Monday, June 22, 2020

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா?

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா?
அ. முஹம்மது கான் பாகவி
கரோனா பிடியில் இந்தியா சிக்கி மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆயிரக்கணக்கானோரின் இன்னுயிரைப் பலிகொண்டுவிட்டது. பொருளாதாரத்தில் கோடிக்கணக்கான டாலர்களை விழுங்கிவிட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, வணிகம், உற்பத்தி, ஏற்றுமதி... என எல்லாத் துறைகளையும் நலிவடையச் செய்துவிட்டது.
ஆன்மிகத்தையும் அது விட்டுவைக்கவில்லை. ஆம்! வழிபாட்டுத் தலங்கள் பல மாதங்களாக மூடிக் கிடக்கின்றன. அங்கே தொழுகை, தியானம், திருமறை ஓதல், திக்ர் செய்தல், நல்லுரை கேட்டல்... என உளத் தூய்மைக்கும் மன ஆறுதலுக்கும் வழிவகுக்கும் அத்துணை அமல்களும் தடைபட்டுப் போயுள்ளன.

மார்க்கக் கலைக் கூடங்கள் கலையிழந்துவிட்டன. உரிய காலத்திற்கு முன்பே கட்டாய விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் நடத்தாமலும் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாமலும் தொங்கலில் விடப்பட்டிருக்கின்றன. அடுத்தக் கல்வி ஆண்டின் நிலையும் தெளிவில்லாமல் இருக்கிறது.
இமாம்கள், ஹாஃபிழ்கள், மக்தப் ஆசிரியர்கள் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோரின் நிலை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. சிலர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். பலருக்கு ஊரடங்கு கால ஊதியம், போனஸ் போன்ற பயன்கள் மறுக்கப்பட்டுள்ளன. வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்; முஅத்தினை வைத்துச் சமாளித்துக்கொள்கிறோம் என்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விதிவிலக்கு இருக்கலாம்! நல்ல முறையில் இமாம்களைக் கண்ணியப்படுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
மற்றொருபுறம் அரபிக் கல்லூரி மாணவர்களின் நிலை, இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையை நினைவுபடுத்துகிறது. மூன்றாம் ஆண்டு மாணவராக ஒருவர் இருப்பார். அந்த ஆண்டுக்கான பாடங்களை நிறைவு செய்யாமலும், செய்திருந்தாலும் தேர்வு எழுதாமலும் சென்றிருப்பார். அடுத்த ஆண்டு நிலை என்ன; எப்படி என்பதும் தெரியவில்லை.
இந்நிலையில் மாணவர்கள் சிலர், இடைப்பட்ட நாட்களில் குடும்பத் தொழில் அல்லது வேறு தொழிலில் ஈடுபட்டு, அதில் சுவை கண்டிருக்கலாம்! இனியும் அதையே தொடர்ந்தால் என்ன என எண்ணலாம்! அல்லது பள்ளி - கல்லூரியில் சேர்ந்து, விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்தால் என்ன என்றுகூட ஆசைப்படலாம்!
ஆக, ஏற்கெனவே மார்க்கப் பணியில் ஈடுபட்டுள்ள ஆலிம்களோ, மார்க்கக் கல்வி பயின்றுவரும் மாணாக்கரோ துறை மாற வாய்ப்பு இல்லாமலில்லை.
இதனால் யாருக்கு இழப்பு? மொத்த சமுதாயத்திற்குத்தான் மெத்த இழப்பு. இந்த விவகாரத்தில் சமுதாயத் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் மெத்தனமாக இருக்கலாகாது. ஏற்கெனவே, அரபி மத்ரஸாக்களில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவரும் காலகட்டத்தில், கரோனாவால் மேலும் மாணவர்களின் வருகை குறைவது பெரும் கேடாக முடியும்.
அவ்வாறே, சமயப் பணியாற்றக்கொண்டிருக்கும் ஆலிம்கள் துறைமாற அனுமதிப்பதும் பெரும் நெருக்கடியை உண்டாக்கும். வடமாநிலத்தவரை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று எண்ணுவோருக்கு ஒரு வார்த்தை, அவர்களால் நம் தாய்மொழியில் உரை நிகழ்த்த முடியாது. நம் குழந்தைகளுக்கு, அவர்கள் புரியும் பாஷையில் மார்க்கத்தைச் சொல்லிக்கொடுக்க முடியாது.
குர்ஆனைக்கூட சரியான உச்சரிப்பில் சொல்லித் தராமல், ஃதால், ளாத், ழாத் போன்ற எழுத்துகளை ஸால், ஜாத்... எனத் தவறாக உச்சரிப்பார்கள். தொழுகையிலும் இதுதான் அவர்களுக்கு வரும். தாய்மொழியின் தாக்கம் நிச்சயமாக அவர்களின் உச்சரிப்பில் தொற்றிக்கொள்ளாமல் இராது.
இறையில்லப் பொறுப்பாளர்களுக்கு ஒரு தார்மிகப் பொறுப்பு உண்டு. உங்கள் பள்ளிவாசலில் பணியாற்றிய இமாம், தம் பணியில் தொடர அனுமதியுங்கள். அதற்கு முன்பாக, விடுபட்ட இடைப்பட்ட மாதங்களுக்கான ஊதியம், போனஸ் போன்ற பலன்களை அவர்களுக்கு மனமார வழங்குங்கள்.
அவ்வாறே, எல்லா அரபிக் கல்லூரி நிர்வாகப் பெருமக்களுக்கும் அன்பானதொரு வேண்டுகோள். தங்கள் கல்லூரி பேராசிரியப் பெருமக்கள், முதல்வர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் ஊரடங்கு காலத்திற்கான ஊதியம், போனஸ் ஆகிய பலன்களை வழங்கி ஆசுவாசப்படுத்துங்கள்.
உங்கள் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள், தம் கல்வியைத் தொடர உதவி செய்யுங்கள்; அவர்களில் யாரும் இடைநிறுத்தம் செய்துவிட அனுமதித்துவிடாதீர்கள்.
மேலும், அரபிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர், மஹல்லா ஜமாஅத், ஆலிம்கள் ஒவ்வொருவரும் ஒத்துழையுங்கள்! அம்மாணவர்களைச் சந்தித்து உற்சாகமூட்டி, உதவிகள் செய்து ஆதரவு காட்டுங்கள்!
இந்த நடவடிக்கைகள் மூலம் அனைவரும் சேர்ந்து, மார்க்க அறிஞர்களை ஊக்குவிப்போம். மார்க்கம் கற்கும் மாணவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம்.
பாரம்பரிய மார்க்க அறிஞர்களின் சேவை தொடர வேண்டும்! இந்த அறிஞர்களை உருவாக்கும் அரபி மத்ரஸாக்களில் மாணவர்கள் தொடர்ந்து சேர வேண்டும்.
இறையில்லங்களில் இறைமறை என்றும் ஒலிக்கட்டும்! மார்க்க உரைகள் எப்போதும் உரக்க முழங்கட்டும்! இந்தப் புண்ணியத்தில் நம் ஒவ்வொருவரின் பங்கும் அணிவகுக்கட்டும்! அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரியட்டும்!
_____________________

No comments:

Post a Comment