Wednesday, January 24, 2018

எத்தனை பேருக்குத் தெரியும்?

எங்கள் மொழிபெயர்ப்பாளர் குழு, சென்னை புத்தகக் காட்சிக்கு, இறுதி நாளான 22.1.2018 மாலை சென்றிருந்தோம். ஒவ்வோராண்டும் புத்தகக் காட்சியில், அலுவலகப் பணிக்கு வேண்டிய தமிழ் அகராதிகள், விஞ்ஞானம், மொழிபெயர்ப்பு, எழுத்து ஆகியவை தொடர்பான புத்தகங்களே வாங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு ஒரு முக்கியமான நூலை சொந்த உபயோகத்திற்கு வாங்குவதென நானும் மௌலவி, யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி அவர்களும் தீர்மானித்துத் தொகையும் கொண்டு போயிருந்தோம். விகடன் குழும வெளியீடான அந்நூல், விகடனிலும் இல்லை; மற்ற கடைகளிலும் கிடைக்கவில்லை.

விசாரித்ததில், விகடன் அந்நூலின் வெளியீட்டை நிறுத்திவிட்டதாக அறிந்தோம். சிரமப்பட்டு அலைந்து இறுதியாக ஒரு ஸ்டாலில் கண்டுபிடித்து இரண்டு செட் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. நூல் மொத்தம் 3 பாகம்; விலை: ரூ.4000/-

1968 முதல் ஆங்கிலத்தில் Encyclopedia Brittannica ஒரு முக்கியமான பார்வை நூலாக இருந்துவருகிறது. இதனை 2007ஆம் ஆண்டு டாக்டர் அவ்வை நடராஜன், மணவை முஸ்தபா ஆகியோர் கொண்ட ஆய்வாளர் குழு தமிழில் மொழிபெயர்க்க, பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் என்ற பெயரில் விகடன் வெளியிட்டது.

இந்நூலில் உலக நாடுகள், பிரபலங்கள், மதங்கள், வேதங்கள், ஆலயங்கள், கலை, மருத்துவம், வணிகம், தத்துவம், அரசியல், புவியியல், வரலாறு, அறிவியல், இலக்கியம், கணினி முதலான 28 ஆயிரம் கட்டுரைகளும் 2000 படங்களும் இடம்பெறுகின்றன. மேலும் இந்தியா குறித்தான 2ஆயிரம் கட்டுரைகளும் இலங்கை, மலேசியா போன்ற தமிழர் வாழும் பகுதிகளைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. அ முதல் ன வரையான வரிசைமுறையில் (ஆங்கிலப் பெயர்கள் அடைப்புக் குறியில்) கட்டுரைகள் அமைந்துள்ளன.

மூன்று பாகங்களுடன் பொருள் குறிப்பு அகராதி (பொருளடக்கம்) ஒன்று 88 பக்கங்களில் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது. தேடலுக்கு இது உதவியாக இருக்கும்.

எழுத்தாளர், பேச்சாளர், பேராசிரியர், இலக்கிய ஆர்வலர், மாணவர்.. என எல்லா அறிவு ஜீவிகளிடமும் இருக்க வேண்டிய தகவல் களஞ்சியமாகும் இது.

தமிழில் கிடைத்து வந்தது பேருதவியாக இருந்தது. தமிழ் பதிப்பு நின்றுபோனது பேரிழப்பாக இருக்கிறது. அநேகமாக, அதன் கடைசி பிரதிகளை வாங்கியவர்கள் நாங்களாகத்தான் இருப்போம்.

No comments:

Post a Comment