*ஜமாஅத்துல் உலமாவைப் பாராட்டுவோம்!*
முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து, தமிழகமெங்கும் சமுதாயத்தை ஒன்றுதிரட்டி, கடும் கண்டனம் தெரிவிக்கின்ற முக்கியப் பணியை தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை சிறப்பாக சாதித்துவிட்டது. இதை மனமாரப் பாராட்ட வேண்டும்.
காரணம், இச்சட்டம் அஸ்திவாரத்தையே அசைத்துப்பார்க்கும் மிகப் பெரிய சதித் திட்டமாகும். முத்தலாக் செல்லுமா, செல்லாதா என்பதில் சிற்சில கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், ஒரு சிவில் விவகாரத்தை கிரிமினல் விவகாரமாக மாற்றுவதை முஸ்லிம் ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும் ஏற்கமாட்டார்கள்.
இந்த வகையில், ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைக் குரலாக, இந்தக் கண்டனக் குரல்கள் தமிழ்நாடு முழுக்க ஜனவரி 5ஆம் தேதி ஒரே நேரத்தில் ஒலித்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இதற்கு அடிகோலிய, உழைத்த, ஆதரவு கொடுத்த அனைவரும் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள் என்பதில் ஐயமில்லை.
முத்தலாக் தடைச் சட்டம் மட்டுமல்ல; பலதார மணத் தடைச் சட்டம்; மதமாற்றத் தடைச் சட்டம்; குர்பானி தடைச் சட்டம்; மஹ்ரம் தடைச் சட்டம்… என இன்னும் பல ஈட்டிகள் நம்மை நோக்கி அணிவகுக்கக் காத்திருக்கின்றன. எந்த ஈட்டியையும் எதிர்கொண்டு வீழ்த்தும் திராணி இந்தச் சமுதாயத்திற்கு உண்டு. ஆனால், வழிகாட்டத்தான் ஆள் வேண்டும். அது மார்க்கம் கற்ற ஆலிம்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கண்டனக் கூட்ட மேடையில் தம்பிகள் முஜீபுர் ரஹ்மான் பாகவியும் மன்சூர் ஃபைஸியும் கண்டன முழக்கங்களை உணர்ச்சிபூர்வமாக எழுப்ப எழுப்ப, கண்ணுக்கு எட்டும் தூரம்வரை கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கைகளையும் குரல்களையும் உயர்த்தி முழங்கியது இதயத்தின் அடித்தளத்திலிருந்து ஒலித்ததாகும். ஆலிம்களே! இக்காட்சி நமக்கு ஓர் உண்மையை உணர்த்துகிறது. மார்க்கம் கற்ற நீங்கள் மட்டும் தலைமையேற்று வழிநடத்தினால், இந்தச் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கத் தயாராக இருக்கிறது! இனி, எழுவதும் முன்னுக்குப்போய் வழிகாட்டுவதும் உங்கள் கையில்தான்!
______________________
No comments:
Post a Comment