Wednesday, October 17, 2012

இஸ்லாம் ஃபோபியா - என்ன? ஏன்? எப்படி?


- கான் பாகவி


முஸ்லிம் ஊடகங்களில் ‘இஸ்லாம் ஃபோபியா’ எனும் சொல்லாடல் இன்றைக்கு அடிக்கடி காணப்படும் ஒன்றாகிவிட்டது. ‘ஃபோபியா’ (PHOBIA) என்றால், அர்த்தமற்ற அச்சம், அல்லது அர்த்தமற்ற வெறுப்பு என்று பொருள். ஒரு பொருள் பற்றிய அறிவுக்கு ஒவ்வாத பயம். இது ஒருவகை நோயாகும்.



என்ன?

இஸ்லாத்தின் இன்றைய எதிரிகள் இஸ்லாத்தின் மீது சேற்றை வாரி இறைத்து, அர்த்தமற்ற வெறுப்பையும் அச்சத்தையும் உலக மக்களுக்கு இஸ்லாத்தின் மீது உண்டாக்கிவருகிறார்களே அதுதான் ‘ஃபோபியா’ எனப்படுகிறது.

இது, இன்று நேற்றல்ல; இஸ்லாம் பிறந்த காலத்திலேயே தொடங்கிவிட்டது. உண்மை ஒரு பக்கம் பிறந்தபோது, இன்னொரு பக்கம் பொய்மை பிறக்கவில்லையா? நீதி தோன்றியபோது அநீதி தோன்றவில்லையா? அப்படித்தான் இதுவும்.

சத்தியத்தின் முழு உருவம் இஸ்லாம். நீதியின் இலக்கணம் இஸ்லாம். இஸ்லாம் மட்டுமே இறைமார்க்கம். அதற்கு மட்டுமே திரிக்கப்படாத, திருத்தப்படாத இறைவேதம் உண்டு. அது அருளப்பெற்ற நிமிடத்தில் எப்படி அருளப்பெற்றதோ அப்படியே ஒரு புள்ளிகூட மாறாமல் இன்றும் மிளிர்கிறது; நாளையும் மிளிரும்.

சொல்லவந்த கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாமல் தெள்ளத்தெளிவாக, வெளிப்படையாகக் கொள்கையைச் சொல்கின்ற ஆண்மை மிக்க ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். அதன் வரலாறு நெளிவுசுளிவுக்கு இடம் தராமல் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘நீக்குப்போக்கு’ என்று சொல்லி அதன் கோட்பாடுகளை, நெறிமுறைகளை யாரும் யாருக்காகவும் வளைக்கவோ நெளிக்கவோ அது அனுமதிப்பதில்லை.

ஏன்?

ஆறாம் நூற்றாண்டில் அருளப்பெற்ற திருக்குர்ஆன், அன்றைக்கு வேதத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் வேதக்காரர்களான யூதர்களும் கிறித்தவர்களும் உலக அளவில் பரப்பிக்கொண்டிருந்த பொய்களைப் பட்டவர்த்தனமாக உடைத்தெறிந்தது; அந்த வேதங்களில் இவர்கள் செய்த திரிபுகளையும் இடையிலே செருகிய சொந்தத் தகவல்களையும் வெளிச்சம்போட்டு காட்டியது.

‘எஸ்ரா’வை கர்த்தரின் குமாரர் என்றனர் யூதர்கள்; இயேசுவை கர்த்தரின் குமாரர் என்றனர் கிறித்தவர்கள். இந்தக் கயமையான வாதத்தைத் திருக்குர்ஆன் பலமாக எதிர்த்தது.

யூதர்கள், உஸைர் அல்லாஹ்வின் புதல்வர் என்கின்றனர்; கிறித்தவர்கள், மசீஹ் அல்லாஹ்வின் புதல்வர் என்கின்றனர். இது, அவர்கள் தம் வாய்களால் கூறும் (உண்மைக்குப் புறம்பான) கூற்றாகும். இதற்கு முன்னர் (ஓரிறையை) மறுத்தோர் (சொன்ன) சொல்லுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள். அவர்களை அல்லாஹ் கொல்வானாக! (9:30)

இந்த இஸ்ரவேலர்கள் இறைத்தூதர்களைப் படுகொலை செய்த கொடுங்கோலர்கள். எனவே, அவர்கள் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாயினர் என்று குர்ஆன் உரக்கக் கூறுகிறது.

அல்லாஹ்வின் காப்புறுதியும் மக்களின் பாதுகாப்பும் இருந்தாலன்றி, அவர்கள் எங்கு காணப்படினும் அவர்களுக்கு இழிவுதான்; அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளாயினர்; அவர்களுக்கு வறுமையும் விதிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை மறுத்துக்கொண்டும் நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்துகொண்டும் இருந்ததே இதற்குக் காரணம். (3:112)

இயேசு கொல்லப்பட்டதாகவும் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியதாகவும் கிறித்தவர்கள் உலகையே நம்பவைத்துவருகின்றனர். இதில் துளிகூட உண்மையில்லை என்று குர்ஆன் ஓங்கி உரைத்தது.

அல்லாஹ்வின் தூதரும் மர்யமின் மைந்தருமான ஈசா மஸீஹை நாங்கள்தான் கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). (உண்மையில்) அவரை அவர்கள் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை. (4:157)

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வேதக்காரர்கள் வேதத்தைப் பின்பற்றாமல், தங்கள் குருமார்களையே கடவுளர்களாக்கிவிட்டனர் என்று கடுமையாகச் சாடுகிறது குர்ஆன்.

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து, தம் சமய அறிஞர்களையும் துறவிகளையும் கடவுளராக்கிக்கொண்டனர்; மர்யமின் மைந்தர் மசீஹையும் (ஈசாவையும்)தான். அவர்கள் ஒரே இறைவனை வழிபட வேண்டும் என்றே கட்டளையிடப்பட்டனர். (9:31)

ஏக இறைக்கு இணைவைத்து, இறைக்கொள்கையையே மாசுபடுத்தும் இணைவைப்பாளர்களோ கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டு, கணக்கில்லாத தெய்வங்களை வழிபடுகின்றனர். இவர்களின் அறியாமையைக் கண்டிக்கும் குர்ஆன், அவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் பல இடங்களில் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறது.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக்கொண்டால், அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. (22:73)

இப்போது சொல்லுங்கள்! வேதக்காரர்களும் இணைவைப்பாளர்களும் குர்ஆனையும் நபியையும் மார்க்கத்தையும் சும்மா விடுவார்களா? எனவேதான், அர்த்தமற்ற வெறுப்பை (ஃபோபியா) இஸ்லாத்தின் மீது அன்றும் விதைத்தார்கள்; இன்றும் விதைத்துவருகிறார்கள்.

குர்ஆன் இறைவேதமே அல்ல என்று பரப்புரை செய்வர்; வரலாற்று நாயகர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது புழுதி வாரி தூற்றுவர்; இஸ்லாத்தை காட்டுமிராண்டி மார்க்கம் என்பர்; முஸ்லிம்களை பயங்கரவாதிகள்; நாகரிகமில்லாதவர்கள்; வேண்டாதவர்கள் என்றெல்லாம் சித்தரிப்பர்.

எப்படி?

இஸ்லாமியர் இந்தியாவுக்கு வந்ததை ‘படையெடுப்பு’ என்றும் போர்ச்சுகீசியர் மற்றும் ஆங்கிலேயரின் படையெடுப்பையே ‘வருகை’ என்றும் பாடப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் மொத்தம் 77 ஆயிரம் முஸ்லிம்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். எட்டு முதல் 13 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு 72 ஆயிரம் பேரைக் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்தனர்.

அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் கூட்டுச்சேர்ந்து முஸ்லிம்களைக் கொன்றால், அது மனித உரிமை பாதுகாப்பு; முஸ்லிம் தாக்கினால் மட்டும் அது பயங்கரவாதம்.

இந்த ஃபோபியாவினால் இவர்களின் நோக்கம் என்ன தெரியுமா? 1. பொதுவாழ்விலிருந்து முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவது. 2. மற்ற மக்களிடமிருந்து இஸ்லாத்தைத் தனிமைப்படுத்துவது. 3. முஸ்லிம் நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடிப்பது.

இந்த மூன்றாவது நோக்கம் நிறைவேறினாலும் முதலிரண்டு நோக்கங்கள் நிறைவேற மறுக்கின்றன. உலக அளவில் இஸ்லாம் வளர்ந்து வருகிறதே தவிர, அதில் கடுகளவும் தேய்மானம் இல்லை. முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடியுள்ளதே ஒழிய, சற்றும் குறையவில்லை.

ஸியோனிஸ்டுகளின் சதி
ஸியோனிஸ்டுகள் என்பது தீவிரவாத யூதர்களைக் குறிக்கும் சொல்லாகும். ஜெருசலேம் நகரின் இரு மலைகளில் கிழக்குக்கோடியில் உள்ள மலையின் பெயர் ஸியான் (Zion). இது இறைவன் வாழும் இடம் என்பது யூதர்களின் நம்பிக்கையாம்!

இன்று ஸியானிஸம் (Zionism) என்பது, யூத தேசியவாத இயக்கத்தின் பெயராகும். பாலஸ்தீனத்தில் யூத அரசு ஒன்றை நிறுவுவதே இந்த இயக்கத்தின் நோக்கம். 1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதையடுத்து அவர்களின் இந்நோக்கம் நிறைவேறிவிட்டது. இருந்தாலும், இன்றைக்கும் யூத தீவிரவாதிகள் ‘ஸியோனிஸ்டுகள்’ என்றே அறியப்படுகின்றனர்.

பாலஸ்தீனத்திலிருந்து முஸ்லிம்களை அடியோடு விரட்டிவிட்டு முழு பூமியையும் கபளீகரம் செய்வதே இந்தத் தீவிரவாத இயக்கத்தின் இன்றைய இலட்சியம். இதற்காக இஸ்லாம் பற்றியும் அரபியர் பற்றியும் தப்பான செய்திகளை வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர் ஸியோனிஸ்டுகள்.

மேற்கத்திய உலகின் செய்தித்தாள்களை வாசிப்பவர்களுக்கு ஓர் உண்மை புரியாமல் இருக்காது. ஐரோப்பிய கண்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வளர்ந்துவருவது ஐரோப்பிய யூதர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டிருக்கிறது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகி, அவர்களின் பங்களிப்பு ஐரோப்பாவில் நன்கு ஊடுருவியிருப்பது ஒரு பக்கம்; ஸியோனிஸ்டுகளுக்கும் யூதர்களுக்கும் எதிரான அரசியல் நிலையை முஸ்லிம்கள் அங்கு மேற்கொண்டிருப்பது இன்னொரு பக்கம். எல்லாம் சேர்ந்து யூதர்களிடையே பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.

இதனால் உலகமெங்கும் இஸ்லாத்தின் மீது கோப அலையை உருவாக்குவதிலும் வெறுப்பு அமிலத்தை உமிழ்வதிலும் ஸியோனிஸ்டுகளின் கவனம் திரும்பியிருக்கிறது. தீவிரவாத யூதர்களின் ஆய்வுகள், அறிக்கைகள், கட்டுரைகள் என எதை எடுத்துக்கொண்டாலும் இஸ்லாத்தின் மீதான விரோதத்தை அவர்கள் கொட்டிவைத்துள்ளார்கள்.

முஸ்லிமல்லாத சமூகங்களிடையே இந்தப் பகையை ஊட்டி வளர்ப்பதற்காகப் பல்வேறு பிரசார உத்திகளையும் ஊடகத் தந்திரங்களையும் ஸியோனிஸ்டுகள் வெகுசாமர்த்தியமாகக் கையாண்டுவருகின்றனர். இஸ்லாம் குறித்த தங்களின் அநாகரிகமான சிந்தனைகளைப் பரப்பி வருகின்றனர்.

சொல்லப்போனால், இஸ்லாம் ஃபோபியா எனும் நவீனமே ஸியோனிஸ்டுகளின் கைவண்ணம்தான். இஸ்லாம், இப்புவியெங்கும் ஆழமான அழிவை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது; சர்வதேச சமூகம் அதை எதிர்கொண்டு அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் -என்ற தங்களின் கேவலமான கற்பனையை நம்பவைப்பதே அவர்களின் ஃபோபியா ஆகும்.

இஸ்லாம் குறித்து எச்சரித்து மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுவரும் ஆய்வுகள், அறிக்கைகள், இலக்கியங்கள் ஆகிய அனைத்துக்குப் பின்னாலும் தீவிரவாத யூதர்களின் கரம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், அதை நம்பத்தான் வேண்டும். குறிப்பாக மேற்குலகில் இயங்கும் பிரபல ஆய்வு மையங்களையும் ஊடக நிறுவனங்களையும் இயக்குபவர்களே யூத வேரிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்தான் எனலாம்.

ஐரோப்பாவில் அழுத்தமாகக் கால் பதித்துள்ள ஸியோனிஸ ‘லாபி’, ஒன்றைத் தெளிவாகப் புரிந்துவைத்துள்ளது. மேற்குலகில் இஸ்லாத்தின் இருப்பானது தங்கள் நலன்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகும். பலநூறு ஆண்டுகளாக அந்த நலன்களைப் பெறுவதில் ஸியோனிஸ்டுகள் ஈடுபட்டுவருகின்றனர். உலக அளவில் தாங்கள் ஊடுருவுவதற்கும் முஸ்லிம்கள்மீதுள்ள பகையைத் தீர்த்துக்கொள்வதற்கும் மேற்கையே அவர்கள் தளமாகப் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், மேற்கில் இஸ்லாம் வளர்வது தங்களின் ஆசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பேரிடியாக அமையும் என்று யூதர்கள் அஞ்சுகின்றனர். ஜெர்மனில் தீவிரவாத வலதுசாரி கிறித்தவர்களுடன் ஸியோனிஸ்டுகள் கைகோத்துள்ளனர். இஸ்ரேல் ஊடகமும் இந்த வலதுசாரிகளின் ஊடகமும் இரண்டறக் கலந்துவிட்டுள்ளன. ஜெர்மனில் பள்ளிவாசல்கள் கட்டுவதை எதிர்க்கும் பதாகைகள் உயர்த்திக் காட்டப்படுகின்றன்; ஐரோப்பியர்களை அச்சுறுத்தும் சின்னமாக இஸ்லாம் காட்டப்படுகிறது.

2001 செப்டம்பர் 11 நாடகம் கிளறிவிட்ட சந்தேகங்களுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளின் குடிமக்கள் இஸ்லாத்தை நோக்கி விரைந்துவருவதே இதற்கெல்லாம் காரணம். அமெரிக்காவின் தலைமையில் தீவிரவாத வலதுசாரி கிறித்தவர்கள் மற்றும் ஸியோனிஸ ‘லாபி’ ஆகியவற்றின் அழுத்தத்தால் ‘பயங்கரவாதம்’ என்ற பொய்யான பழியை மேற்குலகம் கண்டுபிடித்தது. இதை மேற்கத்தியரே முன்வந்து எதிர்க்க ஆரம்பித்துவிடுவர் என்பது அவர்களின் திட்டம்.


ஐரோப்பாவில் குடியேறியுள்ள முஸ்லிம்களால் ஐரோப்பாவுக்கு மட்டுமன்றி அமெரிக்காவுக்கும் பேராபத்து காத்திருக்கிறது என்று மேற்சொன்ன கூட்டணி பிரசாரம் செய்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த யூத தீவிரவாதி டானியல் பாய்பஸ் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். ஐரோப்பாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அந்தக் கண்டத்திற்கே பெரும் சிக்கலை உருவாக்கும்; ஐரோப்பாவுடன் பொருளாதார நெருக்கமுள்ள அமெரிக்காவுக்குக் குறிப்பாக நெருக்கடி ஏற்படும் என அந்த அறிக்கை அச்சுறுத்துகிறது.

மேற்குலகில் முஸ்லிம்களின் வளர்ச்சியைத் தடுக்க இந்தப் பொய்ப் பிரசாரம் முதல்படி. நாட்டைவிட்டே முஸ்லிம்களைத் துரத்துவது இரண்டாவது திட்டம். அமெரிக்கா எழுத்தாளர்கள் இதையே சிறந்த திட்டமாகப் பார்க்கின்றனர். மூன்றாவது திட்டம், ஐரோப்பிய முஸ்லிம்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றுவதன்மூலம், நன்றிக்கடன் பட வைப்பது.

நாம் செய்ய வேண்டியது

மேற்குலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நடந்துவரும் மோசமான பிரசாரம் நமக்கு ஒன்றை உணர்த்துகிறது.

மேற்கத்திய முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய உலகத்திற்கும் இடையே இருந்துவரும் உறவு குறித்து மீள்பார்வை தேவை. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்கான விலையைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு எப்போது, என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.

எனவே, உலக முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக மேற்குலக முஸ்லிம்களுக்கு உதவிக் கரம் நீட்டுவது உலக முஸ்லிம் சமுதாயத்தின் கடமையாகும். அவர்கள் ஐரோப்பியர் என்றோ அமெரிக்கர்கள் என்றோ இனப்பாகுபாடு பாராமல் முஸ்லிம் சகோதரர்கள் என்ற கொள்கைச் சகோதரத்துவத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்கள்பின் நாமும் நிற்போம்.

(நபியே!) நீர் யூதர்கள் மற்றும் கிறித்தவர்களது மார்க்கத்தைப் பின்பற்றாத வரை அவர்கள் உம்மைப் பற்றித் திருப்தி அடையமாட்டார்கள். (2:120)

உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டோரிடமிருந்தும் இணைவைப்போரிடமிருந்தும் நீங்கள் ஏராளமான நிந்தனைகளை நிச்சயமாகச் செவியுறுவீர்கள். (அப்போது) நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனை) அஞ்சி நடந்தால், அதுதான் தீரச் செயலாகும். (3:186)

Thursday, October 04, 2012

மியான்மர் முஸ்லிம்களைக் கவனிக்க யாரும் இல்லையா?

-    கான் பாகவி


தெ
ன்கிழக்கு ஆசிய நாடுகளில் பரப்பளவில் பெரிய நாடான மியான்மரில் (பழைய பர்மா) 6 கோடிப்பேர் வசிக்கின்றனர். பௌத்தர்களே பெரும்பான்மையினர். முஸ்லிம்கள் சுமார் 40 லட்சம். 1948-இல் சுதந்திரமடைந்த இந்நாட்டில் நீண்ட காலமாக இராணுவ ஆட்சிதான். தற்போது பெயருக்கு ஜனநாயகம் வந்திருக்கிறது.


பர்மா முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் பர்மிய பூர்வீகக் குடிகள், சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து குடியேறியோர், இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தோர் என மூன்று இனங்களாக உள்ளனர்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்தியாவிலிருந்து குடியேறிய முஸ்லிம்கள் `ரோஹிங்கியர்’ என அறியப்படுகின்றனர். இவர்கள் மியான்மரின் மேற்கு மாகாணமான அரக்கானில் வசிக்கின்றனர். அரக்கான் ஒரு சுதந்திர முஸ்லிம் நாடாகவே முதலில் இருந்தது. பிறகுதான் பர்மாவுடன் இணைக்கப்பட்டு, மதமாற்றப் பிரசாரம் மேலோங்கியது.

அரக்கான் பௌத்தர்களின் புனிதபூமி என்றும், இங்கு தாழ்ந்த இனத்தவரான ரோஹிங்கிய முஸ்லிம்கள் இருப்பது புனிதத்தைக் கெடுக்கிறது என்றும் பௌத்த மதக்குருக்கள் பிரசாரம் செய்துவருகின்றனர்.

அது மட்டுமன்றி, இந்த முஸ்லிம்கள் நாட்டைச் சூறையாட வந்தவர்கள்; ஏமாற்றுப் பேர்வழிகள்; தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றெல்லாம் மியான்மரின் தேசிய வரலாற்றுக் குறிப்பிலும் எழுதிவைத்துள்ளனர்.

தொடரும் கொடுமைகள்
இதனால் அடிக்கடி அங்கே கலவரம் வெடிப்பதும் முஸ்லிம்கள் அழிக்கப்படுவதும் வாடிக்கை. இவ்வாறு 1991, 1997, 2001 ஆகிய ஆண்டுகளில் நடந்த கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்போது 2012 ஜூனில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 90 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்; ஈவிரக்கமின்றி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்; இலட்சக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன; நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளன; சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன; இலட்சக்கணக்கானோர் வீடு வாசலை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் முஸ்லிம்களுக்கெதிராக இதுவரை நடந்த கொடுமைகளிலேயே இதுதான் மிகவும் மோசமானது.

அண்டை நாடுகளில் தஞ்சம் அடையலாம் என்றால், இந்தியாவும் வங்காளதேசமும் எல்லைகளை மூடிவிட்டன. பாகிஸ்தானுக்குக் கணிசமானோர் புலம்பெயர்ந்துவருகின்றனர். ஆனால், கராச்சி நகரிலிருந்து தொலைவான ஓரிடத்தில் அரக்கான் முஸ்லிம்கள் மோசமான சூழலில் வாழ்ந்துவருகின்றனர் என்கிறது பாகிஸ்தானின் `ஆஜ் நியூஸ்’ தொலைக்காட்சி.

மியான்மர் இராணுவம் என்ன சொல்கிறது? முஸ்லிம்கள் பௌத்த மதத்தில் சேர வேண்டும்; அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அல்லது அகதிகளாகக் கூடாரங்களில் ஒடுங்கிக் கிடக்க வேண்டும். இல்லையேல், ஒரு மில்லியன் முஸ்லிம்களைக் கடலில் வீசிக் கொல்வோம் -இப்படித்தான் பகிரங்கமாக மிரட்டிவருகின்றனர்.

தட்டிக்கேட்க ஆளில்லையா?
சரி! அந்த நாட்டில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போரே இல்லையா? ஜனநாயகத்திற்காகப் போராடி, பல்லாண்டு காலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற வீராங்கனை (?) ஆங்சான் சுசி இருக்கிறார். அவரும் இராணுவ மிருகங்களின் குரலையே ஒலிக்கிறார் என்பதுதான் வேடிக்கை.

சிறுபான்மையோருக்காக உலகமெங்கும் குரல் கொடுக்கும் உலக நாட்டாண்மை அமெரிக்கா மியான்மர் முஸ்லிம்களைக் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவின் கைப்பாவை ஐ.நா. சபை கண்டன அறிக்கை (பெயருக்கு) வெளியிட்டதோடு சரி!

பூர்வீக இந்தியர்களான ரோஹிங்கிய முஸ்லிம்களை இந்தியாவும் ஏன் என்று கேட்கவில்லை. வங்காள தேசமோ இந்தியாவின் கைப்பாவைகளில் ஒன்று. அதனிடம் பரிவை எப்படி எதிர்பார்க்க முடியும்?

முஸ்லிம் நாடுகள் என்ன செய்கின்றன? எகிப்து, சஊதி, கத்தார், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மியான்மர் அரசையும் கொலை வெறித் தாக்குதலையும் கடுமையாகக் கண்டித்துள்ளன. இந்நாடுகளும் குவைத் போன்ற நாடுகளும் பொருளாதார உதவிகள் அளிக்கின்றன. சஊதியில் ஏற்கெனவே ஒரு லட்சம் மியான்மர் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்; அந்நாட்டு குடிமக்களாகவே அவர்கள் பார்க்கப்படுகின்றனர்.

முஸ்லிம்களை இவ்வுலகம் எப்படி பார்க்கிறது; எவ்வளவு மோசமாக நடத்துகிறது பார்த்தீர்களா? இத்துணைத் துயரங்களுக்கு மத்தியிலும் ஈமான் இழக்கமாட்டோம் என்று உறுதியோடு அழுதுகொண்டிருக்கும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக நாமும் ஒரு துளி கண்ணீர் வடிப்போம்!

ரோஹிங்கிய பர்மிய முஸ்லிம்களைக் காப்பாற்ற யாராவது வாருங்களேன்!

இறைவா! அந்த மக்களைக் காப்பாற்று! கொடியவர்களைத் திருத்து! அல்லது தூக்கிலிடு! அரக்கானில் ஓடும் இரத்த ஆற்றை வற்றச்செய்! அம்மக்களை உயிர்வாழச்செய்! குழந்தைகளை ஈமானுடன் வளரச்செய்! தாய்மார்களின் கற்பைக் காப்பாற்று!

இப்படி இறைஞ்சுவதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும்?

Monday, September 24, 2012

மனிதச் சந்தையில் விலைபோகும் ‘ஆடுகள்’



ஸஹீஹுல் புகாரியில் ஒரு பாடம். ‘‘சுதந்திரமானவரை விற்பது குற்றமாகும்’’ என்பது பாடத்தின் தலைப்பு. அதில் இடம்பெற்றுள்ள நபிமொழி இதுதான்:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன். ஒருவன், என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, மோசடி செய்தவன்; இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தை உண்டவன்; மூன்றாமவன், ஒரு கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக்கொண்டு, அவனது கூலியைத் தராமல் இருந்தவன். (ஹதீஸ் - 2227) 

இதில் குறிப்பிடப்படும் மூவருமே குற்றவாளிகள்தான். இருப்பினும், சுதந்திரமான ஒருவரை விற்றுப் பிழைப்பவன்கூட இருப்பானா என்ற ஐயம் வந்ததுண்டு. அவனுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என்ற வினாவும் எழுந்ததுண்டு. விரிவுரைகளில் பொருத்தமான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக மனிதர்கள் சுதந்திரமானவர்களே; அடிமைத்தளை என்பது இடையில் பூட்டப்படும் விலங்கு. அப்படியிருக்க, சுதந்திரமான ஒரு மனிதனைப் பிடித்து ‘அடிமை’ என்று சொல்லி விற்றுக் காசாக்குவது வன்கொடுமை ஆகும்.

இதனால் அவனது சுதந்திரம் பறிக்கப்படுகிறது; இழிவு பூசப்படுகிறது. இறை அடியானான அவனுக்கு இழைக்கப்பட்ட இக்கொடுமைக்கு, எஜமானனான இறைவனே வழக்காடுவதுதான் பொருத்தமானதாகும். (ஃபத்ஹுல் பாரீ)

அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு


பணத்துக்காக மனிதன் மனிதனையே வேட்டையாடிக்கொண்டிருக்கின்றான். இது காலங்காலமாக இடைவிடாது நடந்துகொண்டிருக்கிறது. மனிதச் சந்தையில் விற்கப்படும் மனிதர்களின் எண்ணிக்கை எவ்வளவு? விற்கப்படுவோர் யார்? கிடைக்கும் லாபம் எவ்வளவு? தடுப்பதற்கு வழி என்ன? 

அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சகம், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச தொழில் கழகம் ஆகிய அமைப்புகள் அளிக்கும் புள்ளி விவரங்கள் நம்மை உறையவைக்கின்றன; அதே நேரத்தில், இஸ்லாத்தின் கருணையை நமக்குப் புரியவைக்கின்றன.

மனிதச் சந்தை, அல்லது மனித விற்பனை என்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அளித்துள்ள விளக்கம் நீளமானது. கடத்தல், குடிபெயர்தல், குடிபெயரவைத்தல், மிரட்டிப் பணியவைத்தல், ஆற்றலைச் சுரண்டுதல், விபசாரத்தில் ஈடுபடுத்தல், பிச்சையெடுக்கவைத்தல், கொத்தடிமைகளாக நடத்துதல், உறுப்புகளை வெட்டி எடுத்தல், போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்டுத்துதல், வீட்டு அடிமைகள் முதலான அனைத்து ஈனச்செயல்களும் மனித விற்பனையில் அடங்கும் என்கிறது ஐ.நா. சபை.

இவற்றில் பாலியல் குற்றங்களுக்காகப் பயன்படுத்துவதே மனித விற்பனையில் 79 விழுக்காடாக உள்ளது. அடுத்து 18 விழுக்காடு கொத்தடிமைத் தொழிலில் ஈடுபடுத்துவதாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இந்த அநியாயம் பரவலாக நடக்கிறது.

புள்ளி விவரம்


உலகம் முழுவதிலும் நடக்கும் மனித விற்பனை மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் பணம் எவ்வளவு தெரியுமா? 32 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் 100 கோடி.) 

விற்கப்படும் மனிதர்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளே அதிகம் (79%) 

கட்டாயப்படுத்தி, அல்லது கூலியே இல்லாமல், அல்லது விபசாரத்தில் வேலை (?) செய்வோர் 21 மில்லியன். (ஒரு மில்லியம் 10 லட்சம்.) 

ஒவ்வோர் ஆண்டும் எல்லை தாண்டி கடத்தப்படுவோர் எண்ணிக்கை 8 லட்சம். 

எல்லைக்குள்ளேயே கடத்தப்படுவோரையும் கணக்கில் எடுத்தால் 2 முதல் 4 மில்லியனை எட்டும். 

ஒவ்வொரு வகையான மனித விற்பனையில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாகப் பலியாவோர் குழந்தைகளே. 

எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெறும் லாட்வியா குடியரசு, இந்த மனித விற்பனையைத் தடுக்க அதிகக் கவனம் செலுத்த வேண்டுமென அயர்லாந்து அரசை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்குவதற்கு அனுமதி பெறுவதற்காக, 400 பேர் லாட்வியா இளம்பெண்களைக் கட்டாயப்படுத்தி மணமுடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

பிபிசி வெளியிட்ட ஒரு செய்தி: ஆண்டுதோறும் ஒரு லட்சம் இளம்பெண்கள் (வயது 14 முதல் 19) விபசாரத்திற்காக லத்தீன் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகிறார்கள். 

விலைமாதுகள் 


விபசாரம், இலாபம் கொழிக்கும் ஒரு தொழிலாக (?) வளர்ந்துவருகிறது. ஏதோ தொழில்சாலைகளில் பணியாற்றுவதைப் போன்று விபசாரத்தையும் ஒரு தொழிலாக்கி, அதில் இருப்போரை ‘பாலியல் தொழிலாளர்கள்’ என்று பெயர்சூட்டும் மானக்கேடு நடந்தேறுகிறது. இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகளும் இளம்பெண்களும் ஆவர். உண்மையில் இவர்கள்தான், நவீன காலத்து ‘அடிமைகள்’ ஆவர். 

ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான பெண்கள் வறுமை காரணமாக உலகின் பல பகுதிகளிலிருந்து ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், அமெரிக்கா, வளைகுடா நாடுகள் ஆகியவற்றுக்கு வேலைக்காகப் படையெடுக்கின்றனர். 

கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைச் சொல்லி இடைத் தரகர்கள் மூலம் இளம்பெண்களை விலைக்கு வாங்கும் தீய சக்திகள், எல்லைக்குப் போனபின் பெரிய விலைக்கு ஏலத்தில் விற்றுவிடுகின்றனர். அங்குதான் அந்த அபலைப் பெண்கள் தங்களுக்குத் தெரியாமலேயே கடன்காரர்களாகின்றனர். கடனை அடைக்க ஓய்வின்றி உழைக்கின்றனர். 

உதாரணத்திற்கு நியூயார்க்கில் ஓர் இளம்பெண் நாளொன்றுக்கு 10 மணிநேரம் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறாளாம்! 25 முதல் 30 வாடிக்கையாளர்களை அவள் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. ஆனாலும், அவள்மீதான கடன் ஒருகாலும் அடையப்போவதில்லை. காரணம், அவள் சம்பாதிப்பதில் (?) பாதி விபசார விடுதி நடத்துபவர்களுக்கும் மீதிப் பாதி, கடத்தியவர்களுக்கும் அவள் செலுத்தியாக வேண்டும். 

விடுதியிலிருந்து ஓடிப்போக நினைத்தால் சித்திரவதைதான். போலிஸுக்குப் போனால், வேலையிலிருந்து நிறுத்தப்படுவாள்; அவளது குடும்பத்தார் அவள் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தியாக வேண்டும். அப்படியே யாரும் தப்பித்துச் சென்றாலும் மறுபடியும் அவள் விலைக்கு வாங்கப்பட்டுவிடுவாள். மொத்தத்தில் இந்த நரகத்தில் நுழைந்தவள், அதிலிருந்து வெளியேற முடியாது. 

இஸ்லாமே தீர்வு 


இக்கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்றால் இஸ்லாம் ஒன்றே அதற்கான வழியாகும். அடிமைகளை ஒழிக்கவும் அடிமைத் தளையிலிருந்து மனித இனத்தை விடுவிக்கவும் இஸ்லாம் பல வழிகளைக் காட்டியுள்ளது; எல்லாவற்றுக்கும் மேலாக, சுதந்திர மனிதனை அடிமையாக்குவதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கிறது. 

திருடன், கடன்காரன் யாராக இருந்தாலும் அவனை அடிமையாக்க அனுமதியில்லை. 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன: 

முதல் வகை: 

இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண்பேசி ‘மஹ்ர்’ (மணக்கொடை) கொடுத்து மணந்துகொள்வார். 

இரண்டாம் வகைத் திருமணம்: 

ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக்கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள்!’ என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்றவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். 

குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஉ’ (விரும்பிப்பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர். 

மூன்றாம் வகைத் திருமணம்: 

பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகி சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச்சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்றுகூடுவார்கள். 

அப்போது அவர்களிடம், ‘‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது’’ என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) ‘‘இவன் உங்கள் மகன், இன்னாரே!’’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதை மறுக்க முடியாது. 

நான்காம் வகைத் திருமணம் : 

நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள். 

இந்தப் பெண்கள் விலைமாதர்கள் ஆவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டுவைத்திருந்தனர். எனவே, அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை- பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்துவருவார்கள். 

தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டுவந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது. 
சத்திய (மார்க்க)த்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டபோது, இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள். (புகாரீ - 5127)


சில இணைப்புகள்:- 

Saturday, September 15, 2012

செப்டம்பர் 11-ம் ஷைத்தான்களின் சூழ்ச்சிகளும்


அ. முஹம்மது கான் பாகவி

செப்டம்பர் 11-ல் ஆண்டுதோறும், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்-11 நினைவு தினத்தில் கோரமான காட்சிகள் அரங்கேறின; உலக முஸ்லிம்களின் இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சும் கொடூரக் காட்சிகள் திரையிடப்பட்டன.

FILM PRODUCER STEVE - KLEIN

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் பேராயர் தேவாலயத்தின் உள்ளே செப்டம்பர் தாக்குதல் சம்பவங்களின் நினைவுக் கூட்டம். கூட்டத்தை நடத்தியவர்கள், எகிப்து நாட்டைப் பிரித்து, தனியான ‘கிப்தி’ நாடு உருவாக்க வேண்டும் என்று கேட்கும் எகிப்து அரபு கிறித்தவர்கள். இவர்கள் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்துவிட்டவர்கள்.

PASTOR TERRY JONES
இவர்களில் மோரிஸ் ஸாதிக் முக்கியமானவர். இவரது குடியுரிமையை எகிப்து அரசு பறித்து நாட்கள் பல ஆகிவிட்டன. மற்றொருவர் இஸ்மத் ஸக்லமா. இவர்தான், உத்தேச கிப்தி நாட்டிற்கான உயர்மட்டக் குழுவின் தலைவர். இவர்களுடன் அமெரிக்க தீவிரவாதியும் பேராயருமான டேரிஜோன்ஸும் சேர்ந்துகொண்டார். இவர்தான், திருக்குர்ஆன் பிரதிகளை எரியுங்கள் என்று பிரசாரம் செய்பவர்.

அன்றைய நிகழ்ச்சியின் பெயர் என்ன தெரியுமா? ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நீதிவிசாரணை.’ உள்ளூர் அமெரிக்கத் தொலைக்காட்சி சேனல்கள் புடைசூழ நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

பேராயர்கள் வாய்ட்டனிசாப், டைடுஜீத், உசாமா தக்தூக் ஆகியோர் விசாரனை நடத்துகிறார்கள். மோரிஸ் ஸாதிக், ஈலியா பாஸிலீ, ஈஹாப் யஅகூப் ஆகியோர் வழிநடத்துவோராகப் பங்கேற்கிறார்கள்.

செப்டம்பர் தாக்குதலுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பொறுப்பாளராக ஆக்கவும் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தவும் அங்கே முயற்சி நடக்கிறது. வானிலிருந்து அருளப்பெற்ற தூதுத்துவம் இல்லை; மனிதக் கற்பனையே இஸ்லாம் என்று தீர்ப்பளித்த பேராயர்கள் நபி (ஸல்) அவர்கள்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்துகிறார்கள்.

‘அவர் பூமிக்குச் சாந்தியைக் கொண்டுவரவில்லை; மனிதர்களிடையே வெறுப்பை விதைத்தார்; இரத்தத்தை ஓட்டினார். எனவே, முஹம்மத் (ஸல்) அவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறோம்’ என்று பேராயர்கள் கூச்சலிட்டனர்; இது ‘முஹம்மத் மீதான நீதிவிசாரணைக்குரிய உலக நாள்’ என்று கொக்கரித்தனர்.

INNOCENCE OF MUSLIMS

Morris Sadek with Terry Jones
இந்நிகழ்ச்சி தொடங்குவதற்குமுன், நபி (ஸல்) அவர்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தும் ஒரு படத்தைத் திரையிடுவதற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். உத்தேச கிப்தி நாட்டின் உயர்மட்டக் குழுவின் தயாரிப்பே இப்படம். இஸ்மத் ஸக்லமா, மோரிஸ் ஸாதிக் ஆகியோரே இக்குழுவின் பொறுப்பாளர்கள். படத்தின் பெயர்: இந்நோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் (முஸ்லிம்களின் அப்பாவித்தனம்).

மூன்று மணிநேரம் ஓடும் இப்படத்தைத் தயாரிக்க மூன்று ஆண்டுகள் பிடித்தன. அரபி மொழியிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

படத்தின் இயக்குநர் சாம் பாசைல் என்பவன் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த யூதன் ஆவான். ‘முஹம்மதின் குணாதிசியங்களைப் படமாக்க பிரபல இஸ்லாமிய நூல்களையே நான் முன்னோடியாகக் கொண்டேன்; அவை அவரது வாழ்க்கை குறித்துப் பேசுகின்றன’ என்று பச்சைப் பொய் பேசும் இந்த சாம், அவை இன்ன நூல்கள் என்று குறிப்பிடவில்லை. இதிலிருந்தே, காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் இருந்துகொண்டு கற்பனைகளைக் கலந்து விஷத்தைக் கக்கியுள்ளான் என்பது உறுதியாகிறது.

‘அல்வ(த்)தன்’ நாளேட்டின் கையில் இப்படத்தின் ஒருபிரதி கிடைத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியர் மற்றும் தோழர்கள் பற்றியும் வார்த்தையால் வடிக்க முடியாத மட்டரகமான காட்சிகள் படத்தில் நிறைந்துள்ளன.

படம் சொல்வதென்ன?

எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு கிறித்தவ டாக்டர் தன் மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது காட்டுமிராண்டிகள் தோற்றத்தில் சில முஸ்லிம்கள் திடீரென உள்ளே நுழைந்து மருத்துவமனையை அடித்து நொறுக்குகிறார்கள்; நோயாளிகளைக் கடுமையாகத் தாக்குகிறார்கள். இதையெல்லாம் தடுக்காமல் வெளியே நின்று எகிப்து போலீஸார் வேடிக்கை பார்க்கின்றனர்... என்று தொடங்குகிறது படம்.

டாக்டரிடம் இந்தக் கலகக்காரர்கள் யார் என்று அவருடைய மனைவியும் மகளும் கேட்கின்றனர். அவர் இவர்கள்தான் முஸ்லிம்கள்; முஹம்மதைப் பின்பற்றுபவர்கள். அவர் வரலாறு தெரியுமா என்று கேட்டு, நபியவர்களின் கதையைச் சொல்கிறார்.

படத்தைப் பற்றி அரபிமொழியில் நமக்குக் கிடைத்த எல்லா தகவல்களையும் என்னால் இங்கே குறிப்பிட இயலவில்லை. என் எழுதுகோல் எழுத மறுக்கிறது. சில காட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்:

நபி (ஸல்) அவர்களையும் அவர்களுக்கு வந்த வேத அறிவிப்பான வஹீயையும் படம் கேலி செய்கிறது. அன்னை கதீஜா (ரலி) அவர்களை மலிவாகச் சித்தரிக்கிறது. கதீஜா (ரலி) அவர்களுடனும் வேறுசில துணைவியருடனும் நபியவர்கள் தனிமையில் இருந்த காட்சி என்று சொல்லி கேவலமாகவும் செக்சியாகவும் காட்டப்படுகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் சிறுகுழந்தையாக இருந்தபோதே அவர்களை நபியவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள் என்று சொல்லி, நபியவர்கள் பெண்ணாசை பிடித்தவர் எனக் காட்டுகிறார்கள். மனைவிக்கு முன்னாலேயே ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு, அம்மனைவியுடன் உறவு கொள்வதாக ஒரு காட்சி.

ஒரு கழுதைதான், முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்பதைப் போன்று ஒரு காட்சி. திருக்குர்ஆன் ‘தவ்ராத்’ வேதத்தின் கலப்பு என்றும் ஒரு கிறித்தவப் பாதிரிதான் அதை வடிவமைத்தார் என்றும் படம் புளுகுகிறது. அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஒரு கண் குருடு என்பதுபோல் காட்டப்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, குழந்தைகளைக் கடத்தி அடிமைகளாக விற்றல் ஆகியவற்றையே தோழர்களுக்கு முஹம்மத் கற்பித்தார் என்ற மாபெரும் அபாண்டம் ஒன்றை படம் வெளியிடுகிறது.

அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் குர்ஆனையும் அவமானப்படுத்தியதற்காக ஒரு மூதாட¢டியை நபித்தோழர்கள் இருகால்களை இரு பக்கம் இழுத்துக் கிழிப்பதாக ஒரு காட்சி. இதன்மூலம், முஸ்லிம்களை சகிப்புத் தன்மை அற்றவர்கள் என்று படம் சித்தரிக்கிறது.

முடிவில் ஒரு போர்க்களக் காட்சி. அதில் இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு வாளை நபியவர்கள் ஏந்தியிருப்பதைப் போன்றும் ஆடையெல்லாம் இரத்தம் தோய்ந்திருப்பதைப் போன்றும் காட்டப்பட்டுள்ளது. தமக்கு முன்னாலுள்ள எல்லாரையும் கண்மண் தெரியாமல் வெட்டிச் சாய்க்கிரார்களாம்! நீங்களும் இவ்வாறே நடந்துகொள்ள வேண்டும் என்று முஸ்லிம்களுக்குப் போதிக்கிறார்களாம்!

செய்திக்காக இருந்தாலும், இவற்றையெல்லாம் என் கைப்பட எழுதியதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கிறேன்; அஸ்தஃக்ஃபிருல்லாஹ்!

என்னதான் வேண்டும் உங்களுக்கு?

உலக முஸ்லிம்களே! இக்காட்சிகளில் ஒன்றாவது உண்மையா? குர்ஆனிலோ ஹதீஸிலோ வரலாற்றிலோ அறிஞர்களின் உரைகளிலோ இதை நீங்கள் என்றாவது கேள்விப்பட்டதுண்டா? முழுக்க முழுக்க பொய்யிலும் பொய்யான காட்சிகளைப் படமாக்கி அரிப்பைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் யூதர்களும் கிறித்தவர்களும் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது இதில்?

ஏன் இவர்களுக்கு இந்தக் கொலைவெறி? நம்மை உசுப்பேற்றி கலகங்களை உருவாக்க நினைக்கிறார்களா? அல்லது இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாமல் வெறிபிடித்து அலைகிறார்களா? அல்லது எகிப்து போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக அங்குள்ள சிறுபான்மையினரைத் தூண்டிவிடுகிறார்களா?

உண்மையில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பதை இன்றுவரை உலக அரங்கில் அமெரிக்கா நிரூபிக்கவில்லை. அமெரிக்கா குற்றம் சாட்டிய சத்தாம் ஹுசைனையும் உசாமா பின் லேடனையும் கொன்று குவித்துவிட்டீர்களே! இன்னும் வெறி அடங்கவில்லையா? இராக்கையும் ஆப்கனையும் அதையொட்டி பாகிஸ்தானையும் சூறையாடி கொள்ளையடித்துவிட்டீர்களே! இன்னும் உங்கள் பசி அடங்கவில்லையா?

இன்னும் எத்தனை முஸ்லிம்களைக் கொன்று, எத்தனை முஸ்லிம் நாடுகளைக் கொள்ளையடிக்கத் திட்டம்? சொல்லுங்கள்!

ஒன்றுமட்டும் நிச்சயம்! சியோனிஸ்டுகளையும் அமெரிக்கர்களையும் எதிர்க்கின்ற வல்லமையும் நெஞ்சுறமும் முஸ்லிம்களுக்கு மட்டுமே உண்டு என்பதைத்தான் இவர்களின் சேட்டைகள் காட்டுகின்றன. இல்லாவிட்டால் உலகில் மற்ற எல்லாரையும் விட்டுவிட்டு முஸ்லிம்களையே இந்த ஷைத்தான்கள் குறிவைக்கக் காரணமென்ன?

இறுதியாக ஒன்றைச் சொல்லிக்கொள்வோம்: யூதர்கள் என்ன? கிறித்தவர்கள் என்ன? யாராலும் இஸ்லாத்தையோ திருக்குர்ஆனையோ அசைக்க முடியாது. சில முஸ்லிம்களை நீங்கள் கொல்லலாம்; இஸ்லாத்தைக் கொல்ல முடியாது. காரணம், அது ஒன்றுதான் இன்றைக்கு இறைமார்க்கம்; அது ஒன்றுதான் சத்தியம்; அது ஒன்றுதான் வாழும் வாழ்க்கைநெறி.

இஸ்லாத்தைக் காக்கும் பொறுப்பை, அதை அருளிய இறைவனே ஏற்றுக்கொண்டிருக்கிறான். இறைவனோடு போர் தொடுக்கிறீர்களா? அழிந்துபோவீர்கள்! இந்தப் பார் உள்ளளவு, வானமும் பூமியும் உள்ளளவு, உலகம் அழியும்வரை இஸ்லாம் இருக்கும்.

இதோ வல்லோன் அல்லாஹ் அறிவிக்கிறான் கேளுங்கள்:
நிச்சயமாக இந்த அறிவுரையை (குர்ஆனை) நாமே அருளினோம். உறுதியாக இதை நாமே பாதுகாப்போம். (15:9)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமைநாள் நிகழாது. (முஸ்லிம்)
பூமியில் ‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லப்படாத போதுதான் மறுமை நாள் நிகழும். (முஸ்லிம்)
அதாவது முஸ்லிம்கள் இருக்கும்வரை உலகம் அழியாது; உலகம் அழியாது இருக்கக் காரணமே ‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள்தான்.

Friday, September 14, 2012

செய்தித் துளிகள்...


யூத விஞ்ஞானி இஸ்லாத்தை ஏற்றார்

கருவியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஜெயில்ஹம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்தபின்பே- மறுமணம் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். ஆணுக்குள்ள டி.என்.ஏ ரேகைப் பதிவு ((DNA Finger Printing) தொடர்பானதே அந்த ஆய்வு. ஓர் ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவானது மூன்று மாதங்களுக்குப்பின் அழிந்துவிடும் என அவரது ஆய்வு கூறியது.

இது தொடர்பாக, எகிப்தில் மருத்துவப் பரிசோதனை துறை பேராசிரியராக உள்ள டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சய்யித் கூறுகிறார்: அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனக்குரிய பாலின ரேகையைப் பெண்ணிடத்தில் விட்டுச்செல்கிறான். அது மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.

அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் ராபர்ட் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவன்மார்களின் ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. இவ்வாறு மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களிடம் பதிவாகியிருந்தன.

ராபர்ட் ஜெயில்ஹம் அதிரடியாக இன்னொரு காரியமும் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனை செய்தார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அது மட்டுமன்றி, தம்முடைய மூன்று மகன்களில் ஒருவர் மட்டுமே தமக்குப் பிறந்தவர் என்ற உண்மையும் அவரைத் தாக்கியது.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் என்பதற்குக் காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால் டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு.

ஐரோப்பாவில் பெருகிவரும் முஸ்லிம்கள்

ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 4.5 கோடியை (45 மில்லியன்) எட்டிவிட்டது. சர்வதேச சிறுபான்மையினர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று இத்தகவலை வெளியிட்டிருக்கிறது. ஐரோப்பாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதாகவும் கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய சமூகத்தில் முஸ்லிம்களின் பங்கு குறிப்பிடும் அளவுக்கு அதிகமாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது. 

ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படியான அங்கீகாரம் பெற்றுள்ள இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம்தான். பால்கன் தீபகற்பத்தில் (தென்கிழக்கு ஐரோப்பா) முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்துவருகிறார்கள். கோஸ்வோ, அல்பேனியா, போஸ்னியா, ஹெர்ஸகோவினா ஆகிய பால்கன் நாடுகளில் முஸ்லிம்கள் பெரிய எண்ணிக்கையில் வசிக்கின்றனர். 

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெரிய நாடான பிரான்சில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியுள்ளது. அடுத்து ஜெர்மனியில் 40 லட்சம்; பிரிட்டனில் 30லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். கிரீஸ் நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். அடுத்து ஸ்லோவேனியாவிலும் குறைவு. ஐரோப்பாவிலேயே அதிகாரபூர்வமான பள்ளிவாசல்கள் இல்லாத ஒரேநாடு ஸ்லோவேனியாதான்.

குர்ஆனே அடிப்படை கல்வி - அமெரிக்க செனட் மெம்பர்

அமெரிக்காவின் இண்டியானா மாகாண ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஆண்ட்ரியா கார்சன் ஆச்சரியமான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் பாடத்திட்டத்தில் திருக்குர்ஆனை ஓர் அடிப்படை பாடமாகச் சேர்க்க வேண்டும். 

கல்வித் திட்டத்தில் குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பள்ளிகள், மற்ற பள்ளிகளைக் காட்டிலும் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளன. கல்வித் தகுதியிலும் அதை அடையும் வழியிலும் அவை வித்தியாசப்படுகின்றன. அமெரிக்காவில் எதிர்பார்த்த கல்வி முன்னேற்றம் ஏற்படவில்லை என்று குற்றம் சாட்டிய கார்சன், அமெரிக்கா பள்ளிக்கூடங்கள் சமயத்தை நம்புவதில்லை; இஸ்லாமியப் பள்ளிகளை முன்னோடியாகக் கொள்வதில்லை என்று கடுமையாகச் சாடினார். உண்மை ஒருநாள் தலைதூக்கியே தீரும்.

2 லட்சம் சிரியா அகதிகள்
சிரியாவில் ‘பஷ்ஷார்’ எனும் கொடுங்கோலன் ஆட்சிபுரிந்துவருகிறான். இவனது ஊழல் மிகுந்த சர்வாதிகார குடும்ப ஆட்சியை எதிர்த்து சிரியா மக்கள் துணிவுடன் போராடிவருகின்றனர். துனூசியா, எகிப்து போன்ற நாடுகளைத் தொடர்ந்து சிரியாவிலும் இரண்டாவது சுதந்திரப் போர் நடந்துவருகிறது.
இதுவரை சுமார் 25ஆயிரம் பேர் இப்போரில் பலியாகியுள்ளனர். கடைசி சில மாதங்களில் மட்டும் 17,281 சிவிலியன்களும் 1051 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
தீக்காடாக மாறிவிட்ட அந்த நல்ல பூமியில் நாள்தோறும் துப்பாக்கி சப்தமும் பீரங்கி முழக்கமும் கேட்டவண்ணம் உள்ளன. சிரியாவைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளில் மக்கள்
தஞ்சமடைந்துவருகின்றனர். இதுவரை 2லட்சம் சிரியர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். துருக்கி, இராக், லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு 30 ஆயிரம்பேர் சென்றுவிட்டனர். இராக்கில் மட்டும் 15 ஆயிரம் சிரியா அகதிகள் முகாம்களில் குடியேறியுள்ளார்கள்.
‘ஷாம் ஃபிர்அவ்ன்’ என அழைக்கப்படும் கொடுங்கோலன் பஷ்ஷாருக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. போர்க்கைதிகள், தன் போட்டோவை வழிபட வேண்டும் என்று அவன் உத்தரவிட்டுள்ளான். உள்நாட்டிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக உள்ளனர்; 25 லட்சம் பேர் மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்துள்ளனர்.
பஷ்ஷார் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பும் முதல் ஆள் யார் தெரியுமா? இஸ்ரேல் பிரதமர்தான். இதிலிருந்தே அவனது யோக்கியதை தெரியும். மற்றொரு நாடு ஈரான்; காரணம் ஷியா-சன்னி பிரச்சினைதான்.