Thursday, April 25, 2019

# இந்து தமிழ் நாளிதழில் வெளியான கட்டுரைகளுக்கு கான் பாகவியின் கடிதம் #

# இந்து தமிழ் நாளிதழில் வெளியான கட்டுரைகளுக்கு கான் பாகவியின் கடிதம் #
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு…

இன்றைய (25.04.2019) இந்து தமிழ் நடுப்பக்கத்தில் வெளிவந்த இலங்கையைச் சேர்ந்த இரு எழுத்தாளர்களின் கட்டுரைகள் வாசித்தேன்.

இஸ்லாத்தை முறையாக அறிந்த எவரும் சக மனிதர்கள்மீது வெறுப்பை உமிழமாட்டார். முஸ்லிம் அடையாளத்தோடு, இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றி வாழும் அதே நேரத்தில், பிற சமூகத்தாருடன் மனிதநேயத்தோடும் இணக்கத்தோடும் வாழ முடியும்; வாழ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதச் சிறுவர் பணிவிடைகள் புரிந்துவந்தார். அவர்மீது பாசம் காட்டிவந்த நபிகளார், சிறுவர் நோயுற்று வீட்டிலிருந்தபோது, உடல்நலம் விசாரிக்க சிறுவரின் இல்லத்திற்கே சென்றுவந்ததை வரலாறு சொல்லும்.

தமிழ்நாட்டில் எங்கள் ஊரில் (திண்டுக்கல் மாவட்டம்) முஸ்லிம்களே அதிகம். ஆனால், பிற மதத்தாரோடு சொந்தம் கொண்டாடி இன்றுவரை வாழ்ந்துவருகிறோம். எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர் குஞ்சரம் பிள்ளை ஐயா. அவரை நாங்கள் ஐயா என்றே அழைப்போம். அவர் மகன் பாஸ்கரை அண்ணன் என்றே விளிப்போம். என் மூத்த சகோதரர் மகளுக்குத் திருமணம். பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பிவைத்தபோது, நாங்கள் அழுததைவிட அண்ணன் மனோகரனும் அண்ணியும்தான் தேம்பித்தேம்பி அழுதனர்.

ஊரில் பெரிய தனவந்தர் நடராஜ் நாயக்கர். அவரை மாமா என்றே அழைப்போம். அவர் என்னை, என்னடா மருமகன்! என்ன படிக்கிறாய்? எப்படி இருக்கிறாய்? எனப் பாசத்தோடு விசாரித்தது இன்றும் என் நினைவில் உள்ளது. இன்றைக்குக்கூட சென்னையில் எங்கள் வீட்டில் வேலைபார்க்கும் கற்பகத்தை என் மக்கள் ‘அக்காள்’ என்றே அழைப்பார்கள். கற்பகத்தின் சுகதுக்கங்களில் எங்கள் குடும்பமே பங்குபெறும். சலவைத் தொழிலாளியை நாங்கள் பாட்டி என்றே அழைப்போம்; பரிவு காட்டுவோம்.

சொல்லப்போனால், உண்மை முஸ்லிம் இவ்வாறுதான் நடந்துகொள்வார். இத்தனைக்கும் நான், திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழித் தொகுப்புகள் ஆகிய இஸ்லாமிய அடிப்படைத் தரவுகளை அரபிமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் குழுவின் தலைவராகக் கடந்த 23 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். என் மார்க்க அறிவு, ஒருபோதும் சக மனிதர்மீது –அவர் முஸ்லிமல்லாதவர் என்பதற்காக- விரோதம் பாராட்டச் சொன்னதே இல்லை.

தாமே இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்தோர் எனக் கருதிக்கொள்ளும் வெகுசிலர், இலங்கையில் தவறான வழிகாட்டலில் ஈடுபடுவதாக இக்கட்டுரைகள் சொல்கின்றன. இது உண்மையானால், இவர்கள் தாமும் வழிதவறி, அப்பாவிகளையும் வழிகெடுக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்தவொன்றையும் –அது உன்னதமாக இருந்தாலும்கூட- அடுத்தவர்மீது திணிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை. அப்படியிருக்க, ‘தூய்மைவாதம்’ பேசிக்கொண்டு வகுப்பொற்றுமையையும் சமூக இணக்கத்தையும் கெடுப்பதானது, இஸ்லாத்திற்கே உலைவைத்துவிடும். இதைப் பரப்புரையாக முஸ்லிம் அறிஞர்கள் வீரியத்தோடு மேற்கொள்ள வேண்டும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

25.04.2019                       
*அ. முஹம்மது கான் பாகவி*
சென்னை-14.

No comments:

Post a Comment