Tuesday, October 19, 2021

ஆலிம் பப்ளிகேஷனின் இதயங்கனிந்த நன்றி

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஆலிம் பப்ளிகேஷனின்
இதயங்கனிந்த நன்றி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இறையருளால் 16.10.2021 காலை எமது ஆலிம் பப்ளிகேஷனின் வெளியீடான முஸ்னது அஹ்மத் தமிழாக்கம் மூன்றாம் பாகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
எமது அன்பு அழைப்பை ஏற்று விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அறிஞர் பெருமக்கள், விழாவை மிக வெற்றிகரமாக நடத்திக்காட்டிய அப்பகுதி பிரமுகர்கள், விழாவில் திரளாகக் கலந்துகொண்ட ஆலிம்கள், பட்டதாரிகள்,வணிகர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் முதலான அனைத்து  அன்பர்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

பாளையங்கோட்டையில் பிரபலமானதும் பிரமாண்டதுமான காயிதே மில்லத் moc அரங்கத்தை வழங்கி உதவிய நிர்வாகப் பெருமக்கள், நூல் தயாரிப்புச் செலவினங்களுக்கு வாரிவழங்கிய புரவலர்கள், எல்லா ஏற்பாடுகளையும் முன்நின்று சிரத்தையோடு கவனமாகச் செய்த பெருந்தகைகள், மக்களுக்கு விழா குறித்துப் பள்ளிவாசல்களில் அறிவிப்புச் செய்து உதவிய இமாம்கள் என அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆலிம் பப்ளிகேஷன் மொழிபெயர்ப்புக் குழுவினர் மற்றும் நிர்வாகக் குழுவினர் சார்பாக  இதயங்கனிந்த நன்றியைத் தெரிவிப்பதில் அகமகிழ்றோம்.
ஜஸாகுமுல்லாஹு கைரல் ஜஸா ஃபித்தாரைன்.

நம்  தொடர்புகள் தொடரட்டும்! தொண்டுகள் சிறக்கட்டும்!
நபிகளாரின் பொன்மொழிகள் அனைவரின் வாழ்க்கையாக மாறட்டும்!
 வஸ்ஸலாம்.

நபிகளார் வெளியிட்ட உலகப் பிரகடனம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நபிகளார் வெளியிட்ட உலகப் பிரகடனம்
^^^^^^^^°^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புனித ஹஜ் பயணத்தின்போது பெருந்திரளாகக்  குழுமியிருந்த மக்கள் முன் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பேருரையில் உலக மக்களுக்கு வெளியிட்டப் பிரகடனம்:

* மனிதர்களே! உங்கள் இறைவன் ஒருவன். உங்கள் தந்தை ஒருவரே. 

* எந்த அரபியருக்கும் அரபியர் அல்லாதோரைவிட, இறையச்சம் ஒன்றில் தவிர எந்த உயர்வும் கிடையாது.

* அரபியரல்லாத எவருக்கும் அரபியரைவிட ,இறையச்சம் ஒன்றில் தவிர வேறு எந்த உயர்வும் கிடையாது.

* வெள்ளையருக்குக் கறுப்பரைவிடவோ, கறுப்பருக்கு வெள்ளையரைவிடவோ , இறையச்சம் ஒன்றில் தவிர வேறு எந்த உயர்வும் கிடையாது.

* இந்தப் புனிதத் தலத்தில் , இப்புனித மாதத்தில், இப்புனித நாள் எவ்வளவு மகத்தானதோ அவ்வளவு மகத்துவமிக்கவை உங்கள் உயிரும் உங்கள் உடைமையும் உங்கள் சுயமரியாதையும்.

( முன்னது அஹ்மத் - ஹதீஸ் 22391)

Tuesday, October 12, 2021

நவீன இந்தியப் பெண்களின் பரிதாப நிலை

நவீன இந்தியப் பெண்களின் பரிதாப நிலை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெங்களூரில்  10.10.2021 நடந்த உலக மனநல நாள் விழாவில் பேசிய கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள நவீன பெண்களில் பெரும்பாலோர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்வே விரும்புகிறார்கள்.இதைக் கூற வருத்தமாக இருக்கிறது.

ஒரு வேளை திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை. வாடகைத் தாய் மூலமே குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கவே விரும்புகிறார்கள்.

நமது சிந்தனையில் தலைகீழ் மாற்றம் நடந்துள்ளது. இது சரியான போக்கு அல்ல.மேற்கத்திய பண்பாட்டுக் கூறுகளை இந்திய சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது துரதிருஷ்ட வசமானது

தாத்தா, பாட்டி உடனிருப்பதை விரும்பாத அவர்கள், தாய் தந்தையரை உடன் வைத்துக் கொள்ளத் தயங்குவது வேதனை அளிக்கிறது.

(நன்றி-தினமணி )

Thursday, September 23, 2021

சுகாதாரத் துறை அமைச்சரின் அருமையான அறிவுறுத்தல்

~~~~~~~~~~~~~~~~~~~~
சுகாதாரத் துறை அமைச்சரின் 

அருமையான அறிவுறுத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கர்ப்பிணி பெண்கள் விரும்புகின்றனர்.இது தவறானது. இந்த முடிவை பெண்கள் கைவிட வேண்டும்.

சிசேரியன் மூலம் 10 அல்லது 15 நாட்களுக்கு முன்பாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.எனவே, குழந்தையை  முழுமையாக வளரவிட்டு , சுகப்பிரசவத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் அக்குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இது குறித்து ஆலோசனை வழங்குமாறு , சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
நேற்று -22.09.2021- தெரிவித்தார்.

இந்த வேண்டுகோளில் தாய்மை வெளிப்படுகிறது.

Thursday, September 02, 2021

பாதிக்கப்பட்டவர்களுக்குப்பரிவு காட்டுங்கள்- காவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

~~~~~~~~~~~~~~~~~~
பாதிக்கப்பட்டவர்களுக்குப்
பரிவு காட்டுங்கள்- காவலர்களுக்கு          முதல்வர் அறிவுறுத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~

அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றொரு கை காவல் துறை.இரண்டும் முறையாகச் செயல்பட்டால், அந்த அரசு தலைசிறந்த அரசாகப் போற்றப்படும்.

மக்களோடு நேரடியாகத் தொடர்பு கொள்வோர் உதவி ஆய்வாளர்கள்தான். அந்த வகையில் முக்கியமான கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது.
 
காவல்துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறை, தண்டனை வாங்கித்தரும் துறை என்று மட்டுமே நினைக்கின்றனர். ஆனால், குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக அது மாற வேண்டும் என்பது என் ஆசை.

மக்கள் எதிர்பார்ப்பது அமைதியைத் தான். அந்த அமைதியை உருவாக்கும் கடமை காவல் துறைக்கு உண்டு. பயிற்சி முடிந்து நீங்கள் செயல்படத் தொடங்கும்போது அமைதியான தமிழகத்தை உருவாக்க சூளுரைக்க வேண்டும்.

அநியாயத்தைத் தடுக்க எப்போதும் தயங்காதீர்கள். நியாயத்திற்காக எப்போதும்  நில்லுங்கள். உங்கள் பகுதியைக் குற்றம் நடக்காத பகுதியாக மாற்றுங்கள். உண்மைக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுங்கள்.இவற்றையெல்லாம் சட்டபூர்வமாகச் செய்யுங்கள்.

குறிப்பு: உரை நாள் +1.9.2021
நிகழ்ச்சி: காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி தொடக்க விழா.

 * முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய தத்துவப் பாடல்களை இவ்வுரை விஞ்சி விட்டது.

Thursday, August 26, 2021

இயலாமைக்கு வருந்துகிறேன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~
இயலாமைக்கு வருந்துகிறேன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஸ்ஸலாமு அலைக்கும்.க்ரோனா பரவல் காரணத்தால் வீடு-அலுவலகம் என்ற அளவில் மட்டுமே என் நாட்கள் கழிகின்றன. உறவுகள், நண்பர்கள், மாணவர்கள், பெரியவர்கள்...என
யாருடைய அழைப்பையும் ஏற்று நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நிலையில் நான் இல்லை.

தவிர்க்கவே முடியாத சில நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொள்கிறேன். காணொளி வகுப்புகள், ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்வதுண்டு.

எனவே , நண்பர்கள் யாரும், குறிப்பாக அன்பு மாணவர்கள் தம் இல்ல நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ளாத தற்காக வருந்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என் இயலாமைக்கு வருந்துகிறேன்.

வஸ்ஸலாம். அன்புடன் உங்கள்
கான் பாகவி

Monday, August 02, 2021

காலச்சுவடு மதிப்புரையும் கான் பாகவி கருத்துரையும்

*காலச்சுவடு மதிப்புரையும் கான் பாகவி கருத்துரையும்*

‘ரோஜா’ மனம் எனும் தலைப்பில் களந்தை பீர் முஹம்மது எழுதிய நூல் மதிப்புரை கண்டேன். அவர் பெயரைக் கண்டவுடன், எல்லாரையும் போன்று நானும் “என்ன பூகம்பத்தைக் கிளப்பியுள்ளாரோ!” என்ற தயக்கத்தில்தான் வாசிக்கத் தொடங்கினேன். நூலின் தலைப்பும் என் அச்சத்தை உறுப்படுத்தும்வகையில் ‘இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்’ என்று இருந்தது. நூலின் அட்டைப் படம்வேறு என் அச்சத்திற்கு எண்ணெய் வார்த்தது.

மதிப்புரையை நுகர்ந்தபின் முகம் மலர்ந்தது. மனத்திற்குள் நூலாசிரியர் அப்சலையும் மதிப்புரை தீட்டிய களந்தையாரையும் வாழ்த்திக்கொண்டேன். சினிமா எனக்குத் தொடர்பில்லாத துறைதான். ஆனால், விவாதிக்கப்படும் பொருளோ முஸ்லிம்கள் தொடர்பானது; சொல்லப்போனால் இஸ்லாம் குறித்தது.

சினிமா என்பது, என்போன்றோரின் பார்வையில் ஒரு பொழுதுபோக்குச் சாதனம். ஒரு படத்தின் கதைக்களம் கற்பனையாகவே இருந்தாலும், அதன் கரு உண்மைக்குப் புறம்பாக இருக்கலாமா? ஒரு சமூகத்தின் முகத்தைக் கோரப்படுத்துவதும் அதன் நம்பிக்கையையே குற்றப்படுத்திக் கூண்டில் நிறுத்துவதும்தான் பொழுதுபோக்கா?

உலகின் எங்கோ ஒரு மூலையில் யாரோ சிலர் சுயநலத்திற்காக, அல்லது அரசியல் நோக்கத்திற்காக ஆயுதமேந்தி கண்மூடித்தனமாக அப்பாவிகளைச் சுட்டுத்தள்ளுகிறார்கள் என்றால், ஒட்டுமொத்த சமூகத்தின் மீதே ‘பயங்கரவாதிகள்’ முத்திரை குத்தி, சுமுக வாழ்வை மேற்கொண்டிருக்கும் பெரும்பான்மை அங்கத்தினரை இழிவுபடுத்துவது என்ன ரசனை?

நல்ல வேளையாக, சமூக நீரோட்டத்திலிருந்து முஸ்லிம்களைப் பிரிப்பதற்கென்றே பலர் திரைப்படங்களைத் தயாரித்துவந்த நிலையில், அதற்கு நேரெதிரான படங்களையும் தயாரித்து சிலர் வெளியிட்டது ஆறுதல் அளிக்கிறது. சினிமாதானே என்று புறம்தள்ளிவிட்டுப் போக முடியாத அளவிற்கு அது இன்றைக்கு ஒரு பெரிய ஊடகமாக மாறிவிட்டிருக்கிறது.

மணிரத்தினம் போன்றோர் திரையில் புதைத்த வெடிகுண்டுகளின் வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், அப்சலின் இந்நூல் நிச்சயமாக வாசகர்களின் இதயக் கதவைத் திறக்கும் என நம்பலாம். பாகிஸ்தானையும் இந்திய முஸ்லிம்களையும் நட்புச் சக்திகளாகக் கருதி இந்துக் கலைஞர்கள் படம்பண்ணி மாபெரும் வசூலை ஈட்டியுள்ளார்கள் என்பது, ஒரு நல்ல அடையாளம். அதிலும், அவர்கள் தம்மையும் தம் வாழ்வையும் பணயம் வைத்துப் படங்கள் எடுத்து வென்றுள்ளார்கள் என்பது வியப்பின் உச்சம்.

சர்வதேச அளவில் ‘இஸ்லாமோபோபியா’ ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, முஸ்லிம் சமூகம் முடங்கிக் கிடப்பதற்கு நூலாசிரியர் கண்டனம் தெரிவிக்கிறார். இது, சமூகத்தின் மீது அவருக்குள்ள அக்கறையைக் காட்டுகிறது.

ஆம்! முஸ்லிம் சமூகம் தன் ஆற்றலை எதில் செலவிடுகிறது? தன்னைப் பற்றிய உண்மைகளை, தன் மார்க்கம் உலக மாந்தருக்குமுன் எடுத்துவைக்கும் மனிதநேயப் பக்கங்களை எப்போது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப் போகிறது? தம்மை நஞ்சூட்டிக் கொல்லப்போன யூத யுவதியை, கத்தியால் குத்தப்போன ஒரு இளைஞனைப் பழிதீர்க்க சக்தி இருந்தும் மன்னித்த மாநபி பற்றி எப்போது எடுத்துரைக்கப்போகிறது?

அ. முஹம்மது கான் பாகவி
சென்னை

Monday, July 05, 2021

காலச்சுவடு இதழுக்கு கான் பாகவியின் மடல்

காலச்சுவடு இதழுக்கு             
கான் பாகவியின் மடல்
---------------------------------------------

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, 'வரலாற்றில் பெயர் நிலைக்க...' எனும் தலையங்கம் கண்டேன்.

மகிழ்ச்சி அளிக்கும் தலையங்கம். அதே நேரத்தில், சார்பற்ற நடுநிலை தலையங்கம். பாராட்டுகள்.

கருணாநிதி மகன் என்ற அளவிலேயே அரசியல் தலைவராக அறியப்பட்டிருந்த ஸ்டாலின், அரிசியல் வியூகம், நிர்வாகத் திறமை, தந்தையை மிஞ்சிய சாணக்கியம், தற்புகழ் துறந்த உயர்ந்த நிலைப்பாடு, மாநில முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு, எதிர்க் கட்சிகளையும் அரவணைக்கும் நளினமான நிர்வாகம் ... எனப்  பன்முகம் கொண்ட சிறந்த முன்மாதிரியான தலைவராக இப்போது அறியப்படேகிறார்.

இது பலரும் எதிர்பார்த்திராத திருப்பம் என்றுதான் நினைக்கிறேன். அரசியல் பாலபாடம் படிக்க வேண்டிய அரசியல் மாணவர் என்றே பலரும் எடைபோட்டிருந்த நிலையில் , இல்லை; நான் அரசியல் ஆராய்ச்சியாளன் என்பதைத் தம் திட்டங்களாலும் நடவடிக்கைகளாலும் ஸ்டாலின் நிரூபித்து வருகிறார்.

துறை சார்ந்த அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் பெற்றே அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள் ; என்றாலும் நிபுணர்களைப் பயன்படுத்தவும் அவர்கள் முன்வைக்கும் திட்டங்களை இனம் கண்டு ஏற்கவும் அல்லது மறுக்கவும் சுய அறிவு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

செயல்திறன் மிக்க அதிகாரி இறையன்பு போன்றவர்கள் முந்தைய ஆட்சியிலும் இருக்கத்தானே செய்தார்கள்! எல்லாவற்றையும் விட, வீண் பந்தாக்களை ஸ்டாலின் புறக்கணித்து வருவது அவரது  மதிப்பைக் கூட்டியுள்ளது.

அன்புடன் உங்கள்
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை

Wednesday, June 09, 2021

©©©©©©©©©©©©©©©©
அரபி மத்ரஸாக்களில் ஆன்லைன் வகுப்புகள்
©©©©©©©©©©©©©©©®
புனித ரமளான் முடிந்து ஷவ்வால் மாதமும் முடியப் போகிறது. கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் மத்ரஸாக்கள் திறக்கப்படுவதில் இழுபறி உள்ளது.

இதையடுத்து பாடங்கள் நடைபெறாமல் முன்பு போலவே வீணாகக் காலம் கழிகின்ற நிலையே காணப்படுகிறது.  இது , மேலும்  மாணவர்கள் துறை மாறுவதற்கு வழிவகுத்துவிடலாம். இருக்கும் மாணவர்களையாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் மீண்டும் நேர்ந்துள்ளது.

எனவே,உடனே எல்லா மத்ரஸாக்களிலும் ஆன்லைன் ( காணோலி) வகுப்புகளை ஆரம்பித்து, இருக்கிற ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்த தயக்கமின்றி முன்வர வேண்டும். ஆண்டின் இறுதியில் முழுஆண்டுத் தேர்வுகளையும் நடத்தி முடிக்கத் தயாராக வேண்டும்.

பட்டவகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அதிகக் கூட்டம் சேர்க்காமல் கல்லூரியிலேயே வைத்து பட்டமளிப்பு விழா நடத்திவிடலாம்.

ஆக, தொடர்ந்து மத்ரஸாக்கள் செயல்பட வேண்டும். பூட்டிப்போட்டு பாடமும் நடத்தாமல் மாணவர்களை வேறு துறைகளுக்குத் தள்ளிவிட்டுவிடக் கூடாது.சிறிய மத்ரஸாக்களும் இதே நடைமுறையைக் கையாளலாம். வேலை செய்யாமல் ஊதியம் பெறுவதா என்ற கேள்வியும் இதன்மூலம் தவிர்க்கப்பட்டு விடும்.

ஆன்லைன் க்ளாஸ் எப்படி நடத்துவது என்ற நடைமுறை அறிந்தவர்கள் ஒவ்வோர் ஊரிலும் இருப்பார்கள். அவர்களின் உதவியை நாடலாம்.

காலத்தின் ஓட்டத்தை அறிந்து சவால்களை எதிர்கொள்ள முன்வராவிட்டால் இழப்பு நமக்குத்தான்; நம் சமுதாயத்திற்குத்தான் என்பதை மறந்துவிடலாகாது.
©©©©©©©©©©©©©©©®
அன்புடன் உங்கள்
கான் பாகவி.

Tuesday, June 01, 2021

~~~~~~~~~~~~~~~~~
குடும்பக் கட்டுப்பாடும் சீனாவும்
~~~~~~~~~~~~~~~~~~
மக்கட்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
 
இதையடுத்து அங்கு இளைஞர்களைவிட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமானது. உழைக்க ஆட்கள் இல்லாமல் பொருளாதார தேக்க நிலை அங்கு உருவானது.

இதனால் 2016ஆம் ஆண்டு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்தது. ஆனாலும் கடந்த ஆண்டு 1.2கோடி குழந்தைகளே பிறந்தனர்.

இது இப்போதுள்ள தேவையான அளவைவிட மிகவும் குறைவாகும் என அரசு கருதுகிறது. சீனாவின் மக்கட்தொகை 141 கோடியாக தற்போது உள்ளது. ஆண்-பெண் பாலின விகிதமும் குறைந்து வருகிறது.

பெரும்பாலான தம்பதியர் ஆண்குழந்தை களையே விரும்புகின்றனர். பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்து வயிற்றிலேயே பெற்றோர் கொன்றுவிடுகின்றனர்.

இதனால் குடும்பக் கட்டுப்பாடு கொள்ள்கையைத் தளர்த்த சீன அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மூன்று குழந்தைகள் வரைப் பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.

 *** 
வறுமையைப் பயந்து குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.( குர்ஆன்,17:31)
***
இரு பெண் குழந்தைகளைப் பெற்று, அவர்களின் எதிர்காலம் வரை அன்போடு பராமரித்து வளர்ப்பவர்கள் சொர்க்கம் செல்வர். ( நபிமொழி )

***
இ

Wednesday, May 26, 2021

Khan Baqavi

~~~~~~~~~~~~~~~~~~
இந்தியாவில் வலைத்தள பயனாளிகள்
~~~~~~~~~~~~~~~ ~~~~~
வாட்ஸ் அப்-53  கோடி
யூ-டியூப் - 44.8 கோடி
ஃபேஸ் புக் - 41 கோடி
இன்ஸ்டாகிராம் - 21 கோடி
ட்விட்டர் - 1.75 - கோடி
( இந்து தமிழ்)

????????????????????????????

Wednesday, May 19, 2021

~~~~~~~~~~~~~~~~~~
ஹசனிகளின் தந்தை
மறைந்தார்
~~~~~~~~~~~~~~~~
பள்ளபட்டி உஸ்வத்துல் ஹசனா அரபிக் கல்லூரி நிறுவனரும் முதல்வரும் தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞருமான மெளலானா அப்துர் ரஹீம் ரஷாதி அவர்கள் இன்று (19.05.2021) மறைந்தார் என்பதை பெருந்துக்கத்தோடு பதிவிடுகிறேன்.

இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றுதான் சொல்வேன்.காரணம் ஒரு கனவோடும் உயர்ந்த இலட்சியத்தோடும்  கல்லூரியை உருவாக்கி, அதன் கல்விக் கொள்கையைத் திட்டமிட்டு அமைத்து அதை இன்றுவரைச் செயல்படுத்தி, அமைதியானதோர் அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பெரும் இலட்சியவாதி அவர்.

இன்றைக்கு அவர் பாசறையில் உருவான ஹசனி ஆலிம்கள் பல்துறைகளில் சாதனை படைத்துவருவது கண்கூடு.நத்வத்துல் உலமாவை முன்மாதிரியாகக் கொண்டு அரபி,உருது ஆகிய மொழிகளில் மாணவர்களுக்கு மொழி ஆற்றலை உருவாக்கியவர்.

நடுநிலைச் சிந்தனை, நிதானப் போக்கு, ஆய்வுத் தேட்டம், அறிவியலுடன் கூடிய  ஆன்மிகம் முதலான காலத்திற்கேற்ற கல்வி முறையை நிலைநாட்டியது அவர் செய்த சாதனையாகும்.

அவ்வாறே வணக்க வழிபாடுகளிலும் சுன்னத்தான வாழ்க்கை முறைகளிலும் ஈடுபாடு உள்ளவர். அவருடைய தந்தையார் பாகவி அவர்களுடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.நான் பள்ளப்பட்டி மக்தூமிய்யாவில் ஆசிரியராகப் பணியாற்றியபோது என்மீது ஒரு தந்தையின் பாசத்தைக் பொழிந்தவர் அவர் தந்தை.

மெளலானா ரஷாதி அவர்களின் மறுமை வாழ்வு வளம்பெற துஆ செய்கிறேன்.

اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا ارحم الراحمين.

Saturday, May 15, 2021

~~~~~~~~~~~~~~~
         வாயும் வயிறும்
~~~~~~~~~~~~~~~
மூடியிருந்தது வாய்
மூச்சு விட்டது வயிறு

திறந்து கொண்டது வாய்
திணறுகிறது வயிறு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கான் பாகவி