செ
|
ன்னை ஆயிஷா பதிப்பகத்தார் வெளியிட்டுவரும் வரலாற்றுப் பெரும் தொடர்களில் ஏழாவது பாகம் வெளிவந்திருக்கிறது. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! இது, இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது வரலாற்றில் மூன்றாம் பாகமும் ஆகும்.
இது, வரலாற்றாய்வாளர் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் அரபி மொழியில் எழுதிய ‘அல்பிதாயா வந்நிஹாயா’ (ஆரம்பமும் முடிவும்) என்ற நூலின் தமிழாக்கம் என்பது தெரிந்ததே! மூல மொழியான அரபியும் இலக்கு மொழியான தமிழும் செம்மொழிகளாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
மொழிபெயர்ப்பு என்பது, நெருப்பில் நடப்பதற்கு ஒத்த சவாலான பணி. அதற்குக் கடுமையான உழைப்பும் கவனமும் அடிப்படை தேவைகள். அதிலும் மார்க்க நூல்கள் எனும்போது உச்சபட்ச உஷார்நிலை அவசியம். இரு மொழி அறிவு, துறைசார்ந்த நுட்பம், இலக்கண, இலக்கியப் புலமை, எழுத்தாற்றல்… எனப் பல்வேறு தகுதிகள் மொழிபெயர்ப்பாளரிடம் கட்டாயம் இருக்க வேண்டும். மூல நூலாசிரியரின் கருத்தை உள்வாங்கி, அவர் நோக்கம் சிறிதும் சிதையாவண்ணம் இலக்கு மொழியில் இறக்குவதுடன், வாசகர்களைச் சோதனைக்குள்ளாக்காமல் படித்ததும் புரிகின்ற வகையில் மொழிபெயர்ப்பை அமைக்கும் திறன் படைத்தவராக அவர் இருக்க வேண்டும்.
அப்போதைக்குச் சிக்குகிற ஏதோ ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் செய்கின்ற தவறான போக்கு காணப்படுவதாகக் கவலைப்படுகிறார் மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி.
“அந்த ஆர்வம் வணிக நோக்கமாக மாறியதால், பல மொழிபெயர்ப்புகள் அரைவேக்காட்டுத்தனமாகிவிட்டன” என்று வருந்துகிறார் குறிஞ்சிவேலன்.
மொழிபெயர்த்த பிறகு, இரு மொழிகளும் தெரிந்த வேறொருவர், அதைக் கவனமாகப் படிக்க வேண்டும். பிறகு, இலக்கு மொழி மட்டுமே அறிந்த ஒருவரைப் படிக்கச்சொல்லி, அவர் சொல்கிற திருத்தங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படித்தான் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன –என்று கூறும் மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன், “இப்போதெல்லாம் ஒரே நபர், ஒரே ஆண்டில் பல நூல்களை மொழிபெயர்க்கிறார்; இவற்றின் நம்பகத்தன்மை ஐயத்திற்குரியது” என்று ஆதங்கப்படுகிறார்.
நபிகளார் வரலாறு
இந்த வகையில் இந்நூலும் ஒரு மொழிபெயர்ப்பு நூல்தான். இது தயாராக ஓராண்டுக்குமேல் ஆகியுள்ளது. மௌலவி, அன்வருத்தீன் பாகவி அவர்கள் மொழிபெயர்க்க, மௌலவி, முனைவர் V.S. அன்வர் பாதுஷாஹ் உலவீ அவர்கள் மேலாய்வு செய்துள்ளார். மொழிபெயர்ப்பு இயன்றவரை சரிபார்க்கப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாகத்தில் நபிகளார் காலத்துப் போர்கள் தொடர்பான வரலாறு இடம்பெறுகிறது. நபிகளார் காலத்து அறப்போர்கள் இரு வகைப்படும். 1. ஃகஸ்வா. நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் கலந்துகொண்ட போர். இத்தகைய போர்கள் மொத்தம் 19. அவற்றிலும் நபியவர்கள் நேரடியாகப் பங்குபெற்ற போர்கள் பத்ர், உஹுத் உள்ளிட்ட 8 போர்களாகும்.
2. சரிய்யா (படைப்பிரிவு). நபிகளார் கலந்துகொள்ளாமல் தோழர்களை அனுப்பிவைத்த படைப்பிரிவுகள். இவை 38. ஆகமொத்தம், சிறிதும் பெரிதுமாக 57 போர்கள் நபியவர்களின் காலத்தில் நடந்துள்ளன.
ஆயினும், இத்தனைப் போர்களிலும் சேர்த்து இரு தரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்பு சில நூறுகளே! கொல்ல வந்த எதிரிகளுடன் போரிடுவதற்கு, உடனுக்குடன் இறைவன் அனுமதியளிக்கவில்லை. இஸ்லாமியப் பரப்புரையை மேற்கொண்டு மக்காவில் 13 ஆண்டுகளும் மதீனாவில் 2 ஆண்டுகளுமாக மொத்தம் 15 ஆண்டுகளாக எதிரிகளின் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து, பதிலடி தராமலேயே நபியவர்கள் பொறுமை காத்தார்கள். பிரச்சினை வாழ்வா சாவா என்ற கட்டத்தை அடைந்து, தற்காப்பு நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதைத் தவிர வேறு எழியில்லை என்ற நிலையில்தான் போருக்கான அனுமதியே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது.
போர் மேகம்
மக்கா நகரைப் பொறுத்தவரை, நபி (ஸல்) அவர்களின் சொந்த குலத்தாரான குறைஷியர், அவர்களுடன் நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த அரபுக் குழுக்கள், சுற்றுப்புறங்களில் வாழ்ந்த இணைவைப்பாளர்கள் எனப் பல தரப்பினரிடமிருந்து இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கடும் எதிர்ப்பு நிலவியது. சுதந்திரமாக வழிபாட்டை நிறைவேற்றவோ ஓரிறைக் கோட்பாட்டை எடுத்துச்சொல்லவோ வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளைச் சந்தித்து உரையாடவோகூட உரிமை மறுக்கப்பட்டது.
விளிம்பு நிலையில் இருந்த முஸ்லிம்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்; சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள். நபியவர்களின் இரத்த உறவுகளான ஹாஷிம் குடும்பத்தார் ஊர்விலக்கம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் வேதனை அனுபவித்தார்கள். இறுதியாக, ஒருநாள் இரவு நபி (ஸல்) அவர்களின் இல்லத்தை முற்றுகையிட்டு, அந்த ஒளிவிளக்கை அணைத்துவிட முடிவு செய்தார்கள். அப்போதுதான், இறைவனின் ஆணையின்பேரில் நபிகளார் மதீனா நகருக்குப் புலம்பெயர்ந்தார்கள்.
மதீனாவில் இறைமார்க்கத்திறகு நல்ல வரவேற்பு இருந்தது. மக்காவிலிருந்தும் அபிசீனியாவிலிருந்தும் வந்த முஸ்லிம்கள் மதீனாவில் குடியேறினர். மக்காவில் மறுக்கப்பட்ட சுதந்திரம் மதீனாவில் கிடைத்தது. ஆனாலும், அங்கேயும் நபிகளாருக்கு எதிரிகளும் துரோகிகளும் இருந்தனர்.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, மதீனாவின் புறநகர்ப் பகுதியில் யூதர்களில் மூன்று குலத்தார் வசித்துவந்தனர். 1. பனுந் நளீர் 2. பனூ கைனுகா 3. பனூ குறைழா. இவர்களின் முன்னோர்கள், இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகை குறித்து தங்கள் வேதத்தில் படித்திருந்தனர். இறுதித் தூதர் புலம்பெயர்ந்துவரும் பூமியின் அடையாளங்களையும் தெரிந்துவைத்திருந்தனர். தேடிக் கண்டுபிடித்து மதீனாவில் குடியேறினர்.
அவர்களின் எதிர்பார்ப்பு, வரவிருக்கும் இறுதித் தூதர் தங்கள் இனத்தில்தான் தோன்றுவார் என்பதாக இருந்தது. ஆனால், அரபியரில் ஒருவர் நபியாக ஆக்கப்பட்டிருப்பதை அறிந்த மறு விநாடியே நபியவர்களை மறுத்தது மட்டுமன்றி, அன்னாருக்கு விரோதிகளாகவும் மாறிவிட்டனர். இருந்தாலும் மக்கள் செல்வாக்கோடு நபிகளார் மதீனா வந்து சேர்ந்தபிறகு, அன்னாருடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தனர்.
அவ்வாறே, மதீனாவுக்குள்ளேயே நம்பிக்கைத் துரோகிகள் பலர் இருந்தனர். இவர்கள் வெளியே முஸ்லிம்களாகக் காட்டிக்கொண்டார்கள்; அந்தரங்கத்தில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானவர்களாக இருந்தனர். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பார், இந்த ‘முனாஃபிக்’களின் தலைவர் ஆவார். இவர் பனூ அவ்ஃப் பின் அல்கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவர்.
நபி (ஸல்) அவர்களின் வருகைக்குமுன் ஒட்டுமொத்த மதீனாவாசிகளுக்கே தலைவராக விளங்கிய அவருக்கு, மக்கள் கிரீடம் சூட்டி அழகுபார்க்க இருந்தனர். இதற்குள் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் வர, மக்களின் கவனமும் எதிர்பார்ப்பும் அவர்கள்மீது பதிய, அப்துல்லாஹ் பின் உபைக்குப் பெரும் ஏமாற்றமாகப் போயிற்று. ஏமாற்றம் ஏக்கமாகி எதிர்ப்பாக உருவெடுத்துவிட்டது.
ஆனாலும் மக்களின் அமோக ஆதரவு நபிகளாருக்கு இருந்ததால், உள்ளடி வேலைகளில் மட்டுமே அவரால் ஈடுபட முடிந்தது. இவர்களை நபியவர்களுக்கு அல்லாஹ் இனம் காட்டவும்செய்தான். ஆயினும், சமூக அமைதியைக் கருத்தில் கொண்ட நபிகளார், நயவஞ்சகர்களை மக்களுக்கு வெளிப்படையாக அடையாளம் காட்டவில்லை.
போர்களின்
பின்னணி
முஸ்லிம்கள் மதீனாவில் பாதுகாப்போடு இருப்பதும் இஸ்லாம் வளர்ந்துவருவதும் நபியவர்களின் செல்வாக்கு அண்டைநாடுகள்வரை அறியப்பட்டதும் மக்கா குறைஷியரின் உள்ளத்தில் பகைமைக் கனலை மேலும் தூண்டிவிட்டது. அது போர்த் தீயாய் எரியத் தொடங்கியது. முஹம்மதின் தலையைக் கொண்டுவருபவருக்கு இத்தனை ஒட்டகங்கள் எனத் தலைக்கு விலை வைத்தனர். மதீனாவைத் தாக்குவோம்; முஸ்லிம்களை இரண்டில் ஒன்று பார்க்காமல் ஓயமாட்டோம் எனப் போர் முரசு கொட்டினர்.
இவர்களுக்கு ஆதரவாக, இவர்களின் நட்புக் கூட்டத்தாரும் சேர்ந்துகொண்டனர். முஸ்லிம்களுடன் சமாதான உடன்பாடு கண்டிருந்த மதீனா யூதர்கள் அதையும் மீறி, போர்த் தீ அணையாமல் பார்த்துக்கொண்டனர். இந்த யூதர்களுடன் கைகோத்து முஸ்லிம்களைக் காட்டிக்கொடுத்தனர், வாயளவில் ‘கலிமா’ சொன்ன மதீனா நயவஞ்சகர்கள். இப்படித்தான் ஒவ்வொரு போரையும் முஸ்லிம்கள்மீது வலுக்கட்டாயமாகத் திணித்தனர் எதிரிகள்.
இத்தனைக்குப் பிறகும் வாளாவிருக்க முடியுமா? சொல்லுங்கள்! எதிரி, வாளைக் கழுத்தில் வைத்து வெட்ட வருகிறான் என்பது வெள்ளிடை மலையாகத் தெரியும்போது, வேடிக்கை பார்த்துக்கொண்டு சோம்பல் முறிக்க முடியுமா? சொல்லுங்கள்! கயவர்களுக்குமுன் அடி உதவுவதைப்போல் அன்பெல்லாம் உதவாது; பலம் துணை நிற்பதுபோல் நலம் துணை நிற்காது. அங்கே அமைதி பேசுவதும் கை கொடுக்காது.
எனவே, திணிக்கப்பட்ட போரை எதிர்கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் இல்லாமல்போயிற்று. உயர்ந்தோன் அல்லாஹ்வும் அறப்போருக்கு அனுமதியளித்தான். எதிரிகளைக் களத்தில் சந்தித்தார்கள். பல போர்களில் வெற்றிவாகை சூடினார்கள். எதிரிகள் சிதறினர். பணிந்தனர். பெரும்பாலோர் இஸ்லாத்தில் இணைந்தனர்.
அப்போதுகூட, போரில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களைத் தம் தோழர்களுக்கு உணர்த்த நபியவர்கள் தவறவில்லை. முதியோர், மகளிர், குழந்தைகள் போன்றோரைப் போரில் தாக்கக் கூடாது; வழிபாட்டுத் தலங்களை இடிக்கக் கூடாது; நெருப்பால் வேதனை செய்யக் கூடாது… என்பன போன்ற ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு சோல்ஜர்களுக்கு ஆணையிட்டார்கள்.
இந்நூலில் முதல் போரான ‘அப்வா’ விலிருந்து ‘தாத்துர் ரிகா’ போர்வரையிலான விவரங்கள் இடம்பெறுகின்றன. படித்துப் பயனடையுங்கள். நண்பர்களையும் படிக்கத் தூண்டுங்கள்.
ஆக, அந்தத் தாயுள்ளத்தின் மீது திணிக்கப்பட்டவையே இப்போர்களாகும்! என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்! வாளால் பரவிய மார்க்கம் அல்ல இஸ்லாம் என்ற உண்மையை உணர்த்துங்கள்.
இந்தச் சிறப்புமிகு நூலை மொழிபெயர்த்த ஆயங்குடி மௌலவி, அ. அன்வருத்தீன் பாகவி அவர்களும் மேலாய்வு செய்த மௌலவி, முனைவர் V.S. அன்வர் பாதுஷாஹ் உலவீ அவர்களும் அனைவரின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.
மகத்தானதொரு வரலாற்றுத் தொகுப்பைத் தொடர்ந்து பதிப்பித்து வெளியிட்டுவரும் ஆயிஷா பதிப்பகத்தார் M. சாதிக் பாட்ஷா, J. இக்பால்கான் ஆகியோருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் ஈருலக நன்மைகளையும் வளங்களையும் வழங்கிடுவானாக!
அன்புடன்
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை –
600 014.
06.03.2017
__________________________
No comments:
Post a Comment