நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. பழிக்குப் பழி என்றார்.
அரபியில் ஒரு பழமொழி உண்டு: இடைவெளிவிட்டு சந்தி! அன்பு அதிகமாகும்! அதாவது ரொம்பவும் உரசினால் தீதான் பற்றும்; அல்லது வெடித்துச் சிதறும். இதைவிட ஆழமானதொரு தத்துவத்தை நட்பு தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்திருப்பதுதான் ஹைலைட்.
உன் நண்பனையும் ஓர் அளவோடு நேசி! ஒருநாள் அவனும் உன் பகைவனாகலாம்! உன் பகைவனையும ஓர் அளவோடு பகை! அவனும் ஒருநாள் உன் நண்பனாகலாம்! (திர்மிதீ)
என்ன அழகான தத்துவம்! இதுவெல்லாம் அப்போது எங்கே தெரிந்தது? நண்பன்மீது நேசம் காட்டுவதானாலும் பகைவனைப் பகைப்பதானாலும் அளவோடுதான் இருக்க வேண்டும். காலமும் சூழ்நிலையும் மாறும்போது நண்பன் பகைவனாகிவிடலாம். அப்போது வருத்தப்பட வேண்டியதிருக்கும். அவனுக்கு இவ்வளவு செலவழித்தேனே! இரகசியங்களைக்கூடப் பகிர்ந்துகொண்டேனே! அவனுக்காகப் பலரைப் பகைத்தேனே! இன்றைக்கு எனக்கே அவன் விரோதியாகிவிட்டானே! என்று புலம்ப வேண்டியதுவரும்.
அவ்வாறே, பகைவன் நண்பனாகிவிடலாம்! அளவுக்கதிகமாக ஒருவன்மீது வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அவனே நண்பனாகும்போது அவன் முகத்தில் எப்படி விழிப்பது என்று நாண வேண்டியதுவரும். எனவே, நேசமும் கோபமும் தொடக்கத்திலிருந்தே நடுநிலையோடு இருந்துவிட்டால் சிக்கல் இல்லை.
அரபுக் கவிஞர் ஒருவர் சொன்னார்:
நிதானம்! நிதானம்!
கோபத்திலும் தாபத்திலும்.
வெளிப்படும் புதிய முகம்
வெளிறிவிடும் பழைய முகம்.
சென்னை ரஹ்மத் பதிப்பகத்தின் 20ஆவது வெளியீடான ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், மூன்றாம் பாகத்தில் இடம்பெறும் இந்த விளக்கத்தை நான்தான் எழுதியும் உள்ளேன். ஒத்த சிந்தனையும் ஒருமித்த கருத்தும் ஒன்றுபட்ட நம்பிக்கையும் இருந்தால்தான் இருவரிடையிலான நட்பு தொடரும். இல்லையேல் நண்பனும் பகைவனாகலாம்!
எல்லாம் சரி! உங்கள் நண்பன் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? ஒரு சின்ன க்ளூ: 4+2 Letters
இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் சந்திப்போம்
No comments:
Post a Comment